Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மீண்டும் அதே வேட்பாளர்கள்...! பின் ஏன் தேர்தலை தள்ளி வைத்தது ஆணையம்...?


ஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளுக்கான தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதற்கு சொல்லப்பட்ட காரணங்களுக்குத் தீர்வு காணப்படாமல் மீண்டும் தேர்தல் தேதியை அறிவித்திருக்கிறது தேர்தல் ஆணையம்.


போட்டியிடத் தடை இல்லை

இந்திய தேர்தல் வரலாற்றில் இல்லாத வகையில் கடந்த மே 16-ம் தேதி நடக்க இருந்த தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. இரண்டு தொகுதிகளிலும் அளவு கடந்த வகையில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்படுவதாக தேர்தல் பார்வையாளர்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் தேர்தல் தள்ளி வைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் விளக்கம் சொன்னது. முதலில் ஜூன் மாதம் ஒத்தி வைக்கப்பட்ட தேர்தல் 6 மாதத்துக்குப் பிறகு நவம்பர் 19-ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த அறிவிப்புடன் ஒரு சர்ச்சையும் சேர்ந்து வந்திருக்கிறது. முன்பு அறிவிக்கப்பட்ட வேட்பாளர் இப்போது இடைத்தேர்தலில் போட்டியிட தடை இல்லை என்று தேர்தல் ஆணையம் சொல்லியிருப்பது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.


அங்கீகாரமாக எடுத்துக் கொண்ட அ.தி.மு.க


இதற்கு பா.ம.க., இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. பணப்பட்டுவாடா நடைபெற்றதால்தான் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பணப்பட்டுவாடாவுக்கு அந்தத் தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்களே காரணம். இந்த சூழலில் அவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட அனுமதிப்பது நல்லதல்ல என்ற வாதத்தை முன் வைக்கிறார்கள்.

தேர்தல் ஆணையம் சொன்னதையே அங்கீகாரமாக எடுத்துக் கொண்டு இப்போது அ.தி.மு.க சார்பில்  தஞ்சைத் தொகுதியில் முன்பு அறிவிக்கப்பட்ட ரெங்கசாமியே மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளார். அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில் பாலாஜியே மீண்டும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தி.மு.க சார்பில் போட்டியிடுவதற்காக விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன. தி.மு.க சார்பில் மீண்டும் பழைய வேட்பாளர்கள் நிறுத்தப்படமாட்டார்கள் என்று சொல்கிறார்கள்.

தஞ்சை தொகுதியில்..
ரூ.6 கோடி பறிமுதல்
10 வழக்குகள் பதிவு
 
அரவக்குறிச்சி தொகுதியில்
58 வழக்குகள் பதிவு
அன்பு நாதன் வீட்டில்  ரூ.4.77 கோடி பறிமுதல்
தி.மு.க வேட்பாளர் கே.சி.பழனிசாமியின் மகன் சிவராமன் வீட்டில் ரூ.2 கோடி பறிமுதல்

 


கட்சிகளின் கடமை

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கனகராஜிடம் பேசினோம். "தமிழகம் முழுவதும் பணப்பட்டுவாடா நடைபெற்ற போதிலும் இதற்கு அடையாளமாக இரண்டு தொகுதிகளில் மட்டும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. தேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெற்றது போன்ற வழக்குகளில் நீதிமன்றம் விரைவாக விசாரித்துத் தீர்ப்பளிக்க வேண்டும். பணம் கொடுத்தார்கள் என்பது அனுமானமாகச் சொல்லப்பட்டாலும், சட்டரீதியாக நிருபிக்க முடிவதில்லை. எனவே, சட்டத்தில் இருக்கும் ஓட்டையை இவர்கள் பயன்படுத்தி அரசியல்வாதிகள் தப்பித்து விடுகின்றனர். இவர்கள்தான் குற்றவாளிகள் என்று தேர்தல் ஆணையம் தானாக ஒன்றும் சொல்ல முடியாது. இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. இது குறித்து விசாரியுங்கள் என்று காவல்துறைக்குச் சொல்ல முடியும். நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியும். அன்புநாதன் மீது எப்.ஐ.ஆர் போட்டதாக சொல்கிறார்கள். குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. பணப்பட்டுவாடா நடந்ததால்தான் தேர்தலை நிறுத்தினோம் என்று தேர்தல் ஆணையம் கொடுத்த விளக்கத்தில் விரிவாகச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால், இது சந்தேகத்துக்கு இடமின்றி நிருபிக்கப்படாத வரையில் ஒரு வேட்பாளர்  தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது. இத்தகைய குற்றசாட்டுக்கு உள்ளான வேட்பாளர்களை நிறுத்தக் கூடாது என்று அரசியல் கட்சிகள்தான் முடிவு எடுக்க வேண்டும்.  கட்சிகள் இதை ஊக்குவிக்காவிட்டால் பிரச்னை இருக்காது. பேருக்காகக் கூட தாங்கள் வேறு வேட்பாளர்கள் நிறுத்த, கட்சிகள் தயாராக இல்லை. தேர்தல் கமிஷன் சொல்வது உண்மை இல்லை என்றுதான் சொல்லப்பார்க்கிறார்கள்" என்றார்.

மக்கள் திருந்த வேண்டும்

முன்னாள் தேர்தல் ஆணையர் கோபாலசுவாமியிடம் கேட்டோம், "இது ஒரு சட்ட ரீதியான பிரச்னை. அதன் மூலம்தான் ஒருவர் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று அறிவிக்க முடியும். வாக்காளருக்குப் பணம் பட்டுவாடா செய்யப்படுவதைத்  தடுக்க முடியாது. பணம் வாங்கக் கூடாது என்று மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். பணப்பட்டுவாடா குறித்த வழக்குகளை  நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியாவிட்டால் வேட்பாளர்களை ஒன்றும் செய்ய முடியாது. பணம் பட்டுவாடா செய்தது போலத் தெரிந்தது என்ற காரணத்தால்தான் தேர்தல் ஆணையம் தேர்தலைத் தள்ளி வைக்கிறது. நீதிமன்றத்தில் நிறைய வழக்குகள் இருக்கிறது. நீதிபதிகள் இல்லை என்று பல்வேறு காரணங்கள் கூறப்படலாம். தேர்தல் வழக்குகளை விசாரிக்கத் தனி நீதிபதிகள் நியமிப்பது குறித்து நீதித்துறைதான் முடிவு செய்ய முடியும். பணப்பட்டுவாடாவைத் தடுக்க வீடுவீடாகச் சென்று கண்காணிக்க தேர்தல் கமிஷன் ஆட்களை நியமிக்க வாய்ப்பு இல்லை. இது தமிழகத்தில் புரையோடிப்போய்விட்டது " என்றார்.

-கே.பாலசுப்பிரமணி
 

எடிட்டர் சாய்ஸ்