Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘போலி ஆவணங்களைக் கொண்டு பத்திரப்பதிவு...!’ - ஆர்.டி.ஐ தகவலில் அம்பலம்

முறையான அடையாள சான்று இருந்தால்தான் பத்திரப்பதிவு அலுவலகங்களில் சொத்துக்கள் பதிவு செய்யப்படும் என்று விதிமுறைகள் உள்ளன. ஆனால், சொத்துக்களைப் பதிவு செய்யும்போது பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக பரவலான புகார்கள் இருந்து வருகின்றன.

பத்திரப்பதிவுத் துறையில் சொத்துக்களைப் பதிவு செய்யும்போது சொத்துக்களை பதிவு செய்பவர்கள் மற்றும் சாட்சிகளுக்காக கையெழுத்துப் போடுபவர்களின் அடையாளங்கள் முறையாக பதிவு செய்யப்படுவதில்லை என்றும், சொத்துப்பதிவின் போது தாக்கல் செய்யப்படும் ஆவணங்கள் போலியானவை என்றும் ஆர்.டி.ஐ தகவல் மூலம் தெரியவந்துள்ளது.

புகைப்படம் தெளிவாக இல்லை

சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த கணேஷ் என்பவர், துணை பதிவாளர் அலுவலகம் ஒன்றுக்கு குறிப்பிட்ட சொத்துப் பரிமாற்றத்துக்கான பதிவு ஆவணங்கள் குறித்தத் தகவல்களை கேட்டுள்ளார். சொத்துப் பரிமாற்றம் செய்தவரின் அடையாள சான்று, சொத்துப்பதிவின்போது சாட்சிக் கையெழுத்துப் போட்டவர்களின் அடையாளச் சான்றுகள் ஆகியவை குறித்தும் ஆர்.டி.ஐ தகவல்கள் மூலம் கேட்டார்.

இந்தக் கேள்விகளுக்கு துணைப் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்ட பதிலில், பத்திரப் பதிவு செய்தவரின் சார்பில் சாட்சி கையெழுத்திட்டவர்கள் பற்றிய தகவல்கள் சரிவரத் தரப்படவில்லை. சொத்துப் பதிவு செய்தவர் குறித்து அளிக்கப்பட்ட தகவலில், சொத்துப் பதிவு செய்தவரின் புகைப்படம் தெளிவாக இல்லை. அடையாளம் தெரியாத வகையில் இருந்திருக்கிறது. அதுபோல சாட்சிக் கையெழுத்துப் போட்ட நபர்களின் அடையாள அட்டை குறித்த தகவல்களும் கொடுக்கப்படவில்லை.

அடையாள அட்டை போலி

முதல் சாட்சிக் கையெழுத்துப் போட்டவரின் தந்தையின் பெயர் கையால் எழுதப்பட்டிருக்கிறது. இரண்டாவது சாட்சிக் கையெழுத்துப் போட்டவரின் தகவல்கள் முழுவதுமாக கையால் எழுதப்பட்டிருக்கிறது. சாட்சிக் கையெழுத்துப் போட்டவர்களின் அடையாள அட்டை விவரங்களும் பதிவின்போது பெறப்படவில்லை என்று ஆர்.டி.ஐ தகவலில் சொல்லப்பட்டிருக்கிறது. சாட்சிக் கையெழுத்துப் போடுபவர் தன் பெயர் மற்றும் முகவரியை கையால் எழுத வேண்டும் என்று விதிமுறை உள்ளது. இதன் காரணமாகவே அடையாள சான்றுகள் பெறப்படுவதில்லை என்றும் பதில் தரப்பட்டிருக்கிறது.

ஆர்.டி.ஐ தகவல் மூலம் பெற்ற ஆவணங்களைக் கொண்டு தேர்தல் ஆணையத்தில் கணேஷ் சரிபார்த்தார். சொத்தைப் பதிவு செய்தவர் கொடுத்த வாக்காளர் அடையாள அட்டையின் எண்ணைக் கொண்டு ஆய்வு செய்ததில் அந்த அடையாள அட்டை போலியானது என்று தெரியவந்தது. இதன் மூலம் போலியான ஆவணங்களைக் கொண்டு சொத்துப்பதிவு நடைபெற்றது தெரிய வந்திருக்கிறது.

பதிவுத்துறை ஐ.ஜி-க்கு கடிதம்

ஆர்.டி.ஐ மூலம் இந்த தகவல்களைப் பெற்றவர் இதுகுறித்து தகவல் ஆணையருக்குப் புகாராக அனுப்பியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து பதிவுத்துறை ஐ.ஜி-க்கு தகவல் ஆணையர் ராமானுஜம் எழுதியுள்ள கடிதத்தில், பத்திரப்பதிவு விதிமுறைகளை கடுமையாக்கும்படி வலியுறுத்தி உள்ளார். பத்திரம் பதிவு செய்பவர்கள் மற்றும் சாட்சிக் கையெழுத்து இடுபவர்களின் சரியான புகைப்படங்கள், சான்றுகளை பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

-கே.பாலசுப்பிரமணி

எடிட்டர் சாய்ஸ்