Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘தீபாவளிக்கு வரேன்னு சொன்னீங்களே...?’ - மன்தீப் சிங் குடும்பத்துக்கு பாகிஸ்தானின் 'பரிசு'

ரகாசூரனை அழித்தற்காக நாம் அனைவரும் தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாட ஆயத்தமாகிக் கொண்டிருந்த வேளையில்தான் நம் மகிழ்ச்சியை சீர்குலைக்கும் விதமாக வந்தது அந்த செய்தி! கடந்த 28- 10-2016 அன்று (தீபாவளிக்கு முந்தைய தினம்) இந்திய எல்லையில், நம் நாட்டு வீரரான மன்தீப் சிங்கினை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கண்டந்துண்டமாக வெட்டி வீசிச் சென்றதாக வெளியாகியிருக்கும் இந்தக் கொடூர செய்தி ஒட்டுமொத்த இந்தியர்களின் சந்தோஷத்தையும் துடைத்து எறிந்திருக்கிறது.

தொடரும் ரத்தவெறி கடந்த மாதம் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரியில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 20 ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்த இந்திய ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகள் முகாம்களை அதிரடியாகத் தாக்கி அழித்தனர். இந்தத் தாக்குதலில், 40–க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்தியாவின் இந்தத் தாக்குதலை ஜீரணிக்க முடியாத பாகிஸ்தான் காஷ்மீர் எல்லையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி கடந்த ஒரு மாதமாக பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. பாகிஸ்தானின் இந்தத் தாக்குதலுக்கு இந்தியாவும் அவ்வப்போது தக்கப் பதிலடி கொடுத்து வருகிறது. சில நாட்களுக்கு முன் நடைபெற்ற ஒரு தாக்குதலில் மட்டும் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலர் கொல்லப்பட்டதாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது. ஆனால், தனது தோல்வியை ஒப்புக்கொள்ள மனம் இல்லாத பாகிஸ்தான் ராணுவம் இச்செய்தியை மறுத்ததோடு உள்ளுக்குள் வன்மத்தை வளர்த்துக் கொண்டிருந்தது தற்போதைய சம்பவத்தின் மூலம் வெட்டவெளிச்சமாகியுள்ளது.

பாக். பயங்கரவாதிகள் கோழைகளா?

ஒட்டுமொத்த இந்தியர்களும் தீபாவளியைக் கொண்டாடுவதற்குத் தயாராகிக் கொண்டிருந்த வெள்ளிக்கிழமை இரவு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்துக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவத்தினர் மீது சரமாரியாகத் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் இந்திய ராணுவம் நடத்திய பதிலடித் தாக்குதலில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான். துரதிருஷ்டவசமாக இந்திய வீர்ர் சோபி மன்தீப் சிங் தீவிரவாதிகளின் குண்டுக்குப் பலியானார். ஆனாலும் வன்மம் தீராத பாக். தீவிரவாதிகள் பலியான ராணுவ வீரர் மன்தீப் சிங்கின் உடலை இழுத்துச் சென்று அவரது உடலைத் துண்டு துண்டாக வெட்டி சிதைத்துள்ளனர்.பின்னர் அந்த உடல் பாகங்களை எல்லைப்பகுதியான மேக்கில் (Macchil sector) பகுதியில் வீசிச் சென்றுள்ளனர்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் சைக்கோத்தனமான இந்தக் கொடூர சம்பவம் இந்திய ராணுவத்துக்கு சவால் விடுத்திருப்பதாக அமைந்துள்ளது. மேலும், பண்டிகையைக் கொண்டாடும் இந்தியர்களின் மகிழ்ச்சியை சீர்குலைக்கும் விதத்தில் இந்த சம்பவத்தை அரங்கேற்றியுள்ளதாகத் தெரிகிறது. கோழைத்தனமான சைக்கோ கோமாளியின் செயல்பாடாக ஒரு மாவீரனின் உடலை சிதைத்து இருக்கும் பாகிஸ்தானின் இச்செயலை தலைவர்கள் பலரும் கண்டித்திருக்கிறார்கள்.

தலைவர்கள் கண்டனம்:

உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ’’இதுபோன்ற கோழைத்தனமான செயலுக்காக நமது நாடு ஒருபோதும் தலை வணங்காது. நமது ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள்.’’ எனக் கூறியிருக்கிறார். மத்திய அமைச்சர் வெங்கைய்ய நாயுடு கூறுகையில், ‘’125 கோடி மக்களுடன் இணைந்து, அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட பாடுபடும் ராணுவ வீரர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பாகிஸ்தான் தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதையே உணரவில்லை. இந்த நடவடிக்கை அதனையே மீண்டும் பாதிக்கும். பயங்கரவாதம் என்பது பஸ்மாசுரா அரக்கன் மாதிரி. அதனை ஆதரிக்கும் மக்களையே அது விழுங்கிவிடும்’’ என்றார்.

பிரதமர் அலுவலக இணை அமைச்சர் தேந்திரசிங், ’’இதைவிட மோசமான கோர செயல் வேறு எதுவும் இருக்க முடியாது. தீபாவளிப் பண்டிகையை நாம் கொண்டாடும்போது நமது வீரர்கள் எல்லையில் தொடர் துப்பாக்கிச் சூட்டை எதிர்கொண்டு இருப்பது துரதிருஷ்டவசமானது.’’ எனத் தெரிவித்துள்ளார். இதனிடையே, ’ராணுவ வீரரின் உடலை சிதைத்து வெறியாட்டம் போட்ட பயங்கரவாதிகளின் கொடூர செயலுக்குப் பழி வாங்குவோம்’ என்று ராணுவம் உறுதிபட தெரிவித்துள்ளது.

உதவி என்றால் ஓடி வந்துவிடுவார்!

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மன்தீப் சிங்குக்கு 30 வயது ஆகிறது. திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் அவர் உயிரிழந்திருப்பது மன்தீப் குடும்பத்தாரிடையே மிகப்பெரிய துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மன்தீப்பின் மனைவி பிரிர்னா காவல்துறையில் பணியாற்றுகிறார். மன்தீப்பின் இழப்பினால், மனம் உடைந்து காணப்படுகிறார் அவர். மன்தீப்பின் சொந்த ஊரான அந்தேரி கிராமத்திலும் சோகமே நிலவுகிறது.

அவருடைய வீட்டின் அருகே உள்ளவர்கள் மன்தீப் பற்றிக் கூறுகையில், ’’மன்தீப் எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படுவார். யாரிடமும் அவர் கோபப்பட்டு பார்த்ததில்லை. எல்லையில் போர் முனையில் உள்ள வீரரான அவரால் எப்படி அனைவரிடமும் சிரித்த முகத்தோடு இருக்க முடிகிறது? என்று பலமுறை யோசித்திருக்கிறோம். யாரேனும் உதவி என்று அழைத்துவிட்டால் ஓடி வந்துவிடுவார். பாரபட்சமின்றி கிராம மக்களுக்கு உதவி செய்து உதாரண மனிதராக வாழ்ந்தார் மன்தீப் சிங்’’ என்று கண்கலங்குகின்றனர்.

உயிர் தியாகத்தை ஏற்றுக்கொள்கிறேன்!

மன்தீப் சிங் குடும்பம் திருமணம் முடிந்த இரண்டு ஆண்டுகளுக்குள் மன்தீப் உயிரிழந்திருப்பது, அதுவும் துண்டு துண்டாக கொடூரமான முறையில் வெட்டி வீசியிருப்பது அவருடைய குடும்பத்தினருக்கு தாங்கமுடியாத வலியை ஏற்படுத்தி உள்ளது. அவருடைய தந்தை பேசுகையில், ‘’பாகிஸ்தானுக்கு தக்கப் பதிலடியை இந்திய ராணுவம் கொடுக்க வேண்டும். இந்திய மக்களின் பாதுகாப்புக்காக என் மகன் உயிர்த் தியாகம் செய்துள்ளார். அவனுடைய இந்தத் தியாகத்தை ஏற்றுக்கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார். மன்தீப் சிங்கின் மனைவி, ’’பாகிஸ்தான் தீவிரவாதத்தை வளர்த்துவிட்டு வேடிக்கை பார்க்கிறது. தீவிரவாதிகளிடம் இருந்தே தகுந்த பாடத்தை ஒருநாள் பாகிஸ்தான் கற்றுக்கொள்ளும். இந்த ஒரு சம்பவம் மற்ற இந்திய வீர்ர்களுக்கு பாடம் என்று பாகிஸ்தான் எண்ணுகிறது. இதுபோன்ற வலி மற்ற எந்த இந்தியனுக்கும் நேரக்கூடாது. இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்’’ என்றார் பிரிர்னா.

மன்தீப் சகோதரர் மன்தீப்பின் சகோதரர் சந்தீப் சிங், ‘’என் சகோதரர் வீர மரணம் அடைந்துள்ளார். வீரத்துக்குரிய அவனுடைய தியாகத்தை பாகிஸ்தான் சிதைத்துள்ளது’’ என்று கூறியுள்ளார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்துள்ளார் மன்தீப் சிங். மறுபடியும் தீபாவளிக்கு வருவதாக சொல்லிச் சென்ற அவர், எல்லையில் போர் மேகங்கள் சூழ்ந்த நிலையில் தனது விடுமுறையை ரத்து செய்துவிட்டு கடமையில் கருத்தாக இருந்துள்ளார். ஒரு மாவீரனின் உடலை சிதைத்த தீவிரவாதிகளின் உடல்களும் சிதைக்கப்பட வேண்டும் என்பதே ஒவ்வொரு இந்தியனின் கோபக் குரலாக ஒலிக்கிறது. ’

சிதைந்திருப்பது ஒரு இந்தியனின்… உலக நாடுகள் பாகிஸ்தான் மீது கொண்டிருந்த கொஞ்சநஞ்ச நல்லெண்ணமும்தான்’

 

- கே. புவனேஸ்வரி

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close