Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சூடு பிடிக்கும் 5 மாநில தேர்தல் களம்; அரசியல் கட்சிகளின் பரபரப்பு வியூகம்

த்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில்  அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் மிக முக்கிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில், ஏற்கனவே இழந்த செல்வாக்கை மீண்டும் பெற்றுவிட வேண்டும் என்பதில், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவும், காங்கிரஸ் கட்சியும் இப்போதே கங்கணம் கட்டிக்கொண்டு தீவிரம் காட்டத் தொடங்கி விட்டன. 

உத்தரப்பிரதேச மாநில சட்டசபையின் பதவிக்காலம், 2017 மே மாதம் 27–ந் தேதியுடன் முடிவடைகிறது. கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய 3 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் மார்ச் 18–ந்தேதியும், உத்தரகாண்ட் சட்டசபையின் பதவிக்காலம் மார்ச் 27–ந்தேதியும் முடிவடைகிறது.எனவே, இந்த 5 மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் சட்டசபைத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம்  திட்டமிட்டுள்ளது. 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வா கட்சி ஆட்சியில் உள்ளது. தற்போது உத்தரப்பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாடி கட்சிக்குள் அப்பா-மகனுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல், அதனைத் தொடர்ந்து அக்கட்சியில் உருவெடுத்துள்ள கோஷ்டி மோதல் ஆகியவை பா.ஜ.க அல்லது காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு இப்போதே கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளது. எனினும் 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 70 தொகுதிகளை பா.ஜ.க கைப்பற்றியது. இதுவே மத்தியில் ஆட்சியமைக்க பெரிதும் உதவியாக அமைந்தது.  அமேதி, ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளிலேயே காங்கிரஸ், இம்மாநிலத்தில் வெற்றி பெற்றது. உத்தரப்பிரதேசத்தைப் பொறுத்தவரை வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சிக்கும்  முக்கியப் பங்குண்டு என்பதை யாரும் மறுத்து விடமுடியாது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹரிஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியில் உள்ளது, இவரது ஆட்சிக்கு கடந்த மார்ச் மாதத்தில் அவரது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 9 எம்.எல்.ஏ-க்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி பிறப்பிக்கப்பட்டது. பின்னர் உச்சநீதிமன்றம் வரை சென்று, ஹரிஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசு மீண்டும் அமைந்தது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்தப் பிரச்சினையை காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க-வும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரமாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். 

கோவா மாநிலத்தில் முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கர், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக பொறுப்பேற்றதும், அங்கு பா.ஜ.க-வின் லட்சுமிகாந்த் பர்சேகர் முதல்வர் பொறுப்பேற்றார், கோவாவில் பா.ஜ.க அரசு அமைந்த பின்னர்  நிலையான அரசு நீடிப்பதாக மக்கள் உணர்கிறார்கள், மக்கள் இந்த நன்மதிப்பை தக்கவைத்துக் கொள்வதுடன், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பா.ஜ.க திட்டமிட்டுள்ளது.  கோவாவில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் மற்றும் வேறுசில மாநிலக் கட்சிகளும் இப்போதே தேர்தல் யுக்திகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளன. என்றாலும் அங்கு பா.ஜ.க-விற்கும், காங்கிரசுக்கும் இடையேதான் கடும் போட்டி இருக்கும் என்று தெரிகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் சிரோன்மணி அகாலிதளம்–பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சசராக சிரோன்மணி அகாலிதள தலைவர் பிரகாஷ் சிங் பாதல் பதவி வகித்து வருகிறார். அவரது மகன் சுக்பீர் சிங் பாதல் துணை முதலமைச்சராக உள்ளார்.  மார்ச் மாதத்திற்குள் பஞ்சாப் மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெறும் என்ற நிலையில், அகாலிதளம் - பா.ஜ.க கூட்டணி தொடருமா அல்லது  பிரிந்து தனித்தனியாக போட்டியிடுமா என்று தெரியவில்லை. இதுவரை இந்தக் கூட்டணியில் எவ்விதப் பிரச்சினையும் இல்லை. என்றாலும் இந்தக் கூட்டணிக்கு, பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும், ஆம் ஆத்மியும்  கடும் நெருக்கடியை கொடுக்கும் என்று தெரிகிறது. இந்தக் கட்சிகளின் போட்டியை எதிர்கொண்டு, பா.ஜ.க - சிரோன்மணி அகாலிதளம் கூட்டணி மீண்டும் வெற்றிபெறுமா? என்பதே இப்போதைய கேள்வி.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக ஒக்ரம் இபோபி சிங் பதவி வகித்து வருகிறார். பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி மத்தியில் அமைந்த பின்னர் அஸ்ஸாமில் நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெற்றது. மத்திய அமைச்சராக இருந்த சர்பானந்த சோனோவால் முதல்வர் ஆனார்.  அஸ்ஸாமைத் தொடர்ந்து, மணிப்பூரிலும் ஆட்சியைப் பிடிக்க, பா.ஜ.க  தீவிரமாகக் களமிறங்கும் என்று தெரிகிறது. 

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல் அறிவிப்பு, பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதால், மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் கருத்து கேட்டது. தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களுக்கு குறிப்பாக சலுகைத் திட்டங்கள் எதையும் அறிவிக்கக் கூடாது என்றும், பட்ஜெட் அறிவிப்புக்கு தடையில்லை என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டது.

விரைவில் நடைபெறவிருக்கும் 5 மாநில சட்டசபைத் தேர்தல்களில் வெற்றிபெற்றால் மட்டுமே, மத்திய அரசின் மீதான மக்களின் நம்பகத்தன்மையை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்பதால், அகில இந்திய பா.ஜ.க, சம்பந்தப்பட்ட மாநில  தலைமையை இப்போதே முடுக்கி விட்டுள்ளது. தேர்தல் நடைபெறவிருக்கும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில்  தேர்தல் களம் இப்போதே சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. 

சி. வெங்கட சேது.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ