Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘கையளவே வரும், காட்டாற்று கிருஷ்ணா!’ - நதி நீர்ப்பங்கீடும், கிடைக்கிற நீரும்!

         

ப்போதும் இல்லாத வெள்ளம் வந்து சென்னை மக்களை கடந்த (நவம்பர் -2015) ஆண்டு புரட்டிப் போட்டிருந்தாலும், ஜனவரியில் குடிநீருக்குத் தட்டுப்பாட்டுடன் குடங்களை ஏந்தி வீதிக்கு வீதி சுற்றித் திரியும் சூழ்நிலையை அமையப் பெற்றவர்கள்தான் சென்னைவாசிகள். கிருஷ்ணாவுக்கும், காவிரிக்கும் ஆண்டுதோறும் ஏங்குவதும் "குடிக்கவும், பயிர்கள் பிழைக்கவும்தானே தமிழக மக்கள் நீர் கேட்கிறார்கள் ?" என்று கோர்ட்டே கண்டிப்பதுமாக ஆதாரபலம் இல்லாமல் கிடக்கிறது தமிழகத்துக்கான நீராதாரம்.

நதி நீர்ப்பங்கீடும், கிடைக்கிற நீரும்!

மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற தமிழக, ஆந்திர அரசுகள் 1983-ம் ஆண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தை உருவாக்கின. திட்டத்தின்படி ஆந்திர அரசு ஆண்டுதோறும் 12 -டி.எம்.சி. தண்ணீரை கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு, பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும்.

ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 4 டி.எம்.சி. தண்ணீர், ஜூலை மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 8 டி.எம்.சி. தண்ணீர் என மொத்தம் 12 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும். பூண்டி ஏரியின் நீர்மட்டம் வெகுவாக குறைகிற போதெல்லாம், கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி தண்ணீர் திறந்து விடும்படி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுப்பார்கள்.

ஆந்திரமுதல்வரிடம் கெஞ்ச வேண்டும் !

தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று ஆந்திர முதல்வர், 2 -டி.எம்.சி. அளவு தண்ணீரை கூடுதலாக திறந்து விடும்படி உத்தரவிடுவார். 'வினாடிக்கு 200 கனஅடி வீதம்தான் விடப்படும் தண்ணீர் போதாது' என்று தமிழக அதிகாரிகள் கோரிக்கை விடுத்தால் கூடுதலாக 300 கனஅடி தண்ணீர் திறப்பது வழக்கம். அப்படி திறக்கப்படும் நீர், தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை- தாமரைக் குப்பம் ஜீரோ பாயிண்ட் வந்து சேரும்.

பூண்டிக்கு வருவது இவ்வளவுதான்!

பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. அதாவது 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்க முடியும். 3-ம் தேதி காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 17.79 அடியாக பதிவானது. வெறும் 89 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு லிங்க் கால்வாய் மூலம் வினாடிக்கு இத்தனை கனஅடி, பேபி கால்வாய் மூலமாக வினாடிக்கு இத்தனை கனஅடி தண்ணீர் என்ற கணக்கில் தண்ணீர் திறந்து விடப்படும். 

பிற மாநிலங்களும் பங்கு கேட்கிறதே!

'நாங்கள் கொடுத்துக் கொண்டிருக்கும் பங்கீட்டு நீரால் எங்களுக்குப் பாதிப்பு இருக்கிறது' என்ற கருத்தில், கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டை மறுஆய்வு செய்யக் கோரி, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்கள் வைத்த கோரிக்கையை கிருஷ்ணா நதி நீர் தீர்ப்பாயம் நிராகரித்துவிட்டது.

தமிழகத்துக்குக் கிடைப்பதை விட கூடுதலான நீரை, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மூன்று மாநிலங்கள் பகிர்ந்து கொள்கின்றன. தெலங்கானா உருவான பின்னர், தெலங்கானாவையும் சேர்த்து 4 மாநிலங்களுக்கும் கிருஷ்ணா நீர் பங்கிட கேட்டு ஆந்திரா, தெலங்கானா மாநில அரசுகள் கிருஷ்ணா நதி நீர் தீர்ப்பாயத்திடம் கோரிக்கை விடுத்தன.

'ஆந்திராவுக்கும், தெலங்கானாவுக்கும் கூடுதலாய் நீரைக் கொடுத்தால் நாங்கள் என்ன செய்வது' என்று மகாராஷ்டிராவும், கர்நாடகாவும் காட்டுகிற எதிர்ப்பை பக்கத்திலேயே ஒட்டிக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டால் காட்ட முடியவில்லை.

குறைந்த அளவே தரவு!

கிருஷ்ணா நதியில் இருந்து மகாராஷ்டிரத்துக்கு 666 டி.எம்.சி நீரும், கர்நாடகத்துக்கு 911 டி.எம்.சி நீரும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு 12 அல்லது 15 டி.எம்.சி. என்பதே அளவு. அந்த அளவாவது மொத்தமாக நமக்குக் கிடைக்கிறதா என்றால் அதுவும் இல்லை. சொல்லப் போனால் கோப்பை அளவு நீர் ஸ்பூன் அளவுக்கே கைக்கு கிடைக்கிறது.

கொடுத்தவனே பறிக்கும் கதைதான்!

தலைநகர் சென்னைக்கு சாய் கங்கை கால்வாயில் இருந்து 152 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து ஊத்துக்கோட்டை ஜீரோ பாய்ன்ட் வருகிறது. காளஹஸ்தி வரை கால்வாயில் கரை புரண்டு வருகிற நீர், சத்தியவேடு வரை வேகமாகத்தான் வருவதாக அளவு காட்டுகிறது. ஆனால் அந்த நீர் குழாய்கள் மூலமாகவும், மின்சார மோட்டார் எந்திரங்கள் மூலமும் கிடைக்கும் கொஞ்சமும் முழுமையாகக் கைக்கு வராமல் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. தண்ணீர் வரத்துக் குறைவதற்கு என்ன காரணம் என்று தெரிந்தாலும் கையறு நிலையில், தமிழக நீர்வளத் துறையினரும் பொதுமக்களும் தொடர் வேதனையில் உள்ளனர்.

          

எங்கிருந்து நடக்கிறது நீர் சுரண்டல்?

ஆந்திராவின் புகழ்பெற்ற காளஹஸ்தி கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள கள்ளிப்பூடி கிராமம்தான், நீர்சுரண்டலுக்கான வேர் அமைந்த இடம். கண்டலேறு அணையில் இருந்து, 78.5 கிலோமீட்டர் துாரத்தில் இந்த இடம் உள்ளது.

கண்டலேறு அணையில் இருந்து சாய் கங்கை கால்வாயில் திறக்கப்படும் நீர்தான், பல இடங்களில், உறிஞ்சப்படுகிறது. கள்ளிப்பூடி கிராமம் அருகே, பல இடங்களில், பல கிலோ மீட்டர் தூரத்துக்கு, தரைவழி கேபிள் ஒயர் பதிக்கப்பட்டு, அங்கிருந்து, மோட்டார்களுக்கு மின் இணைப்பு தரப்பட்டு உள்ளது. கள்ளிப்பூடி கிராமத்தைச் சுற்றி உள்ள பதினைந்து கிராமங்களுக்கு விவசாயத்துக்கான பயன்பாட்டுக்காக, ஆந்திர அரசே மதகு அமைத்துக் கொடுத்துள்ளது. இப்படி மோசமான நீர்ப் பங்கீடுதான் தமிழகத்துக்கான நீதியாக அமைந்திருக்கிறது.

ஆந்திர அரசே நீர்சுரண்டலுக்கு துணை!

'நாங்கள் சொல்லும்போது மதகைத் திறந்து நீரை விவசாயத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்' என்று திருட்டிலும் ஒரு தர்மத்தைக் (?!) கடைப்பிடித்து வருகிறது, ஆந்திர அரசு. ஆந்திர விவசாயிகளோ, அந்த மதகை இரவில் திறந்து போதுமான நீரைத் தேக்கிக் கொண்டு, காலையில் அதை அடைத்து விடுகின்றனர்.

"தண்ணி கொடுக்கறதே குறைவு, அதிலும் மதகுகளில் இருந்து திறப்பது குறைவு, அப்படியே திறந்தாலும் கிடைக்கும் நீர் குறைவு" என்று தமிழக அதிகாரிகள் ஆந்திராவில் கெஞ்சுவதும், ''தண்ணீர் திருட்டை தடுக்க, சிறப்புக்குழு அமைத்து கண்காணித்து வருகிறோம்'' என, ஆந்திர அரசு அறிவிப்பதும் தொடர்ச்சியான ஒரு நிகழ்வாகவே அமைந்து விட்டது.

தீர்ப்பாயம், நீதிமன்றம், சட்டமன்றம், பாராளுமன்றம் என எது சொன்னாலும் காதுகொடுத்துக் கேட்பதில்லை என்ற முடிவோடு இருக்கின்றன காவிரியின் சொந்தக்காரரான கர்நாடகாவும், கிருஷ்ணாவின் சொந்தக்காரரான ஆந்திராவும். 

- ந.பா.சேதுராமன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ