Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘நான் அகில உலக மாமனார் ...!’ - சாந்தாராமின் குறும்பு - நினைவு நாள் பகிர்வு

“திரைப்படங்களைப் பொறுத்தவரை நான் கதைக்குத்தான் அடிப்படையான முக்கியத்துவம் கொடுக்க விரும்புகிறேன். என்னைப்பொறுத்தவரை சினிமா என்பது ஓர் சக்தி வாய்ந்த சாதனமாக கருதுகிறேன். இதை என் பிறந்த நாட்டுக்காகவும் அந்த மக்களின் நன்மைக்காகவுமே உபயோகிக்கவேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன்தான் என் வாழ்நாள் முழுவதும் பணியாற்றிவந்திருக்கிறேன்...“திரைப்படம் என்ற மாபெரும் ஊடகத்தின் சக்தியை உணர்ந்து ஒரு படைப்பாளிக்குரிய பொறுப்புடன் இப்படி கூறியவர் வட இந்திய திரையுலக மேதை சாந்தாராம்.

சமூக முற்போக்குச் சிந்தனைகளை கலைப்பூர்வமாக திரைப்படமாக்கும் யுக்தியை இந்தியத் திரைப்பட இயக்குநர்களுக்கு கற்றுக்கொடுத்த மாமேதை சாந்தாராம். இன்று அவரது நினைவுநாள்

திரைப்படங்கள் மவுனப்படங்களாக வளர்ந்துகொண்டிருந்த காலத்தில் புனாவில் ஸ்டுடியோ ஒன்றில் காவலாளியாக தன் வாழ்க்கையை துவங்கிய சாந்தாராம், வடஇந்திய திரையுலகிற்கு நல்ல பல படங்களை தந்த ஸ்டுடியோ ஒன்றின் உரிமையாளராகவும், நாடுபோற்றும் நல்ல இயக்குநராகவும் உயர்ந்தவர்.

1901-ம் ஆண்டு நவம்பர் மாதம் 18-ம் தேதி மகாராஷ்டிர மாநிலம் கோல்ஹாபூரில் பிறந்தவர். வறுமையான குடும்பத்தில் பிறந்த அவரால் பள்ளிப்படிப்பை தொடரமுடியவில்லை. இளம்வயதிலேயே அங்குள்ள ரயில் தண்டவாளங்களைப் பராமரிக்கும் பணியில் சேர்ந்தார். மாதம் 15 ரூபாய் வரை சம்பாதித்தாலும் தான் அச்சமயத்தில் ஆட்பட்டிருந்த ஒரு 'கெட்ட' பழக்கத்துக்காக மேலும் சம்பாதிக்கவேண்டியிருந்தது. அதற்காக பல வேலைகளைச் செய்து பணம் ஈட்டினார். வீட்டின் தேவைக்குப் போக தனக்கான தொகையில் அவர் அந்த கெட்ட பழக்கத்தினைத் தொடர்ந்தார். ஆம், வேலைநேரம்போக அவர் செல்லும் இடம் மவுனப்பட கொட்டகைகள். அதுதான் அவரது 'கெட்ட' பழக்கம். போதும் போதும் என்றளவிற்கு படங்களைப் பார்த்து ரசித்த அவருக்கு இக்காலகட்டத்தில் சினிமா மீது பெரும் ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது. அது ஒரு ரசிகனுக்கான ஈர்ப்பு அல்ல; அதையும் தாண்டி. ஓய்வு நேரத்தில் தம் நண்பர்களை கவர்வதற்காக தான் பார்த்த திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்களை போலவே நடித்துக் காட்டி தன் கலையார்வத்தை வெளிப்படுத்திவந்தார்.

சினிமா என்ற கலைவடிவத்தை கொஞ்சம் கொஞ்சமாக உள்வாங்கிக்கொண்டுவந்த சாந்தாராமுக்கு அதை நேரில் பார்த்து அதன் தொழில்நுட்ப விஷயங்களைக் கற்றுத்தேறும் ஆசை ஒருநாள் வந்தது. அதற்காக மாத ஊதிய வேலையை விடவும் மனமில்லை. இதற்காக ஓர் வழிகண்டறிந்தார். ஆம் புனாவில் அப்போது இயங்கிவந்த ஸ்டுடியோ ஒன்றில் காவலாளியாக வேலைக்கு சேர்ந்தார் அவர். அங்கு ஓரளவு சினிமா  தயாரிப்பு பற்றிய புரிதல் உண்டானது அவருக்கு.

பின்னர் கோல்ஹாபூரில் இயங்கிவந்த மஹாராஷ்டிர சினிமா கம்பெனியில் முறையாக ஸ்டுடியோ ஊழியராக அவர் வேலைக்குச் சேர்கிறார். பிறகு படிப்படியாக உயர்ந்து, கதாநாயகன் அந்தஸ்தை பெற்று 1925–ம் ஆண்டு அந்த நிறுவனம் தயாரித்த ‘சவுகரிபாஸ்’ என்ற கலைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். இது சாந்தாராம் என்ற நடிகனை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது. நடிப்பதோடு இன்றி ஃபிலிம் ஆய்வுக்கூடம் , ஸ்பெஷல் எஃபக்ட்ஸ், எடிட்டிங் என ஒரு திரைப்படம் குறித்த அத்தனை அம்சங்களையும் அங்குதான் அவர் கற்றார். சில ஆண்டுகளில் அங்கிருந்து விலகிவந்து நண்பர்கள் சிலருடன் இணைந்து 'பிரபாத் ஃபிலிம் கம்பெனி'யை 1929-ம் ஆண்டு நிறுவினார்.

இந்தியாவில் திரைப்படத்தொழிலில் மஹாராஷ்டிரா மாநிலத்துக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு உண்டு. அவ்வளவாக திரைப்படத்தொழில் வளர்ந்திராத காலத்திலேயே தொழில்நுட்ப ரீதியாகவும், வணிகரீதியான மையங்களாகவும் இது இயங்கியது. இந்தியாவில் திரைப்பட ஸ்டுடியோக்கள் வட நாட்டில்தான் முதலில் தோன்றின. இந்தியாவின் பிற பகுதியில் இருந்தவர்கள் தங்கள் திரைப்பட ஆசையை மஹாராஷ்டிராவில்தான் வளர்த்தெடுத்தனர். 40 களில் நாம் பார்த்து ரசித்த தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்கள் இங்குள்ள கோல்காபூர், புனே, மும்பை ஸ்டுடியோக்களில் உருவானவைதான்.

தாதா பால்கேவின் 'ராஜா ஹரிச்சந்திரா' கதையை 1932-ம் ஆண்டு 'அயோத்தியே கா ராஜா' என்ற பெயரில் இயக்கினார் சாந்தாராம். திரைப்படங்களில் பெண்கள் நடிக்கவராத அக்காலத்தில் பெண்கள் வேடத்தை ஆண்களே ஏற்று நடிப்பது வழக்கமாக இருந்தது. முதன்முறையாக இந்த திரைப்படத்தில் பெண்களையே நடிக்க வைத்து சாதனை செய்தார் சாந்தாராம்.

மெளனப்படக் காலத்தில் சாந்தாராம் 6 படங்களை இயக்கினார். 1930 களின் மத்தியில் இந்தி மராத்தி என இருமொழிகளிலும் படம் எடுக்கத்துவங்கினார். 1934 ல் வந்த 'அம்ரித் மந்தன்' என்ற படம் இந்தியிலும், மராத்தியிலும் நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது.
1936-ல் வெளிவந்த 'அமர் ஜோதி', வெனிஸில் நடைபெற்ற சர்வதேசப் பட விழாவில் திரையிடப்பட்ட பெருமை பெற்றது.

1937 ம் ஆண்டிலேயே இளம்பெண்களை வயதானவர்கள் மணக்கும் சமூக கொடுமையை கண்டிக்கும்விதமாக 'துனியானா மேனே' என்ற படத்தினை எடுத்தார். பெண்களின் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களுடன் இந்த படம் இருந்தது. வயதானவர்கள் இளம் பெண்களை மணந்துகொள்ளும் வழக்கத்தைக் கண்டித்த இந்த படத்தில், இந்த காரணத்துக்காக விவாகரத்து பெற்றுக்கொள்ளலாம் என்ற முற்போக்கு கருத்தை முன்வைத்தார். ஒருவகையில் இந்த  கருத்தை வலியுறுத்திய முதல்படம் இதுதான்.

1939-ம் ஆண்டு அவர் இயக்கிய 'ஆத்மி',யில் பாலியல் தொழிலில் சிக்கி அதிலிருந்து மீள நினைக்கும் பெண் ஒருத்தியின் வாழ்க்கையை மிகச்சிறந்த முறையில் திரையில் காட்டினார். வணிக சினிமாவில் இறுதிவரையில் பத்தினித்தன்மையோடு படம் எடுத்தவர் சாந்தாராம். சக்தி வாய்ந்த சாதனமான சினிமாவை தான் மக்களின் நன்மைக்காகவே பயன்படுத்துவேன் என்பதில் உறுதியாக இருந்த சாந்தாராம், இந்தியாவில் இந்து, முஸ்லிம் சமூகத்தினரிடையேயான உறவின் மேம்பாட்டை வலியுறுத்தும் விதமாக 1941-ல் 'படோசி' என்கிற படத்தை வெளியிட்டார். அதில் இருவேறு சமூகத்தைச் சேர்ந்த நண்பர்கள் இருவர் இனக்கலவரத்தில் இறக்க நேரிடுகிறது. அதன் உணர்ச்சியை ரசிகர்களுக்கு கொண்டுசேர்க்கும் விதமாக அந்தக் காட்சியை உருவகப்படுத்த பெரிய அணைக்கட்டு ஒன்று உடைந்து சிதறுவதுபோல காட்சிப்படுத்தியிருந்த விதம் திரைப்படத்துறையினரால் பெரிதும் பாராட்டப்பெற்றது.
பிரபாத் ஃபிலிம் கம்பெனியில் நல்ல தரமான படங்களை வெளியிட்டு புகழ்பெற்ற சாந்தாராம், 1941 ல் சொந்தமாக ராஜ் கமல் கலாமந்திர் என்ற நிறுவனத்தை துவங்கினார். இதன்மூலம் அவர் எடுத்த டாக்டர் கோட்னீஷ் கி அமர் கஹானி, சகுந்தலா, பர்ச்சாயின், தோ ஹாங்கே பாராஹாத், ஜனக் ஜனக் பாயல் பஜே உள்ளிட்ட படங்கள் அவரது திறமையை எடுத்துக்காட்டியது.

இவற்றில் பர்ச்சாயின்,டாக்டர் கோட்னீஷ் கி அமர் கஹானி உள்ளிட்ட சில படங்களில் சாந்தாராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படங்களின் கதாநாயகி வேறு யாருமல்ல; அவரது மனைவி ஜெய்ஸ்ரீ. எந்த ஒன்றின் அடிப்படையை மாற்றாமல் அதனை தற்காலத்துக்கு ஏற்றபடி மாற்றி தரம் குறையாமல் படம் பிடிப்பது சாந்தாராமின் பாணி. காளிதாசரின் கதையான சகுந்தலத்தை ஸ்த்ரீ என்ற பெயரில் திரைப்படமாக்கினார். வெளிநாட்டில் வர்த்தக ரீதியில் திரையிடப்பட்ட முதல் இந்தியப் படம் இதுதான்.

சீனப்போரில் கலந்துகொண்ட வீரர்களுக்கு முதலுதவி செய்யும் இந்திய மருத்துவர் ஒருவர்  சீன தேசத்து நர்ஸ் ஒருவரையே திருமணம் செய்துகொண்டு அங்கேயே இறந்துபோய்விடுகிறார். மராட்டியத்தை சேர்ந்த அந்த மருத்துவரின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து 'திரும்பி வராத ஒருவர்' என்ற நாவல் எழுதப்பட்டது. கே.ஏ.அப்பாஸ் என்ற புகழ்பெற்ற எழுத்தாளரின் அந்த நாவலைப் படித்த சாந்தாராம், ' டாக்டர் கோட்னீஸ் கா கஹாணி' என்கிற பெயரில் திரைப்படமாக்கி வெளியிட்டார்.


சீனா- ஜப்பான் போரின்போது, காயமுற்ற சீனர்களுக்கு சிகிச்சை அளிக்கச் சென்ற டாக்டர்களில் ஒருவர் கோட்னீஸ். அவருக்கு உதவியாக இருக்கும் கிங்யாங் என்ற சீன நர்ஸ் மீது காதல் கொள்ளும் டாக்டர் அவளை திருமணம் செய்து கொள்கிறார்.
போர் முடியும் சமயம் அங்கு, இனம் தெரியாத தொற்று நோய் பரவுகிறது. அந்த நோய்க்கு மருந்து கண்டுபிடித்து பலரை குணப்படுத்தும் டாக்டர் கோட்னீஸீம் எதிர்பாராதவிதமாக அந்த தொற்று நோய்க்கு ஆளாகிறார். நோய்முற்றி இறக்கும் தருணத்தில், தன் கர்ப்பிணி மனைவியிடம் ‘நீ நம் குழந்தையுடன் இந்தியாவுக்கு செல். நம் கிராமத்துக்கு போ. ரெயில் நிலையத்துக்கு வெளியே ஒரு மாட்டு வண்டியுடன் பெரியவர் ஒருவர் இருப்பார். அவரிடம் என் பெயரைச் சொன்னால், நம் வீட்டுக்கு அழைத்துச் செல்வார். அங்கு என் தாயாரைப் பார். அவர் உன்னையும், நம் குழந்தையையும் ஏற்றுக் கொள்வார்’’ என்று கூறியபடி உயிர் துறக்கிறார். படத்தின் இந்த இறுதிக் காட்சியை உள்ளம் உருகச்செய்யும் வகையில் மவுனமாகவே படமாக்கி இருப்பார் சாந்தாராம். இந்தியில் மட்டுமின்றி, ஆங்கிலத்திலும் படத்தை வெளியிட்டார், சாந்தாராம்.சோஷலிச நாடுகளில் இந்தப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.

அதிபயங்கர குற்றவாளிகள் என சர்க்கார் முடிவெடுத்த 6 கைதிகளை நல்வழிப்படுத்தி, அவர்களை பண்புள்ளவர்களாக ஆக்கி சமூகத்தில் அவர்களது பொறுப்பை உணர்த்துகிறார் ஒரு காவல் அதிகாரி. உண்மையில் நடந்த இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து 'தோ ஆங்கேன் பாரா ஹாத்' என்கிற படத்தை எடுத்தார். 1957-ம் ஆண்டு வெனிஸ் உலகத்திரைப்பட விழாவில் இத்திரைப்படம் வெள்ளிக்கரடி விருதினை பெற்றது.

1959-ல் வெளியான அவரது ஜனக் ஜனக் பாயல் பஜே திரைப்படம், வட இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம். கதக் நடனத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த கதையில் பாரம்பரிய கலைவடிவடிவமான கதக் நடனத்தை படம் எடுக்கப்பட்ட காலத்துக்கு தகுந்தாற்போல் மாற்றியமைத்து அதேசமயம் அதன் மெருகு குறையாமல் எடுத்தார். இந்த திரைப்படம் கதக் நடனத்துக்கு சமூகத்தில் இருந்த மதிப்பை பெருமளவில் உயர்த்தியதோடு சாந்தாராமுக்கு பல திசைகளிலிருந்தும் பாராட்டுகளை பெற்றுத்தந்தது. உலக திரைப்பட ஆளுமைகள் வரிசையில் வைத்து புகழப்பட்டார் சாந்தாராம்.

படத்தின் கதாநாயகி சந்தியாவின் கதாபாத்திரத்தால் கவரப்பட்டவர்களில் குறிப்பிட்ட மக்கள் என்றில்லாமல் நடுத்தர குடும்பம் முதல் பெரிய வீட்டுப்பெண்கள்வரை கதக் பயில ஆர்வம் கொண்டனர். வட இந்தியாவில் நிறைய கதக் நடனப்பள்ளிகள் உருவாகக் காரணமான இந்த திரைப்படம்தான் இந்தியாவின் முதல் வண்ணப்படமும் கூட.

முழுக்க முழுக்க வணிக சினிமாவில் இயங்கினாலும் தனது வாழ்வின் இறுதிவரை சமரசம் செய்துகொள்ளாத  ஒரு சிறந்த இயக்குநராக, தயாரிப்பாளராக, நடிகராக சாந்தாராம் விளங்கினார்.

ஒப்புயர்வற்ற சாதனையாளரான சாந்தாராம் மீது தமிழக ஆளுமைகள் பலருக்கு ஈர்ப்பு இருந்தது. “தன்னிகரில்லாத சிறந்த கலை ரசிகரான சாந்தாராம்தான் என் பட உலக குரு” என ஒரு மேடையில் அவரை பெருமைப்படுத்தினார் ஜெமினி அதிபர் வாசன். “நான் சாந்தாராமின் மாணவன்” என உருகினார் ஸ்ரீதர்.

சாந்தாராமின் பன்முக ஆளுமைத்திறமையால் கவரப்பட்ட இன்னொரு தமிழக பிரபலம் எம்.ஜி.ஆர். இந்தியாவின் பிரலங்கள் திரண்ட மிகப்பெரும் திரைப்பட விழா ஒன்றின் மேடையில் சாந்தாராமின் காலில் விழுந்து வணங்கினார் எம்.ஜி.ஆர். தன் வாழ்நாளில் எம்.ஜி.ஆர் பொது இடத்தில் இருவரது கால்களில் மட்டுமே விழுந்து வணங்கியிருக்கிறார். ஒருவர் அவரது நாடகம், சினிமா உலக வாழ்விற்கு அடித்தளமிட்ட எம்.கந்தசாமி முதலியாரின் மகன் எம்.கே. ராதா. மற்றொருவர் சாந்தாராம். சாந்தாராமின் 'தோ ஆங்கேன் பாரா ஹாத்' என்ற படம் எம்.ஜி.ஆரின் ஃபார்மூலாவை ஒட்டியிருந்ததால் அதை தமிழில் 'பல்லாண்டு வாழ்க' என்ற பெயரில் எம்.ஜி.ஆர். எடுத்தார். இந்த படத்துக்கு விமர்சனம்  எழுதிய வெளிநாட்டுப்பத்திரிகைகள் இந்தியா நமக்கு பாடம் கற்றுத்தருகிறது என எழுதியது. இது சாந்தாராம் என்ற கலைமேதையின் திறமைக்கு சான்று. இதேபோல சாந்தாராமின்
'அப்னாதேஸ்' என்கிற படம்தான் 'நம் நாடு' என்ற பெயரில் எம்.ஜி.ஆர் ' நடிப்பில் வெளியானது.

சமூக சீர்திருத்தக் கருத்துகளை கலைவடிவத்துக்கு மாற்றி திரைப்படமாக்கும் கலையில் இன்றுவரை இந்தியத்திரையுலகுக்கு சாந்தாராம்தான் முன்னோடி.இந்திய திரையுலகுக்கு சாந்தாராம் ஆற்றிய சேவையைப் பாராட்டி 1985-ம் ஆண்டு அவருக்கு தாதா சாஹேப் பால்கே விருதும், 1992-ல் பத்ம விபூஷண் விருதும் வழங்கப்பட்டன. நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகத் திறமையோடு சுமார் அரை நுாற்றாண்டுகாலம் சினிமாவில் இயங்கி பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான சாந்தாராம் 1990-ம் ஆண்டு தனது 89-வது வயதில் காலமானார்.

இந்திய ஒருமைப்பாட்டை தனது பல படங்களில் திரும்பத்திரும்ப வலியுறுத்தியவர் சாந்தாராம். “தீன் பத்தி  ச்சார் ரஷ்தா“ என்ற அவரது திரைப்படத்தில் ஒரு மாநிலத்தைச் சேர்ந்த கதாநாயகன் இன்னொரு மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துகொள்கிறான். ஒருமைப்பாட்டை திருமண கலாச்சாரம் வழியே பொருத்தி அதை திரைப்படமாக வழங்கிய சாந்தாராம், திரைப்படத்தில் சொன்னதோடு நிறுத்திக்கொள்ளவில்லை; நிஜவாழ்விலும் அதைக் கடைபிடித்தார். ஆம், அவரது மருமகன்களில் ஒருவர் மராத்தி, மற்றொருவர் குஜராத்தி, மூன்றாமவர் அமெரிக்கர்.

1973 ல் ஒரு சினிமா இதழுக்கு பேட்டி அளித்த அவர் பேட்டியில், தனது மருமகன்களைப் பற்றி குறிப்பிட்ட சாந்தாராம், “இந்த காரணங்களுக்காக நீங்கள் என்னை அகில உலக மாமனார் என்று கூட அழைக்கலாம்” என்று முகத்தில் குறும்பு புன்னகையை தவழவிட்டபடிச் சொன்னார்.

கொள்கையை படைப்பாக்கி படைப்பின் வழி நிஜத்தை தன் வாழ்க்கையாக்கிய சாந்தாராம் புகழ் என்றும் நிலைக்கும்

- எஸ்.கிருபாகரன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close