Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாகப் பயன் படுத்தப்படுகிறதா...?’ - என்ன சொல்கிறார்கள் செயற்பாட்டாளர்கள்!

 

ன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில், அதில் தேவையான திருத்தங்களை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேட்கிறார். ஆனால் பட்டியலினம் மற்றும் பழங்குடியின மக்களின் உரிமைக்காக போராடுபவர்களோ சட்டம் கடுமையாக்கப்பட்டாலும் அந்த சட்டம் தொடர்பாக நடைபெறும் விசாரணைகளில் உள்ள குறைபாடுகளே  அனைத்து விவாதங்களுக்கும் காரணம் என்கிறார்கள். எங்கே குறைபாடு உள்ளது? என்பது குறித்து சட்டவல்லுநர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் விரிவாகப் பேசினோம்..,.

இந்தியாவில் 1955-ம் ஆண்டு தீண்டாமை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 1976-ல்  பி.சி.ஆர் அதாவது குடியுரிமை பாதுகாப்புச் சட்டம் என்று  மாற்றம் செய்யப்பட்டது. இந்தச் சட்டம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமே பொருந்தும். பழங்குடியினருக்குப் பொருந்தவில்லை. இந்தச் சட்டம் சரியாக செயல்படாததால், இளைய பெருமாள் என்பவரது தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்தது மத்திய அரசு. அந்த கமிட்டியின் பரிந்துரையின் பேரில், கடந்த 1989-ல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டமும் வலுவாக  இல்லை என்று குரல்கள் ஒலித்த நிலையில், வன்கொடுமை  தடுப்பு சட்டத்தில் சில திருத்தங்களை செய்து புதிய மசோதாவை கடந்த ஆண்டு மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த திருத்தத்துடன் கூடிய  வன்கொடுமை தடுப்புச் சட்டம் -(2015) கடந்த  ஜனவரி  மாதம் அமலுக்கு வந்தது.

சட்டம் என்ன சொல்கிறது ?

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பிரிவினரின் தலையை மொட்டையடிப்பது, மீசையை மழிப்பது போன்ற இழிவுபடுத்தும் செயல்கள் வன்கொடுமை குற்றமாகக் கருதப்படும். சம்பந்தப்பட்டவர்களுக்கு நீர்ப்பாசன வசதிகள், வன உரிமைகளை மறுத்தாலோ, மனிதர்கள், விலங்குகளின் சடலங்களை அகற்றவும், சவக்குழி தோண்டவும் கட்டாயப்படுத்தினாலோ இச்சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கலாம்.

குறிப்பிட்ட சாதிப் பெயரைச்  சொல்லி திட்டுவது, கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்துவது, வீடு அல்லது கிராமத்தை விட்டு வெளியேறுமாறு கூறுவது, சமூக மற்றும் பொருளாதார ரீதியில் அவர்களை ஒதுக்கி வைப்பது, குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு வற்புறுத்துவது போன்ற செயல்களை செய்தால், இந்த சட்டத்தின் கீழ், கடுமையான  தண்டனைகளை அளிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வன்கொடுமை வழக்குகளை விரைந்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கவும், சிறப்பு அரசு வழக்கறிஞர்களை நியமிக்கவும் இச்சட்டம் வகை செய்கிறது.

திருத்ததை ஏன் கேட்கிறார் ராமதாஸ் ? 

இந்தச்  சட்டத்தில்தான்  பா.ம.க நிறுவனர்  ராமதாஸ் திருத்தம் வேண்டும் என்று கோருகிறார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டத்தின் விளைவுகள் குறித்து தெரிவித்துள்ளார். "பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கான வன்கொடுமை தடுப்பு விதிகள் தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமைகளை பெற்றுத் தருவதற்காகத்தான் இவை உருவாக்கப்பட்டுள்ளன. என்றாலும் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்றுவதை விட, தங்களுக்கு பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்கே அதிகம் பயன்படுத்தப்படுகிறது . தமிழக அரசு வெளியிட்டுள்ள வன்கொடுமை தடுப்பு விதிகளின்படி, 47 வகைகளில் 180 செயல்கள் பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான தீண்டாமையாகவும், வன்கொடுமையாகவும் வரையறை செய்யப்பட்டிருக்கின்றன. இத்தகைய வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு குறைந்தபட்சம் 85,000 ரூபாயிலிருந்து ரூ.8.25 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று  கூறப்பட்டுள்ளது.

 2011-ம் ஆண்டு வெளியிடப்பட்ட விதிகளின்படி. 22 வகையான செயல்கள் மட்டுமே தீண்டத்தகாதவையாகவும், வன்கொடுமையாகவும் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், இப்போது வெளியிடப்பட்ட புதிய விதிகளில் கூடுதலாக 45 அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மத்திய அரசால் கடந்த அக்டோபர் 25-ந்தேதி வெளியிடப்பட்ட விதிகளை விட, தமிழக அரசின் விதிகள் கடுமையாக உள்ளன. வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில், அதில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று நீண்ட நாட்களாக பா.ம.க. வலியுறுத்தி வருகிறது. இதே கோரிக்கையை வலியுறுத்தி மராட்டியத்தில், மராட்டியர்கள் நடத்தி வரும் பேரணிகளில் இதுவரை 2 கோடிக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கோரிக்கையை ஏற்று வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் உரிய திருத்தம் செய்யும்படி, மத்திய அரசுக்கு மாராட்டிய அரசு பரிந்துரை செய்துள்ளது. ஆனால், தமிழக அரசோ வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை மேலும், மேலும் தவறாகப் பயன்படுத்தக் கூடிய வகையில் அச்சட்டத்தின் விதிகளைத் தெரிவித்துள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த பிரிவுகளை தலித்துகளுக்கு மட்டுமானதாக இல்லாமல் அனைவருக்கும் பொருந்தும் வகையில் மாற்றி, பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் நீதி கிடைக்க வகை செய்யவேண்டும்"  என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

ராமதாசின் அறிக்கை  அபத்தமானது  !

 இதுகுறித்து சமூக ஆர்வலர்  எவிடன்ஸ் கதிரிடம் பேசினோம். "ராமதாசின் அறிக்கை மிக அபத்தமாக உள்ளது. அவர் ஏன் இந்த சட்டத்தை கண்டு  பயம் கொள்ள வேண்டும்? வருடத்திற்கு தமிழகத்தில் சுமார் 8 லட்சம் வழக்குகள் பதிவாகின்றன. ஆனால் இந்த வழக்குகளில் மிகக் குறைந்த அளவிலேயே  வன்கொடுமைத் தடுப்பு வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. 2015-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் 1,782  வழக்குகள்தான் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு  செய்யப்பட்டுள்ளது. சமூகத்தில் பின் தங்கிய மக்களுக்கு  நீதிகிடைக்க இயற்றப்பட்டுள்ள இந்தச்  சட்டத்தில் திருத்தம் கோருவது எந்த நிலையிலும் சரியல்ல.

1989 -ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இச்சட்டம்  மிகவும்  எளிமையாக  பெயரளவில்தான் இருந்தது. ஆனால், தற்போது கடுமையான  திருத்தத்துடன்  கொண்டு வந்திருப்பதை சரியாக அமல்படுத்தவேண்டும் என்பதே கோரிக்கை.கடுமையாக்கப்பட்டுள்ள சட்டத்தில்  எந்தக் குறைபாடும் இல்லை. குறைபாடு என்பது அதிகாரிகள், அரசியல்வாதிகள் , சாதிய கட்டமைப்புகளில் உள்ளது. அவர்களிடத்தில் திருத்ததைக் கொண்டுவர ராமதாஸ் அறிக்கை விட வேண்டும்.

இந்த வழக்கை விசாரிப்பதில், எத்தனை குறைபாடுகள் உள்ளன என்பது ராமதாஸ் அவர்களுக்கு தெரியுமா? பெரும்பாலான வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதில்லை.பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர் புகார் கொடுக்கச் சென்றால், அங்கே உயர் சாதி அதிகாரிகளாக இருந்தால் பாதிக்கப்பட்டவர் என்றுகூட பார்க்காமல் வழக்குப் பதிவு செய்ய மறுக்கிறார்கள். அப்படி இருக்கும்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி நியாயம் கிடைக்கும்?

சரியாக விசாரிக்கச் சொல்லுங்கள் !

போலி புகார் என்று தெரிந்தால், மேல்முறையீடு செய்யுங்கள். வழக்கை விசாரிப்பதில் உள்ள குறைபாடுகளைக்  களைவதற்கு என்ன நடவடிக்கை  வேண்டும்? என்று பார்த்து அதை செய்யுங்கள்.  உரிய வலுவான ஆவணத்தைப் பதிவு செய்யுங்கள். அதை விட்டுவிட்டு, திருத்தம் செய்ய வேண்டும் என்றுகேட்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும் ராமதாஸ் நிவாரணத்தைப்  பற்றி பேசியுள்ளார். உயிரே போனபிறகு நிவாரணத்தை எதிர்பார்த்து யாரும்  இந்தச் சட்டத்தை அணுகுவதில்லை. குறிப்பாக கலைச்செல்வி, சுவாதி, நவீனா  ஆகிய மூன்று பெண்களின் வழக்குகளை எடுத்துக் கொள்ளுங்கள்.  இந்த மூன்று வழக்குகளும்  சாதிய ரீதியில்தான் கையாளப்பட்டுள்ளன" என்றார்.

பொதுவான தண்டைனையாக மாற்றுங்கள் !

இதுகுறித்து பா.ம.க வழக்கறிஞர் பாலுவிடம் பேசினோம். "இந்தச் சட்டம் பெரும்பாலான இடங்களில் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என தி.மு.க தலைவர் கருணாநிதியே பேசியுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் மீது தாழ்த்தபட்டோருக்கு காழ்ப்புணர்ச்சி என்றால் உடனே  வழக்குப் பதிவு செய்து விடுகிறார்கள். சின்னச் சின்ன சண்டைகளிலும் இந்த வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பயன்படுத்துகிறார்கள். இது பொதுமக்களின்  வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் செயல் அல்ல. பாதிக்கும் செயல்! குறிப்பாக எஸ். சி, எஸ் டி பிரிவு மக்களுக்குள்ளேயே சாதிப் பெயரைச் சொல்லி திட்டுகிறார்கள். இதை  வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்குள் எப்படிக் கொண்டு வருவார்கள்? சாதிப் பெயரைச் சொல்லியோ அல்லது வேறு வகைகளிலோ துன்புறுத்தப்பட்டால் எந்தப் பிரிவினரும் வழக்குப் பதிவு செய்யும் பொதுவான சட்டமாக இதனை மாற்ற வேண்டும். மிகப்பெரிய குறைபாடே  ஒரு பிற்படுத்தப்பட்டோரின் வீட்டில் ஒருவர் விரும்பி வேலை செய்வதை வன்கொடுமைக்குள் கொண்டு வர இச்சட்டம் வழிவகை செய்கிறது. எனவே ஒரு பிரிவினருக்கு அச்சுறுத்தலாகவும், மற்றொரு பிரிவினருக்கு வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் விதமாகவும் இச்சட்டத்தின் பிரிவுகள் அமைந்துள்ளன என்பதே எங்களின் வாதம்.

மேலும் பொய்யான வாய் வார்த்தைகளை வைத்துக் கொண்டு வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் போக்கு உள்ளது. அந்தக் குறைபாடுகளை எல்லாம் களைய வேண்டும். வன்கொடுமை என்றால் தலித் பெண்ணுக்கு மட்டும் தான் வன்கொடுமையா ? பிற்படுத்தப்பட்ட பெண்ணுக்கு வன்கொடுமை இல்லையா? அவர்கள்  எங்கே போனார்கள்?  மேலும் பொய்யான வழக்குகள் என்று தெரிய வந்தால், புகார் கொடுத்தவர்களுக்கு அபராதமும் , தண்டைனையும் கிடைக்கும் வகையில் சட்டத்தில்  விதிகளை வைத்தால்தான் இதுபோன்ற போலி புகார்கள் குறையும்" என்றார்

ராமதாஸ் சாதிய ரீதியில் பார்க்கிறார் !

ராமதாஸ் அறிக்கை குறித்து, விடுதலை  சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர்  வன்னியரசுவிடம் பேசினோம். "தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையை  வைத்து ராமதாஸ் பேசிவருவது சரியல்ல. இந்தச் சட்டத்தை சரிவர பயன்படுத்தாமல் போனதே பல பிரச்னைகளுக்குக் காரணம். தற்போது கொண்டு வந்துள்ள கடுமையான விதிகளையாவது சரியான முறையில்  நடைமுறைப்படுத்த வேண்டும். பா.ம.க  நிறுவனர் ராமதாஸ், இந்தச் சட்டத்தை  சாதிய ரீதியில் அணுகுவதைவிட,  சமூகரீதியாக அணுக வேண்டும் என்றுகேட்டுக் கொள்கிறோம். கோகுல்ராஜ், இளவரசன் வழக்குகளே இதற்கு சிறந்த உதாரணம். சாதிய வன்மங்கள் இன்னும் பல கிராமங்களில் நடந்து கொண்டுதான் உள்ளன. இவற்றை ஒழிக்க வேண்டும் என்றால் இந்தச் சட்டத்தைக் கடுமையாக்கியதில் தவறில்லை"   என்றார். 

வன்கொடுமை தடுப்புச் சட்டம்: கட்டப் பஞ்சாயத்து களமாகும் காவல்துறை !

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் குறைபாடுகள்  உள்ளதா? ராமதாசின் திருத்தம் குறித்த கோரிக்கை நியாயமானதா? என்று  சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவிடம்  பேசினோம், "ராமதாஸ்  கோரிக்கை சரியானதுதான். அதனை ஏற்கத் தான் வேண்டும். அந்தச் சட்டத்தில் சில குறைபாடுகள் உள்ளன. அதைவிட அந்தச் சட்டத்தை கையாளக் கூடிய காவல்துறை சரியான முறையில் கையாள்வதில்லை. இந்தச் ட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும்போது காவல்நிலையம் கட்டப்பஞ்சாயத்து கூடங்களாக மாறி விடுகின்றன. சட்டம் என்பது பொய்த்து, சாதிய வன்மம் அங்கே கட்டவிழ்த்து விடப்படுகிறது. காவல்நிலையத்திலும் இரு தரப்பு சாதியைச் சேர்ந்தவர்கள் இருப்பதால், இந்தச் சட்டத்தை சரிவர கையாளக் கூடிய நிலை அங்கு இல்லை. மேலும் பொதுமக்களும் இந்தச்  சட்டத்தை தவறான வழிகளில்  பயன்படுத்துகிறார்கள். எனவே இதில் உள்ள  குறைபாடுகளைக் களைய வேண்டும். மிக முக்கியமாக அதிகாரிகள், இதனை நேர்மையாகக் கையாள வேண்டும்" என்றார்.

ஆயிரம் குற்றவாளிகள்  தப்பிக்கலாம். ஆனால், ஒரு  நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது என்பதே சட்டத்தில் உள்ள தத்துவம். எனவே சட்டம் என்பது பொதுமக்களின்  பாதுகாப்புக்கும் நலனுக்கும் உள்ளதாகும். அத்தகையச்  சட்டத்தை இயற்றும்போது, ஒட்டுமொத்த மக்களையும்  திருப்திப்படுத்த இயலாது. ஆனால் தவறுகள் உள்ளதாகக்  குரல்கள் ஒலித்தாலோ அல்லது  மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தாலோ அதனை ஆய்வு செய்யும் கடமை அரசுக்கு  உள்ளது. மக்களுக்காக சட்டமே தவிர, சட்டத்துக்காக மக்கள் அல்ல என்பதை ஆட்சியாளர்கள்  உணர்ந்து வன்கொடுமை தடுப்புச் சட்டம்  குறித்து  ஏற்பட்டுள்ள சலசலப்பை களைய வேண்டும் என்பதே அனைவரின் குரலாக உள்ளது.

- கே.புவனேஸ்வரி

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ