Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மயங்கிய ஜெ... பதறிய எம்.ஜி.ஆர்...! மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 11

இந்தத் தொடரின் முந்தைய பகுதிகளைப் படிக்க கீழுள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்

பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 | பகுதி 5 | பகுதி 6 | பகுதி 7 | பகுதி 8 | பகுதி 9| பகுதி 10 | பகுதி 11 | பகுதி 12 | பகுதி 13 | பகுதி 14 |பகுதி 15 | பகுதி 16 | பகுதி 17 | பகுதி 18 | பகுதி 19 | பகுதி 20 | பகுதி 21 | பகுதி 22 | பகுதி 23 | பகுதி 24 | பகுதி 25 | பகுதி 26 | பகுதி 27 | பகுதி 28 | பகுதி 29 | பகுதி 30 | பகுதி 31 | பகுதி 32 | பகுதி 33 | பகுதி 34 | பகுதி 35 | பகுதி 36 

 

“அன்பும், தனிமையும் ஒருவரை வதைக்கும்போது... ஆன்மாவின் வெற்றிடத்தை அகங்காரம்  நிரப்பும்.” - இது கேரளாவில் நான் சந்தித்த பழங்குடி சொல்லியது.“நான் வாழ்க்கையில் என்றுமே நிபந்தனையற்ற அன்பை உணர்ந்ததே இல்லை” - இது ஜெயலலிதா சில ஆண்டுகளுக்கு முன் அளித்த பேட்டியில் கூறியது. இந்த இரண்டு வரிகளையும் பொருத்திப் பாருங்கள்... ஏன் ஜெயலலிதா,“ என் தலைமையிலான, என்னால், நான்...” என்ற வாசகங்களை தன் பேச்சில் அதிகம் பயன்படுத்தி இருக்கிறார் என்று புரியும். இந்த அகங்காரம், அவர் அரசியலுக்கு வந்த பிறகு, அதிகாரத்தின் சுவையைக் கண்ட பிறகு உண்டானது இல்லை. அவர் நடிகையாக இருந்தபோதும் இவ்வாறாகதான் இருந்திருக்கிறார்.

 

 

எழுபதுகளில் ஒரு வார இதழ், திரைப்பட பிரபலங்களை தாழ்வாக பறக்கும் சிறு ரக விமானத்தில் அழைத்துச் சென்று, அவர்களின் அனுபவங்களைத் தொடராக எழுதத் திட்டமிட்டது. அவர்கள் முதலில் ஜெயலலிதாவை அணுகி இருக்கிறார்கள். ஜெயலலிதாவும் சந்தோஷமாக சம்மதித்து இருக்கிறார். ஆனால், கடைசி நேரத்தில் அவரால் வர இயலாமல் போய் விட்டது. அதனால் நடிகர் சுருளியையும், மனோரமாவையும் அழைத்துச் சென்று, முதல் வாரத் தொடரை எழுதி இருக்கிறார்கள். இரண்டாம் வாரம்தான் ஜெயலலிதா சென்றிருக்கிறார். ஆனால், அவருக்கு முதல்வாரத்தில் இன்னொருவரை அழைத்து சென்றது தெரியாது. பின்னர், இதழ் வந்தவுடன்  கோபமாக , அந்த பத்திரிக்கையாளரிடம் “முதல் பயணம் என்னுடையதாகதான் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், முதல் பகுதியில் வேறொருவரை வைத்து எழுதி இருக்கிறீர்களே... இதை ஏன் என்னிடம் சொல்லவில்லை..?” என்று கோபமாக கூறியிருக்கிறார்.
இதை மேலோட்டமாக பார்த்தால், இது சாதாரணமானது தானே...? எப்போதும் பிரபலங்களிடம் இருக்கும் ஈகோதானே என்று தோன்றும். ஆனால், ஜெயலலிதா எந்த ஒரு சிறு விஷயத்திலும் ஈகோவுடன் இருந்ததற்கு, அன்புக்காக ஏங்கிய அவரின் தனிமையும் கூட காரணமாக இருந்திருக்கலாம்...!

நிலைக்குலைந்த ஜெ...!

இப்போது அசாத்திய முடிவுகளை எடுக்கும் ஜெயலலிதா... திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கியபோது, ஒரு புடவையைத் தேர்ந்தெடுக்கக் கூட அவ்வளவு திணறியிருக்கிறார். இதை அவரே சொல்லியிருக்கிறார். “எந்தப் பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதற்குப் புறப்பட எண்ணும் நான், எந்தப் புடவையைக் கட்டிக் கொள்ளலாம் என்று அலமாரியில் உள்ள அத்தனை புடவைகளையும் வைத்துக் கொண்டு பரிதவிப்பேன். ‘அம்மு, ஏன் இப்படி உட்கார்ந்துக் கொண்டிருக்கிறாய்...? ஒரு சிறு காரியத்தில் கூடக் கவனம் செலுத்த முடியாத நீ, எப்படி பெரிய காரியங்களைக் கவனிக்கப் போகிறாய்’ என்று செல்லமாகக் கடிந்து கொண்டு, அவரே ஒரு புடவையை எடுத்து தருவார். ஆம், அவருக்கு எல்லாம் அம்மாவாகதான் இருந்திருக்கிறார்.

கொஞ்சம் கற்பனை செய்துப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் எல்லா முடிவுகளையும் இன்னொருவர் எடுக்கிறார்... நீங்கள் அணியும் ஆடையைக் கூட உங்களால் தேர்வு செய்ய முடியவில்லை. அந்த சமயத்தில் உங்களுக்கான முடிவுகளை எடுப்பவர் இறந்து போகிறார். உங்களுக்கு எப்படி இருக்கும்? நிலைக்குலைந்துதானே போவீர்கள்... ஆம், ஜெயலலிதா தன்னுடைய 23-வது வயதில், தன் அம்மாவை இழந்தவுடன் வெறுமை அவரை கவ்வியது... திசைவழி தெரியாமல் தான் நின்றார்...!

“அம்மா தான் எனக்கு எல்லாம். அவர் தான் எனக்காக எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டார். எனக்கு அந்த சமயத்தில் எதுவுமே தெரியாது... என் வங்கி கணக்கு, என் சம்பளம், கால்ஷீட், காசோலை கையெழுத்து, வருமான வரி எவ்வளவு கட்ட வேண்டும்... வீட்டில் பணியாளர்கள் எவ்வளவு என எதுவும் தெரியாது.... கையறு சூழலில் நின்றேன். ஒரு குழந்தையைக் கண்ணை கட்டி காட்டுக்குள் விட்டது போல இருந்தது...” என்று அவரே ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.

இருள் பூசிய இந்தத் தனிமையிலிருந்து தம்மை மீட்பார்கள்... அம்மாவின் பேரன்பு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை... குறைந்தபட்சம் அன்பாவது தனக்கு கிடைக்கும் என்று அவர் நம்பிய உறவினர்களும் அவருக்குக் காயத்தைதான் பரிசாகத் தந்தனர். ஆம், ஒரு நெருக்கடி சமயத்தில், அவர்களுக்கு ஜெயாவின் நலனைவிட... அவரின் சொத்து மீதுதான் முழு கவனமும் இருந்திருக்கிறது.

மயங்கிய ஜெ... பதறிய எம்.ஜி.ஆர்...!

சென்ற அத்தியாயத்தில், அடிமை பெண் படப்பிடிப்பின் போது, வெயிலில் இருந்து ஜெ-வை காக்க எம்.ஜி. ஆர் அவரைத் தூக்கி சென்றார் என்று பார்த்தோம்தானே...? அதுபோல, இன்னொரு சம்பவமும் நிகழ்ந்து இருக்கிறது. ஆம், ஜெயலலிதா ஒரு சமயம் கடுமையான டயட்டில் இருந்தார். அதன் பின் விளைவாக, வீட்டில் புத்தகம் படித்துக் கொண்டிருக்கும்போதே மயங்கி விழுந்து விட்டார். வீட்டில் உள்ள வேலையாட்கள், உறவினர்கள் என்னென்னவோ செய்து பார்த்தும் அவர் எழவே இல்லை. அவர்களுக்குப் பதற்றமாகிவிட்டது... என்ன செய்வது என்று தெரியவில்லை. ஜெயலலிதாவின் மேனேஜருக்கு தகவல் போகிறது... அவர் உடனடியாக எம்.ஜி. ஆருக்கு தகவல் தெரிவிக்கிறார். எம்.ஜி.ஆர் உடனடியாக ஜெயலலிதாவின் வீட்டுக்கு வந்து, அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் ஏற்பாடுகளை செய்தார்.

இந்த பதற்றமான சூழலிலும் ஜெயலலிதாவின் உறவினர்கள் சிலர், வீட்டில் உள்ள முக்கிய பீரோ சாவியை யார் வைத்துக் கொள்வது என்று தங்களுக்குள் சண்டையிட்டு இருக்கிறார்கள். இதில் தலையிட்ட எம்.ஜி.ஆர், சாவியைதான் கைப்பற்றி, ஜெயலலிதா குணமடைந்த பின் அவரிடம் ஒப்படைத்து இருக்கிறார். நடந்த சம்பவங்களைக் கேட்ட ஜெயலலிதா நொந்துதான் போய்விட்டார்...!
இந்த சம்பவம் தான், ஜெயலலிதா, எம்.ஜி.ஆரை முழுமையாக நம்பியதற்கும், தன் உறவினர்களைத் தள்ளி வைத்ததற்கும் முதல் காரணமா இருந்திருக்க வேண்டும்...!

படப்பிடிப்புத் தளத்திலும் சரி. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மீது அதிக அக்கறையாக இருந்திருக்கிறார். அதை ஜெயலலிதாவே, தான் அளித்த பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.

ஜெயலலிதா வார்த்தைகளிலிருந்தே,“ ‘கண்ணன் என் காதலன்’ படப்பிடிப்பின் போது ஒரு நாள் காலை அவருக்கான காட்சிகள் முடிவடைந்துவிட்டதால், காரில் ஏறப் போனவர் (எம்.ஜி.ஆர்), “மத்தியானம் என்ன எடுக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டார்.
“ஜெயலலிதா மாடிப் படியில், சக்கர நாற்காலியில் உருண்டு விழும் காட்சி...!” என்றார் இயக்குநர். உடனே எம்.ஜி.ஆர் காரை விட்டு இறங்கிவிட்டார். “அதை எடுக்கும் போது, நானும் இருக்கிறேன். அது கொஞ்சம் ரிஸ்கானது...! அந்த பெண் விழுந்துவிட்டால்...?” என்று சொல்லிக்கொண்டே அன்று எங்களுக்கு உதவி செய்ய வந்துவிட்டார். அன்று முழுவதும், படப்பிடிப்பு முடியும் வரை எங்களுடனேயே இருந்தார்...”

அன்புக்காக ஏங்கிய ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு, உண்மையில் இந்த அக்கறை அளவற்ற சந்தோஷத்தை தந்திருக்க வேண்டும்.

இதனால்தான் பின் தான் அளித்த ஒரு பேட்டியில் ஜெயலலிதா இவ்வாறாக சொன்னார், “அவர் (எம்.ஜி.ஆர்) தான் எனக்கு எல்லாம். அவர் தான் என் தந்தை, என் தாய், என் நண்பர், என் வழிக்காட்டி, என் ஆசான்... எல்லாம் அவர் தான்” என்று.

ஆனால், அதே எம்.ஜி. ஆர் தான், பின் ஜெயலலிதா போயஸ் கார்டன் வீட்டுக்கு குடியேறிய போது, அந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளாமல் தவிர்த்தார். ஆம், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வீட்டு கிரகபிரவேசத்தில் கலந்துக் கொள்ளவில்லை, அவர் அளித்த பரிசு பொருள் மட்டும் தான் சென்றது...!

(தொடரும்)
 

இந்தத் தொடரின் முந்தைய பகுதிகளைப் படிக்க கீழுள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்

இந்த தொடரின் அடுத்த பகுதியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 | பகுதி 5 | பகுதி 6 | பகுதி 7 | பகுதி 8 | பகுதி 9| பகுதி 10 | பகுதி 11 | பகுதி 12 | பகுதி 13 | பகுதி 14 |பகுதி 15 | பகுதி 16 | பகுதி 17 | பகுதி 18 | பகுதி 19 | பகுதி 20 | பகுதி 21 | பகுதி 22 | பகுதி 23 | பகுதி 24 | பகுதி 25 | பகுதி 26 | பகுதி 27 | பகுதி 28 | பகுதி 29 | பகுதி 30 | பகுதி 31 | பகுதி 32 | பகுதி 33 | பகுதி 34 | பகுதி 35 | பகுதி 36 

- மு. நியாஸ் அகமது

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close