Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழ்நாடு : 60 ஆண்டு... 60 நிகழ்வுகள்...!

1956 - சுமார் 200 மக்களை மருதையாற்றங்கரையின் மண்ணில் புதைத்த அரியலூர் ரயில் விபத்து.தமிழக வரலாற்றில் மிகப்பெரும் ரயில் விபத்துகளில் ஒன்றாக இன்றளவும் கருதப்படுகிறது.

1957- தமிழகத்தின் முதல் பெண் அமைச்சராகக் காமராசர் அமைச்சரவையில் லூர்தம்மாள் சைமன் பொறுப்பேற்றார். உள்ளாட்சி இலாகா அவருக்கு ஒதுக்கப்பட்டது.

1958 - தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டம் காமராசர் ஆட்சியில் அமலுக்கு வந்தது. அதன்படி இரண்டடுக்கு கொண்ட உள்ளாட்சி கூட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.

1959- தத்துவங்களையும், அரசியலையும் தமிழ் சினிமாவில் தன் பாடல்வரிகளின் வழியாகப் பேசிய பட்டுக்கோட்டை கலியானசுந்தரனார் தனது 29 வயதில் மறைந்தார்.

1960- தமிழக நில உச்சவரம்புச் சட்டம் அமலுக்கு வந்தது.

1962- கல்வி அறிவு தமிழகத்தில் மிகக் குறைவாக இருந்த காலகட்டத்தில் பிள்ளைகளை பள்ளிக்கூடத்துக்கு வரவைத்த ‘மதிய உணவுத் திட்டம்’ காமராசரால் அமல்படுத்தப்பட்டது.

1963- இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழகத்தில் தொடர்ந்து நிலவி வந்த நிலையில். ஆங்கிலமே இந்திய ஆட்சி மொழியாகத் தொடர்ந்து நீடிக்கும் என அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவால் ஆட்சிமொழிச் சட்டம்1963ல் அறிவிக்கப்பட்டது.

1965- தமிழ்நாடு தவிர்த்து முதல்முறையாக வேற்றுநாடான சிங்கப்பூரில் தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது. ராசரத்தினம் என்பவர் சுதந்திர சிங்கப்பூரின் முதல் தமிழ் அமைச்சராகப் பொறுப்பேற்றார். 

பிற்காலத்தில் அதிமுகவை வழிநடத்திய தலைவர்களான எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் முதன்முதலாக இணைந்து நடித்து வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் வெளியானது.

1966- ஏ.பி.ஜே அப்துல் கலாம் சுஜாதா உள்ளிட்டவர்களை மாணவர்களாகப் பெற்ற சென்னை தொழில்நுட்ப நிறுவனம் (MIT, Chromepet) நிறுவப்பட்டது 

1967- எம்.ஜி.ஆரின் வீட்டுக்குத் தயாரிப்பாளர் வாசுவுடன் சென்ற நடிகர் எம்.ஆர்.ராதா அவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயன்றார். 

1968- கீழ்வெண்மணி வன்முறைச் சம்பவம் நடந்தது, அதில் நூற்றுக்கணக்கான தலித் பெண்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1969- மெட்ராஸ் மாநிலம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் பெற்றது. அப்போதைய தமிழக முதல்வராக இருந்த அண்ணாதுரை இதனை அறிவித்தார். ஆனால் அதே வருடம் அண்ணாதுரை மறைந்தார். அவரையடுத்து கருணாநிதி தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார்.

1971- மதுவிலக்கின் மீதான தடையை திரும்பப் பெறுவதாக அப்போதைய கருணாநிதி அரசு அறிவித்தது.

1972- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகமும், பொதுத்துறை நிறுவனமான சிப்காட்-ம் தொடங்கப்பட்டது

1973- தமிழக நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் ஆதர்ச கார் ரகமான ’ப்ரீமியர் பத்மினி’, அந்தப் பெயரில் தனது உருவாக்கத்தைத் தொடங்கியது. 

திராவிடர் கழகத்தின் நிறுவனர், தந்தை ஈ.வே.ரா பெரியார் மறைந்தார்.

1974 - தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவு அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியால் சிரிமாவோ பண்டாரநாயகே தலைமையிலான இலங்கைநாட்டு அரசிடம் நட்புறவு அடிப்படையில் தரப்பட்டது.

1975- பிரதமர் இந்திராகாந்தியால் எமர்ஜன்சி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. தமிழகம் இதற்கு எதிராகக் குரல்கொடுத்ததை அடுத்து அரசியல் தலைவர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

1976- தமிழகத்தில் முதன்முறையாக குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது. கருணாநிதி தலைமையிலான ஆட்சி கலைக்கப்பட்டது.

1977 - சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க தோல்வியடைந்தது. அ.தி.மு.க பெரும் வெற்றி பெற்றதை அடுத்து எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனார். 

1978 - மேல்நிலை கல்வி (10 +2) அறிமுகப்படுத்தப்பட்டது.

1980 - கண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.

1981 - ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் ஆடம்பர வசதிகள் மீதான வரி சட்டம் அமலுக்கு வந்தது.

1982 - பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் என்பது ஊட்டசத்து உணவு திட்டமாக மாற்றப்பட்டு, அறிமுகப்படுத்தப்பட்டது.

1983 - தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம், எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக அரசாங்கத்தால் தமிழகத்தில் மதுவகைகளின் மொத்த விற்பனைக்காக தொடங்கப்பட்டது.

1984 - எம்.ஜி.ஆருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அப்போலோவில் சிகிச்சை பெற்ற அவர், பின்னர் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

1985 - பிஎஸ் முத்துராமன் இயக்கத்தில் 100-வது படமான 'ஶ்ரீராகவேந்திரா' திரைப்படத்தில் ரஜினி நடித்தார்.

இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் எட்டாம் வகுப்பு வரை நீட்டிக்கப்பட்டது.

1986 - முதன்முதலில் தமிழகத்தில் ஒரு நபருக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

1987 - எம்.ஜி.ஆர். டிசம்பர் மாதம் மரணமடைந்தார்.

1988 - டாக்டர் எம்.ஜி.ஆர்-க்கு அவரது மறைவுக்கு பிந்தைய பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

பிரதமர் ராஜிவ் காந்தி மற்றும் சோவியத் ஜனாதிபதி மிகைல் கோர்பச்சேவ் ஆகியோர் கூடங்குளம் அணு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

1989 - சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க 13 வருடங்களுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்தது. 

1990 -தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டது.

1991 - ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்

தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றார். 

1992 - பெண்கள் பாதுகாப்புகாக தமிழகத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் தோற்றுவிக்கப்பட்டது.

1993-தி.மு.க-வில் இருந்து வெளியே வந்து வைகோ ‘மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கினார். 

1994 - குற்றாலீஸ்வரன் என்ற தமிழக மாணவன் பாக் ஜலசந்தி முதல் இத்தாலியின் மெஸ்ஸின்னா ஜலசந்தி வரை நீந்தி உலக சாதனைப் படைத்தார்

1995-ஜெயலலிதா அரசு மீது பரபரப்பான குற்றசாட்டுகளைக் கூறிய சுப்ரமணியம் சுவாமி, மற்றும் கவர்னர் சென்னா ரெட்டி ஆகியோருக்கு எதிராக தாக்குதல்கள் நடைபெற்றன. 

1996 - ஜூலை 17-கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சியில், 'மெட்ராஸ்' 'சென்னை' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

1997- ஜெயலலிதா மற்றும் அமைச்சர்களுக்கு எதிரான 47 வழக்குகளை விசாரிக்க 3 சிறப்பு நீதிமன்றங்களை தி.மு.க அரசு அமைத்தது. 

1998- கோவை குண்டு வெடிப்பு, 58 பேர் உயிரிழப்பு

1999 - நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் தி.மு.க கூட்டணி 26 தொகுதிகளிலும், அ.தி.மு.க கூட்டணி 13 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. 

2000- கன்னட நடிகர் ராஜ்குமாரை சந்தன கடத்தல் மன்னன் வீரப்பன் கடத்தினார். 

2001- சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி 196 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தி.மு.க கூட்டணி 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 

2002- தமிழகத்தைச் சேர்ந்த அப்துல் கலாம் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றார். 

2003- டாஸ்மாக் நிறுவனம் மூலம் மதுபான சில்லரை விற்பனை தொடங்க சட்டத்திருத்தம் 

2004- சென்னை, கடலூர் உள்ளிட்ட தமிழக கடலோரப் பகுதிகளில் சுனாமி அலைகள் தாக்கிய தினம்...

2005- தே.மு.தி.க கட்சியை விஜயகாந்த் தொடங்கினார். 

2006- தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. அ.தி.மு.க 69 இடங்களைப் பிடித்தது. 

2007- மு.க.ஸ்டாலின் செல்வாக்கு குறித்த சர்வே வெளியானதால், மு.க அழகிரி ஆதரவாளர்களால் மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்டது. 

2008- சென்னையில் கடும் மழை பெய்ததால் நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாயின. 

2009- நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி 18  இடங்களைப் பிடித்தது. அ.தி.மு.க கூட்டணி 9  இடங்களைப் பிடித்தது. 

2010- 2 ஜி விவகாரம் தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஆ.ராசா ராஜினாமா செய்தார். 

2011- தமிழக சட்டமன்றத் தேர்தலில் 203 இடங்களைப் பிடித்து அ.தி.மு.க வெற்றி பெற்றது. தி.மு.க 31 இடங்களைப் பிடித்தது. 

2012- தமிழ்நாட்டில் கடுமையான மின் வெட்டு அமலில் இருந்தது. சென்னையில் தினமும் 2 மணி நேரமும், மாவட்டங்களில் 12 மணி நேரம் முதல் 14 மணி நேரம் வரையும் மின் வெட்டு அமலில் இருந்தது. 

2013- தர்மபுரியில் ரயில் பாதையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த இளவரசன் ஆணவக் கொலை செய்யப்பட்டதாக பரபரப்பு எழுந்தது. 

2014- சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா தண்டனை பெற்றதை அடுத்து முதல்வர் பதவியை இழந்தார். 

2015- பெரும் மழை வெள்ளத்தால், சென்னை நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. 

2016- சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

- கே.பாலசுப்பிரமணி, ஐஸ்வர்யா,நந்தினி சுப்பிரமணி

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close