Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தனிமனிதனுக்கு எவ்வளவு உரிமைகள் இருக்கின்றன தெரியுமா...? #WorldCitizenDay


 ர்வதேச குடிமகன்கள் தினம் நவம்பர் 4 - ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. குடிமகன்களுக்கான அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்த சட்டங்கள் வரையறுக்கப்பட்டிருந்தாலும், அந்த உரிமைகள் எல்லா மனிதனுக்கும் சமமாக வழங்கப்படுவதில்லை. ஆனால், இயற்கையானது இங்கு வாழும் எல்லா மனிதர்களுக்கும் சமமாகத்தான் தன்னை வழங்குகிறது.

இந்திய குடிமகனின் அடிப்படை உரிமைகள் என்ன ?

article -14 எந்த மாநிலத்தில் வாழ்கின்ற மனிதர்களுக்கும் அந்த அந்த மாநிலத்தில் எங்கு வேண்டுமானாலும் வாழ்வதற்கு சம உரிமை உள்ளது. தனி மனிதர்களின் உரிமையைப் பறிக்கும் அதிகாரம் எந்த அரசுக்கும் கிடையாது .

article -15 சாதி, மதம்,மொழி, பாலினம் போன்றவற்றை காரணம் காட்டி ,குறிப்பிட்ட பகுதியில்தான் வசிக்கவேண்டும், குறிப்பிட்ட இடத்துக்குச் செல்லக்கூடாது என்பது உள்பட எந்தக் கட்டுபாடுகளும் விதிக்க முடியாது.

article -16 அரசுப் பணியைப் பெற எந்த சாதி, மதம், மொழி, பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றைக் காரணம் காட்டி மறுக்க முடியாது. அதேபோன்று இந்த நாட்டில் வாழ்கிற அனைத்துக் குடிமகன்களுக்கும் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் அரசுப் பணிகளோ அல்லது சேவையையோ பெறுவதற்கு முழு அதிகாரம் உள்ளது.

article -17 அனைத்துத் தரப்பு மக்களுக்கும் மத வழிபாட்டு உரிமை உள்ளது. தாங்கள் விரும்பும் மத வழிபாடுகளைச் சுதந்திரமாகச் செயல்படுத்த உரிமை உள்ளது. எந்தவித அடிப்படைக் காரணங்களைக் காட்டியும் அதனைத் தடுக்க முடியாது.

article -18 பல்வேறு துறையிலும் சாதனை படைத்தவர்களுக்கு அரசு விருது வழங்கிக் கவுரவித்து வருகிறது. அரசியலமைப்புச் சட்டத்தில் இந்திய ராணுவம் மற்றும் கல்வியில் சாதனை படைத்தவர்களுக்கு மட்டுமே விருது வழங்கி கவுரவிக்க வேண்டும்.

article -19  ஒரு குடிமகனின் மிக முக்கிய உரிமைகளில் ஒன்றாக பேச்சு மற்றும் கருத்து உரிமைக்கான சுதந்திரம் கருதப்படுகிறது . நமது அரசியலமைப்புச் சட்டம் 19-வது பிரிவின் கீழ்கண்ட சுதந்திர உரிமைகள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

பேச்சு சுதந்திரம் ( பத்திரிக்கை சுதந்திரம் ) , அமைதியாக மற்றும் சரியான நோக்கத்தில் கூட்டம் நடத்தும் உரிமை, சங்கம், அமைப்புகள் தொடங்கும் உரிமை, இந்தியதேசம் முழுவதும் சுற்று பயணம் செய்யும் உரிமை, இந்தியாவின் எந்தப் பகுதியிலும் சுதந்திரமாக வாழும் உரிமை, சுதந்திர நாட்டின் மேன்மையைப் போற்றவும், நீதி, நேர்மை, மக்களாட்சித் தத்துவத்தை நிலை நாட்டவும், பொது வாழ்வில் தூய்மை, நம்பகத்தன்மையைக் காக்கவும் , இத்தகையை உரிமை தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்கள் உள்பட அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

article - 20 தனிநபர் யாராக இருந்தாலும், அரசாங்கத்தால் இயற்றி செயல்படுத்தி வரும் சட்டத்தை மீறி குற்றச்செயலில் ஈடுபட்டால், அத்தகையவரை தண்டிக்க வேண்டும்.

article - 21 அரசியலமைப்புச் சட்டம் 21-வது விதியில் தனிமனிதனுக்கும் வாழும் உரிமை வழங்கப் பட்டுள்ளது. சட்டத்துக்கு உட்பட்டு அமைக்கப்பட்டுள்ள வழிமுறைகள்படி அவர் வாழும் தகுதியைப் பெற்றுள்ளார்.

article - 22 தனி மனிதன் திடீரென கைது செய்யப்பட்டால்தான் கைது செய்யப்படுவதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளும் உரிமை. என்ன குற்ற பிரிவின் கீழ் தனக்குச் சொந்தமான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்பதைக் கேட்கும் உரிமையும் உள்ளது. இதற்கான காரணம் சொல்லும் கடமை, சம்மந்தப்பட்ட அதிகாரிக்கும் உள்ளது. அதேபோன்று தமது கைது குறித்து வழக்கறிஞரிடம் பேசவும்,கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்துக்குள் உள்ளூர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்த வேண்டும். அதை மீறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் சட்டத்தில் இடம் உள்ளது.

article - 23 கோபத்தின் வெளிப்படாக தனிமனிதன் ஏதேச்சதிகார செயலில் ஈடுபடும்போது அவர் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உரிமை உள்ளது.


article - 24 தனிமனிதன் தான் விரும்பும் மதத்தில் சேர்ந்து வழிபடும் முழு உரிமை பெற்றுள்ளார். அவர்கள் சார்ந்துள்ள மதத்தைப் பற்றி பிரசாரம் செய்யும் உரிமையைப் பெற்றுள்ளார்.


தனிமனித உரிமைகளைப் பெறுவதில் என்ன சிக்கல் ?

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்ட இந்த உரிமைகள் நமக்கு சரிசமாகக் கிடைப்பதில்லை. ஒட்டு மொத்த அரசியலமைப்பு முறையே மாற்றி அமைத்தால் மட்டுமே உரிமைகள் பாதுகாக்கப்படும் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவிடம் பேசினோம். "தனிமனிதனுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைக்காமல் போக அரசியல்வாதிகளும். அதிகாரிகளும் காரணமாக இருக்கிறார்கள். அதே போன்று தனிமனிதர்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறித்த புரிதல் இல்லாத காரணத்தாலும் பாதிக்கப்படுகிறார்கள். சட்டம் தெரிந்து கேள்வி எழுப்பினாலும், அதிகார வர்க்கத்தின் முன் அவர்கள் தொடர்ந்து போராட முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

லஞ்சமும்..... ஊழலும்..

தனி மனிதனிடம் இருக்க வேண்டிய சட்ட விழிப்புணர்வு இல்லாமல் போகும்போது அவனுடைய உரிமைகள் பறிபோக அது காரணமாக அமைந்து விடுகிறது. வருமான சான்றில் கையெழுத்துப் போட்டுக் கொடுக்க வேண்டிய கடமை அரசு அதிகாரிக்குஉள்ளது. அது தெரியாமல் தனி மனிதன் ஒருவன் அவருக்குப் பணத்தைக் கொடுப்பதும், அந்த அதிகாரி பணத்தை வாங்குவதும் நடக்கிறது. இங்குதான் அடிப்படை உரிமையின் தடம் அழிக்கப்படுகிறது. லஞ்சமும் ஊழலும்தான் குடிமகன்களுக்கான சட்டங்கள் அழிந்து போகக் காரணமாக இருக்கின்றன. ஆட்சி, அதிகார வர்க்கம், அடிப்படைவாதிகள் என அனைத்து மட்டத்திலும் மாற்றதை ஏற்படுத்தாமல் தனி மனிதனின் உரிமைகள் முழுமை பெறுவது என்பது சிக்கலானது." என்றார்

தனிமனிதனே தனிமனிதனுக்கு எதிரி !

வழக்கறிஞர் நாகசைலாவோவிடம் பேசினோம் "ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் மட்டும்தான் உரிமைகளைப் பறிக்கிறார்களா? தனிமனிதர்கள் தன் சக மனிதர்களின் உரிமைகளுக்கு முட்டு கட்டை போடவில்லையா ? தனிமனிதனே சக தனி மனிதனின் உரிமைகளைப் பறிக்கிற அன்றாட நிகழ்வுகளை நாம் பார்க்கிறோம். விதிகளை மீறி ஆயிரக்கணக்கான மக்கள் கட்டடங்களை க் கட்டியுள்ளார்கள். இந்த விதிமீறல்கள் தனி மனிதனின் உரிமைகளைப் பறிக்கவில்லையா ? தனி மனிதர்கள் தங்களது கடமைகளை மறந்து விதிகளை மீறுகிறார்கள். எனவே மக்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படித்தான் ஆட்சி ,அதிகாரமும் இருக்கும் . தனிமனித ஒழுக்கம் இல்லாமல் மற்றவர்கள் பற்றி நாம் குறை சொல்ல முடியாது" என்கிறார்.

தனிமனித வலிக்கான எதிர்ப்புதான் உரிமை !

இது குறித்து வழக்கறிஞர் விஜயனிடம் பேசினோம். "அடிப்படை உரிமைகளைச் சட்டத்தால் பெறமுடியும். ஆனால் அதற்கான போராட்டத்தை முன்னெடுக்கும்போது ஏற்படுகிற பிரச்னைகளைக் கடந்து செல்ல வேண்டி உள்ளது. பொதுவாக எங்கெல்லாம் கூட்டம் கூடுகிறார்களோ அங்கு தனிமனித உரிமைகளை எதிர்பார்க்க முடியாது. லஞ்சம் ஊழல் இவை அரசியலைமைப்பில் புரையோடிப் போன ஒன்றாக மாறி விட்டது. ஆட்சி , அதிகாரம், லஞ்சம் , ஊழல் இவையெல்லாம் மாறினால் மட்டுமே தனி மனித உரிமைகளைப் பெற்றிட முடியும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஒட்டு மொத்த அமைப்பையே மாற்ற வேண்டி உள்ளது. வலியை தருகின்ற எல்லா செயல்களுக்கும் எந்த ஒரு தனிமனிதன் எதிர்ப்பை( Resistance) காட்டுகின்றானோ அந்த மனிதன் மட்டுமே ஒரு முழுமையான குடிமகன் என்று  சொல்ல முடியும்.

"ஒவ்வொரு மனிதனும் பாதுகாப்பாக சமமாக வாழ்வதற்கு ஏற்ற சூழலை இயற்கை அமைத்து கொடுத்துள்ளது. ஆனால் தனி மனித பேராசையின் விளைவால் அவை தனிமனிதனுக்கு சென்று செருவதில்லை" என்கிறார் மகாத்மா காந்தி. இன்றளவும் இந்த வரிகள்தான் பொருத்தமாக இருக்கின்றன.

-கே . புவனேஸ்வரி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ