Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கார்கில் ஊடுருவல்... கொதித்தெழுந்த இந்தியா..! எரியும் எல்லைக்கோடு - 6

வாஜ்பாய் முதன்முறையாக ஆட்சிக்கு வந்திருந்த சமயம் அது. இந்திரா காந்தி காலத்தில் செய்ததுபோலவே தன்னுடைய ஆட்சிக்காலத்திலும் அணுகுண்டுச் சோதனையை நிகழ்த்தியிருந்தார் வாஜ்பாய். பொக்ரான் சோதனை பாகிஸ்தானுக்குப் பதற்றத்தைக் கொடுத்துவிட்டதுபோல. அதுவும் தன் பங்குக்கு அணுகுண்டுச் சோதனைகளை நடத்தி முஷ்டியை உயர்த்தியிருந்தது.

அப்போதும்கூட பாகிஸ்தானுடன் விரோதம் பாராட்ட வாஜ்பாய் அரசு விரும்பவில்லை. அவர்களுடன் இணக்கமாகச் செல்லவே விரும்பியது. அதன் வெளிப்பாடுதான் வாஜ்பாயின் லாகூர் ரயில் பயணமும்... லாகூர் பிரகடனமும். ஆனால், இந்தியாவுடன் அமைதிப் பேணுவதில் அங்கே சிலருக்கு அச்சங்கள் இருந்தன. முக்கியமாக, ராணுவத் தளபதி ஜெனரல் பர்வேஸ் முஷாரஃபுக்கு.

இருதரப்புச் சமாதான முயற்சிகளின் மீது சண்டை முலாம் பூச விரும்பினார். அதற்கு அவர் தேர்வுசெய்தது அவர்களுக்கே உரித்தான அதே பழைய பாணி. ரகசிய ஊடுருவல். ஒருபக்கம், அமைதிப்பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும் வேளையில்... இன்னொரு பக்கம், முதுகில் குத்தும் காரியத்தைத் தொடங்கினார் பர்வேஸ் முஷாரஃப். இந்தக் காரியம் 1999 மே மாத ஆரம்பத்தில் நடந்தது.

பாரம்பர்ய முறைப்படி எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் இருந்து தொடங்கியது ஊடுருவல். அங்கே தோளோடு தோள் உரசுவதுபோல சுமார் 160 கிலோ மீட்டர் நீளத்துக்கு நீண்ட நெடிய சாலை இருக்கிறது. குண்டும் குழியும்தான் கண்ணுக்கு வெளிச்சம். கல்லும் முள்ளும்தான் காலுக்கு மெத்தைபோல.

அந்தச் சாலையின் வழியாகத்தான் முஷாரஃபின் பாசத்துக்குரிய முஜாஹிதீன்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவத் தொடங்கினார்கள். மொத்தம் 5,000 பேர்; அசைவுகள் இருந்தன; ஆனால், அதிர்வுகள் இல்லை. அத்தனை நாசூக்கு; அத்தனை நேர்த்தி. பதுங்கிப் பதுங்கி நகர்ந்தனர், பாய்வதற்காக என்பதால். வழிநெடுக ஆங்காங்கே பல குன்றுகள் தென்பட்டன. குளிர் தாங்கமுடியாமல் இந்திய வீரர்கள் காலி செய்துவிட்டுச் சென்ற குன்றுகள் அவை. 10 பேருக்கு ஒரு குன்று. சில குன்றுகளில் 20-க்கும் மேல்.

திடீரென ஒருநாள் ரோந்துப் பணிக்காக வெளியே வந்த இந்திய ராணுவ வீரர்களின் கண்களில் அந்த ஊடுருவல் ஆசாமிகள் படவே வெலவெலத்துப் போய்விட்டது. எப்படி நடந்தது என்று யோசிப்பதற்குள் துப்பாக்கிச்சூட்டை எதிர்கொள்ள வேண்டிய நிலை. தாக்குதலின் தன்மையைப் பார்த்த பிறகுதான் அவர்கள் பாகிஸ்தானியர்கள் என்பது இந்திய வீரர்களுக்குப் புரிந்துபோனது.

விஷயம் உடனடியாக மத்திய அரசின் கவனத்துக்குச் சென்றது. பிரதமர் வாஜ்பாய் தனது அமைச்சரவை சகாக்களான அத்வானி, ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் உள்ளிட்டோரை அழைத்து ஆலோசனை நடத்தினார். கூடவே, முப்படைத் தளபதிகள். கார்கில் பகுதியில் மட்டுமல்ல, முஷ்கோக், ட்ராஸ், பட்டாலிக், டைகர் ஹில்ஸ் என்று அக்கம்பக்கத்துப் பகுதிகளிலும் நடந்திருப்பது தெரியவந்தது.

சற்று ஏறக்குறைய 600 பேர் ஊடுருவியிருந்தனர். இந்தியாவுக்குச் சொந்தமான 100-க்கும் அதிகமான முகாம்களைத் தம்வசப்படுத்தி இருந்தனர். முகாம்கள் அனைத்தும் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதால், ஒட்டுமொத்த காஷ்மீரும் உள்ளங்கைக்குள் வந்துவிட்ட உற்சாகத்தில், “சுமார் 120 சதுர மைல் பரப்பை நாங்கள் கைப்பற்றிவிட்டோம்” என்ற அறிவிப்பையும் செய்துவிட்டார்கள்.

ஊடகங்களின் வழியே செய்தி கசிந்த நொடியில் இருந்தே இந்தியாவுக்குள் பதற்றம் ஆரம்பித்துவிட்டது. இங்கே பதற்றம் என்பது பயத்தின் வெளிப்பாடு அல்ல, ஆத்திரத்தின் அடையாளம். ‘பதிலடி கொடுத்தே தீரவேண்டும்’ என்ற கோஷம் நாடு முழுக்க எதிரொலிக்கத் தொடங்கிவிட்டது. உண்மையில், அப்படியொரு யுத்தம் ஒன்றை நடத்தினால், அது பி.ஜே.பி-க்கு அரசியல் ரீதியாகப் பலன் கொடுக்கும் காரியம்தான்.

பிரதமர் வாஜ்பாயின் உத்தரவின்பேரில் ராணுவ அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் கார்கில் பகுதிக்குச் சென்று பார்வையிட்டார். கூடவே, ராணுவ உயர் அதிகாரிகளும் சென்றிருந்தனர். பிறகு, எல்லைப் பகுதிகளில் தான் பார்த்ததையும் தனக்குப் புரிந்ததையும் பிரதமர் வாஜ்பாயிடம் எடுத்துச் சொன்னார் அமைச்சர் ஃபெர்னாண்டஸ். அடுத்துச் செய்யவேண்டிய காரியங்கள் எல்லாம் துரிதகதியில் நடந்தன.

பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூடியது. இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததோடு, இந்திய வீரர்களைத் தாக்கியவர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்கள் அனைவரையும் அப்புறப்படுத்த வேண்டும் என்று முடிவானது. உரிய ஆயுதங்கள் சகிதம் நடத்தப்பட இருந்த அந்தத் தாக்குதலுக்கு, ‘ஆபரேஷன் விஜய்’ என்று பெயர் வைக்கப்பட்டது.

தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னால், “இந்தியப் பகுதிக்குள் நுழைந்திருப்பவர்கள் அனைவரும் பாகிஸ்தான் அரசின் அனுமதியோடும், அமெரிக்க ஆயுதங்களோடும் வந்திருக்கிறார்கள்” என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டியது இந்தியா. ஆனால், அதனை அடியோடு நிராகரித்த பாகிஸ்தான், “காஷ்மீர் இளைஞர்கள் தங்களுக்குச் சொந்தமான பகுதியை மீட்டெடுக்கத் தன்னெழுச்சியாகக் கிளர்ந்து எழுந்துள்ளனர். அதற்கும் எங்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை” என்றது. 

பின்னர், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார் பிரதமர் வாஜ்பாய். ‘‘எல்லையில் என்ன நடக்கிறது... ஏன் உங்கள் ராணுவம் எங்களைத் தாக்குகிறது’’ என்று கேள்வி எழுப்பினார் வாஜ்பாய். ஆனால், ‘‘அப்படியான எந்தத் தாக்குதலையும் நாங்கள் செய்யவில்லை’’ என்று திட்டவட்டமாக மறுத்தார் நவாஸ் ஷெரீஃப்.

அதன்மூலம் பாகிஸ்தான் உண்மையை ஒப்புக்கொள்ளத் தயாரில்லை என்பது தெரிந்தது. கூடவே, பதிலடி தருவதைத் தவிர வேறு வழியில்லை என்பதும் புரிந்தது. ‘ஆபரேஷன் விஜய்’ ஆரம்பமானது. இத்தனைக்கும் வாஜ்பாய் அரசு அதிகாரபூர்வமான அரசு அல்ல... காபந்து அரசு. ஆனாலும், இந்தியாவை ஆபத்தில் இருந்து காபந்து செய்வதுதான் அரசின் பணி என்பதால், அந்த அரசுக்கு அனைத்து எதிர்க் கட்சிகளும் ஆதரவுக்கரம் நீட்டின.அந்த உற்சாகத்தில், “அத்துமீறி நுழைந்தவர்களை விரட்டி அடியுங்கள், முடியாவிட்டால் அடித்து விரட்டுங்கள்” என்று நேருவின் பாணியில் உத்தரவிட்டார் பிரதமர் வாஜ்பாய்! 

(பதற்றம் தொடரும்)

- ஆர்.முத்துக்குமார்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close