Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கருணாநிதி - அழகிரி சந்திப்பின் பின்னணி..! தொடரும் குடும்ப சந்திப்புகள்

தி.மு.க. தலைவர் கருணாநிதியை இந்த வாரத்தில் இரண்டாவது முறையாக மீண்டும் சந்தித்து பேசியுள்ளார் அவரது மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரி. இந்த சந்திப்புகளால் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர் அழகிரியின் ஆதரவாளர்கள். வெளிநாடு செல்லும் அழகிரி, நாடு திரும்பிய பின்னர் முக்கிய மாற்றம் இருக்கும் எனவும் அவர்கள் சொல்கிறார்கள்.

உடல்நலம் பாதிக்கப்பட்ட தி.மு.க. தலைவர் கருணாநிதி, கடந்த சில தினங்களாக கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து, சிகிச்சையில் இருந்து வருகிறார். உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாநிதியை கடந்த மாதம் 27-ம் தேதி நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்துச் சென்றார் அவரது மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி. கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள அழகிரி, கருணாநிதியை சந்தித்து பேசியது தி.மு.க.வில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், இன்று மீண்டும் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல் நலம் பற்றி விசாரித்தார் அழகிரி. இந்த வாரத்தில் நடக்கும் இரண்டாவது சந்திப்பு இது. திமுக தலைவர் கருணாநிதியுடன், கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள அழகிரி அடுத்தடுத்து சந்தித்து வருவது அவரது முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளதை காட்டுவதாக சொல்கிறார்கள் அழகிரியின் ஆதரவாளர்கள்.

உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு பூரண ஓய்வு தேவை என்பதால் பார்வையாளர்கள் அவரை சந்திக்க வேண்டாம் என தி.மு.க. தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருந்ததை குறிப்பிட்டு, இதை சொல்கிறார்கள் அழகிரி ஆதரவாளர்கள். கருணாநிதியை சந்தித்த பின்னர் வெளிநாடு பயணம் செல்லும் அழகிரி, 10-ம் தேதி இந்தியா திரும்புகிறார். அப்போது அழகிரியின் முக்கியத்துவம் தெரியும் என்கிறார்கள் ஆதரவாளர்கள்.

இது தொடர்பாக அழகிரியின் ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம். "இனி யாரும் எங்கள் அண்ணனை தலைவரிடமிருந்து பிரிக்க முடியாது, வெளிநாட்டுக்கு சென்றுவிட்டு திரும்பும்போது திமுகவில் அதிரடியாக செயல்படுவார். கட்சியில் ஆயிரம் பிரச்னை இருந்தாலும், கட்சியை விட்டு அண்ணனை ஒதுக்கி வைத்திருந்தாலும் தந்தை, மகன் பாசத்தை யாராலும் பிரிக்க முடியாது. மனதில் பட்டதை கோபமாக வெளியில் கொட்டிவிடும் எங்கள் அண்ணனிடம் மட்டும்தான் பெற்றோர் மீதான பாசம் அதிகம். தலைவருக்கு உடல் நலமில்லையென்று கேள்விப்பட்டதும் பதறிப்போய்விட்டார்.

சென்னையில் சில செக்போஸ்டுகளை சிலர் போட்டு வைத்திருப்பதால் செல்வதற்கு தயங்கினார். அங்கேயும் அண்ணன் மேல் பாசம் வைத்துள்ள சிலர் தலைவரை பார்க்க வர வேண்டுமென்று உரிமையோடு அழைத்தனர். அதன் பிறகுதான் தலைவரை சந்தித்தார்.  இப்போது அண்ணனை மட்டும்தான் தலைவர் நம்புகிறார். முன்பை விட ரொம்ப பாசமாக இருக்கிறார்கள். அதுபோல எவ்வளவு கதைகளை கட்டி விட்டாலும்  தலைவரின் மீது உண்மையான அக்கறையுள்ளவர் அண்ணன்தான். சொந்த விஷயமாக அண்ணன் வெளிநாடு செல்கிறார். பத்தாம் தேதி ஊர் திரும்புவார், அதற்கு பின்னால் அண்ணனின் அரசியல் திமுகவில் தொடரும்" என்றனர்.

- செ.சல்மான்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ