Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆபரேஷன் ஜிப்ரால்டரும்... ஆடுமேய்க்கும் சிறுவனும்..! எரியும் எல்லைக்கோடு - 3

சீனாவுடன் நடந்த யுத்தம் கொடுத்த தோல்வி இந்திய ராணுவ வீரர்களை மனதளவில் சோர்வடையச் செய்திருந்தது. போதாக்குறைக்கு, பிரதமர் நேருவின் மரணமும் சேர்ந்துகொண்டது. அது, ஆட்சியாளர்களையும் பொதுமக்களையும் பெருஞ்சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. ஒட்டுமொத்த தேசமும் உத்வேகம் குன்றிப்போயிருந்த தருணங்கள் அவை.

நடப்பதை எல்லாம் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்த பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் மனதில் ஒரு சபலம். காயம்பட்ட இடத்தில் ஓங்கி அடித்தால் காஷ்மீர் கிடைக்குமே!

அப்போது பாகிஸ்தானின் அதிபர் நாற்காலியில் இருந்தவர் ஜெனரல் அயூப்கான். ராணுவப் புரட்சியின் வழியாக ஆட்சியைப் பிடித்தவர். ‘‘ஜனநாயகம் என்பதெல்லாம் வேலைக்கு ஆகாது. நாடு எப்படி ஆளப்பட வேண்டும் என்று நான் வழிகாட்டுகிறேன். இனி அதன் பெயர்தான் ஜனநாயகம்’’ என்று சொல்லி ஆட்சி நடத்தியவர். அவருக்குத் துணையாக இருந்தவர் அமைச்சர் ஜுல்ஃபிகர் அலி புட்டோ. பாகிஸ்தானின் உள்விவகாரங்கள் தொடங்கி சர்வதேச அரசியல் வரை அனைத்தையும் குறித்துவைத்திருந்தவர்.

அதிகாரம் நிறைந்த ஆட்சியாளர் அயூப்கான் என்றால், அறிவார்ந்த அரசியல்வாதி புட்டோ. இவர்கள் இருவரும் இரட்டைக்குழல் துப்பாக்கிபோல் இணைந்து நின்று இந்தியாவுக்கு எதிராகக் காய் நகர்த்தத் தொடங்கினர். இந்தியாவின் மீது எப்படியெல்லாம் ராணுவத் தாக்குதல் நடத்தினால் வெற்றிப்பழம் கிடைக்கும் என்று வியூகம் வகுப்பவர் அயூப்கான் என்றால், ஆபத்துக் காலங்களில் எப்படிச் சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெறுவது என்பதற்கான உத்திகளை வகுக்கக்கூடியவர் புட்டோ.

பாகிஸ்தான் அரசியலைப் பொறுத்தவரை ஓர் ஆட்சியாளர் மீது அதிருப்தி இருக்கிறதென்றால், அவர் பிரதமராக இருந்தாலும் சரி, அதிபராக இருந்தாலும் சரி, காஷ்மீரை முன்வைத்து ஒரு போர் நடத்திவிட்டால்போதும். அதளபாதாளத்தில் விழுந்துகிடக்கும் இமேஜ்கூட உச்சாணிக் கொம்பில் வந்து ஒட்டிக்கொள்ளும். அந்த அளவுக்கு காஷ்மீர் என்பது ஒரு மந்திரம்போல பாகிஸ்தான் மக்களின் மனதில் இரண்டறக் கலந்திருந்தது. அதேசமயம், அந்த மந்திரம் இருமுனைக் கத்தி போன்றதும்கூட. காஷ்மீருக்கான யுத்தத்தில் தோல்வி என்று வரும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட ஆட்சியாளரை முற்றிலுமாக வெறுத்து ஒதுக்கிவிடுவார்கள்.

அந்த அபாயத்தை அயூப்கானும் புட்டோவும் நன்றாகவே உணர்ந்திருந்தனர். என்றாலும், அயூப்கானுக்கு உடனடியாக ஒரு யுத்தம் தேவைப்பட்டது. கண்ணுக்கெட்டிய தூரத்தில் அதிபர் தேர்தல் கண்சிமிட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில், இமேஜை உயர்த்திக்கொள்வதற்கு யுத்தம் உதவி செய்யும் என்பது அவரது கணிப்பு.

யுத்தம் என்றதும் காஷ்மீரைக் குறிவைப்பதுதான் அவர்களுடைய வழக்கம். ஆனால், இவர் சற்று வித்தியாசமாகச் சிந்தித்தார். இவர் என்றால் புட்டோவும் சேர்ந்துதான். காஷ்மீரைத் தவிர்த்துவிட்டு கட்ச் பகுதியைக் குறிவைத்தனர்.

கட்ச் வளைகுடா என்பது இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் கேட்பாரற்றுக் கிடக்கும் பிராந்தியம். கடற்பறவைகளும் முரட்டுக்குதிரைகளும் மட்டுமே வாழும் சேறும் சகதியுமான பகுதி. நிலப்பரப்பின் அளவு என்று பார்த்தால் காஷ்மீர் அளவுக்கு இருக்கும். ஆனால், காஷ்மீர் அளவுக்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியல்ல.

பிரிவினை முதலே அந்தப் பகுதியில் இருநாட்டு ராணுவத்தினரும் உறுமிக்கொள்வதும் உரசிக்கொள்வதும் இயல்பான ஒன்று. குறிப்பாக, ரான் பகுதியில் உரசல் ஒலிகள் அதிகம் கேட்பதுண்டு. ஆனால், அவை எதுவும் பெரிய போராக வெடித்ததில்லை. இந்த முறை அதைச் செய்துபார்த்துவிடுவது என்று முடிவுசெய்தது பாகிஸ்தான்.

காரணம், இந்திய ராணுவத்தின் மனச்சோர்வு. அதைப் பயன்படுத்திப் பலன் பார்க்கும் நோக்கத்துடன் பாகிஸ்தான் ராணுவமே முதல் தாக்குதலை ஆரம்பித்துவைத்தது. இரு தரப்புக்கும் இடையே மோதல்கள் வேகமெடுத்தன. வியப்பூட்டும் வகையில், பாகிஸ்தானின் தாக்குதலை எதிர்கொள்வதற்கு இந்திய ராணுவம் சற்றே தடுமாறியது.

எல்லையில் எதிர்பாராத காரியங்கள் எல்லாம் நடந்தன. ஓரிரு வெற்றிகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், பெரும்பாலும் பின்னடைவுதான். ஒருகட்டத்தில் தானாக முன்வந்து போர் நிறுத்தம் அறிவித்தது இந்தியா. அதே கையோடு, தமது ராணுவத்தைத் திரும்பப்பெறுவதாகவும் அறிவித்தது.

இது பாகிஸ்தானை உத்வேகம்கொள்ளச் செய்தது. ஆஹா, இனி இந்தியா அவ்வளவுதான் என்று ஆர்ப்பரிக்கத் தொடங்கியது. என்றாலும், இங்கிலாந்து பிரதமர் ஹெரால்ட் வில்சனின் தலையீடு காரணமாக இருதரப்பு மோதல்கள் நிறுத்தப்பட்டன. பேச்சுவார்த்தைகளின் இறுதியில் கட்ச் வளைகுடாவின் வடக்குப் பகுதி பாகிஸ்தானுக்கு என்று ஒப்பந்தம் கையெழுத்தானது. கிடைத்த வரை லாபம் என்றுதான் பாகிஸ்தான் படையெடுத்தது. இங்கிலாந்தின் உதவியோடு வடக்குப் பகுதியைப் பெற்றுக்கொண்டு விடைபெற்றது.

உண்மையில், இப்படியொரு வெற்றியை பாகிஸ்தான் எதிர்பார்த்திருக்கவில்லை. அது, அவர்களை அடுத்த கட்டத்துக்கு உந்தித்தள்ளியது. ஆம், ருசி கண்ட பூனைபோல அடுத்த யுத்தத்துக்கு ஆயத்தமானது. இந்திய ராணுவம் நிலைகுலைந்து போயிருக்கும் இந்த நேரத்தில் கட்ச் பகுதிக் கலவரத்தையே அவர்களால் சமாளிக்க முடியவில்லை. காஷ்மீருக்குள் கலகம் விளைவித்தால் பெரும் லாபம் கிடைக்கும். யார் கண்டது, ஒட்டுமொத்த காஷ்மீரே கைக்கு வரவும் வாய்ப்பிருக்கிறது என்று கணித்தது பாகிஸ்தான்.

அதே பழைய திட்டம்தான். முதலில் பயங்கரவாதிகளை காஷ்மீர் எல்லைக்குள் அனுப்பிவைப்பது; இஸ்லாமிய கோஷங்களை எழுப்பி உள்நாட்டுக் கலவரத்தை உருவாக்குவது; பிறகு, ராணுவத்தை அனுப்பித் தாக்குதல் நடத்துவது; இயன்றவரைக்கும் அதிக அளவிலான நிலப்பரப்பைக் கைப்பற்றுவது. வழக்கம்போல சர்வதேச அமைதிப் புறாக்கள் வந்து சேர்வார்கள். அவர்களின் துணையோடு பேசிப்பேசியே காஷ்மீரின் சில பகுதிகளை வசப்படுத்திக்கொள்ளலாம். கிளர்ச்சியூட்டும் ஆசையுடன் வகுத்த திட்டத்துக்கு அவர்கள் வைத்த பெயர், ஆபரேஷன் ஜிப்ரால்டர்.

ஜிப்ரால்டர் என்ற பெயர் தேர்வே வித்தியாசமானது. மத்திய ஸ்பெயினில் மூர் இனத்து மக்கள் எடுத்த ராணுவ முயற்சியின் பெயர் இது. கிட்டத்தட்ட அதேபோன்ற ராணுவ முயற்சியை நடத்தி காஷ்மீரைக் கைப்பற்றுவதுதான் பாகிஸ்தான் ராணுவத்தின் திட்டம்.

1965 ஆகஸ்ட் முதல் வாரத்தில் சில பயங்கரவாதிகள் காஷ்மீர் எல்லைக்குள் நுழைந்தனர். யாருக்குமே தெரியாது என்றுதான் நினைத்தார்கள். ஆனால், அங்கே ஆடுமேய்த்துக் கொண்டிருந்த சிறுவனின் கண்களில் அவர்கள் பட்டனர். அவன் வழியே ராணுவத்துக்குத் தகவல் சென்றது. அவர்கள் வழியே பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கும் சென்றது.

கட்ச் விவகாரத்தில் கொஞ்சம் விட்டுக்கொடுத்துப்போனதால் வேலி தாண்டி வரப் பார்க்கிறதா வெள்ளாடு? கண்கள் சிவந்திருக்கக் கூடும் அவருக்கு. ‘‘கட்ச் வேறு, காஷ்மீர் வேறு. எல்லைக்குள் நுழைந்த அவர்களை அடித்து விரட்டுங்கள்’’ என்று உத்தரவிட்டார். அதற்காகவே காத்துக்கொண்டிருந்த இந்திய ராணுவம், ஊடுருவல்காரர்கள் மீது தாக்குதலைத் தொடங்கியது. ஆசையுடன் வந்த அத்தனை பேரும் சிறுசிறு சாகசங்களை மட்டும் நிகழ்த்திக் காட்டிவிட்டு, வீழ்ந்துவிட்டனர். அத்தோடு ஆபரேஷன் ஜிப்ரால்டர் அஸ்தமனமானது.

கட்ச் வளைகுடாவில் பின்வாங்கிய இந்திய ராணுவம் காஷ்மீர் என்றதும் கொதித்தெழுந்தது எப்படி என்று ஆச்சரியப்பட்டுப்போனார் அயூப்கான். ஆனாலும், அவர் அதிர்ந்துபோகவில்லை. ஆபரேஷன் க்ராண்ட்ஸ்லாம் என்ற அடுத்த நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். ஆம், பயங்கரவாதிகள் மட்டுமல்ல, பாகிஸ்தான் ராணுவ வீரர்களும் தாங்கள் அணிந்திருந்த முகமூடிகளை எல்லாம் கழற்றிவீசிவிட்டு, போர் நிறுத்தக் கோட்டைத் தாண்டி காஷ்மீருக்குள் நுழைந்தனர்.

கனரகத் துப்பாக்கிகள், பீரங்கிகள் சகிதம் வந்த அவர்கள் 1965 செப்டம்பர் முதல் தேதியன்று தாக்குதலைத் தொடுத்தனர். அமெரிக்க நாட்டு பேட்டன் டாங்குகள் கொண்ட படையினர் நடத்திய தாக்குதல் காரணமாக 30 சதுர மைல் அளவுக்கான நிலப்பரப்பு பாகிஸ்தான் வசம் சென்றது.

அவர்களுடைய அடுத்த இலக்கு, ஆக்நூர் பாலம். அதைக் கைப்பற்றிவிட்டால் ஜம்மு- காஷ்மீர் - பஞ்சாப் இடையிலான தொடர்பு துண்டிக்கப்படும். அது அபாய அறிகுறி என்பது இந்திய ராணுவத்துக்குப் புரிந்தது. அதைத் தடுப்பதற்கு ஆகவேண்டிய அத்தனை முயற்சிகளையும் எடுத்தது இந்திய ராணுவம். இருதரப்புமே விமானத் தாக்குதலைத் தொடுத்தன.

இந்தியா தொடுத்த வேம்பயர் விமானத் தாக்குதலை ஸேபர் ஜெட் விமானம் கொண்டு எதிர்கொண்டது பாகிஸ்தான். இருதரப்பும் சளைக்காமல் போரிட்டன. அப்போது, யுத்த வியூகத்தில் சிறு மாற்றத்தைச் செய்தது இந்தியா. அது பெருவெடிப்பாக மாறியது. இந்தியா – பாகிஸ்தான் இடையிலான இரண்டாம் யுத்தத்தின் ஆகப்பெரிய திருப்புமுனை அது!

(பதற்றம் தொடரும்)

- ஆர்.முத்துக்குமார்
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close