Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கருணாநிதியின் நிழல்... யார் இந்த நித்யா...?

தி.மு.க தலைவர் கருணாநிதி கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கிறார். கால் மற்றும் கை முட்டி, இடுப்புப் பகுதிகளில் ஏற்பட்டு இருக்கும் கொப்பளங்கள் அவரது அன்றாட செயல்களைப் பாதித்து இருக்கின்றன. வீட்டில் இருந்தபடியே சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். தினமும் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளால் ஒவ்வாமை காரணமாக இந்த கொப்பளங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. 

கருணாநிதியை, தற்போது அவரது உதவியாளர் நித்யாதான் கவனித்துக் கொள்கிறாராம். அவருடன் கோபாலபுரம் வீட்டிலேயே தங்கி இருந்து அவருக்கு எல்லாப் பணிவிடைகளையும் செய்வது நித்யா தான்.  விகடன் 90 இதழில் கருணாநிதி அளித்த பேட்டியில், ‘எனக்குத் தனியாக செல்போன் இல்லை; யாரிடம் பேச வேண்டும் என்று நினைக்கிறேனோ அவர்களுக்கு என்னுடைய உதவியாளர் நித்யாவின் போனில் இருந்து தான் பேசுவேன்’ என்று கூறி இருந்தார். முன்னாள் முதல்வராக இருந்த கருணாநிதிக்கு எல்லாமுமாக இருக்கும் அந்த நித்யா யார் என்ற கேள்வி எல்லோருக்கும் எழுகிறது. அதற்கு விடை காணவே இந்தக் கட்டுரை.  

கருணாநிதிக்கு எப்போதும் கூடவே இருப்பவர்கள் இரண்டு பேர். ஒருவர் அவரது செயலாளர் சண்முகநாதன், பல ஆண்டுகளாக அவருடைய செயல்திட்டங்களுக்கு எல்லாம் செயல்வடிவம் கொடுப்பவர். இன்னொருவர் நித்யா. குடும்ப உறுப்பினர்கள், கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களைவிட இவர்கள் இருவரும் தான் கருணாநிதியின் நிழலாக இருப்பவர்கள். கருணாநிதியை வீட்டில் இருந்து வீல் சேரில் ஏற்றி விழா நடக்கும் இடத்தில் அமர வைப்பது முதல், பர்சனல் உதவிகள் செய்வது வரை எல்லாமே நித்யா தான். யார் இந்த நித்யா ?

நித்யா(எ)நித்யானந்தன்.. சின்ன ஃப்ளாஷ்பேக் !

நித்யாவின் இயற்பெயர் நித்யானந்தன். பல்லாவரத்தைச் சேர்ந்தவர். பி.காம் பட்டதாரி. கருணாநிதி முதல்வராக இருந்த சமயத்தில் அவருக்கு கறுப்புப் பூனைப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டது. கருணாநிதி செல்லும் காருக்கு முன்பாகச் செல்லும் கருப்புப் பூனைப்படை கார்களுக்கு தனியார் ட்ராவல்ஸ் டிரைவர்கள்தான் கார் ஓட்டுவார்கள். அப்படி வந்தவர்களில் ஒருவர் தான் ரமேஷ், பின்னாளில் அவர் கருணாநிதி காருக்கே’சாரதி’ ஆனார். அவர் மூலமாக கருணாநிதிக்கு அறிமுகமானவர்தான் இந்த நித்யா. முதலில் எடுபிடியாக வந்த நித்யா, பின்னர் கருணாநிதியின் உதவியாளராகப் பணி அமர்த்தப்பட்டார்.

ஒருமுறை கருணாநிதிக்கு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் ஒரு அறுவை சிகிச்சை நடந்தது. முதுகில் செய்யப்பட்ட அந்த ஆப்ரேஷன் காரணமாக ஒரு மாதத்துக்கும் மேலாக ஓய்வில் இருந்தார் கருணநிதி. அப்போதும், இரவும் பகலுமாக அருகில் இருந்து பார்த்துக்கொண்டது இந்த நித்யாதான்.  மருத்துவமனையில் நடந்த விஷயங்களை டைரிக் குறிப்புகளாகத் தொடர்ந்து கருணாநிதி வெளியிட்டார். அதில் கவனித்துக்கொண்ட நர்ஸ்களின் பெயர்களோடு, 'என் தனி உதவியாளர் நித்யாவும் கடந்த ஒரு மாத காலமாக என்னைவிட்டு அங்கும் இங்கும் அகலாமல் ஆற்றிய பணிகளை இந்தத் தொடரிலே குறிப்பிட்டே ஆக வேண்டும்!’ என்று சொல்லி இருந்தார். அப்போதில் இருந்துதான் நித்யா மீது  ‘லைம் லைட்’ விழுந்தது என்கிறார்கள் கட்சியினர்.

 

நித்யா வீட்டுக்குச் சென்ற கருணாநிதி 

அருந்ததியருக்கு மூன்று சதவிகித உள்ஒதுக்கீட்டை வழங்கிய பிறகு, துணை சபாநாயகர் வி.பி.துரைசாமியின் இல்லத் திருமணத்தில் பேசிய கருணாநிதி, ''என்னிடம் வேலை பார்க்கிற உதவியாளர் நித்யா, அருந்ததியர் சமுதாயத்தவர். இந்தப் பையன் எனக்கு சினேகிதன் என்று சொல்வது எனக்குப் பெருமை...'' என்றார். இன்னொரு சந்தர்ப்பத்தில், ''24 மணி நேரமும் அணுக்கத் தொண்டனாக இருந்து என்னைக் கவனித்துக் கொள்வதே இந்த  இளைஞன்தான்!'' என்றும் சொன்னார்.

முதல்வராக இருக்கும் போது புறநகரில் இருந்த வேல்ஸ் பல்கலைக்கழக விழாவுக்கு கருணாநிதி சென்றபோது,  பல்லாவரத்தில் நித்யாவின் வீட்டுக்கும் வந்தார். அப்போது, நித்யா தன் வீட்டருகில் அண்ணா சிலையை அமைத்திருக்க... அதைத் திறந்துவைத்து, 'என் உடல் நலத்தையும் பேணிப் பாதுகாத்து வரும் நித்யா அளித்துள்ள இந்த வரவேற்புக்கு நன்றி...’ என்று பேசினார். அந்த விழாவில் நித்யா செங்கோல் ஒன்றை பரிசளிக்க அதை இன்முகத்தோடு வாங்கிக் கொண்டார் கருணாநிதி. இது கட்சியில் சில சீனியர்களுக்கே கிடைக்காத பெருமை. இதில் நித்யாவின் இமேஜும் கட்சிக்குள் அதிக அளவில் உயர்ந்தது.

 

நித்யா ஆதரவுபெற்ற வேட்பாளர் கருணாநிதி ! 

கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில், கட்சிப் பதவிகள் தொடங்கி, சுகாதாரத்துறை இணை இயக்குநர் பதவிகள் வரை நித்யாவுக்கு வேண்டப்பட்டவருக்கு கிடைத்திருக்கிறது என்று பேசிக்கொள்கிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள். அப்போதும் சரி, இப்போதும் சரி, ’தலைவர் என்ன மூடில் இருக்கிறார்?’ என்று இவரிடம் கேட்டுக்கொண்டுதான் கட்சியின் சீனியர்களே கருணாநிதியை வந்து சந்திப்பார்களாம்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட பல்லாவரம் பகுதியில் கருணாநிதி என்கிற வேட்பாளர் அறிவிக்கப்பட்டு இருக்கிறார். அந்தப் பெயரை பரிந்துரைத்தது நித்யா. அவரை மாற்றக்கோரி ஸ்டாலினும், தா.மோ.அன்பரசனும் சென்று கருணாநிதியை நேரில் சென்று சந்தித்து இருக்கிறார்கள். அப்போது டென்ஷனான கருணாதிதி, ‘ என் கூடவே இருந்து என்னைக் கவனித்துக் கொள்வது நித்யா தான். அவன் சொன்ன ஆள் தான் அங்கு வேட்பாளர். வேறு எங்கு வேணாலும், யாரை வேணாலும் மாற்றிக்கொள்ளுங்கள். பல்லாவரம் வேட்பாளரை மட்டும் மாற்றக்கூடாது’ என்று கறாராகச் சொல்லிவிட்டாராம். அந்த அளவுக்கு கருணாநிதியின் மனதில் நித்யாவுக்கு இடம் உண்டு.

துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு போன்ற சீனியர்களைக் கூட இப்போது கருணாநிதியை வந்து சந்திக்க வேண்டாம் என்று சொல்லி விட்டார்களாம். இடுப்பு மற்றும் பின் பகுதியில் ஏற்பட்டு இருக்கும் கொப்பளங்கள் காரணமாக கடந்த சில நாட்களாக சட்டை கூட அணியவில்லையாம். மாத்திரை மற்றும் உணவுகள் கொடுப்பதற்காக கருணாநிதி மகள் செல்வி தினமும் வருகிறார். ஸ்டாலின் அவ்வப்போது சென்று சந்திக்கிறார். ராஜாத்தி அம்மாளும், கனிமொழியும் சி.ஐ.டி காலனியில் இருந்து கோபாலபுரம் வந்து சந்தித்துவிட்டு போய் இருக்கிறார்கள்.

’மாத்திரைகளின் ஒவ்வாமையாலும், வயோதிகம் காரணமாகவும் அலர்ஜி ஏற்பட்டு கொப்பளங்கள் ஏற்பட்டு இருந்தாலும், விரைவாக நலம் பெற்று கட்சி நடவடிக்கைகளை கவனிக்க கிளம்பி விடுவார் தலைவர். நித்யா எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்’ என்கிற நம்பிக்கையோடு இருக்கிறார்கள் தொண்டர்கள்.

 

- மா.அ.மோகன் பிரபாகரன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ