Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருமாவளவனை ஏன் சந்தித்தார்கள் பொன்.ராதாவும் திருநாவுக்கரசரும் !

  

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும்  தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்து பேசியிருப்பது தமிழக அரசியல்களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மூன்று அரசியல் தலைவர்களுக்குமான நிலைப்பாடும், கொள்கையும் மிகவும்  மாறுபட்டது. இந்த நிலையில் அடுத்தடுத்த நாட்களில் பொன். ராதாகிருஷ்ணனும் , திருநாவுக்கரசரும் திருமாவளவனை  சந்தித்துப் பேசியிருப்பது, பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது.

மதரீதியான கொள்கை அளவிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் கொள்கை மாறுபட்டது. அதே போன்று  காங்கிரஸ் கட்சி, இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மாறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டது.  இந்த நிலையில் இவர்கள் மூவரும் சந்தித்திருப்பது அரசியலுக்கு அப்பாற்பட்டு, அவர்களுக்கு இடையே நல்ல  நட்பை விதைத்திருக்கிறது என்றே சொல்லலாம் என்கிறார்கள்  அரசியல் ஆர்வலர்கள். இதற்குக் காரணம் திருமாவளனின் அணுகுமுறையே என்று பேசப்படுகிறது.

முதல்வர் ஜெயலிலதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கபட்டதும்,  முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரிக்க முதல் ஆளாக மருத்துவமனைக்குச் சென்றவர் திருமாவளவன்.  முதல்வரை பார்க்கச் சென்றவர், அங்கிருந்த  அமைச்சர்கள்  மற்றும் முதல்வருக்கு நெருங்கியவர்களை பார்த்துவிட்டு வந்தார். அதன் பிறகே மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவராக அப்போலோவிற்கு சென்றனர். 

 திருமாவளவன்  - பொன். ராதாகிருஷ்ணன் சந்திப்பு

சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகத்துக்கு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வருவதாக திடீரென  தகவல் வந்தது. இந்த தகவல்,  அப்போது தனிப்பட்ட வேலை நிமித்தமாக தியாகராய  நகருக்குச்  சென்றிருந்த திருமாவளவனுக்கு தெரிவிக்கப்பட்டது. மத்திய அமைச்சர் வருவது குறித்த தகவல்  அறிந்தவுடன்,  உடனடியாக அலுவலகம் வந்தார்  திருமாவளவன். பொன் . ராதாகிருஷ்ணன்  தனது அலுவலகத்திற்கு அருகில் இருக்கும் அபார்ட்மெண்டில் இருப்பதை அறிந்து, அவர் இருக்கும்  இடத்திற்கே சென்றார்  திருமாவளவன் . அப்போது அங்கிருந்த பிஜேபி  நிர்வாகிகள் சிலர், "வேண்டாம். எங்கள் அண்ணனே  உங்கள்  அலுவலகத்திற்கு  வருவதாக  கூறியுள்ளார். அதுவே சரியான அணுகுமுறை.  சந்திப்பை அங்கு வைத்தால் தான்  நன்றாக இருக்கும்.  நீங்கள்  உங்களுடைய  அலுவலகத்தில் இருங்கள். அண்ணன் வந்து விடுவார்" என்று  கூறியுள்ளனர்.  இதனைத் தொடர்ந்து பொன்.ராதா கிருஷ்ணனுக்காக காத்திருந்தார் திருமாவளவன் . பின்னர் விடுதலைச் சிறுத்தைகள் அலுவலகம் சென்ற மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், திருமாவளவனை சந்தித்துப் பேசியுள்ளார். 

"இதே தெருவில் எங்கள் கட்சி நிர்வாகி ஒருவரின்  வீட்டு நிகழ்ச்சிக்காக வந்தேன். அப்படியே உங்களையும் பார்க்க வந்தேன்" என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மரியாதை நிமித்தமான சந்திப்பு ! 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனிடம் இந்தச் சந்திப்பு குறித்து பேசினோம். "இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. அமைச்சராக அவர் பதவியில் இருந்தாலும் சரி. அமைச்சராக இல்லாத நாட்களிலும் சரி, எங்களிடையே  நல்ல நட்பு உள்ளது. ஒருமுறை கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் கொடி ஏற்றிக் கொண்டிருந்த போது, அவ்வழியாக  காரில் சென்று கொண்டிருந்த  பொன். ராதாகிருஷ்ணனிடம் 'திருமாவளவன் கொடியேற்றிக் கொண்டிருக்கிறார்'  என்று  கூறியுள்ளனர். வண்டியை நிறுத்திவிட்டு சாலையை கிராஸ் செய்து  என்னிடம் வந்தவர் சால்வை எடுத்து அணிவித்து பேசிவிட்டுச் சென்றார். அப்போது தான் அவர் மத்திய அமைச்சராக பதவி ஏற்றார்.

விஜயகாந்த் உடன்  பிரதமரைச் சந்திக்க  டெல்லியில் நாங்கள் காத்திருந்தபோது, என்னைப் பார்த்தவர், 'வீட்டிற்கு  வாருங்கள்'  என்று  என்னை  அழைத்தார் . என்னால் தான் செல்ல முடியவில்லை. கட்சிக்கு அப்பாற்பட்டு  பழகக்கூடியவர் . எனவே இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது" என்றார் திருமாவளவன். மேலும் அவருடன் பேசியதில் இருந்து...

தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஏதேனும் விவாதித்தீர்களா ?

இல்லை . அரசியல் எதுவும் பேசவில்லை.

முதல்வரின் உடல்நிலையை பரிசோதிக்க எய்ம்ஸ் மருத்துவர்கள் வந்தது  பலவித சந்தேகத்தை எழுப்புகிறது என்ற உங்களுடைய  கருத்து  பிஜேபி தரப்பில் சூட்டை கிளப்பியது. அது தொடர்பாக  நடந்த மோதலை சரிபடுத்தவே இந்த சந்திப்பு நடந்திருக்கும் என்று  பேசப்படுகிறதே ?

எய்ம்ஸ் மருத்துவர்கள்  அப்போலோ வந்தது  தொடர்பாகவோ மற்றவை குறித்தோ நாங்கள் பேசவில்லை.

திருநாவுக்கரசர் - திருமாவளவன் சந்திப்பு ! 

பொன். ராதாகிருஷ்ணன் சந்தித்த அடுத்த நாளே திருமாவளவனை அவரது அலுவலகத்தில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்துப் பேசினார். பத்து நிமிடங்கள் மட்டுமே இந்த சந்திப்பு நீடித்தது. இதனையடுத்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர். 

"இந்த சந்திப்பு நட்பு ரீதியானது. தமிழகத்தில் அரசியல் நாகரீகம் வளர்ச்சியடைந்து வருகிறது. காங்கிரஸ் பேரியக்கத்தில் ஏராளமான தலித் தலைவர்கள் இருந்துள்ளனர். திருநாவுக்கரசரின் தலைமையில் கீழ் தமிழக காங்கிரஸ் கட்சி வளர்ச்சியடையும்" என்றார் திருமாவளவன்.

தமிழக பாஜக தலைவரை சந்திப்பீர்களா என்று திருநாவுக்கரசரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த அவர், "தமிழக பா.ஜ.க தலைவரைப் பார்க்கச் செல்லும் போது உங்களிடம் சொல்லி விட்டு, உங்களை அழைத்துக் கொண்டு செல்கிறேன்" என்றார்.

திருநாவுக்கரசருடனான சந்திப்பு பற்றி திருமாவளவனிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்: 

தமிழக அரசியல் களம் குறித்து பேசினீர்களா ?

செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது தான். விடுதலைச் சிறுத்தைகளோடு சிலமுரண்பாடுகள் உண்டு. அதைத் தாண்டி இணைந்து  செயல்படுவதற்கான உடன்பாட்டு சூழல்கள் இருப்பதாகச் சொன்னார். சில முரண்பாடுகள்  இருந்தாலும் கூட,  காங்கிரசுக்கும் , விடுதலைச் சிறுத்தைகளுக்கும் இடையே  நல்ல  உறவு உள்ளது என்றுதான் நாங்கள் பேசினோம். 

இரண்டு கட்சிகளிடையேயான கொள்கைககள் வேறாக உள்ள  நிலையில்  இந்த சந்திப்பு  பல தரப்பிலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளதே?   

எங்கள் சந்திப்பில் அரசியல் முக்கியத்துவம் இல்லை . சந்திப்பிற்கு முக்கியக் காரணம் அணுகுமுறைதான். நட்பாகப் பழகுகிறேன் என்பதால், எனது கொள்கையில் நான் நீர்த்துப் போகவில்லை . அதேபோன்று  அவர்களுடைய கொள்கையிலும் ,நிலைப்பாட்டிலும்  இருந்து அவர்களும் மாறப்போவது இல்லை. கொள்கைகளை வைத்துக் கொண்டு மனித உறவுகளை எதிரியாகப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை . டெல்லியில் உள்ள  அரசியல் தலைவர்கள்  சந்தித்துக் கொள்வது இயல்பானது. தமிழ்நாட்டில்தான் , திமுக கூட்டணியில்  உள்ளவர்கள் ,  அ.தி.மு.க-காரர்களுடன் பேசக் கூடாது . அ.தி.மு.க. கூட்டணியில் உள்ளவர்கள்  தி.மு.க-வினருடன் பேசக் கூடாது என்ற கலாச்சாரம் வளர்ந்துள்ளது.

நாம் பேசுகிற அரசியல் வேறு . அதற்காக, ஒருவரை ஒருவர் சந்தித்துக்  கொள்ளக்கூடாது  என்று  சொல்வது சரியானது அல்ல . காவிரி விவகாரம் தொடர்பாக அனைவருமே பேச வேண்டிய  நேரம்  இது.

உள்ளாட்சித் தேர்தலில்  மக்கள்  நலக்கூட்டணியில் இருந்து விலகி பி.ஜே.பி-க்கு போகப்போவதாகச்  சொல்லப்படுகிறதே ?

 இது  முற்றிலும் தவறான தகவல் , கற்பனையான செய்தி. நான் சந்தித்த இரண்டு தலைவர்களிடமும் உள்ளாட்சித் தேர்தல் குறித்து பேசவில்லை.

பொதுவாக ஒரு விசயத்தை சொல்ல விரும்புகிறேன். இது போன்று  ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்வது, மக்களின் பொதுவான பிரச்னைகளில்  சேர்ந்து நின்று போராடுவது  என்பது இங்கு அருகிப்போய் உள்ளது. காவிரி பிரச்சனையில் ஆளுங்கட்சியும் , எதிர்க்கட்சியும் சந்தித்துக் கொள்ள வேண்டும்.  அதைப்பற்றி  பேசி தீர்வு காணுவதற்கான இயல்பான கலாச்சாரம் இங்கு வளர வேண்டும். சண்டை போட்டுக் கொண்டே இருந்தால்தான் மக்கள் ஓட்டு போடுவார்கள் என்று நினைப்பது  தவறு. பண்பட்ட அரசியலை மக்கள் தெரிந்து வைத்துள்ளார்கள். என்னதான் திருமாவளவனை பிடிக்கும் என்றாலும் பண்பட்ட அரசியலை மக்கள் தேர்வு செய்கிறார்கள். அப்படிப்பட்ட அரசியல் தெளிவு இருக்கும் போது, நாம் சண்டை போட்டுக் கொள்வதால் என்ன பயன்? அப்படி நினைப்பதும் தவறு.  பி.ஜே.பி-யோடு எனக்கு  கொள்கை முரண்பாடு இருக்கலாம் ஆனால்  நட்புரீதியாக சேர்ந்து  நிற்க வேண்டும்  என்று நினைக்கிறேன் .

சந்திப்பு குறித்து சுற்றும் உறுதி செய்யப்படாத தகவல்கள்  !  

இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது. ஏனென்றால், நவம்பர் 19-ம் தேதி தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், தேர்தல் கூட்டணி கணக்காக இருக்கலாம் என கருதப்படுகிறது.

இந்தத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி போட்டியிடுவது பயனற்றது என்றும், மக்கள் நலக்கூட்டணி சார்பாக இந்த நான்கு தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவிக்க மாட்டோம் என்றும் திருமாவளவன் ஏற்கனவே கூறியிருந்தார். அதே சமயத்தில், ’தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் தங்களின் ஆதரவு யாருக்கு என்பதை சில தினங்களில் ஆலோசித்து அறிவிக்கப்படும்’ என்றும் அவர் கருத்து தெரிவித்து இருந்ததால், இந்த சந்திப்பின்போது, 3 தொகுதி தேர்தல் தொடர்பாக பேசியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் உள்ளாட்சித் தேர்தலில்  திருமாவளவனின்  ஆதரவைக் கோரவும் இரண்டு  தலைவர்களும்  அடுத்தடுத்து அவரைச் சந்தித்து இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள் . ஆனால், இந்த தகவல்களையெல்லாம் மூன்று தலைவர்களுமே மறுத்துள்ளனர்.

  எது எப்படியாக இருந்தாலும் பண்பட்ட அரசியல் மாண்பை வளர்ப்பதற்கான அடித்தளமாக இருந்தால், இந்த சந்திப்பின் தொடர்ச்சியாக, நாளடைவில் அரசியல் மாண்பு மலர்ந்து விடும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது

 கே.புவனேஸ்வரி  

எடிட்டர் சாய்ஸ்

MUST READ