Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காவிரி மேலாண்மை வாரியம்... மோடி அரசின் சதி.. அம்பலப்படுத்தும் பொறியாளர்!

மிழ்நாடு-கர்நாடகா மாநிலங்களுக்கிடையில் இருந்து வரும் நதிநீர்ப் பங்கீடு பிரச்னையை நிரந்தரமாகத் தீர்த்து வைக்க, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என்று சமீபத்தில் உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். ஆரம்பத்தில் இதை தலையாட்டிக் கேட்டுக்கொண்ட மத்திய அரசு, அடுத்த சில நாட்களிலேயே திடீர் பல்டி அடித்தது. அதாவது, ‘நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றிய பிறகே வாரியம் அமைப்போம். இந்த விஷயத்தில் தலையிடுவதற்கு உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை' என்று உச்ச நீதிமன்றத்திடமே கறாராகக் கூறிவிட்டது.

இதையடுத்து, மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் தொடர்கின்றன. 'கர்நாடக மாநில ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காகவே தமிழர்களின் நலனை பலி கொடுக்கிறது பி.ஜே.பி.' என்று பலதரப்பிலிருந்தும் சூடான குற்றச்சாட்டுக்கள் கிளம்பிக் கிடக்கின்றன.

இதற்கு நடுவே, "காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை என்று சொல்வது ஏமாற்று வேலை. மத்திய அரசு நினைத்தால், ஏற்கெனவே காவிரி நடுவர்மன்றம் கொடுத்திருக்கும் இறுதித் தீர்ப்பின் அடிப்படையில், ஒரே நாளில் அமைத்துவிட முடியும்" என்று சட்டங்களையும், உதாரணங்களையும் மேற்கோள்காட்டி அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் தமிழ்நாடு பொதுப்பணித்துறையின் மூத்த பொறியாளர் சங்க மாநிலச் செயலாளர் வீரப்பன்.


ஏற்கெனவே இருக்கும் சட்டத்தின்படி மேலாண்மை வாரியம் அமைக்க வழிவகை உண்டு!

அவர் நம்மிடம் பேசும்போது, "காவிரி நடுவர்மன்றம் என்பது உச்சபட்ச அதிகாரங்களுடன்தான் அமைக்கப்பட்டது. அதன் தீர்ப்பு, உச்ச நீதிமன்றத்துக்கு இணையானது. அதாவது, பன்மாநில நதிநீர் வழக்குச் சட்டம் 1956, உட்பிரிவு 6-ன் படிதான் 1990-ம் ஆண்டு காவிரி நடுவர்மன்றம் அமைக்கப்பட்டது. இச்சட்டத்தின் உட்பிரிவு 6 ஏ (1) காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கு வழிவகை செய்கிறது. இச்சட்டத்தின் உட்பிரிவு 6 ஏ (7) நாடாளுமன்றம்தான் மேலாண்மை வாரியத்தை அமைத்திட அதிகாரம் பெற்றது என்றும் சொல்கிறது.

அதேசமயம், 2002-ம் ஆண்டில் கொண்டுவந்த திருத்தவிதி 6(2)-ல், நடுவர் மன்றத் தீர்ப்பு இந்திய அரசிதழில் வெளியிடப்பட்டுவிட்டாலே அது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு இணையான அதிகாரம் பெற்றதாகிவிடுகிறது என்று சொல்கிறது. அதை மாற்ற நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் எந்த வாய்ப்பும் தரப்படவில்லை. இந்த ஷரத்துகளின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைத்திட வலியுறுத்துவதற்கு தமிழக அரசுக்கு முழு உரிமை உண்டு.

தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் தண்ணீர் பங்கீடு சம்பந்தமான காவிரி நடுவர்மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 05-2-2007-ல் மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டது. ஆறு ஆண்டுகள் கழித்து 19-2-2013-ல்தான் அரசிதழில் அறிவிக்கையாக மத்திய அரசு வெளியிட்டது. இடைப்பட்ட காலத்தில் நடுவர்மன்ற தீர்ப்புப் பற்றி ஒரு துரும்பைக் கூட கிள்ளவில்லை மத்திய அரசு. அது சம்பந்தமான மறுப்போ, குறிப்புகளையோ எதையும் தெரிவிக்கவில்லை. அரசிதழில் வெளியிட்டதாலேயே, நடுவர்மன்ற அறிக்கையை இந்திய அரசு முழுமையாக ஒப்புக்கொண்டதாகவே பொருள்.

நாடாளுமன்றத்துக்கு அனுப்பாமலேயே வாரியங்கள் அமைக்கப்பட்டுள்ளன!

இதன்படி உட்பிரிவு 6 ஏ(1), 6 (2) மற்றும் அரசியல் சாசனச் சட்டம் 144-ன்படி காவிரி மேலாண்மை வாரியத்தை நாடாளுமன்றத்தின் ஆய்வுக்கு அனுப்பாமலேயே அமைக்கவேண்டிய பொறுப்பும் கடமையும் இந்திய அரசுக்கு இருக்கிறது. இதற்கு உதாரணமாக சொல்லவேண்டுமென்றால், நர்மதா நதி கட்டுப்பாட்டு ஆணையம், டிசம்பர் 1980-ல் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமலேயே அமைக்கப்பட்டது. அதற்கு ஓர் ஆண்டுக்கு முன்புதான் 1979-ல் அரசிதழில் இதுகுறித்து வெளியிடப்பட்டது.
இதைவிட கிருஷ்ணா, கோதாவரி நதிகளின் மேலாண்மை வாரியம் பற்றி கூறினால் மிகவும் பொருத்தமாக இருக்கும். அதாவது, இந்த நதிகளுக்கான நடுவர்மன்றத்தின் தீர்ப்பு 28-5-2014 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டது. அடுத்த நாளே, அதாவது 29-5-2014-ல் வாரியம் அமைக்கப்பட்டது. நாடாளுமன்ற ஆய்வுக்கு அனுப்பப்படவே இல்லை. உண்மை நிலை இப்படியிருக்க, தமிழ்நாட்டுக்கு மட்டும் ஓரவஞ்சனை ஏன்?

மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுப்பு தெரிவிப்பதற்கு இந்திய அரசுக்கு எந்தச் சிறப்பு அதிகாரமும் இல்லை. தற்போது உச்ச நீதிமன்றத்தில் இயங்கும் 3 நீதிபதிகளின் அமர்வுகூட, காவிரி நடுவர்மன்றம் வழங்கியுள்ள நதிநீர்ப் பங்கீடு தொடர்பான தீர்ப்பின்படியே மூன்று மாநிலங்கள் சார்பாக தொடுக்கப்படும் வழக்குகளை விசாரிக்கிறது.

வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றத்துக்கு நடவடிக்கை எடுக்கும்!

"இந்திய அரசியல் சாசனம் 144-ன் படி, மத்திய அரசும் மாநில அரசுகளும் (கர்நாடக சட்டமன்றம் உட்பட) உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை எந்தவித எதிர்ப்பும் மறுப்பும் இன்றிச் செயல்படுத்த வேண்டும். நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து மாநில சட்ட மன்றங்கள் தீர்மானம் இயற்ற எந்த அதிகாரமும் இல்லை என்பதை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு திட்டவட்டமாக தெரிவிக்கிறது. ஆக, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க முன்வராவிட்டால், அரசியல் சாசன சட்டம் 144-ன் படி மத்திய அரசு மீதும், கர்நாடகா அரசு மீதும் உடனடியாக நடவடிக்கை (அவமதிப்பு) எடுத்து, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும். இதை உச்ச நீதிமன்றம் விரைவில் செய்யும் என்று எதிர்பார்ப்போம்" என்று தெள்ளத் தெளிவாக எடுத்து வைத்தார்.

ஆகக்கூடி, மத்தியில் காங்கிரஸ் ஆண்டபோதும் சரி, பிஜேபி ஆண்ட போதும் சரி... தற்போது ஆளுகிற போதும் சரி, தொடர்ந்து தமிழகத்துக்கு துரோகம் ஒன்றையே இழைத்துக் கொண்டுள்ளனர், சுயநல அரசியலுக்காக!

சில புள்ளிவிவரங்கள்:

காவிரி நடுவர்மன்றம் இறுதித் தீர்ப்பு வெளியிடப்பட்டது: 05-2-2007
அரசிதழில் வெளியிடப்பட்டது: 19-2-2013

நர்மதா நதி கட்டுப்பாட்டு ஆணையம், அரசிதழில் வெளியிடப்பட்டது: டிசம்பர் 1979
அமைக்கப்பட்டது: டிசம்பர் 1980 

கிருஷ்ணா, கோதாவரி நடுவர்மன்றம் அரசிதழில் வெளியிடப்பட்டது: 28-5-2014
மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது: 29-5-2014

- த.ஜெயகுமார்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close