Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மகனைத் தட்டி வைக்க முலாயம் நாடகம் ஆடுகிறாரா? உ.பி களேபர பின்னணி


ந்தியாவின் அரசியலைத் தீர்மானிக்கக் கூடிய மிகப்பெரிய மாநிலத்தின் இளம் வயது முதல்வர் என்ற பெருமைக்கு உரியவர் அகிலேஷ் யாதவ். அவரை இந்தப் பெருமைக்கு உயர்த்தியவர் முலாயம் சிங் யாதவ். ஆனால், இந்த இருவருக்குள்ளும்தான் இப்போது மோதல்.
அடுத்த ஆண்டு தேர்தலைச் சந்திக்க உள்ள உத்தரபிரதேச மாநில மக்கள் மட்டுமின்றி டெல்லி அரசியலும் இந்தக் குடும்பச் சண்டையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.

உச்சகட்டமாக அகிலேஷ் யாதவுக்கு எதிராக முலாயம் சிங்கின் இரண்டாவது மனைவி சாதனா சூன்யம் வைத்திருப்பதாக சமாஜ்வாடி மேலவை உறுப்பினர் ஒருவர் பரபரப்பு குற்றம் சாட்டி உள்ளார்.

சிவ்பால் யாதவால் பிரச்னை

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி ஆட்சி அமைந்து 5 ஆண்டுகளைத் தொட்டு நிலையில் ஆட்சி, தான் சொல்வது போல நடக்கவில்லை என்ற வருத்தம் முலாயம் சிங் யாதவுக்கு இருந்ததாகச் சொல்கிறார்கள். இதன் எதிரொலியாக தனது சகோதரரைக் களம் இறக்கினார் முலாயம் சிங். இங்குதான் அகிலேஷ் யாதவுக்கும் முலாயமுக்கும் இடையே மோதல் வெடிக்கிறது.

அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட சிவ்பால் யாதவ் தனது ஆதரவு ஐ.ஏ.எஸ் அதிகாரியான தீபக் சிங்காலை  தலைமைச் செயலாளர் ஆக்கினார். அடுத்த கட்டமாக, சிவ்பால் கடந்த ஆகஸ்ட்மாதம் ஒரு அதிரடி ஸ்டேட்மெண்ட்  விட்டார். "உ.பி-யில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது, நிலமோசடி வழக்குகள் அதிகமாகிவிட்டன" என்று கூறினார். தான், கட்சியில் இருந்து விலகப் போவதாகவும் கூறி பரபரப்பையும் ஏற்படுத்தினார்.

முலாயம் சிங் குற்றசாட்டு...

சிவ்பாலின் குற்றசாட்டை முலாயம் சிங்கும் ஆமோதித்தார். தன் மகன் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் மீது ஊழல் கறைபடிந்திருப்பதாகக் கூறினார். சிவ்பால் ராஜினாமா செய்தால் சமாஜ்வாடி கட்சிக்குப் பின்னடைவு ஏற்படும் என்று அகிலேஷூக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

சித்தப்பா, தந்தை என அடுத்தடுத்து அஸ்திரம் ஏவியதால் அதிர்ந்து போன அகிலேஷ், ஊழல் குற்றசாட்டுக்கு உள்ளான காயத்திரி பிரசாத் பிரஜாபதி, ராஜ் கிஷோர் சிங் ஆகிய இரண்டு அமைச்சர்களையும் அமைச்சரவையில் இருந்து நீக்கினார். இன்னொருபுறம் சிவ்பாலுக்கு ஆதரவான தலைமைச் செயலாளர் தீபக் சிங்காலையும் பதவியை விட்டுத் தூக்கினார்.

அடுத்தடுத்த அதிரடிகள்...

இதற்குப் பதிலடியாக முலாயம் சிங், உ.பி சமாஜ்வாடி கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்த அகிலேஷை நீக்கி விட்டு, சிவ்பாலை உ.பி சமாஜ்வாடி தலைவர் பொறுப்புக்குக் கொண்டு வந்தார். இதனால், மாநிலத்தின் முதல்வர் குடும்பத்தின் மோதல் உச்சகட்டத்தை எட்டியது. இதனால் கடுப்படைந்த சிவ்பால் கட்சியில் இருந்தும், ஆட்சியில் இருந்தும் பதவி விலகுவதாக அறிவித்தார். ஆனால், அவரது ராஜினாமாவை அகிலேஷ் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த மோதலால் உ.பி சட்டமன்றத் தேர்தல் பணிகளைத் தொடங்காமல் சமாஜ்வாடி கட்சி முடங்கியது. அக்டோபர் 3-ம் தேதிபிரசாரம் தொடங்கத் திட்டமிட்டிருந்த அகிலேஷ் யாதவ் பிரசாரத்தைத் தொடங்கவில்லை. நவம்பர் 3-ம் தேதி பிரசாரம் தொடங்க இருப்பதாகத் தந்தைக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

முலாயம் சிங் மனைவி காரணமா?

இதனிடையே, உ.பி மேலவை உறுப்பினர் உதயவீர் சிங், முலாயம் சிங்குக்கு கடிதம் எழுதினார். அதில், அகிலேஷ் சிங் யாதவை தேசியக் கட்சித் தலைவராக அறிவிக்காவிட்டால், சமாஜ்வாடி கட்சி உடைந்து விடும் என்று கூறி உள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடமும் பேசிய உதயவீர் சிங், முலாயம் சிங்கின் இரண்டாவது மனைவி சாதனாவும், சிவ்பால் சிங்கும் சேர்ந்து கொண்டு அகிலேஷூக்கு எதிராகச் செயல்படுவதாகக் கூறி உள்ளார். அகிலேஷ் யாதவுக்கு உடல் நலக்குறைவை ஏற்படுத்தும் வகையில் சூனியம் வைத்திருப்பதாக அதிரடிக் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

இதற்குப் பதிலடியாக இன்னொரு மேலவை உறுப்பினர் அஷூ மாலிக் அளித்த பேட்டியில், முலாயம் சிங் யாதவ் இல்லாமல் கட்சி இல்லை. அவருக்கு மாற்று கிடையாது. முஸ்லீம்கள் முலாயம் பக்கம் இருக்கின்றனர் என்று கூறி உள்ளார்.

வேண்டும் என்றே திட்டமிடப்பட்டதா?

அகிலேஷ், முலாயம் மோதல் என்பது வேண்டும் என்ற திட்டமிடப்பட்ட ஒன்று என்றும் சொல்கிறார்கள். 5 ஆண்டு ஆட்சி முடிய உள்ளநிலையில் ஆட்சிமீது கெட்டபெயர் இருக்கிறது. இந்த சூழலில் அகிலேஷூக்கு ஆதரவான ஒரு சிம்பதியை உருவாக்க இது போன்று முலாயம் குடும்பம் செயல்படுவதாக கூறுகிறார்கள்.

ஆனால், உண்மையில பிரச்னை வெடித்திருப்பதாக சிலர் சொல்கிறார்கள். பிரச்னை தீவிரமாகும் பட்சத்தில் சமாஜ்வாதி கட்சி பிளவு படக் கூடும் என்று சொல்கிறார்கள். இதனை தவிர்க்கவே தற்போது முதல்வர் அகிலேஷ் யாதவ் தனது தந்தைக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

உச்சகட்ட மோதல்...

மோதலின் உச்சகட்டமாக, கடந்த 23-ம் தேதி சமாஜ்வாடி கட்சியின் பொதுச்செயலாளரும், ராஜ்யசபா எம்.பி-யுமான ராம்கோபால் யாதவ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இது முலாயம்சிங்கின் நடவடிக்கை என்று கூறப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சரவையில் இருந்து சிவ்பால் யாதவ், மற்றும் முலாயம் சிங்கின் ஆதரவாளர் அமர்சிங்குக்கு நெருக்கமான 3 அமைச்சர்களும் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டனர். இதனால், சமாஜ்வாடி கட்சி பிளவை நோக்கிச் செல்வதாகக் கூறப்பட்டது.

இந்த சூழ்நிலையில் சமாஜ்வாடி கட்சி பிளவுபடுவதைத் தடுக்க மூத்த நிர்வாகிகள் சிலர் களம் இறங்கி உள்ளனர். இதனை அடுத்து லக்னோவில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு அகிலேஷ் யாதவ் இன்று வந்தார். அப்போது, அங்கு கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேசிய அகிலேஷ், "நான் தனிக் கட்சி தொடங்கும் எண்ணத்தில் இல்லை. என் தந்தை முலாயம் சிங்தான் என் குரு. என் தந்தை விரும்பினால் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகக் கூட தயாராக இருக்கின்றேன்" என்று உணர்ச்சிவசப்பட்டுக் கூறியவர் கதறி அழுதுவிட்டார்.

உ.பி அரசியலை தீர்மானிக்கும் சக்திகளில் முக்கியமானவர் முலாயம் சிங் யாதவ். இப்போது முலாயம் சிங் நினைத்த துதான் நடந்திருக்கிறது.

-கே.பாலசுப்பிரமணி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ