Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘ஹூம்...வாய்மையே வெல்லும் வெறும் வார்த்தையா..?’ மூடிமறைக்கப்படும் விவசாயிகள் தற்கொலைகள்!

"ஓரம் பாரம் விளைஞ்சா ஒரு வருசத்துக்கு  ஒட்டு மொத்த குடும்பமும்  உட்கார்ந்து சாப்பிடும்  என்பது தான் " விவசாயிகளின் கம்பீர குரல்... ஆனால் இன்றோ, "கடன்  வாங்கி விதைவிதைத்து விட்டு, நெல் முளைக்கவில்லை கடனை  எப்படி திருப்பிக் கட்டப்போகிறேன்? தற்கொலை செய்து கொள்வதைத் தவிர நான் தேடும் வழி வேறு  எதுவும் இல்லை" என்பதே விவசாயிகளின் சோகக் குரலாக ஒலிக்கிறது.

வராத காவிரி, தள்ளிப்போன  வடகிழக்குப் பருவ மழை, பொய்த்துப் போன குறுவை,  ஒழுங்கற்ற  கூட்டுறவுக் கடன்  தள்ளுபடி,  இப்படி எண்ணிலடங்கா பிரச்சனைகளை அன்றாடம் சந்தித்து வருகிறார்கள் தமிழக விவசாயிகள், இந்த நிலையில்தான் காவிரி நீர் கிடைத்து விடும்; எப்படியாவது சம்பாவை சாகுபடியாக்கி விடலாம் என்ற கனவுடன்  கடனை வாங்கி நெல் விதைத்துள்ளார்  திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த கோவிந்தராஜ். தண்ணீர்ப் பற்றாக்குறையால் விதை முளைக்காமல்போக, மன உளைச்சலில்  தற்கொலை செய்து  கொண்டுள்ளார். கோவிந்தராஜ் மரணத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்த நிலையில், கடந்த வாரத்தில் மட்டும் மூன்று விவசாயிகள்  தற்கொலை செய்து கொண்டதாக வெளியான தகவல் தமிழகத்தில் விவசாயிகள் மட்டுமல்லாது, அனைத்து தரப்பினர் மத்தியிலும் அதிர்ச்சியைக் கிளப்பியது. இந்தநிலையில், நாகை மாவட்டம்  வேதாரண்யம் அருகே  ரத்தினவேலு என்ற விவசாயி மன உளைச்சல் காரணமாக தனது விவசாய நிலத்திலேயே  மயங்கி விழுந்து  உயிரிழந்த சோக சம்பவமும் நடந்துள்ளது. கடைமடைப் பகுதிக்கு காவிரி தண்ணீர் வரும் என்ற நம்பிக்கையில்  மீண்டும் நெல் நாற்றுகளை வாங்கி  நட்டுள்ளார். ஆனால், குழப்பமும் கவலையும் அதிகரித்த  நிலையில் விவசாய நிலத்திலேயே அவர் நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்த சம்பவம் அதிர்ச்சியை மேலும் அதிகரித்துள்ளது.

கடந்த  ஒருவாரத்தில்  தஞ்சை கீழ்த்திருப்பந்துருத்தி ராஜேஷ்கண்ணா, திருவாரூர் ஆதிச்சிபுரம் அழகேசன்  மற்றும்  திருத்துறைப்பூண்டியை சேர்ந்த  கோவிந்தராஜ்  ஆகிய  மூன்று விவசாயிகளும் தற்கொலை  செய்து கொண்டுள்ளனர். ஞாயிற்றுக் கிழமை மாலை திருச்சியைச் சேர்ந்த ஒரு விவசாயி  தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைத் தொடர்நது நாகை விவசாயி  ரத்தினத்தின்  மரணம் நிகழ்ந்துள்ளது.  இப்படி தொடரும் விவசாயிகள் தற்கொலைகளை  போலீசார்  வழக்குப் பதிவு  செய்யாமல் மூடி  மறைப்பதாக  குற்றம் சாட்டுகிறார்கள்  விவசாயிகள்...

விவசாயிகளை  கொலை செய்து விட்டதா  தமிழக அரசு?

விவசாயிகளின் தொடர் தற்கொலைகள் மற்றும் ஏராளமான விவசாயிகள்  தங்களின் பாரம்பரிய தொழிலை விட்டு, மறைந்து போவதுமாக உள்ள இந்த நிலை குறித்து கீழ்பவானி விவசாயிகள் நலச் சங்க  தலைவர் நல்லுசாமியிடம் பேசினோம். "விவசாயிகள்  தற்கொலைக்கு அரசுதான் காரணம். நிலத்தை தரிசாக போட்டிருந்தால் அவர்கள்  தற்கொலையைத் தேர்ந்தெடுத்திருக்க மாட்டார்கள். 50 டிம்.எம்.சி அடி தண்ணீரை வைத்துக் கொண்டு மேட்டூரில் இருந்து, 15  லட்சம் ஏக்கரிலான டெல்டா பாசனத்திற்கு தண்ணீரை ஏன் திறக்க வேண்டும்? ஆகஸ்ட்  மாதம் 20 -ம் தேதியே கர்நாடகாவில் இருந்து தண்ணீர் வாங்க முடியாது என்பது  தெரியும்.கே ஆர் பி அணையில் உள்ள தண்ணீரை எல்லாம் கர்நாடக மாநில அரசே பயன்படுத்திக் கொண்டு, ஒருபோகம்  பயிர்  செய்து விட்டது. பருவமழையோ கடைசிக் கட்டத்திற்கு வந்து விட்டது. இந்த சூழலையெல்லாம் தெரிந்து, மேட்டூரில் தண்ணீர் திறந்து விட்டது யார் குற்றம்?  காலம் கடந்து திறக்கப்படும்  குறைவான தண்ணீரால் எந்த அளவிற்கு சாகுபடி நடக்கும் என்பது  தெரியாதா ?  நேரடி நெல் விதைப்புக்கு மாறுங்கள்  என்று ஒரு அறிவிப்பு மட்டும்தான்  தமிழக  அரசு வெளியிட்டது. விநாடிக்கு  24 ஆயிரம் கன அடி தண்ணீர் விட வேண்டும் . ஆனால் விநாடிக்கு 10  ஆயிரம் கன  அடி தண்ணீர்தான் விட்டனர் . அதில் 6,500  கன அடி தண்ணீர் மட்டுமே கல்லணையை வந்தடைந்தது. 5,500  கன அடி தண்ணீர் மேட்டூருக்கும், கல்லணைக்கும் இடையில் இருக்கக்கூடிய அனுமதியற்ற, அதாவது  நீரேற்றுப் பாசனங்களே உறிஞ்சிவிட்டன. காவிரியில் இருந்து மூன்றாகப் பிரியும்  தண்ணீரை  ஒரு பகுதிக்கு மட்டுமே தர முடியும் என அரசு  சொல்லி இருக்கலாமே. மற்றப் பகுதிகளுக்கு நிவாரணம் கொடுக்கிறோம் என்று அறிவித்திருந்தால், பயிர் சாகுபடிக்காக விவசாயிகள் கடன்  வாங்கி இருக்க மாட்டார்கள் அல்லவா ?   

கடன்  வாங்கி  விதைத்த நெல் தற்போது  75  சதம்வீதம்தான் முளைத்துள்ளது .வரும் 11 -ம் தேதிக்குமேல், வடகிழக்குப் பருவமழை அதிகம் பெய்தால், நெல் தண்ணீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மழை வரவில்லை என்றால் கருகும்  நிலை உள்ளது.  சீரான  மழை இருக்குமானால், பிப்ரவரி மாதம் வரை தண்ணீர் தேவையாக  இருக்கும். இப்படி பல கட்ட பிரச்னையில் விவசாயிகள்  உழன்று கொண்டிருப்பதன்  எதிரொலியாகத்தான் இந்த தொடர் தற்கொலைகள்.

தற்கொலை செய்து  கொள்ளும் விவசாயிகளின்  எண்ணிக்கையை மறைப்பதில்  தான் அரசு கவனம் செலுத்துகிறதே தவிர, விவசாயிகளை  எப்படி காப்பாற்ற வேண்டும்? என எண்ணவில்லை.  காவிரி தொழில் நுட்ப மத்தியக் குழு தமிழகம் வந்தபோது, விவசாயிகள்  தற்கொலைகள் பற்றி தமிழக அரசு சொல்லவே இல்லை. இது யாருடைய தவறு?

தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக  அரசு அறிவிக்க வேண்டும். வறட்சி நீங்கும் வரை, எந்த வங்கியும் விவசாயிகளிடம் இருந்து, கடனை வசூலிக்கக் கூடாது என்று மத்திய அரசின்  ஆதரவுடன் உத்தரவிட வேண்டும். போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை தொடங்க வேண்டும். தமிழக விவசாயிகளின் தற்போதைய  பிரச்சனைகளையும்  தீர்வுகளையும்  விளக்கி வெள்ளை  அறிக்கை ஒன்றை தமிழக அரசு வெளியிட வேண்டும்" என்றார்.

விவசாயிகளின் தற்கொலைகளை மூடி மறைக்கும் தமிழக அரசு

டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் தற்கொலை குறித்து, விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர்  பி ஆர் பாண்டியனிடம்  பேசினோம். "வரலாற்றில் இல்லாத அளவிற்கு விவசாயிகள் அபாயகரமான சூழலில் இருக்கிறார்கள் . விவசாயிகளுக்கு எந்தப் பகுதியிலும் சாதகமான சூழல் இல்லை. தாமதமாக காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடையை சென்று சேரவில்லை. கால்வாய்கள்  தூர்வாரப்படாததால், வந்த தண்ணீரையும் வாய்க்கால்களே குடித்து விட்டது. வடகிழக்குப் பருவமழையும் இன்னும் வரவில்லை .இதற்கு மேல் மழை வந்தாலும், அதனால் பயன் ஏதுமில்லை. வங்கிகளில் கடனை  வாங்கி விட்டு கட்டமுடியாத சூழலில் உள்ளனர் விவசாயிகள். எதிர்காலமே இருட்டாக  இருப்பதால்தான், விவசாயிகளின் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்கின்றனர். 

அதை விடகொடுமை வாழ வழியில்லாமல் சாகும் விவசாய மரணங்களால் அரசுக்கு களங்கம் ஏற்பட்டு விடும் என்று மூடி மறைக்கிறது இந்த அரசு.  மஹாராஷ்டிரா போன்ற மற்ற மாநில அரசுகள்  விவசாயிகள் தற்கொலை குறித்து, வெளிப்படையாக  நாட்டுக்கு தெரிவித்து அதனை  மத்திய அரசின் உதவியுடன் சரிசெய்தன. ஆனால் காவிரிநீர் கிடைக்காத விரக்தியில்  உயிரிழந்த விவசாயிகளின் உண்மை நிலையை  சொல்ல  மறுக்கிறது  தமிழக அரசு. அதன் விளைவே தொடர்ந்து விவசாயிகள்  தற்கொலைக்கு  தள்ளப்பட காரணம்.  தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு 25  லட்சம்  ரூபாய் நிவாரணம் வழங்கப்பட வேண்டும். தமிழக விவசாயிகளைப் பாதுகாக்க அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். இதுகுறித்து ஆளுநரைச் சந்தித்து முறையிட உள்ளோம். மேலும் விவசாயிகள் தற்கொலை குறித்து பிரச்சார பயணத்தை கன்னியாகுமரியில் இருந்து  தொடங்கி உள்ளோம். நிரந்தரத் தீர்வு ஏற்பட அரசு முன்வராவிட்டால், மிகப்  பெரிய  போராட்டத்தை  நடத்த திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

தமிழக அரசுக்கு தலைவர்கள் கேள்வி 

விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பது குறித்து கருத்து தெரிவித்த அரசியல் கட்சிகளின்  தலைவர்கள் பலரும் தமிழக அரசுக்கும்,கர்நாடக அரசுக்கும் கடும் கண்டனம் தெரிவித்தனர். திமுக  பொருளாளர் மு.க ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், "அ.தி.மு.க ஆட்சியில் நடக்கும் விவசாயிகள் தற்கொலை அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.  ஒரு காலத்தில் தமிழகத்தின் நெற்களஞ்சியமாகத் திகழ்ந்த தஞ்சை மண்டலம் இப்படி தற்கொலைக் களமாக மாறக் கூடிய அவலநிலை உருவாகியிருக்கிறது" என்று  தெரிவித்துள்ளார்

பா.ம.க இளைஞர் அணி  தலைவர் அன்புமணி  ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், "கடந்த சில மாதங்களாகவே கடன் தொல்லை, பாசனத்திற்கு தண்ணீர் இல்லாதது, விளை பொருளுக்கு நியாயமான விலை கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் தற்கொலை செய்வது அதிகரித்து வருகிறது. இதனை  எப்போது தமிழக அரசு தடுத்து நிறுத்தப் போகிறது?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ  மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்ட  தலைவர்களும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். "தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு  உரிய   நிவாரணத்தை  வழங்க வேண்டும்" என்று தமிழக அரசை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர் .

அபாயகரமான  சூழலில் உள்ளதா விவசாயம் ?  

விவசாயிகள் தற்கொலையும் , விவசாயம் செய்வதில் இருந்து காணாமல் போகும் நிலைமையும்  விவசாயத்தை அபாயகரமான  சூழலுக்குக் கொண்டு செல்வதாக கூறுகிறார்கள்  சமூக ஆர்வலர்கள். இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 127 கோடியாக உள்ளது என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதில் விவசாயத்தில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை, அண்மைக்காலமாக மிக வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக மத்திய அரசின்‘பயன்பாட்டு மனித வள ஆராய்ச்சி மைய’ (Institute of Applied Manpower research) ஆய்வு கூறுகிறது.

1991 முதல் 2012-ம் ஆண்டு வரையிலான காலத்தில் சுமார் ஒன்றரை கோடி விவசாயிகள் விவசாயத்தை விட்டு விலகிப் போயுள்ளனர். 2014 -ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில்  5,650 விவசாயிகள்  தற்கொலை  செய்து கொண்டுள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் கூறுகிறது. அதிகபட்சமாக 2003 -ம் ஆண்டில் 18,241  விவசாயிகள்  தற்கொலை செய்து கொண்டதாக அந்த ஆவணம்  தெரிவிக்கிறது.

 தமிழகத்தில் கடந்த  ஐந்தாண்டுகளில் சுமார் 2,423 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக  புள்ளி  விவரங்கள் தெரிவிக்கின்றன. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளி விவர பதிவுகள் குறைவானதே என கூறுகிறார்கள் சமூக  ஆர்வலர்கள். அரசுக்கு களங்கம் ஏற்படும் என்பதால் விவசாயிகள் தற்கொலையை வழக்குப் பதிவு செய்வதில்லை என அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

விவசாயிகள் தற்கொலை நீடிப்பதும், விவசாயத்தை விட்டுவிட்டு பெருமளவிலானோர் வேறு தொழில்களுக்கு மாறிச் செல்வதும் நீடிக்குமானால், இந்தியாவின் அனைத்து  துறைகளும் ஆட்டம் காண நேரிடும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கிறார்கள். கொல்லைப்புறத்தில் இருக்கும் உணவுப்  பற்றாக்குறை வீட்டுப்புறத்தை எட்டிப்பிடிக்கும்  காலம் வெகுதூரம் இல்லை என்பது  அவர்களுடைய  வாதமாக உள்ளது. 

"ஒரு மனிதன்  வாழ்வதற்கு ஏற்ற  சூழல் இல்லை என்றால் அவனால்  எப்படி நீண்ட  நாட்கள்  உயிர்ப்போடு இருக்க முடியும்?" என்கிறார் அண்ணல் அம்பேத்கர். "ஒரு விவசாயி வாழ்வதற்கு  எந்தவொரு அடிப்படை சூழலும் இல்லை என்றால் வாய்ப்பேசாத  மண்ணிடம் தனது  கவலைகளை விவசாயியால் எவ்வளவு காலம் பகிர்ந்து கொண்டிருக்க  முடியும்?" என்பதே  அனைத்து விவசாயிகளின்  சோக  முணு முணுப்பாக உள்ளது. சாமான்ய விவசாயிகளின் சாவுகளுக்கு பதில் சொல்லுமா தமிழக அரசு?.

-கே.புவனேஸ்வரி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ