Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அப்போலோவில் ஜெயலலிதா : 30 நாட்கள் - 30 அதிர்வுகள்! #GetWellSoonCM

மிழக முதலமைச்சர் ஜெயலலிதா, செப்டம்பர் 22-ம் தேதி அப்போலோவில் அட்மிட் ஆனார். இன்றோடு சரியாக ஒரு மாதம் ஆகிறது. ஜெயலலிதா அட்மிட் ஆனது முதல், இன்றுவரை தமிழகத்தின் ஒவ்வொரு அசைவையும் அப்போலோ ஆக்கிரமித்துள்ளது. அப்போலோ, தமிழக மக்களின் பேச்சில் தவிர்க்க முடியாத அங்கம்; ஊடகங்களின் காட்சிகளில் தலைப்பு; இன்றைய தமிழக அரசியலுக்கு குவி மையம்; தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தை நகர்த்த, அப்போலோவில் இருந்து கட்டளை வர வேண்டும். இப்படி  கடந்த 30 நாட்களில், அப்போலோவை மையமாக வைத்து, தமிழகம் சந்தித்த 30 அதிர்வலைகள்... 

 

1.போயஸ் கார்டன் டூ அப்போலோ 

போயஸ் கார்டன், வேதா நிலையம். 2016 செப்டம்பர் 22. இரவு 9.30 மணிவரை மேட்டிமையான அந்தப் பகுதி, வழக்கமான கனத்த மௌனத்துடன், அமைதியாகத்தான் இருந்தது. இரவு 9.30-க்குப்பிறகு, அந்த அமைதி கலைந்தது. வேதா நிலையத்தில் இருந்து சீறிக்கிளம்பிய ஆம்புலன்ஸ், சென்னை, கீரிம்ஸ் லைனில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் போய்நின்றது. அதில், தமிழக முதலமைச்சர், ஒரு கோடி தொண்டர்களை வைத்திருக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மிகப்பெரிய அரசியல் கட்சியின் நிரந்தரப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா,  உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக வந்து சேர்ந்தார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக, அவருடைய இன்ப துன்பங்கள் அனைத்திலும் நிழலாய்த் தொடரும் சசிகலா கண்ணீரோடு பின் தொடர்ந்தார். அப்போது நேரம் 10.15.

 

2.அப்போலோ அறிக்கை ‘ஸ்டார்ட்’

செப்டம்பர் 23 - நள்ளிரவு 1 மணிக்கு, “தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, சாதரண காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைவால் ஏற்பட்ட உடல்சோர்வுக்கு சிகிச்சை பெற அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்” என்று அதிகாரப்பூர்வமாக அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. ஊடகங்களிடம் இந்தச் செய்தி காட்டுத் தீயாய்ப் பரவியது. நிருபர்களின் செல்போன்கள் அலறிய அலறலில், அக்டோபர் 22-ம் தேதி இரவு அமைதி இழந்தது. ஊடகங்கள் மூலம் செய்தி அறிந்த தமிழகம் படபடத்துப் பரபரத்தது. 


3.எதிர்முகாமில் இருந்து வாழ்த்து!

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்த அ.தி.மு.க தொண்டர்கள் தவித்தனர்; அமைச்சர்கள் அப்போலோவில் குவிந்தனர்; அதிகாரிகள் அப்போலோவைக் காவல் காத்தனர்; ஜெயலலிதா விரைவில் குணமடைய, எதிர்கட்சித் தலைவர்கள் வரிசையாக வாழ்த்துச் சொன்னார்கள். ஆனால், இவை அனைத்தையும் மங்கவைத்தது தி.மு.க தலைவர் கருணாநிதியின் அறிக்கை. செப்டம்பர் 24-ம் தேதி வெளியான அந்த அறிக்கையில், “முதல் அமைச்சர் ஜெயலலிதாவோடு கொள்கை அளவில் வேறுபட்டாலும், விரைவில் உடல்நலம் பெற்று பணியினைத் தொடர வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டு இருந்தார் கருணாநிதி. 


4. தேர்தல் அறிவிப்பும்... வேட்பாளர் பட்டியலும்...

தமிழக முதலமைச்சர் மருத்துவமனையில் இருந்தபோதும், மாநிலத் தேர்தல் ஆணையம் கனகச்சிதமாகச் செயல்பட்டது. உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியானது. செப்டம்பர் 25-ம் தேதி அறிவிப்பு வெளியானதும், ரத்தத்தின் ரத்தங்கள் யாருக்கு சீட்? எங்கே சீட்? என்று வேகம் காட்ட ஆரம்பித்தனர். அதில்,  தங்கள் தலைவியை கொஞ்சம் மறந்தனர். அவர்களுக்கு அடுத்த ஆச்சரிய அதிர்ச்சியை அ.இ.அ.தி.மு.க தலைமைக்கழகம் கொடுத்தது. அ.தி.மு.க சார்பில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை, மறுநாளே வெளியிட்டது. சீட் கிடைத்தவர்கள், அம்மாவின் உடல்நிலையை மறந்து கொண்டாடினார்கள்... சீட் கிடைக்காதவர்கள்,  இது அம்மாவின் ஒப்புதல் பெறாத பட்டியல் என்று புலம்பினார்கள். 


5. வதந்திகளும்... முதல் எச்சரிக்கையும்... 

ஜெயலலிதா உடல்நிலை குறித்து ஏராளாமான வதந்திகள் தீயாய்ப் பரவின. கிட்னி பாதிப்பு, நுரையீரலில் பிரச்னை, இதயக் கோளாறு என்று தொடங்கியவர்கள் மூளைச்சாவில் கொண்டுபோய் நிறுத்தினார்கள். சிங்கப்பூருக்கு ட்ரீட்மெண்டுக்குப் போகிறார் ஜெயலலிதா என்றனர். பதறிப்போன அரசாங்கம், அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தை வைத்தே, முதல் எச்சரிக்கை மணியை அடித்தது. செப்டம்பர் 25-ம் தேதி, அப்போலோ வெளியிட்ட அறிக்கையில், “முதலமைச்சர் நலமுடன் இருக்கிறார். அவர் வெளிநாடு செல்லத் தேவை இல்லை. தவறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. 

 

6. நான் அம்மா பேசுகிறேன்...

‘நான் உங்களின் அம்மா பேசுகிறேன். நான் நலமாக இருக்கிறேன்..’ என்று ஜெயலலிதாவே பேசுவதுபோல், வாட்ஸ்-அப்பில் ஒரு குரல் பேசியது. தமிழகம் முழுவதும் அது  வைரலாகப் பரவியது. ஜெயலலிதா உடல்நிலை குறித்து, பரவிய வதந்திகளில் இதுதான் உச்சம். ஆனால், அந்தக்குரலுக்கும் ஜெயலலிதாவின் குரலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. 

 

7. ஜெ-யின் ஆலோசனையும்... மு.க-வின் கேள்வியும்...

“அப்போலோ மருத்துவமனையில் வைத்து, முதலமைச்சர் ஜெயலலிதா, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஒரு மணிநேரம் நடந்த அந்தக் கூட்டத்தில் காவிரி விவகாரம் தொடர்பாக பேசப்பட்டது” என்று தமிழக அரசு சொன்னது. தமிழக அரசின் இந்தச் செய்திக்குறிப்பு வெளியானதும், தி.மு.க தலைவர் கருணாநிதியின் சாட்டையடி அறிக்கை ஒன்று வெளியானது. அதில், முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு மணிநேரம் ஆலோசனை நடத்தும் அளவுக்கு நலமாக இருக்கிறார் என்றால், அந்த ஆலோசனைக்கூட்டத்தின் போட்டோவை வெளியிட வேண்டியதுதானே” என்று கேள்வி எழுப்பினார். மு.க-வின் கேள்வியில், அரசாங்கத்தின் சப்தநாடியும் அடங்கியது. 

இந்தக் கட்டுரையை வீடியோவாகவும் காணலாம்


8. மன்னார்குடி டாக்டர்கள்... 

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, விலகி இருந்த மன்னார்குடி சொந்தங்கள், நெருங்கத் தொடங்கின. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் குழுவை, மன்னார்குடி டாக்டர்கள் கட்டுப்படுத்தினார்கள். டாக்டர் சிவக்குமார், திவாகரனின் மகள் டாக்டர் மதாங்கி, அவருடைய கணவர் டாக்டர் விக்ரம் பிரதானமாக இருந்தனர். அதுபோல, அப்போலோவைச் சுற்றி, திவாகரன், மகாதேவன், ராவணனின் நடமாட்டம் காணப்பட்டது. இது கட்சியைக் கொஞ்சம் கலங்கடித்தது.

 

9. அரச குடும்பங்களின் டாக்டர்! 

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க, பிரத்யோகமாக, லண்டன்  டாக்டர் ரிச்சர்ட் பியேல் சென்னை வந்தார். உலகம் முழுவதும் சுற்றி மருத்துவம் பார்க்கும் இவர், சவூதி அரச குடும்பம், புருனே சுல்தான், வல்லரசு நாடுகளின் அதிபர்களுக்கு சிகிச்சை அளிப்பவர்.  லண்டனின் புகழ்பெற்ற கைய்ஸ் அன்டு செயின்ட் தாமஸ் மருத்துவமனையின் கிரிட்டிகல் கேர் மற்றும் வலி தொடர்பான சேவை, அறுவை சிகிச்சைக்கு முந்தைய, பிந்தைய சேவை பிரிவின் இயக்குனராகப் பணியாற்றுபவர். நுரையீரல் பாதிப்பு, ஸெப்ஸிஸ் (செப்டிசீமியா) எனப்படும் பாக்டீரியா தொற்று ரத்தத்தில் கலப்பதால் ஏற்படும் பாதிப்பு, செயற்கை சுவாசம், உடல் உறுப்புக்கள் செயல் இழந்தவர்களுக்கான சிகிச்சையில் ரிச்சர்ட் நிபுணர். 


10. மேதகு ஆளுநர் வருகை!

10 நாட்கள் கடந்த பின்னும், ஜெயலலிதாவுக்கு என்ன ஆயிற்று என்று தமிழகத்துக்கே தெரியாவில்லை. டெல்லிக்கு சுத்தமாகப் புரியவில்லை. வேறு வழியில்லாமல் கவர்னரை அனுப்பி அறிக்கை வாங்கியது மத்திய அரசு. மாநில முதலமைச்சர் ஒரு வாரத்துக்கு மேலாக, யாரும் அணுக முடியாத நிலையில் இருப்பது, நாட்டுக்கு நல்லதல்ல என்பதால், தமிழக ஆளுநர் வித்யாசாகர் அக்டோபர் 1-ம் தேதி, அப்போலோ வந்தார். அரைமணிநேரம் அங்கிருந்தவர், “முதல்வர் உடல்நலம் தேறிவருகிறார். மருத்துவர்கள் அவருக்கு அளித்துவரும் சிகிச்சை  திருப்திகரமாக உள்ளது’ என்று அறிக்கை வெளியிட்டார். அது தமிழகத்தை கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சுவிட வைத்தது. 

 

11 அரசாங்கத்துக்கு பொறுப்பு இருக்கிறது!

“ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் மருத்துவமனையில் இருக்கிறார். அவரை அமைச்சர்கள் பார்க்கமுடியவில்லை; கவர்னர் பார்க்கவில்லை; மத்திய அமைச்சர் நேரில் நலம் விசாரிக்கவில்லை; அவருக்கு என்ன ஆனது என்பது மர்மமாக இருக்கிறது. எனவே, முதலமைச்சர் உடல்நிலை பற்றி, அரசாங்கம் தெரியப்படுத்த வேண்டும்” என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், கருத்துத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், “முதலமைச்சரின் உடல்நிலை பற்றி பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டியது அரசின் கடமை” என்று அறிவித்தது. 

 

12. உள்ளாட்சித் தேர்தல் ரத்து!

தமிழகத் தேர்தல் ஆணையம் அறிவித்த உள்ளாட்சித் தேர்தலை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. அக்டோபர் 4-ம் தேதி இந்த தீர்ப்பு வெளியானதை அடுத்து, உள்ளாட்சித் தேர்தல் வேலைகளில் பிஸியாக அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், தொண்டர்கள் மீண்டும் அப்போலோவுக்கு வந்தனர். 

 

13. அபாயகட்டம்!

இந்து ஆங்கில நாளேட்டின் முன்னாள் ஆசிரியர் மாலினி பார்த்தசாரதி, தன்னுடைய ட்வீட்டரில் ஒரு செய்தியை பதிவிட்டார். அதில், “முதலமைச்சர் ஜெயலலிதா அபாயகட்டத்தைத் தாண்டிவிட்டார்” என்று குறிப்பிட்டு இருந்தார். ஆனால், அதுவரை முதலமைச்சர் ஜெயலலிதா அபாயகட்டத்தில் இருந்தார் என்பதே யாருக்கும் தெரியாது. மாலினி பார்த்தசாரதியின் ட்வீட்டுக்குப் பிறகுதான், ஜெயலலிதா அபாயகட்டத்தில் இருந்தார் என்பதே தமிழகத்துக்குப் புரிந்தது.

 

14. எய்ம்ஸ் டாக்டர்கள்!

எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து ஜெயலலிதாவின் உடல்நிலையைப் பரிசோதிக்க, அக்டோபர் 5-ம் தேதி, 3 மருத்துவர்கள் வந்தனர். அவர்களில் டாக்டர் கில்நானி நுரையீரல் சிறப்பு மருத்துவர். டாக்டர் அஞ்சன் டிரிக்கா மயக்கவியல் துறை சிறப்பு நிபுணர். டாக்டர் நிதிஷ்நாயக், இதயநோய் சிறப்பு மருத்துவர். இத்தனை டாக்டர்களின் வருகைக்குப் பிறகு, முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை அபாயகட்டத்தில் இருக்கிறது என்பதை தமிழகம் உறுதியாகப் புரிந்து கொண்டது. 

  

15. மன்மோகன் சிங்கின் டாக்டர்

எய்ம்ஸ் டாக்டர்கள் அப்போலோ மருத்துவமனைக்கு வந்தது, கடும் சர்ச்சைகளைக் கிளப்பியது. அவர்களை வைத்து உளவு பார்க்கிறார் மோடி என்று முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் கொளுத்திப் போட்டார். வந்திருந்தவர்களில் டாக்டர் நிதிஷ் நாயக், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆஸ்தான மருத்துவர் என்பது மற்றொரு பக்கம் சர்ச்சையைக் கிளப்பியது.

 

16. சொல்லாமல் சொன்ன அப்போலோ!

அக்டோபர் 6-ம் தேதி, அப்போலோ மருத்துவமனையில் இருந்து வெளியான அறிக்கை கொஞ்சம் வில்லங்கமாக இருந்தது. அதில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நுரையீரல் பிரச்னை, செயற்கை சுவாசம் அளிக்கப்படுவது, நோய்த் தொற்றுப் பிரச்னைகள் இருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு இருந்தன. பாசிவ் பிசியோதேரபி அளிக்கபடுகிறது என்று சொல்லப்பட்டது. 

17. கைவிட்ட மோடி!

உச்ச நீதிமன்றம் அக்டோபர் 3-ம் தேதி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அக்டோபர் 4-ம் தேதிவரை அதற்கு கெடு விதித்தது. ஆனால், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கிறார் என்பதை கணக்குப்போட்ட மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்று மறுத்தது. அதோடு, டெல்லியில் மோடியைச் சந்திக்கச் சென்ற 47 எம்.பி-க்களையும் பார்க்க மறுத்து, வாசலோடு திருப்பி அனுப்பினார் பிரதமர் நரேந்திர மோடி. ஜெயலலிதா நலமுடன் இருந்திருந்தால், இவ்வளவு பெரிய துரோகத்தை நிச்சயம் மத்திய அரசு செய்திருக்காது என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து.

18. ஜனாதிபதி ஆட்சி! - சுவாமியின் குரல்

பரபரப்புக்குப் பெயர் போன சுப்பிரமணிய சாமி, “முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லை. அவர் எப்போது குணம்பெற்றுத் திரும்புவார் எனத் தெரியவில்லை. அதனால், தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை ஏற்படுத்த வேண்டும்” என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குக்கு கடிதம் எழுதினார். தமிழகத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. 


19. ராகுல் வந்தார்!

தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று சுவாமி எழுதிய கடிதம்,  பி.ஜே.பி எம்.பி என்று அச்சிடப்பட்ட லெட்டர்பேடில் எழுதியது. இது சுவாமியின் குரல் அல்ல. மத்தியில் ஆளும் பி.ஜே.பி-யின் குரல் என்று தமிழக அரசியல் களத்தில் அனல் அடித்தது. இந்த விவகாரத்தில், மத்திய அரசுக்கு செக் வைக்க நினைத்த ராகுல் காந்தி, டெல்லியில் இருந்து தனி விமானத்தில் அப்போலோ வந்தார். பத்திரிகையாளர்களைச் சந்தித்த ராகுல், எங்களின் ஆதரவு அ.தி.மு.க.வுக்கு உண்டு என்று சொல்லி ஆளும் பி.ஜே.பி முகத்தில் கரியைப் பூசினார்.

 

20. ஓரணியில் எதிர்கட்சிகள்!

ராகுல் காந்தி வந்ததையடுத்து, வரிசையாக எதிர்கட்சித் தலைவர்கள் அப்போலோ வந்தனர். கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருந்து ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவின் வருகை அதில் முக்கியமானது. இவர்கள் அனைவரும், அப்போலோவில் வைத்து, ஜனாதிபதி ஆட்சி என்றால், அதை நாங்கள் எதிர்ப்போம் என்று சொன்னார்கள். இதன்மூலம், மத்திய அரசின், ‘ஜனாதிபதி ஆட்சி’ என்ற மிரட்டல் பூமரங்காக மாறி மோடி அரசையே திருப்பித் தாக்கியது.

 

21. முகம் மாறிய பி.ஜே.பி!

தமிழகத்தில் ஏற்பட்ட எதிர்ப்பைக் கண்டு பின்வாங்கியது பி.ஜே.பி. அக்டோபர் 10-ம் தேதி, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவை அனுப்பி சமாதானக் கொடியைக் காட்டியது. அப்போலோவுக்கு வந்த அவர், கவர்னரையும் சந்தித்தார். “ஜெயலலிதாவின் உடல்நிலையை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் இல்லை. அவர்கள் கேட்பதை செய்து கொடுங்கள்” என்று இறங்கிப் பேசினார். 


22. பழைய பன்னீர் செல்வம்!

மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு சென்றதற்கு மறுநாள், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார். அதில், முதலமைச்சர் ஜெயலலிதாவின் துறைகளை, மூத்த அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கவனிப்பார் என்று குறிப்பிட்டு இருந்தார். இது முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஒப்புதலோடு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றும் கவர்னர் அறிக்கை சொன்னது. இதன்மூலம், 2 முறை முதலமைச்சராக இருந்த ஓ.பி.எஸ், இந்த முறை முதலமைச்சரின் துறைகளைக் கவனிக்கும் மூத்த அமைச்சராக வலம் வர ஆரம்பித்துள்ளார். 

 

23. ஸ்டாலின் வாழ்த்து-கருணாநிதி எதிர்ப்பு!

ஜெயலலிதாவின் இலாக்கக்கள் ஓ.பி.எஸ்ஸுக்கு கொடுக்கப்பட்டதை அடுத்து மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்தார். ஆனால், அதற்கு முற்றிலும் நேர் எதிராக கருணாநிதி விமர்சனம் செய்தார். அது தி.மு.க-வில் தந்தைக்கும் மகனுக்கும் உள்ள இடைவெளியை வெளிச்சம் போட்டுக் காட்டியது. 

 

24. வதந்திகள்... கைதுகள்...

ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய வதந்திகளை கட்டுப்படுத்தமுடியாமல் திணறிய காவல்துறை அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கியது. நாமக்கல்லைச் சேர்ந்த  சதிஷ்குமார், மதுரை மாடசாமி, கோவையில் வங்கி ஊழியர்கள் ரமேஷ்,சுரேஷ், தூத்துக்குடி ஆண்டனி சேசுராஜ், சென்னை  திருமணி செல்வம், பாலசுந்தரம் என்ற 7 பேரைக் கைது செய்தது. 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 100 பேர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. வதந்திகளுக்காக கைதுகள் தொடரலாம்.

 

25. அமித்ஷாவும் அருண் ஜெட்லியும்!

ராகுல் காந்தி வந்ததையடுத்து, பி.ஜே.பி சார்பில், அதன் தேசியத் தலைவர் அமித்ஷாவும் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லியும் அப்போலோவுக்கு வந்து அட்டென்டஸ் போட்டனர். 

26. ரகசியமாக வந்த ரஜினி!

அக்டோபர் 16-ம் தேதி, ஜெயலலிதாவின் பக்கத்து வீட்டுக்காரரான நடிகர் ரஜினிகாந்த் ரகசியமாக அப்போலோ மருத்துவமனைக்கு வந்துவிட்டுப்போனார். அதன்பிறகு, அவரும் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்குச் சென்றுவிட்டார்.

 

27. ராஜாத்தி-சசிகலா சந்திப்பு!

அப்போலோ மருத்துவமனையில்போய், மு.க.ஸ்டாலின் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி விசாரித்தார். இதையடுத்து, ராஜாத்தி அம்மாள் அப்போலோ மருத்துவமனைக்குப்போய் சசிகலாவை சந்தித்தார். மு.க.ஸ்டாலின் போனது கருணாநிதிக்கு கடைசி வரை தெரியாது. ராசாத்தி அம்மாள் அப்போலோவுக்குப் போனது, கருணாநிதியைத்  தவிர, தி.மு.க-வில் வேறு யாருக்கும் தெரியாது. ஏற்கனவே நல்ல அறிமுகம் உள்ள ராசாத்தி அம்மாளும் சசிகலாவும் என்ன பேசிக்கொண்டார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி.

 

28) 3 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும் நிலையிலும் முதல் ஆளாக அந்தத் தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது அ.தி.மு.க.

 

29. சிங்கப்பூர் டாக்டர்கள்! 

லண்டன் டாக்டர், எய்ம்ஸ் டாக்டர்கள் சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டநிலையில், தற்போது ஜெயலலிதாவை அப்போலோ மருத்துவர்களுடன் சேர்ந்து பார்த்துக் கொள்வது சிங்கப்பூர் டாக்டர்கள். சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் பணிபுரியும் இவர்களில் ஒருவர் மூச்சுப் பயிற்சி நிபுணர். மற்றொருவர் பிசியோ தெரபிஸ்ட். 

 

30. ஜெ.நலமுடன் இருக்கிறார்  

 

ஜெயலலிதா மருத்துவமனையில் அட்மிட் ஆகி ஒருமாதம் ஆகும் நிலையில், ஆங்கில ஊடகங்கள் போட்டிபோட்டுக் கொண்டு, அவர் குணமடைந்துவிட்டார்; நலமுடன் இருக்கிறார் என்று செய்திகள் வெளியிட்டு வந்தன. இந்தநிலையில், அப்போலோ மருத்துவமனை நேற்று(21-ம் தேதி) ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், முதலமைச்சர் ‘இன்டிராக்ட்’ செய்கிறார். ஊட்டச்சத்துக்கள் அவருக்கு அளிக்கப்படுகிறது. ஆனாலும், ரெஸ்பரைட்டரி சப்போர்ட்டில் இன்னும் இருக்கிறார் என்றும் சொல்லி இருந்தது.  

 

- ஜோ.ஸ்டாலின்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close