Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘அப்போலோவில் அனுமதி மறுக்கப்பட்ட ஜெயலலிதா’ : மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 15

இந்தத் தொடரின் முந்தைய பகுதிகளைப் படிக்க கீழுள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்

பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 | பகுதி 5 | பகுதி 6 | பகுதி 7 | பகுதி 8 | பகுதி 9| பகுதி 10 | பகுதி 11 | பகுதி 12 | பகுதி 13 | பகுதி 14 |பகுதி 15 | பகுதி 16 | பகுதி 17 | பகுதி 18 | பகுதி 19 | பகுதி 20 | பகுதி 21 | பகுதி 22 | பகுதி 23 | பகுதி 24 | பகுதி 25 | பகுதி 26 | பகுதி 27 | பகுதி 28 | பகுதி 29 | பகுதி 30 | பகுதி 31 | பகுதி 32 | பகுதி 33 | பகுதி 34 | பகுதி 35 | பகுதி 36 


னிமை பேரழகு கொண்டதுதான். அந்தச் சமயத்தில் அமைதியை உள்வாங்கி நமக்குள் படரவிடலாம்; நல்ல இசையைக் கேட்கலாம்; பிடித்தவற்றைப் படிக்கலாம். ஆனால், அதே தனிமை, பசியுள்ள ஓர் ஓநாயாக உங்களைத் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தால்... எப்படி இருக்கும்? எத்தனை நாட்கள்தான் தனிமையின் கரம்பிடித்து நடக்க முடியும்? தனிமை நம்மைச் சிதைக்கும்தானே... உடலின் ஒவ்வொரு செல்லும் துடித்துப்போகும்தானே?  தனிமையைக்கூட சகித்துக்கொள்ளலாம். ஆனால், தனிமையிலிருந்து உங்களை மீட்கிறோம் என்று வரும் ரட்சகர்களும் ஏமாற்றினால்... முற்றாக உடைந்து போவோம்தானே? அதுதான் நிகழ்ந்தது ஜெயலலிதாவுக்கு...

அவரே சொல்கிறார்,

“என்னை முன்னேற்றப் பாதையில் நடத்திச் செல்லவும், எல்லாக் கஷ்டக்காலங்களிலும் எனக்குத் துணையாக நின்று ஊக்குவித்து உதவி செய்யவும், என் தாயைப்போல் யாரும் இல்லாவிட்டாலும், உறவினர் என்ற முறையில் ஒரு சிலர் இருந்தார்கள். அவர்களிடம் மனம் ஆறுதல் பெற்று என் கவலையையும் இழப்பையும் மறந்து கலையுலகில் பயணம் செய்ய முயன்றேன். ஆனால், எண்ணியபடி முடியவில்லை. ஏற்கெனவே மன நிம்மதியை இழந்திருந்த எனக்கு மற்றொரு பேரிடி. நம்பியிருந்த அந்த உறவினர்கள் என்னை நன்றாக ஏமாற்றிவிட்டார்கள்.  நான் மிகவும் குழம்பிப் போனேன். பகவானே! யாரை நம்புவது... எப்படி நம்புவது?” - இது அவர் 1979-ம் ஆண்டு பகிர்ந்தது. இந்தச் சமயத்தில் மனதளவில் அவர் உருக்குலைந்துதான் போய் இருந்தார். அதனால்தான், அவரே முற்றாக உடைந்துபோன எம்.ஜி.ஆருடனான நட்பைப் புதுப்பித்தார்.

அந்தக் காலகட்டத்தில் அவருக்கு சினிமாவிலும் வாய்ப்புகள் குறைந்துகொண்டே வந்தன. அடுத்து அவர் என்ன செய்வதென்று யோசித்தபோதுதான், அவருக்கு விருப்பமான தேர்வாக இருந்தது அரசியல். அக்டோபர் 17, 1972-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அ.தி.மு.க-வில் ஏறத்தாழ 10 ஆண்டுகள் கழித்து ஜூன் 4, 1982-ம் ஆண்டு, கடலூரில் நடந்த கோலாகலமான விழாவில், ஒரு ரூபாய் உறுப்பினர் கட்டணம் செலுத்தி இணைந்தார். அந்த மாநாட்டில் அவருக்கு யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. கடலூர் வீதியெங்கும் அவர் ஊர்வலமாகத் தேரில் அழைத்துச் செல்லப்பட்டார். ஏற்கெனவே, அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல அறிமுகம் உண்டு. அதுவும் இல்லாமல், இப்போது அவரை எம்.ஜி.ஆர் வேறு முதன்மைப்படுத்துகிறார். கேட்கவா வேண்டும்? அ.தி.மு.க-வின் அனைத்து முக்கியத் தலைவர்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டுக் கட்சியில் இணைந்த முதல் நாளே முன்னணித் தலைவர் ஆனார்.

செய்வீர்களா... செய்வீர்களா?

எம்.ஜி.ஆர் இவருக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்தார். ஜெயலலிதாவை சத்துணவுத் திட்டக்குழு உறுப்பினர் ஆக்கினார். தான் கலந்துகொள்ள முடியாத அனைத்துக் கூட்டங்களிலும் இவரைப் பங்கேற்கச் செய்தார். இவருக்கு முக்கியத்துவம் கொடுத்ததற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. ஆம், அப்போது முதல்வராகப் பதவியில் இருந்த எம்.ஜி.ஆரை, கருணாநிதி பொதுக் கூட்டங்களில் கடுமையாகத் தாக்கிப் பேசிக்கொண்டிருந்தார். அ.தி.மு.க-வில் அந்தச் சமயத்தில் எத்தனையோ மூத்த தலைவர்கள் இருந்தாலும், கூட்டத்தை வசீகரிக்கக்கூடிய அளவுக்கு கரிஷ்மா நிரம்பிய தலைவர்கள் இல்லை. அதனால், ஜெயலலிதாவை பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தார். ஜெயலலிதாவும் இந்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டார். இவர் பேசும் இடங்களில் எல்லாம் கூட்டம் அலைமோதத் தொடங்கியது.

சென்னையில், மயிலை மாங்கொல்லையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில், அப்போது நிலவிவந்த குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்கத் தமிழக அரசு எத்தகைய நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டு வருகிறது என்பது குறித்து விரிவாகப் பேசினார். அந்தக் கூட்டத்தை ஒரு வார இதழ் இவ்வாறாகப் பதிவு செய்திருக்கிறது,  “குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்கத் தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதை எடுத்துக்காட்ட, அவர் எடுத்தப் போட்ட புள்ளி விவரங்களும், கணக்குகளும்... அடேயப்பா...! சத்துணவுத் திட்டக்குழுவின் உறுப்பினரான அவர் கொடுத்த புள்ளிவிவரங்களை, காவல் துறையைச் சேர்ந்த சிலரே ஜீப்பில் அமர்ந்துகொண்டு குறிப்பு எடுத்துக்கொண்டார்கள்...!” என்று சிலாகித்து எழுதி இருக்கிறது.

தேர்தல் சமயத்தில் அவர் உரையாற்றும் போதெல்லாம்... ‘செய்வீர்களா... செய்வீர்களா...’ என்று மக்களுடன் கேள்வி கேட்டு பதில் வாங்கி உரையை முடிக்கிறார் அல்லவா...? இந்தப் பாணியைத்தான், அவர் தொடக்கக் காலத்திலிருந்தே கடைப்பிடித்து வருகிறார். அப்போது நடந்த கூட்டங்களில், “நீங்கள் கருணாநிதியின் தீங்கிழைக்கும் பேச்சை நம்புகிறீர்களா...? அவர் சொல்வதை எல்லாம் ஆமோதிக்கிறீர்களா...?” என்று மக்கள் முன் கேள்வியை வைத்துப் பேசி இருக்கிறார். இந்தப் பாணி அவருக்கு நன்கு கை கொடுத்திருக்கிறது.

நடிகை என்ற பிம்பத்தைத் தாண்டி, ஓர் அரசியல் தலைவராக மக்கள் மனதில் பதியத் தொடங்கினார். கொள்கை பரப்புச் செயலாளர், ராஜ்ய சபா எம்.பி என அவருடைய வளர்ச்சி நாளுக்கு நாள் மேலே போகத் தொடங்கியது. கட்சியின் இரண்டாம்கட்ட தலைவர்களுக்கும் இவரைச் சாதாரணமாக எடுத்துக் ொள்ள முடியாது என்று புரியத் தொடங்கியது. எப்படியாவது அவரை வீழ்த்த வேண்டும் என்று காய் நகர்த்தியபோதுதான், நாம் முந்தைய அத்தியாயத்தில் பார்த்த அந்த டெல்லி சம்பவம் நடக்கிறது. ஜெயலலிதாவைப் பற்றி பக்கம் பக்கமாக புகார் வாசிக்கத் தொடங்குகிறார்கள். மீண்டும் எம்.ஜி.ஆருக்கும் - ஜெயலலிதாவுக்கும் இடையே முரண்கள் முளைக்கத் தொடங்குகின்றன.

இதே காலகட்டத்தில், அதாவது அக்டோபர் 5, 1984-ம் நாள், எம்.ஜி.ஆருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. அப்போலோவில் அனுமதிக்கப்படுகிறார்.

 

அனுமதி மறுக்கப்பட்ட ஜெ.!

ஜெயலலிதாவையும், எம்.ஜி.ஆரையும் பிரிக்க வேண்டும் என்று நினைத்த தலைவர்களுக்கு இந்தச் சம்பவம் வசதியாக அமைகிறது. ஜெயலலிதா அப்போலோவுக்குள் வர அனுமதி மறுக்கிறார்கள். அவர் அப்போலோவுக்குள் வந்தால், அவரைத் தாக்கவும் திட்டமிடுகிறார்கள். அப்போது அப்போலோ தலைமை மருத்துவராக இருந்த பி.சி. ரெட்டியிடம், “ப்ளீஸ்... டாக்டர். அவர் தூங்கும் போதாவது ஓரிரு நிமிடங்கள் பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன்” என்று மன்றாடியதாக அவரே பின்னொரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.

இதற்கு மத்தியில் அக்டோபர் 16-ம் தேதி, இந்திரா காந்தி சென்னை வந்து மருத்துவமனையில் எம்.ஜி.ஆரைப் பார்த்துச் செல்கிறார். அடுத்த நாள் அக்டோபர் 17-ம் தேதி, இந்திரா காந்திக்கு ஒரு கடிதத்தை எழுதுகிறார் ஜெயலலிதா. அதில், “அம்மா! நீங்கள் சென்னைக்கு வருகிறீர்கள் என்று ஒரு வார்த்தை எனக்குச் சொல்லி இருந்தால், நான் விமான நிலையத்துக்கே ஓடோடி வந்திருப்பேனே! என்னிடம் யாருமே சொல்லவில்லையே!  என் தலைவரைப் பார்க்க நீங்கள்தான் அம்மா ஒரு வழி செய்ய வேண்டும். நான் வேறு யார் உதவியை நாட முடியும்...? என் அன்னையாகிய உங்களைத் தவிர, இந்தச் சோதனையான நேரத்தில் எனக்கு உதவிட வேறு யாருமில்லை அம்மா...!” என்று எழுதுகிறார். இரண்டு நாட்கள் கழித்து டெல்லியிலிருந்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆர்.கே.தவானும், ஜி.பார்த்தசாரதியும் ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் கூறுகிறார்கள்.

 

 

“அம்மா (இந்திரா காந்தி) சென்னைக்கு வருவது குறித்து திடீரென முடிவு எடுக்கப்பட்டதால் யாருக்குமே தெரிவிக்கவில்லை. உங்களுக்குச் சொல்லவில்லையே என்று தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாமென்று அம்மா சொல்லச் சொன்னார்கள். முதல்வரை (எம்.ஜி.ஆர்) பார்ப்பது குறித்து டாக்டர் சொல்படி நடந்துகொள்வது நல்லதென்று அம்மா சொன்னார்கள்.” என்று தவானும், பார்த்தசாரதியும் கூறியதாக ஜெயலலிதா ஒரு கட்டுரையில் எழுதி இருக்கிறார்.

சில தினங்களில், எம்.ஜி.ஆர் அமெரிக்கா புரூக்லின் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

(தொடரும்)

- மு. நியாஸ் அகமது   

இந்த தொடரின் அடுத்த பகுதியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

இந்தத் தொடரின் முந்தைய பகுதிகளைப் படிக்க கீழுள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்

பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 | பகுதி 5 | பகுதி 6 | பகுதி 7 | பகுதி 8 | பகுதி 9| பகுதி 10 | பகுதி 11 | பகுதி 12 | பகுதி 13 | பகுதி 14 |பகுதி 15 | பகுதி 16 | பகுதி 17 | பகுதி 18 | பகுதி 19 | பகுதி 20 | பகுதி 21 | பகுதி 22 | பகுதி 23 | பகுதி 24 | பகுதி 25 | பகுதி 26 | பகுதி 27 | பகுதி 28 | பகுதி 29 | பகுதி 30 | பகுதி 31 | பகுதி 32 | பகுதி 33 | பகுதி 34 | பகுதி 35 | பகுதி 36 

 

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ