Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னையில் பட்டாசு வெடித்தால் என்ன ஆகும் தெரியுமா? #DataAlert

தீபாவளிக்கு இன்னும் இரு நாட்களே இருக்கின்றன. பட்டாசுகள், துணிகள், இனிப்புக்கள் என எல்லா கடைகளிலும் பண்டிகைக் கால கூட்டங்கள் களைகட்டுகின்றன. பேருந்து நிலையங்களும், ரயில் நிலையங்களும் மனிதர்களை தங்கள் ஊர்களுக்கு அழைத்து செல்லத் தயாராகி வருகின்றன. எல்லா சுக துக்கங்களையும் மறந்து, மக்கள் அனைவருமே தீபாவளியை வரவேற்கத் தயாராகி வருகின்றனர்.

எல்லா கவலைகளையும் மறந்து, மகிழ்ச்சியாக கொண்டாடுவதே இந்த பண்டிகைகளின் நோக்கம். ஆனால் இந்த பண்டிகைக் காலக் கொண்டாட்டங்களே நம் இயற்கைக்கு கவலை அளிப்பதுதான் வேதனை. வாகனங்கள், தொழிற்சாலைகள் என ஆண்டுதோறும் நம் சக்திக்கு இயன்றவரை காற்றிற்கு எதிராக வினையாற்றி வருகிறோம். இந்த செயல்பாடுகள் தீபாவளி அன்று இன்னும் அதிகரிப்பது நம் சுற்றுச்சூழலுக்கும் மட்டும் அல்ல. நமது உடல்நலனுக்கும் கேடுவிளைவிப்பவை. தீபாவளி அன்று எந்த அளவுக்கு சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறோம் என யோசித்துப் பாருங்கள் மக்களே! பட்டாசு வெடிப்பதன் மூலமாக காற்று மற்றும் ஒலி மாசுபாடு, அவற்றின் நச்சுகளும் காகித குப்பைகளும் நிலத்தில் வீழ்வதால், நில மாசுபாடு, பட்டாசுகளில் இருக்கும் ரசாயனங்கள் நீர் நிலைகளில் கலப்பதால் நீர் மாசுபாடு... இவற்றை விட இன்னும் என்ன மிச்சம் இருக்கிறது மாசுபடுத்த? நம்முடைய ஒருநாள் கொண்டாட்டங்கள் நம் சுற்றுச்சூழலை சிதைப்பதை நாம் அனுமதிக்கலாமா?

கடந்த இரு ஆண்டுகளில் சென்னை மாவட்டத்தில் தீபாவளிக்கு முந்தைய நாட்கள் மற்றும் தீபாவளி அன்று காற்றுத்தரம் மற்றும் ஒலி மாசுபாடுகள் ஆகியவை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் கணக்கிடப்பட்டது. தீபாவளி பண்டிகைக்கு சென்னையில் முந்தைய நாட்களில் காற்றின் தரமானது எந்த அளவுக்கு இருந்தது என்பதும், தீபாவளி அன்று எந்த அளவுக்கு இருந்தது என்பதும் கணக்கிடப்பட்டது. அதன் முடிவுகள் கீழே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன. பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கும் 5 இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் இவை. இந்த இடங்களில் வசிப்பவர்கள் மட்டுமின்றி, பட்டாசுகள் வெடிக்கும் பகுதிகளில் வசிக்கும் அனைவருமே கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் இவை.

காற்றில் கலந்திருந்த சுவாசிக்க தகுதியற்ற துகள்களின் அளவுகள், NO2 மற்றும் SO2 ஆகிய கேடு தரும் வாயுவின் அளவுகள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. நுரையீரலுக்கு கேடு விளைவிக்கும் RSPM என்னும் நச்சுத்துகள்களின் எண்ணிக்கையை முதலில் கணக்கில் எடுத்துக் கொள்வோம். இவற்றை நாம் சுவாசிப்பதன் மூலமாக மூச்சு விடுதலில் சிரமம், ஆஸ்துமா, நுரையீரல் கோளாறுகள் உள்ளிட்ட சிக்கல்களுக்கு ஆளாக நேரிடும். இதன் அளவு 2014-ம் ஆண்டு தீபாவளிக்கு முந்தைய நாட்களில் இருந்ததையும், தீபாவளி அன்று இருப்பதையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

2014-ம் ஆண்டு தீபாவளி காற்றின் தரம் குறித்த ஆய்வு முடிவுகள்

வ.எண் இடங்கள் 2014
தீபாவளிக்கு முந்தைய நாட்கள் (15/10/2014) தீபாவளி (22/10/2014)
RSPM SO2 NO2 RSPM SO2 NO2
1 திருவல்லிக்கேணி 37 12 13 297 32 20
2 பெசன்ட் நகர் 49 8 10 110 14 17
3 நுங்கம்பாக்கம் 34 9 11 180 14 17
4 சௌகார்பேட்டை 43 13 13 196 22 20
5 தியாகராயநகர் 145 11 15 180 16 19

திருவல்லிக்கேணி பகுதியில் தீபாவளிக்கு முன்பு 37 µg/m3 என்ற அளவுக்கு இருக்கும் இதன் அளவு, தீபாவளி அன்று 297 µg/m3 என அதிர்ச்சியளிக்கும் வகையில் அதிகரித்துள்ளது.

அதேபோல நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு பகுதி தியாகராய நகர். தீபாவளிக்கு முன்பு மற்ற இடங்களில் குறைவாக இருக்கும் RSPM அளவு தி-நகரில் மட்டும் மிக அதிகமாக இருக்கிறது. மற்ற இடங்களோடு ஒப்பிடும்போது, தி-நகரில் 145 µg/m3 அளவு என்பது நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். ஆனால் தீபாவளி அன்று 180  µg/m3 என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்த இடங்களில் வசிப்பவர்கள், தீபாவளி அன்று மட்டுமல்ல.. எப்போதுமே கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டியது அவசியம்.

2015-ம் ஆண்டு தீபாவளி காற்றின் தரம் குறித்த ஆய்வு முடிவுகள்

வ.எண் இடங்கள் 2015
தீபாவளிக்கு முந்தைய நாட்கள் (05/11/2015) தீபாவளி (10/11/2015)
RSPM SO2 NO2 RSPM SO2 NO2
1 திருவல்லிக்கேணி 29 10 13 90 15 19
2 பெசன்ட் நகர் 32 9 12 88 15 18
3 நுங்கம்பாக்கம் 48 10 15 131 12 22
4 சௌகார்பேட்டை 72 9 12 88 14 20
5 தியாகராயநகர் 54 9 16 126 12 19
6 நிர்ணயிக்கப்பட்ட அளவுகள் (µg/m3) 100 80 80 100 80 80

அடுத்து 2015-ம் ஆண்டுக்கான புள்ளி விவரங்களை பார்த்தால், முந்தைய ஆண்டுகளை விடவும் காற்று மாசுபாட்டின் அளவு குறைந்திருப்பது தெரிகிறது. கடந்த ஆண்டு தீபாவளி அன்று பெய்த மழையானது இதில் முக்கியப் பங்காற்றி உள்ளது. ஆனால் நுங்கம்பாக்கம் மற்றும் தியாகராயநகர் ஆகிய இரு பகுதிகளிலும் நிர்ணயிக்கப்பட்ட அளவான 100  µg/m3 -ஐ விடவும், அதிகரித்திருக்கிறது. கந்தக -டை- ஆக்ஸைடு மற்றும் நைட்ரஜன் -டை- ஆக்ஸைடின் அளவுகள், கட்டுக்குள் இருந்துள்ளன. 

பட்டாசு வெடிப்பதனால் காற்று மட்டுமல்ல.. ஒலி மாசுபாடும் ஏற்படுகிறது. தேவை இல்லாமல் ஏற்படும் இரைச்சல்களால் உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளும் ஏற்படுகின்றன. 125 டெசிபல் அளவுக்கு அதிகமான ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

2014 மற்றும் 2015-ம் ஆண்டு ஒலிமாசுபாடு குறித்த புள்ளிவிவரங்கள்(எல்லா மதிப்புகளும் Leq dB(A)-ல்)

 

 கடந்த இரு ஆண்டுகளில் தீபாவளி சமயங்களில் கணக்கிடப்பட்ட ஒலி அளவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. தீபாவளியன்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் 6 மணி நேரம், கணக்கிடப்பட்ட அளவுகள் இவை. அதிகமான இரைச்சல்களை கேட்பதால் தூக்கமின்மை, மன அழுத்தம், செவிப்பறை பாதிப்புகள் ஆகியவை ஏற்படும். எனவே அதிகம் பட்டாசு வெடிக்கும் பகுதிகளில் இருந்து ஒதுங்கி இருப்பதே மன அமைதிக்கு நல்லது.

இந்த ஆண்டும் இதேபோல காற்று மாசு மற்றும் ஒலி மாசு குறித்து கணக்கெடுப்புகள் தீபாவளி அன்று நடத்தப்பட இருக்கின்றன. அதன் முடிவுகளில் அதிர்ச்சி இல்லாமல் இருப்பது நம் கைகளில்தான் இருக்கிறது. 

- ஞா.சுதாகர், துரை.நாகராஜன் 

  வடிவமைப்பு : ராஜூ

எடிட்டர் சாய்ஸ்

MUST READ