Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இன்னும் கொஞ்சம் அதிகம் இருந்திருக்கலாம்... திருநாவுக்கரசரிடம் எதிர்பார்க்கும் இளங்கோவன் !

மிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் டெல்லியில் முகாமிட்டிருக்க, தமிழக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் பரபரக்கின்றன. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது புகார் சொல்லத்தான் திருநாவுக்கரசர் ராகுல் காந்தியை சந்தித்துள்ளார். காங்கிரஸ் கட்சி உண்ணாவிரதத்தில் பங்கேற்காமல் இருந்ததால், விசாரணைக்காகவே ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அழைக்கப்பட்டுள்ளார். தனக்கு எந்த பதவியும் வழங்காதது குறித்து முறையிடவே ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ராகுலை சந்தித்துள்ளார் என இருவரது டெல்லி பயணம் பல்வேறு யூகங்களையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்துவிட்டு, விமானம் மூலம் கோவை வந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சர்ச்சை குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவரின் பதில்களும்...

திருநாவுக்கரசர் உங்கள் மீது புகார் கூறத்தான் டெல்லி சென்றதாகவும், அதற்கு விளக்கமளிக்க நீங்கள் அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுவது பற்றி...?

எனக்கும் திருநாவுக்கரசருக்கும் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. நாங்கள் டெல்லிக்கு வந்ததற்கு இவ்வளவு பெரிய முக்கியத்துவம் என்பதை பத்திரிகைகள், டிவி பார்த்து தான் தெரிந்து கொண்டோம். இது அவ்வளவு முக்கியமான சந்திப்பு இல்லை. நான் உண்ணாவிரதத்தில் பங்கேற்காதது குறித்து திருநாவுக்கரசரிடம் சொல்லி விட்டேன். முதல்வரை சந்திக்க எனக்கு நேரம் ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்தது. அதோடு எனக்கு அன்று உடல்நிலையும் கொஞ்சம் சரியில்லை. அதனால் போகவில்லை. எனக்கும், அவருக்கு பிரச்னை என்பதில் கொஞ்சம் கூட உண்மையில்லை.

முன்னாள் தலைவராக உங்கள் கருத்துகள் ஏற்கப்படுகிறதா?

முன்னாள் தலைவராக எனது கருத்துகள் ஏற்கப்படுகிறதா என்பதெல்லாம் வேறு விஷயம். என்னைப் பொறுத்தவரை காங்கிரஸை தமிழகத்தில் பலப்படுத்த என்னென்ன செய்ய வேண்டும் என்பதை நான் அவ்வப்போது மேலிடத்துக்கு சொல்லிக்கொண்டு தான் இருக்கிறேன்.

உங்களுக்கு கட்சியின் தேசியச் செயலாளர் பதவி கிடைக்கும் என சொல்லப்படுகிறதே?

என்ன பதவி வேண்டும் என்றெல்லாம் ராகுல் காந்தியிடம் நான் ஆலோசிக்கவில்லை. தமிழகத்தில் உள்ள அரசியல் சூழல் குறித்து பேசினோம். தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்துவது குறித்து பேசினோம். அவ்வளவு தான்.

உங்களுக்கு பதவி கிடைத்தால் மகிழ்ச்சி என திருநாவுக்கரசர் சொல்லியிருக்கிறாரே?

அவர் மகிழ்வதைக் கண்டால் நானும் மகிழ்வேன்.

அதிமுக பக்கம் சாய்கிறாரா திருநாவுக்கரசர்?

அவர் தமிழக காங்கிரஸ் தலைவராகி கொஞ்ச நாள் தான் ஆகிறது. அதற்குள் அங்கு சாய்கிறார், இங்கு சாய்கிறார் என சொல்ல வேண்டாம். என்னைப் பொறுத்தவரை மேலிடம் என்ன சொல்கிறதோ அதை அவர் செய்கிறார்.

உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் சுயேட்சையாக போட்டியிட தயாராக இருக்குமாறு சொல்லி இருக்கிறாரே திருநாவுக்கரசர்? இடைத்தேர்தலில் யாருடன் கூட்டணி?

இடைத்தேர்தலில் திமுக உடன் தான் கூட்டணி. அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. சுயேட்சையாக போட்டியிடத் தயாராக இருக்குமாறு திருநாவுக்கரசர் சொன்ன மாதிரி எனக்கு தெரியவில்லை. நீங்கள் தான் ஏதோ புதியதாக சொல்வீர்கள் என நினைக்கிறேன்.

தமிழக முதல்வரை நேரில் சந்திக்கச் சென்றீர்கள். முதல்வர்  எப்படி இருக்கிறார்?

முதலமைச்சர் உடல்நிலை நன்றாக இருக்கிறது. லண்டனில் இருந்து மிகவும் பிசியான ஒரு மருத்துவர் மூன்று முறை வருகின்றார் எனச்சொன்னால், நோயாளிக்கு அவர் தரும் சிகிச்சை பலனளிக்கிறது என்று தான் பொருள். அதனால்தான் திரும்பத் திரும்ப வருகிறார். முதல்வர் உடல்நிலை தேறவில்லை என்றால் அமெரிக்காவில் இருந்து டெல்லியில் இருந்து சிங்கப்பூரில் இருந்தும் மருத்துவர்கள் வரத்தேவையில்லை. எங்களைப் பொறுத்தவரை முதல்வர் பூரண குணம் அடைவார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி போராட்டங்கள் நடந்து வருகிறதே?

காவிரி மேலாண்மை வாரியத்தை மோடி தலைமையிலான மத்திய அரசு அமைத்திருக்க வேண்டும். அதை செய்யாதது கண்டனத்துக்குரியது. காவிரி மேலாண்மை வாரியத்துக்காக நடந்த ரயில் மறியல் போராட்டங்களில் காங்கிரஸ் பங்கேற்றது குறைவு தான். காங்கிரஸ் இன்னும் கொஞ்சம் இந்த போராட்டங்களில் பங்கேற்றிருக்க வேண்டும் என்பது தான் என் கருத்து.

- ச.ஜெ.ரவி,

எடிட்டர் சாய்ஸ்