Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அங்கே ஆதரவு... இங்கே எதிர்ப்பு... இடைத்தேர்தல் கூட்டணி கலாட்டா !


"கன்னியாகுமரியில் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து விட்டு, சில கிலோமீட்டர் கேரளாவுக்குள் சென்று காங்கிரஸை எதிர்ப்பார்கள்" என கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது நீண்ட காலமாய் ஒரு விமர்சனம் உண்டு. கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது இந்த விமர்சனத்தை முன்வைக்கும் முக்கிய கட்சியாக பி.ஜே.பி. இருந்தது. இப்போது அதே விமர்சனம் பி.ஜே.பி.யை நோக்கி நீண்டிருக்கிறது. கூடவே விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இதே சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.  இருகட்சிகளின் இடைத்தேர்தல் ஆதரவு அறிவிப்புகள் சர்ச்சையை கிளப்ப... தமிழகத்தில் கூட்டணி கலாட்டாவை துவக்கி வைத்திருக்கிறது இந்த இடைத்தேர்தல்.

அங்கே ஆதரவு... இங்கே எதிர்ப்பு

தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்று எனச்சொல்லும் பி.ஜே.பி., தமிழகத்தில் நடக்கும் 3 தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., அ.தி.மு.க.வை எதிர்த்து தனித்து போட்டியிடுகிறது. அதே நேரத்தில் புதுவை மாநிலம், நெல்லித்தோப்பு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது பி.ஜே.பி. தமிழகத்தில் அ.தி.மு.க.வை எதிர்த்தும், புதுவையில் அதே அ.தி.மு.க.வை ஆதரித்தும் பிரச்சாரம் செய்யப்போகிறது பி.ஜே.பி. இது முதல் குழப்பம்.

இரண்டாவது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முடிவு. தமிழகத்தில் 3 தொகுதிக்கான இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக விடுதலை சிறுத்தைகள் அங்கம் வகிக்கும் மக்கள் நலக்கூட்டணி அறிவித்திருக்கிறது. நாங்கள் தி.மு.க., அ.தி.மு.க. காங்கிரஸ், பி.ஜே.பி., பா.ம.க. கட்சிகளோடு அணி சேரப்போவதில்லை என அறிவித்தே அணியை துவக்கியது மக்கள் நலக்கூட்டணி. ஆனால் புதுவை, நெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரிப்பதாக அறிவித்ததன் மூலம் சர்ச்சையை கிளப்பியுள்ளது விடுதலை சிறுத்தைகள். புதுவையில் தி.மு.க. ஆதரிக்கும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்கும் விடுதலை சிறுத்தைகள், தமிழகத்தில் காங்கிரஸ் ஆதரிக்கும் தி.மு.க. வேட்பாளரை எதிர்க்கும். இது இரண்டாவது குழப்பம். அங்கே ஆதரவு. இங்கே எதிர்ப்பு என்ன நடக்கிறது தமிழக அரசியல் களத்தில்...

காரணம் இது தான்...

புதுவையில் நடக்கும் இடைத்தேர்தல் மிக முக்கியமான தேர்தல். தற்போது புதுவையின் முதல்வராக இருக்கும் நாராயணசாமி முதல்வர் பதவியை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள முடியுமா? இல்லையா? என்பதை தீர்மானிக்கிற தேர்தல் இது. தேர்தல் வெற்றியை குறிவைத்து நெல்லித்தோப்பு எம்.எல்.ஏ.வை ராஜினாமா செய்ய வைத்து அந்த தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கிறார் நாராயணசாமி. இந்த தேர்தல் நாராயணசாமிக்கும், காங்கிரசுக்கும் மிக முக்கியமான தேர்தல்.

இவரை எதிர்த்து அ.தி.மு.க. தனது வேட்பாளரை களமிறக்கியுள்ளது. தமிழகத்தில் தனித்து தேர்தலை சந்திக்கும் பி.ஜே.பி., புதுவை, நெல்லித்தோப்பு தொகுதியில், தனது கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு கொடுத்துள்ளது பாரதிய ஜனதாவும், கூட்டணி கட்சியான என்.ஆர். காங்கிரசும்.
தமிழகத்தில் தேர்தலை புறக்கணித்த விடுதலை சிறுத்தைகள், இங்கும் தேர்தலை புறக்கணிக்கும். யாருக்கும் ஆதரவளிக்காது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கூட்டணி நெருக்கடிகளை எல்லாம் மீறி, காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது. இந்த இரு முடிவுகளுக்கு பின்னால், புதுவை இடைத்தேர்தலின் முக்கியத்துவம் இருக்கிறது என்பதை மறுத்து விட முடியாது.

நீண்ட கால கேள்விக்கு விடை கொடுத்ததா பி.ஜே.பி.?

அ.தி.மு.க.வுக்கு ஆதரவு என்பதன் மூலம் நீண்ட கால கேள்விக்கு பி.ஜே.பி. பதில் சொல்லி இருக்கிறது. 'அ.தி.மு.க.வும், பி.ஜே.பி.யும். ஒரே கொள்கைகளை கண்ட கட்சி, இருவருக்கும் எந்த கொள்கை வேறுபாடும் கிடையாது. அவர்கள் ஓரணியில் தேர்தலை சந்திப்பார்கள்' என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொரு தேர்தலிலும் எழும். அதை புதுவை மாநிலம், நெல்லித்தோப்பு இடைத்தேர்தல் மூலம் நிஜமாக்கி இருக்கிறது பி.ஜே.பி.

அதேநேரத்தில் தமிழகத்தில் அ.தி.மு.க.வை எதிர்த்து, பி.ஜே.பி. வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது தான் சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. ஒரு இடத்தில் அ.தி.மு.க.வை ஆதரித்தும், இன்னுமொரு இடத்தில் அ.தி.மு.க.வை எதிர்த்தும் பிரச்சாரம் செய்வது சரியானது தானா எனக்கேட்டால், 'அது புதுவை மாநில பி.ஜே.பி.யின் முடிவு. இரண்டையும் போட்டுக்குழப்பிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை' என்று சொல்லி ஒதுங்கிகொண்டனர் தமிழக பி.ஜே.பி.யினர். ஆனால் ஒரு தேசிய கட்சி மாநிலத்துக்கு ஒரு முடிவு என சொல்வதை அவ்வளவு சாதரணமாக ஏற்க இயலாது.

விதி மீறுகிறதா விடுதலை சிறுத்தைகள்?

மக்கள் நலக்கூட்டணி அமைக்கப்பட்ட போது, இந்த கூட்டணியில் தி.மு.க., அ.தி.மு.க., பி.ஜே.பி., காங்கிரஸ், பா.ம.க. கட்சிகளுக்கு இடமில்லை என அறிவிக்கப்பட்டது. அப்படியே இயங்கியும் வருகிறது. இந்நிலையில் புதுவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்ததன் மூலம் இதை மீறி இருக்கிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி.

தமிழகத்தில் தி.மு.க. அனைத்துக்கட்சிக்கூட்டத்தை கூட்டிய போது, "தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தி.மு.க. கூட்டும் அனைத்துக்கட்சிக்கூட்டத்துக்கு போனால் அதற்கு வேறு வித பொருள் கொள்ளப்படும்' என கூட்டணி கட்சிகள் நினைப்பதால் பங்கெடுக்கவில்லை" எனச்சொன்ன விடுதலை சிறுத்தைகள், இப்போது கூட்டணி எடுத்த நிலைப்பாடுக்கு மாற்றாக காங்கிரஸை ஆதரித்தது ஏன் என்பது தெரியவில்லை.

"இது தமிழகத்தின் தேர்தல் களம் அல்ல. மதசார்பின்மையை காப்பாற்ற எடுக்கப்பட்ட முடிவு. ஆனால் நாங்கள் எடுத்த முடிவை அறிவிக்க வேண்டாம் என கூட்டணியில் உள்ள கட்சிகள் யாரும் தடுக்கவில்லை. அனைத்துக்கட்சிக்கூட்டத்துக்கு போக வேண்டாம் என சொன்னதால் அதை செய்தோம். இதை அறிவிக்க வேண்டாம் என சொல்லி இருந்தால் அதை பரிசீலித்திருப்போம்," என விடுதலை சிறுத்தைகள் தரப்பில் சொல்லப்படுகிறது.

குழப்பத்தில் மக்கள் நலக்கூட்டணி

காவிரி பிரச்னைக்காக அனைத்துக்கட்சிக்கூட்டத்தை தமிழக அரசு கூட்டவில்லை என்றால், எதிர்கட்சியான தி.மு.க. கூட்ட வேண்டும் என அழைப்பு விடுத்தவர் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன். தி.மு.க. அனைத்துக்கட்சிக்கூட்டம் கூட்டி அழைப்பு விடுத்த போது, கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோவுடன் பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தார் திருமாவளவன். ஆனால் அது பலனளிக்கவில்லை. 'தேர்தல் தேதி அறிவித்திருக்கும் நேரத்தில் அனைத்துக்கட்சிக்கூட்டத்துக்கு போவது சரியானது அல்ல' எனச்சொல்லி அந்த முடிவை மாற்றி விட்டார் வைகோ.

ஆனால் இந்த முறை அதுபோன்ற எந்த முயற்சியையும் வைகோவோ, கம்யூனிஸ்ட் தலைவர்களோ முன்னெடுக்கவில்லை. அதே நேரத்தில் விடுதலை சிறுத்தைகள் எடுத்த முடிவை கூட்டணியில் உள்ள ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரிக்கவும் இல்லை. இந்த விவகாரத்தில் கருத்து வேறுபாடு இருப்பதை வெளிப்படையாக காட்டிக்கொண்டது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்.

மக்கள் நலக்கூட்டணியில் ஆரம்பம் முதலே குழப்பம் நீடித்தது. முதலில் இடைத்தேர்தலில் போட்டியிடுவது. இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சொன்னபோது, அது ஏற்கப்படவில்லை. தேர்தலை புறக்கணிக்கிறோம் என அறிவித்தார் மக்கள் நலக்கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ. இரண்டாவது அனைத்துக்கட்சிக்கூட்டத்தில் பங்கேற்கலாம் என திருமாவளவன் சொன்னபோதும் அதை வைகோ மறுத்தார். மூன்றவதாக இப்போது ம.தி.மு.க. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு விருப்பம் இல்லாத, காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாடை எடுத்துள்ளது விடுதலை சிறுத்தைகள்.

"எங்களுக்குள் வேறுபாடு இருக்கிறது. இல்லை என சொல்லி விட முடியாது. ஆனால் அவை சரி செய்து கொள்ளும் பிரச்னைகள் தான். மக்கள் நலக்கூட்டணி தொடர்ந்து நீடிக்கும். அதில் எந்த சிக்கலும் இருக்காது," என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி ஒருவர்.

கூட்டணி மாற்றத்துக்கான நகர்வுகள் நடக்கத்துவங்கி இருக்கிறது. தமிழக அரசியலில் இனி வரும் நாட்கள் சுவாரஸ்யமானவைகளாக இருக்க கூடும்.


- ச.ஜெ.ரவி,

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ