Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஊழல் வழக்கில் மாஜி துணைவேந்தருக்கு 5 ஆண்டு சிறை !

கோவை : வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கோவையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராதாகிருஷ்ணனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை அண்ணா பல்கலைக்கழகம், மேட்டுப்பாளையம் சாலையில் ஜோதிபுரம் பகுதியில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை இயங்கி வந்தது. 2011-ம் ஆண்டுக்கு பிறகு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்டு, கோவை மண்டல மையமாக செயல்பட்டு வருகிறது.
கோவையில் அண்ணா பல்கலைக்கழகம் செயல்பட்டு வந்தபோது, கோவை அண்ணா பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக இருந்தவர் ராதாகிருஷ்ணன். அப்போது பல்கலைக்கழக வகுப்பறைகளுக்கு மேஜை, நாற்காலி வாங்க ஒப்புதல் அளிக்க ரூ.40 ஆயிரம் லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசில் ராதாகிருஷ்ணன் மீது புகார் கூறப்பட்டது.

துணை வேந்தர் மீதான புகார் என்பதால் இவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த கவர்னரிடம் அனுமதி பெறப்பட்டு,  ராதாகிருஷ்ணன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதன் பின்னர் கோவையில் உள்ள அவருடைய வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ராதாகிருஷ்ணனும், அவருடைய மனைவி அமிர்த சஞ்சீவியும் சொத்து வாங்கி குவித்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர் மீது சொத்துக்குவிப்பு வழக்கை லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்தனர். இந்த 2 வழக்குகள் தொடர்பாக ராதாகிருஷ்ணன், அமிர்தசஞ்சீவி ஆகியோர் மீது 2013-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின்போது ராதாகிருஷ்ணனும், அவரது மனைவியும் ஆஜாராகமல் இருந்து வந்தனர். இதையடுத்து கோவை லஞ்ச ஒழிப்பு விசாரணை நீதிமன்றம் இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. இருவரையும் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து முன்னாள் துணை வேந்தர் ராதா கிருஷ்ணனை கோவையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அமிர்தசஞ்சீவி தலைமறைவாகி விட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து ராதாகிருஷ்ணனை 31-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி ராதாகிருஷ்ணன் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் கோவை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி மதுரசேகரன், ஊழல் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் துணைவேந்தர் ராதாகிருஷ்ணனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
கல்வித்துறையில் துணை வேந்தராக இருந்தவர் யாரும் ஊழல், சொத்துக்குவிப்பு வழக்கில் கைதானதோ, சிறைக்கு சென்றதோ, தண்டனை பெற்றதோ கிடையாது. அந்த வரலாற்றை மாற்றியமைத்துள்ளார் ராதாகிருஷ்ணன்.

- ச.ஜெ.ரவி

படங்கள் : தி.விஜய்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close