Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரு வாரமாக அப்போலோ அறிக்கை ஏன் இல்லை? #ApolloUpdates

ப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த மருத்துவமனை அறிக்கை வெளிவந்து ஒரு வாரம் ஆகிவிட்டது.  அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் அனுமதிக்கப்பட்டதும், சாதாரண காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைவு என்று மருத்துவமனை சார்பில் முதல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதோடு ஓரிரு நாளில் முதல்வர் வீடு திரும்புவார் என்றும் அதில் சொல்லப்பட்டு இருந்தது.

அவர்கள் சொல்லி இருந்த இரண்டு நாட்கள் கடந்த நிலையில், முதல்வர் வீட்டிற்கு சென்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த நிலையில் மீண்டும் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், இன்னும் இரண்டு நாட்கள் முதல்வருக்கு ஓய்வு தேவை என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அப்போது தொடங்கி தொடர்ச்சியாக பரபரப்பு பற்றிக் கொண்டது.

சாதாரண காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு என்று சொல்லப்பட்ட போதிலும்,  அப்போலோவில் நிலவிய சூழ்நிலையின் தீவிரம், அரசியல் நகர்வுகள் ஆகியவை வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. இது மக்கள் மத்தியிலும், அரசியல் வட்டாரத்திலும் பல்வேறு யூகங்களுக்கு வித்திட்டது.

இந்நிலையில், அக்டோபர் 1-ம் தேதி ஆளுநர் வித்யாசாகர் ராவ், அப்போலோவுக்கு வந்து முதல்வரின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார். அதைத் தொடர்ந்து வெளிவந்த அறிக்கையில்தான் முதல்வரின் உடல்நிலை குறித்த உண்மையான தகவல்கள் வெளியிடப்பட்டன.  அப்போதும் முழுமையான தகவல்கள் அடங்கிய அறிக்கையாக இல்லை என முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஒவ்வொருவராக வந்து பார்க்கத் தொடங்கினார்கள். திருமாவளவன் தொடங்கி வைத்த இந்த சந்திப்பு, மக்கள் நலக்கூட்டணித் தலைவர்கள் ஒவ்வொருவராக அப்போலோ வரவைத்தது. அதற்குப் பிறகு, தி.மு.க., தொடங்கி அகில இந்திய கட்சிகளான காங்கிரஸ், பி.ஜே.பி என எல்லா கட்சித் தலைவர்களும் அப்போலோ வந்து போய்விட்டார்கள். ஆனால், யாரும் முதல்வரையோ, முதல்வர் சிகிச்சை பெறும் அறையையோ நேரில் சென்று பார்க்கவில்லை. இதனால் முதல்வர் உடல்நிலை குறித்து பல விதமான வதந்திகள் பரவின.

 

இது ஒருபுறம் பரபரப்பு கூட்டிக் கொண்டு இருக்க, முதல்வரின் உடல்நிலை குறித்து  அரசு அறிக்கை வேண்டும் என்று கேட்டு நீதிமன்றம் போனார் சமூக ஆர்வலரான டிராபிக் ராமசாமி. அதை விசாரித்த நீதிமன்றம், ‘அப்போலோ மருத்துவமனை தான் தொடர்ச்சியாக அறிக்கை வெளியிடுகிறதே, அதைப் படித்து தெரிந்துகொள்ளுங்கள்’ என்று சொல்லி வழக்கை முடித்துவைத்தது.

அதற்குப் பிறகு தான் அப்போலோ வெளியிட்ட மருத்துவ அறிக்கைகளில், லண்டனில் இருந்து வந்துள்ள டாக்டர்கள், எய்ம்ஸ் மருத்துவர்கள், நுரையீரல் பிரச்னைக்கான சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதுடன், பிசியோதெரபி சிகிச்சைகள் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான சிகிச்சைகளும் முதல்வருக்கு தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. முதல்வர் உடல்நிலை தொடர்பாக, இதுவரை 10 அறிக்கைகளை அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ளது.  கடைசியாக கடந்த 10-ம் தேதி அறிக்கை வந்த நிலையில், ஒரு வாரம் ஆகியும் முதல்வர் உடல்நிலை குறித்த அதிகாரபூர்வ அறிக்கை வெளிவரவில்லை. இதுகுறித்து அப்போலோ வட்டாரத்தில் பேசினோம்.

‘ட்ராபிக் ராமசாமி வழக்கில் நீதிமன்றம், அப்போலோ அறிக்கைகளை படித்துக் கொள்ளச் சொன்ன பிறகு சரியான கால இடைவெளியில் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வந்தது. ஆனால், அதுவே வெளியில் வதந்தி பரப்பும் ஆசாமிகளுக்கு வசதியாக போய் விட்டதால் அறிக்கை எதுவும் வெளியிட வேண்டாம் என்று சசிகலா தரப்பு மருத்துவமனை நிர்வாகத்திடம் சொல்லியுள்ளது. இதனால் தான் அறிக்கை எதுவும் வெளியாகவில்லை. அதோடு மக்கள் மத்தியில் முதல்வர் உடல்நிலை தொடர்பான பரபரப்பு தற்போது அடங்கி இருப்பதால் அறிக்கை வெளியிடுவதைத் தற்போது நிறுத்தி வைத்திருக்கிறார்கள்’ என்றனர்.

அரசு நிர்வாகத்தில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத ஒருவர், எப்படி ஒரு மாநிலத்தின் முதல்வர் தொடர்பான விஷயங்களில் அனைத்து வித உரிமையையும் எடுத்துக்கொள்ள முடியும் என்பது அரசியல் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

- மா.அ.மோகன் பிரபாகரன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close