Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்த தீபாவளிக்கு மழை இருக்கு... அதுலயும் ஒரு நல்லது இருக்கு! #DataStory

அக்டோபர் 21-ம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மையம், சைலென்டாக மியான்மரை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால் திடீரென காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி 24-ம் தேதி ஆந்திராவை நோக்கி ஒரு யூ டர்ன் போட்டு, சென்னை மற்றும் ஆந்திராவின் சில பகுதிகளில் தீபாவளிக் கொண்டாட்டத்துக்கு முட்டுக் கட்டை போட்டுள்ளது. அந்த யூ டர்ன் மேப்பை கீழே பார்க்கலாம்.

 

26-ம் தேதி அதிகாலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ‘கியான்ட்’ புயலாக உருவெடுத்தது (கியான்ட் என்றால் மியான்மரின் மோன் மொழியில் முதலை என்று பொருள்). விசாகப்பட்டினத்துக்கு 320 கிமீ தூரத்தில் வங்க கடலில் மையம் கொண்டிருந்த புயல் இன்று வலு குறைந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நீடிக்கிறது. இதனால் ஆந்திரா மாநிலத்துக்கு இருந்த புயல் அபாயம் நீங்கியுள்ளது.

 

ஆனாலும் ‘உங்க தீபாவளி கொண்டாட்டத்தில் புகுந்து விளையாடாமல் விடமாட்டேன் என்கிறது மழை’. சென்னையில் நாளை பிற்பகலுக்கு பின் மழை தொடங்கும் என்கிறது இந்திய வானிலை ஆய்வு மையம். மேலும், தீபாவளி அன்று வட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கன மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

 

வடகிழக்கு பருவமழை தொடங்கும் காலம் என்பதால், தீபாவளி அன்று பெரும்பாலும் மழை இருப்பது சகஜம் தான். ஆனால் கடந்த ஆண்டு டிசம்பர் வெள்ளத்துக்கு முன், தீபாவளி நாட்களைச் சுற்றி ஒரு டிரெயல் பார்த்தது மழை. தீபாவளி வாரம் முழுதும் பெய்த மழையால் மக்கள் வீடுகளிலேயே முடங்கினர். ‘மழையில் சென்று அப்படி ஒன்றும் புதுத் துணி எடுக்க வேண்டாம்’ என்று வீட்டிலேயே இருந்தவர்கள் ஏராளம். மற்றொரு பக்கம் மல்லாக்கப் படுத்தது பட்டாசு விற்பனை. கடந்த ஆண்டு நடந்த சில்லறை விற்பனை, எதிர்பார்த்ததை விட 15% குறைவாகவே இருந்ததாக வியாபாரிகள் குமுறினர்.

 

வியாபாரிகளுக்கு ஒரு வகையில் இது வயிற்றில் புளியை கரைக்கும் விஷயமாக இருந்தாலும், மற்றொரு புறம் ஒரு சில நல்ல விஷயங்களும், தீபாவளி மழை மூலம் நமக்கு கிடைக்கும் வாய்ப்பிருக்கிறது.

 

 

2014 மற்றும் 2015-ம் ஆண்டு தீபாவளி நாட்களில் பட்டாசுகளால் சென்னையின் 5 பகுதிகளில் ஏற்பட்ட காற்று மாசு அறிக்கையின் மூலம் அந்த நல்ல விஷயத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.

 

 

 

 

 

2014-ம் ஆண்டு தீபாவளியைக் காட்டிலும் கடந்த ஆண்டு தீபாவளியன்று காற்றில் இருக்கும் நச்சு நுண்துகள்களின் (RSPM)அளவு சராசரியாக 30 - 40 % குறைந்துள்ளது.

 

காற்றில் அனுமதிக்கப்பட்ட நுண்துகள்களின் அளவு, 100 மைக்ரோகிராமுக்கு கீழ் தான் இருக்க வேண்டும். 2014-ம் ஆண்டு தீபாவளி அன்று சுவாசிக்கத் தகுதி அற்றதாக சென்னையின் காற்று மண்டலம் மாறியது. ஆனால் 2015-ம் ஆண்டு ஒரு சில இடங்களைத் தவிர, பெரும்பாலான இடங்களில் 100 மைக்ரோகிராமுக்கு கீழேயே இந்த அளவு இருந்தது.

 

மழை காரணமாக பலர் பட்டாசுகள் வாங்காததாலும், வாங்கிக் கொளுத்த முடியாமல் போனதும் காற்று மாசு குறைய பெரும் பங்காற்றி உள்ளது. மேலும் மழை காரணமாக அதிகரித்த காற்றின் வேகமும், மாசுவை அடித்துச் சென்று விட்டது. இப்போது புரிகிறதா அந்த தீபாவளி மழையால் ஏற்படும் நன்மை.

 

சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து, காற்று மாசினால் பூமிக்கு ஏற்பட இருக்கும் பேராபத்தை தடுக்க ரெட் அலர்ட்டில் முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கும் போது, நாமும் அதற்கு ஒத்துழைப்பு தருவதே நியாயம். கொண்டாட்டம் முக்கியம் தான், ஆனால் அதற்கு விலையாக நமது சுற்றுச் சூழலை கொடுப்பதா என்பது தான் நமக்கு முன்னிருக்கும் கேள்வி.கொண்டாடுங்க! அளவான புகையோட கொண்டாடுங்க!

 

ரெ.சு.வெங்கடேஷ்

இன்ஃபோகிராப்: ஹாரிஃப் முகமது

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close