Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘புரட்சி’ என்ற வார்த்தையை வன்புணர்கிறோம்! நவம்பர் புரட்சி சிறப்புப் பகிர்வு!

மீபகாலத்தில் அதிகம் வன்புணர்வு செய்யப்பட்ட வார்த்தைகளில் புரட்சியும் ஒன்று. புரட்சி என்ற பதத்தின் ஆழமான பொருளை புரிந்துகொள்ளாமலே, எதற்கெடுத்தாலும் புரட்சி என்ற சொல் இப்போது அதிகம் பயன்படுத்தப்படுகிறது... அடைமொழியாகச் சூட்டிக்கொள்ளப்படுகிறது. ஒரு சொல் எங்கு, எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பதில்தான், அதன் சொல்லின் வலிமை அடங்கி இருக்கிறது. வரலாற்றை நம் காலத்திலிருந்து தொடங்கிப் படிக்கும் நாளைய தலைமுறை, ‘புரட்சி’ என்ற வார்த்தை எங்கெல்லாம், எந்தச் சூழலில் எல்லாம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று பார்க்கும்... ஆய்வு செய்யும். இறுதியில், இதற்கு இவ்வளவு மொன்னையான பொருளா என்று...? நம் சமகாலச் சுழலின் பின்னணியிலிருந்தே அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளும். ஆம், சமகாலத் தலைமுறையின் பங்களிப்பு ஓர் உயிர்ப்பான சொல்லின் பொருளைக் கொன்றது அல்லது அதன் பொருளை மாற்றியது. நிச்சயம், இதை மகிழ்ச்சிகரமான ஒன்றாக வரலாறு பதிவுசெய்யாது. காகிதத்துக்கு உயிர் இருந்தால், நிச்சயம் நம் முகத்தில் காறி உமிழத்தான் செய்யும். புரட்சி என்ற வார்த்தை ஆழமான, அடர்த்தியான பொருளைக் கொண்டது. வரலாற்றில் அது பயன்படுத்தப்பட்டிருக்கும் இடங்களை மேலோட்டமாகப் பார்த்தாலே அந்தச் சொல்லின் அதிர்வு புரியும். அதன் பின்னால் மக்கள் விரோத அரசுகளை, மன்னர்களை நடுங்கவைத்த காட்சி விரியும். அதற்கு ஓர் உதாரணம் ரஷ்யாவில் நிகழ்ந்த நவம்பர் புரட்சி.

‘நவம்பர் புரட்சி!’

எங்கும் பசி, பட்டினி... மக்கள் கொத்துக்கொத்தாகச் செத்துக்கொண்டிருக்கிறார்கள். ஜார் அரசர் இதைப் பற்றியெல்லாம் கவலைகொள்ளவில்லை. அவருக்கு அப்போதும் ரஷ்ய மக்கள்தொகையில் ஒரு சதவிகிதம்கூட இல்லாத பெருமுதலாளிகளின் நலன்தான் முக்கியமாக இருந்தது. ‘மக்கள் ஒரு முடிவுக்கு வந்தார்கள், நமக்காகத்தானே மன்னர்... நம் நலன்களைக் காக்கத்தானே அவருக்கு அதிகாரங்கள்...? வாருங்கள், ஒன்றுகூடுவோம். அரசருக்கு நாம் படும் அவலங்களைப் புரியவைப்போம்’ என்று ஏறத்தாழ ஒரு லட்சம் ரஷ்ய குடிகள், கப்பான் என்ற கிறிஸ்தவ போதகர் தலைமையில், மன்னர் தங்கியிருந்த குளிர்கால அரண்மனையை நோக்கி அமைதியாக ஊர்வலம் போகிறார்கள். இதனால், மன்னர் அலெக்சாண்டர் நிக்கோலஸ் கோபம் தலைக்கேறியது. அவர் இவ்வாறாக யோசித்தார், “மன்னனுக்காகத்தானே மக்கள். மன்னன் சுகபோக வாழ்வுக்காகத்தானே அவர்கள். அடிமைகள் எப்படிக் கிளர்ந்தெழலாம்..?” என்று அமைதி ஊர்வலம் சென்றவர்கள் மீது வன்முறையை ஏவினார். துப்பாக்கியால் சுட்டார். ஆயிரக்கணக்கில் மக்கள் கொத்துக்கொத்தாக செத்து வீழ்ந்தார்கள். இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்ததால், வரலாற்றின் குருதி தோய்ந்த பக்கங்கள், இதை ‘ரத்த ஞாயிறு’ என்று பதிவுசெய்திருக்கிறது.

மக்கள் இதற்குப்பின் தன்னிச்சையாகக் கிளர்ந்தெழுந்தார்கள். ராணுவத்தின் ஒரு பகுதியும் மக்களுடன் இணைந்தது. மன்னர் வீழ்த்தப்பட்டார். ஆனால், ஆட்சியும் அதிகாரமும் கெரன்ஸி கையில் சென்றது. ஜார், மன்னராக இருந்து என்ன செய்தாரோ... அதையேதான் கெரன்ஸியும் செய்தார். மக்களின் அவலம் தொடரத்தான் செய்தது. அந்தச் சமயத்தில் சுவிட்ஸர்லாந்தில் தலைமறைவாக இருந்த லெனின் ரஷ்யா திரும்புகிறார்.

“தத்துவங்கள் மீது கட்டமைக்கப்படாத எந்தப் புரட்சியும் நல்விளைவுகளைத் தராது. அது, உள்ளீடற்ற ஆடையைப் போன்றது” என்று மக்களுக்குப் புரியவைக்கிறார் லெனின். மார்க்சியத்தை ரஷ்ய புரட்சியின் தத்துவமாக சுவீகரித்துக்கொண்டு, இப்போது கெரன்ஸிக்கு எதிராக மக்களைத் திரட்டுகிறார். அவருக்கு அது கடினமாக இருக்கவில்லை, லட்சக்கணக்கான மக்கள் லெனின் தலைமையின் கீழ் திரண்டார்கள். கிராமங்களில் ஏற்படுத்தப்பட்டிருந்த சோவியத்துக்களில் தங்களைப் பதிவுசெய்யத் தொடங்குகிறார்கள். ராணுவத்தின் பெரும் பகுதியும் லெனினின் அழைப்புக்காகக் காத்திருந்தது. நவம்பர் 7-ம் தேதி, லெனினின் போல்ஷ்விக் கட்சி, ஆட்சியைக் கைப்பற்றுகிறது. ஆட்சியைக் கைப்பற்றுகிறது என்று ஒற்றை வாக்கியத்தில் எழுதிவிட்டாலும்... ஆட்சி அவ்வளவு இலகுவாக கைமாறவில்லை... சொல்லப்போனால் நவம்பர் 7-ம் தேதிதான் புரட்சியே தொடங்குகிறது. ஏறத்தாழ 10 நாட்கள் போல்ஷ்விக் கட்சியும், எளிய விவசாய மற்றும் ஏழைத் தொழிலாளர்களும் கண்ணுக்குத் தெரியாத எதிரிகளை எல்லாம் எதிர்த்துப் போராடினர். இது மட்டுமல்லாமல் உலகப் போர், அமெரிக்க தலையீடு வேறு என மக்கள் அதிகம் ரத்தம் சிந்தினர். அந்தக் குளிர்பிரதேசத்தில் எங்கும் குருதி... இப்படியாகத்தான் அங்கு புரட்சி வெடித்து, மக்கள் விரும்பிய ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.

வன்புணர்வு செய்யப்பட்ட வார்த்தை!

மூன்று பத்தியில் சுருங்கச் சொல்லியிருந்தாலும், ரஷ்ய புரட்சி என்ற பதத்தின் பின்னால் ரத்தம் தோய்ந்த வரலாறு இருக்கிறது. புரட்சி, அங்கு தத்துவத்தால் வழிநடத்தப்பட்டது. மக்கள் மாற்றத்துக்காக அந்தத் தத்துவத்தை உள்வாங்கி, தங்களை அதில் முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டார்கள்; அதற்காக வலிகளைச் சுமந்தார்கள்; வென்றெடுத்தார்கள்.

இப்போது அப்படியே தமிழகத்தின் நிலைக்கு வாருங்கள். இங்கு எந்தச் சூழலில் எல்லாம் புரட்சி என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது என்று பாருங்கள். ஒரு வார்த்தையை நாம் எப்படிச் சிதைத்துக்கொண்டிருக்கிறோம் என்பது நன்கு புரியும். தத்துவங்கள் எந்தக் கடையில் கிடைக்கும் என்று கேட்பவர்கள் எல்லாம் புரட்சி அடைமொழியாகச் சூடிக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்துக்காக, அதன் நலனுக்காக உண்மையில் எந்தப் பலனையும் எதிர்பாராமல் போராடிய ஜீவா, பெரியார், ம.பொ.சிவஞானம் எல்லாம் தனக்குத்தானே ‘புரட்சி’ என்ற அடைமொழியைச் சூட்டிக்கொள்ளவில்லை. இந்தத் தள்ளாத வயதிலும் காவிரிக்காவும், தாமிரபரணிக்காகவும் சிறை செல்லும் நல்லக்கண்ணு ‘புரட்சி’ என்ற பதத்தைத் தன் பெயருக்கு முன்னால் பயன்படுத்தவில்லை. ஹூம்... நம்மைநாமே நொந்துக்கொள்ள வேண்டியதுதான்...!

தம் சொந்த நலனுக்காக ‘புரட்சி’ என்ற பதத்தை மெல்லச் சிதைப்பவர்கள்... ஏதாவது செய்துகொண்டு போகட்டும். நாம் நம் பிள்ளைகளுக்கு இந்தியாவின், தமிழகத்தின் உண்மையான வீரம் செறிந்த புரட்சி, புரட்சியாளர்கள் வரலாற்றைச் சொல்வோம்...! அவர்கள் புரட்சிக்குத் தவறான பொருள் கொள்ளும் முன் குறைந்தபட்சம் அந்த வார்த்தையையாவது மீட்போம்...!

- மு. நியாஸ் அகமது

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

எடிட்டர் சாய்ஸ்

MUST READ