Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மோடியை இயக்கும் அந்த 7 பேர்...!


பிரதமர் நரேந்திரமோடி எனும் (front-end ) ப்ரண்ட் என்ட் செயலியை இயக்கும் பேக் என்ட்கள் (back-end) இவர்கள்தான்.

அதிகாரிகள்

பிரதமர் நரேந்திரமோடி அழுத்தமான, அமைதியான நபர். அவருக்குப் பின்னால் இருப்பவர்களும் அதே போன்ற நபர்கள்தான். மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது நமோ டீம்  ஒன்று இருந்தது. அந்தக் குழுவில் இருந்து பொறுக்கி எடுத்த சிலரை பிரதமர் அலுவலகத்தில் தனது back-end ஆக வைத்திருக்கிறார். பிரதமர் அலுவலகத்தில் மொத்தம் 39 பேர் இருந்தாலும் இந்த நால்வர்தான் பிரதமரை பின்னால் இருந்து இயக்குகின்றனர்.  

பி.கே.மிஸ்ரா

பிரதமரின் முதன்மைச் செயலாளர் ஆக இருப்பவர் நிர்பேந்திர மிஸ்ரா, இவர்தான் பிரதமர் அலுவலகத்தில் முதலிடத்தில் உள்ள அதிகாரி. இவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல். இவருக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் இருப்பவர் கூடுதல் முதன்மை செயலாளர் பி.கே. மிஸ்ரா. இவர்தான் மோடியின் நம்பிக்கைக்கு உரியவர். மோடியின் அதிகார வளையத்தில் இருக்கும் முதலாவது நபர். குஜராத் கேடரைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி இவர். மிக, மிக என்று எவ்வளவு அடைமொழி போட்டு அதற்கு அடுத்து நம்பிக்கை என்ற வார்த்தையைச் சேர்க்கின்றோமோ. அந்த அளவுக்கு மோடியின் நம்பிக்கைக்கு உரிய அதிகாரி இவர். நம்பர் 1, 2 இடத்தில் இருப்பவர்களை விட மூன்றாம் இடத்தில் இருக்கும் இந்த நபர் அதிகாரம் மிக்கவராகத் திகழ்கிறார். 2004-ம் ஆண்டு வரை இவர், முதல்வர் மோடியின் முதன்மைச் செயலாளராக இருந்தவர். 2008-ம் ஆண்டு இவர் ஓய்வு பெற்றதும், குஜராத் அரசில் ஒரு முக்கிய பதவியில் இருந்தார். இப்போது மோடியின் அழைப்பால், பிரதமர் அலுவலகத்துக்கு வந்திருக்கிறார். முக்கியமான ஃபைல்கள், மத்திய அரசின் முக்கிய பதவிகள் குறித்த நியமனங்கள் இந்த பி.கே.மிஸ்ராவின் வழியாகவே மூவ் ஆகின்றன. கேபினர் கமிட்டி நியமனங்கள் தொடர்பான விவகாரங்களில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கேபினர் செயலாளர் ஆகியோரை விடவும் உறுதியான முடிவுகள் எடுப்பதில் கைதேர்ந்தவர். எனவே இவரின் கருத்தை அறிந்த பிறகே மோடி முடிவுகள் எடுக்கிறார்.

அரவிந்த் குமார் சர்மா

1988-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பேட்ஜ்ஜை சேர்ந்தவர் அரவிந்த் குமார் சர்மா. இவர் பிரதமர் அலுவலகத்தின் இணைச் செயலாளராக இருக்கிறார்.  இவரும் குஜராத்தைச் சேர்ந்த அதிகாரிதான். லோக்சபா தேர்தலில் பி.ஜே.பி வெற்றி பெற்ற உடன் "வாய்யா டெல்லிக்கு" என்று இவரைத் தன்னுடன் அழைத்து வந்து விட்டார் மோடி. லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது ஆட்சி அழைக்க உரிமை கோரி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை மோடி சந்திக்கச் சென்றார். அப்போது அவருடன் சென்றவர் அரவிர்ந்த் குமார் சர்மா. மோடி பிரதமர் ஆனவுடன்  பி.எம்.ஓ. அலுவலகத்தில் முதலில் அப்பாயிண்ட்மென்ட் ஆனவர்களில் இவரும் ஒருவர்.  அந்த அளவுக்கு மோடியின் நம்பிக்கையைப் பெற்றவர் இவர். 'வைப்ரன்ட் குஜராத்' எனப்படும் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி மோடியின் அன்பைப் பெற்றவர். மோடியின் வலதுகரமாக அறியப்படும் இவர், மோடி முதல்வராக இருந்தபோது தொழில்துறை, பெருநிறுவனங்கள் குறித்த முடிவுகளை இவரைக் கேட்காமல்  எடுக்கமாட்டார். மோடியின் வெளிநாட்டு தொழிலதிபர்கள் சந்திப்பு, தொழில் ஒப்பந்தங்களும் இவரை மீறி ஒன்றும் நடக்காது. பிற அதிகாரிகள் மட்டத்தில் ஏ.கே என்ற அடைமொழியுடன் இவர் அழைக்கப்படுகிறார். மேற்கு வங்க மாநிலம் சிங்குரில் டாடா நானோ கார் தொழிற்சாலை பிரச்னைக்கு உள்ளானபோது, அந்த தொழிற்சாலையை குஜராத்தின் Sanand-நகருக்குக் கொண்டு வந்தவர். 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்பே அப்போதைய இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பாவெலை அழைத்து வந்து மோடியைச் சந்திக்க வைத்த தன் காரணகர்த்தாவும் இவர்தான். மோடியை அமெரிக்காவை நோக்கித் திருப்பியவரும் இவர்தான்.

ராஜீவ்  தோப்னோ

பி.எம்.ஓ-வில் அதிகாரம் மிக்க பதவிகளில் பிரதமரின் பிரைவேட் செக்ரட்டரி பதவியும் ஒன்று. பிரதமரின் அப்பாயிண்ட்மென்ட் டைரியை நிர்வகிப்பது இவர்தான். இவர் குஜராத் கேடர் ஐஏஎஸ் அதிகாரி. குஜராத் மாநிலம் குச் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது 2001-ல் குச் மாவட்ட வளர்ச்சி அதிகாரியாகப் பணியாற்றியவர். நிலநடுக்கத்தின் போது கட்டிட இடுபாடுகளை அகற்றியது தொடர்பான பணியில் முறைகேடு செய்ததாக சர்ச்சை எழுந்தது. ஆனால், இவர் இருந்தால் தனது அப்பாயிட்ட்மென்ட்கள் தடங்கல் இல்லாமல் இருக்கும் என்று நினைத்த மோடி, சர்ச்சைகளை புறம் தள்ளி விட்டு இவரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டிருக்கிறார்.  

ஜே.எம்.தாக்கர்

குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது முதல்வர் அலுவலகத்தின் பி.ஆர்.ஓ-வாக இருந்தவர். மோடியின் நிழலாக 12 ஆண்டுகள் குஜராத்தில் அவருடன் இருந்தவர். பத்திரிகையாளர்களுடன் மோடியின் குரலாகப் பேசுபவர். மோடி பிரதமராகப் பொறுப்பேற்கும் முன்பு டெல்லி ராஜ்காட்டில் காந்தி சமாதியில் அஞ்சலி செலுத்தச் சென்றார். அப்போது அவருடன் பேப்பரும், பேனாவும் கையுமாக தென்பட்டவர் இவர்தான். அப்போது அவர் பிரதமர் அலுவலகத்தில் நியமிக்கப்படவில்லை. அதன் பின்னர்தான் இவர் நியமிக்கப்பட்டார். மோடி-க்கு என்ன பிடிக்கும், பிடிக்காது என்பது இவருக்குத் தெரியும்.


பிரதமரை இயக்கும் ஆர்.எஸ்.எஸ்

வாஜ்பாய் தலைமையிலான பி.ஜே.பி அரசாகட்டும், இப்போது நரேந்திரமோடி தலைமையில் அமைந்த பி.ஜே.பி அரசாகட்டும், அரசின் மீது  ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஆதிக்கம் எப்போதுமே வலுவாகத் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பிடம் கலந்து ஆலோசிக்காமல் எந்த ஒரு முக்கிய முடிவையும் மோடி அரசு எடுப்பதில்லை. பி.ஜே.பி அரசிடம் பேசுவதற்காக ஆர்.எஸ்.எஸ் சார்பில் நிர்வாகிகளை நியமித்திருக்கின்றனர்.

சுரேஷ் பயாஜி ஜோஷி

இவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொதுச்செயலாளர் ஆக இருக்கிறார். 2014 லோக்சபா  தேர்தலின் போது பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்காக  ஆர்.எஸ்.எஸ் சார்பில் இந்தியா முழுவதும் பணியாற்றியவர்.  பி.ஜே.பி அரசு-ஆர்.எஸ்.எஸ் இடையே ஒருங்கிணைக்கும் பணிகளைச் செய்வதற்காக இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.  

சுரேஷ் சோனி

ஆர்.எஸ்.எஸ்-ன் இணைப் பொதுச்செயலாளர் சுரேஷ் சோனியும் பி.ஜே.பி உடன் பேசுவதற்காக ஆர்.எஸ்.எஸ் சார்பில் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நரேந்திர மோடி அரசு எடுக்கும் கல்வி தொடர்பான விஷயங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தாக்கத்தை வலியுறுத்துகிறார்.
ஆர்.எஸ்.எஸ் பரிந்துரையின் அடிப்படையிலேயே அரசின் உயர்மட்டத்தில் முக்கியமான சந்திப்புகள் நடைபெறும். பெரும்பாலான மத்திய அமைச்சர்கள் முக்கியமான முடிவுகள் எடுக்கும் முன்பு ஆர்.எஸ்.எஸ் அனுமதியைப் பெற்ற பிறகுதான் முடிவுகளை எடுக்கிறார்கள்.

அமித்ஷா

அதிகாரிகள், ஆர்.எஸ்.எஸ் தவிர பிரதமரை இயக்குவதில் முதன்மையான பங்கு வகிப்பவர் அமித்ஷா. நரேந்திரமோடியின் வளர்ச்சியில் எல்லாமுமாக பின்னால் இருந்து இயக்குபவர்களில் முதன்மையானவர் அமித்ஷா.
குஜராத் மாநில எல்லைக்குள் மோடியின் ஆளுமை இருந்தபோது தனக்கு அடுத்த இடத்தில்,அமித்ஷாவை வைத்திருந்தார். அமித் ஷாவை கேட்காமல் மோடி எந்த முடிவும் எடுக்க மாட்டார். மோடியின் நிழலாக அமித்ஷா எப்போதும் உடன் இருப்பார்.  
குஜராத்தில்  பி.வி.சி பைப் விற்பனையாளராக இருந்த அமித்ஷா முழுநேர அரசியலில் இறங்கிய பிறகு வியாபாரத்தைப் புறந்தள்ளிவிட்டார். அரசியல் என்று அவர் சிந்தித்ததே தேசிய அரசியலைத்தான். ஆரம்பத்தில் வி.எச்.பி தொண்டராக இருந்தபோது தேசிய அரசியல் நிகழ்வுகளை அறிந்து கொள்வதிலும், அதனைத் தனது டைரியில் குறித்துக் கொள்வதிலும் ஆர்வம் காட்டி வந்தார். அமித்ஷா பின்னிருந்து இயக்கியதால்தான் மோடி பிரதமர் பதவியை நோக்க்கி முன்னேறினார்.

1990 கால கட்டத்தில் குஜராத்தில் நரேந்திரமோடியும், அமித்ஷாவும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர். பிரசாரத்தின் இடையே ஒரு உணவகத்தில் உணவுக்காகக்  காத்திருந்த போது, மோடியிடம் அமித்ஷா இப்படிச் சொல்கிறார். "நரேந்திரபாய், இந்தியாவின் பிரதமர் ஆவதற்கு தயாராக இருங்கள்" என்றார். ஆம். மோடியை பிரதமர் பதவியை நோக்கித் தள்ளியவர்களில் அமித்ஷா முதன்மையானவர். மோடி அப்போது குஜராத் முதல்வராகக் கூட இல்லை.  மோடியை விட  14 வயது இளையவர் அமித்ஷா. ஆட்சி அதிகாரம், கட்சி அதிகாரம் இரண்டிலும் ஒரே நோக்கில்தான் சிந்திப்பார்கள். அந்த அளவுக்கு மோடியின் கருத்தைப் பிரதிபலிப்பவர் அமித்ஷா. தன்னுடன் இணக்கமாக இருக்கும் நபர் தேசிய தலைவர் ஆனால், நல்லது என்று அமித் ஷாவை இந்தப் பதவிக்கு நியமித்ததில் மோடிக்கு பெரும் பங்கு உண்டு.  

-கே.பாலசுப்பிரமணி

எடிட்டர் சாய்ஸ்