Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்மோக் செல்ஃபி முதல் அனல்மின் நிலையம் வரை.. சென்னையை எச்சரிக்கும் டெல்லி! #AirPollution

ங்களுக்கு 'smog selfie' தெரியுமா? தெரியாவிட்டால் சீக்கிரம் தெரிந்துகொள்ளுங்கள். விரைவில் சென்னையிலும் இது ட்ரென்ட் ஆகலாம். தங்கள் நகரில் இருக்கும் காற்று மாசுபாட்டின் அளவைக் கட்டுவதற்காக புகைமூட்டத்தின் நடுவே நின்று கொண்டு எடுக்கப்படுபவைதான் இந்த smog selfie. உலகிலேயே அதிகம் காற்று மாசுபாடு கொண்ட நகரங்களில் ஒன்றான பீஜிங்கில் இதுபோன்ற செல்ஃபிக்கள் பிரபலம். ஆனால் தற்போது இந்த ஸ்மோக் செல்ஃபிக்களின் தலைநகரமாக இருக்கிறது, நமது நாட்டின் தலைநகர் டெல்லி. கடந்த மாதம் நாம் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை, அந்நகரத்தின் நிலையையே தலைகீழாக புரட்டிப் போட்டுள்ளது. கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு காற்று மாசுபாடால் திணறிக் கொண்டிருக்கிறது டெல்லி. இதனால் டெல்லியின் முக்கியப் பகுதிகள் எல்லாம் புகைமூட்டமாக இருக்க, அதன் அருகில் நின்று smog selfie எடுத்து இணையதளங்களில், தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர் டெல்லி மக்கள். 

"இதனை அரசியல் பிரச்னை ஆக்காமல், நாம் அனைவரும் இணைந்து அதனைத் தீர்க்க போராடுவோம். இன்னும் சில நாட்கள் முடிந்தவரை வெளியே வராதீர்கள். வீட்டிற்குள்ளேயே இருங்கள் " எனக் கூறி அவசர கால நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளார் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால். நாம் எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு காற்று மாசுபாட்டால் தத்தளிக்கிறது தலைநகரம். டெல்லியில் நடப்பது என்ன?

இதற்கு என்ன காரணம்?

உலகின் அதிகம் காற்று மாசடைந்த நகரங்களின் பட்டியலில் டெல்லி எப்போதுமே முன்னணி இடங்களில் இருந்து கொண்டு வருகிறது. டெல்லி மட்டுமல்ல. கடந்த சில ஆண்டுகளாகவே அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன கான்பூர், லக்னோ மற்றும் வாரணாசி ஆகிய நகரங்களும், அதிகம் காற்று மாசடைந்த நகரங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இந்த வருடம் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட தரவரிசையில் 103 நாடுகளில், 3000 நகரங்களில் 11-வது இடம் பிடித்திருந்தது டெல்லி. 
இப்படி சிக்கலில் இருந்து டெல்லியின் நிலையை இந்த ஆண்டு, தீபாவளி அன்று வெடித்த பட்டாசுகள் இன்னும் மோசமாக்கி இருக்கிறது. இந்த மாதம் 2-ம் தேதி காற்று மாசின் அளவானது டெல்லியில் தீபாவளி அன்று இருந்த அளவை விட அதிகமாகி இருக்கிறது. கடந்த 17 ஆண்டு நிலவரங்களோடு ஒப்பிடுகையில், நவம்பர் 2-ம் தேதிதான் மிக அதிகம் மாசடைந்த நாள். 

காற்று மாசுபாட்டின் அளவனாது ஏர் குவாலிட்டி இன்டெக்ஸ் மற்றும் காற்றில் கலந்திருக்கும் PM 2.5 மற்றும் PM 10 துகள்களின் அளவைக்கொண்டே அளக்கப்படுகிறது. ஏர் குவாலிட்டி இன்டெக்ஸ் அளவனாது 1 - 50 அளவிற்குள் இருந்தால் மட்டுமே பாதுகாப்பான அளவு. 51 - 100 என்றால் ஏற்றுக்கொள்ளக் கூடிய அளவு. இதற்கு மேல் செல்லும் ஒவ்வொரு அளவும் மனிதர்களுக்கு ஆபத்தானதே. 401 - 500 என்ற அளவில் ஏர் குவாலிட்டி இன்டெக்ஸ் இருந்தால் மிக மிக ஆபத்தான அளவு என்று அர்த்தம். இந்த அளவு இருந்தால், அந்தப் பகுதியில் இருக்கும் மக்கள் ஏராளமான சுவாசப் பிரச்னைகளுக்கு ஆளாவர்கள். ஆனால் டெல்லியில் இந்த ஏர் குவாலிட்டி இன்டெக்ஸின் அளவு 500-ஐத் தாண்டி சென்றுவிட்டது. இன்னும் அபாய நிலையிலேயே இருக்கிறது இந்த ஏர் குவாலிட்டி இன்டெக்ஸ்.

அதேபோல காற்றில் கலந்திருக்கும் PM 2.5 மற்றும் PM 10 துகள்களின் அளவும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம். நம்மை சுற்றியுள்ள காற்றில் ஏராளமான பொருட்கள் துகள்களாக, திரவத்துளிகளாக காற்றில் மிதந்து கொண்டிருக்கும். அவற்றில் PM 10 என்பது ஒரு கனமீட்டர் காற்றில் கலந்துள்ள 2.5 - 10 மைக்ரோமீட்டர்கள் அளவுள்ள துகள்களைக் குறிக்கும். PM 2.5 என்பது ஒரு கனமீட்டர் காற்றில் 2.5 மைக்ரோமீட்டர்களுக்கும் குறைவான அளவுள்ள துகள்களைக் குறிக்கும். இதில் PM 2.5 என்பது PM 10-ஐ விட அளவில் சிறியது. ஆனால் அதிக ஆபத்தானது. 

PM 10 ஆனது சாலையில் பறக்கும் புழுதிகள், குவாரிகள் ஆகியவற்றால் ஏற்படும். PM 2.5 ஆனது வாகனப்புகை, அனல்மின் நிலையங்கள், காட்டுத்தீ, வயல்களில் தீ வைப்பது, தொழிற்சாலைகள் ஆகியவற்றின் மூலம் உருவாகும். இந்த துகள்களை நுண்ணோக்கி மூலம் மட்டுமே பார்க்க முடியும். 

PM 10 ஆனது, அளவில் பெரியது என்பதால் நமது உடலினுள் நுழையாது. சிறிய அளவிலான சுவாசப்பிரச்னைகளை மட்டுமே ஏற்படுத்தும். ஆனால் PM 2.5 ஆனது, மிகவும் சிறியது என்பதால், எளிதில் நம் உடலினுள் நுழைந்துவிடும். எனவே நுரையீரல் பிரச்னைகள், சுவாசக் கோளாறுகள், நீண்டநாள் பிரச்னைகள் எனப் பல விஷயங்களுக்கு காரணமாக இருக்கிறது இந்த PM 2.5.

டெல்லியில் நிலை என்ன?

இனி டெல்லியின் தற்போதைய நிலையினைப் பார்ப்போம். PM 2.5 மற்றும் PM 10 ஆகியவற்றின் அளவு முறையே 60 µg/m3 மற்றும் 100 µg/m3 என்ற அளவில் இருக்கலாம். டெல்லியில் PM 2.5 ஆனது, சாலை புழுதிகள் மூலம் 38 சதவீதமும், வாகனங்கள் மூலம் 20 சதவீதமும், பொருட்களை எரிப்பதால் 12 சதவீதமும், தொழிற்சாலைகள் மூலம் 11 சதவீதமும் உருவாகிறது என்கிறது ஒரு ஆய்வறிக்கை. மேலும் டெல்லியின் அண்டை மாநிலங்களான ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் பயிர்களை எரிப்பதால் உண்டாகும் மாசுகளும் டெல்லியையே பாதிக்கின்றன. அத்துடன் டெல்லியில் காற்றின் வேகம் குறைவாக இருப்பதால், துகள்கள் நீங்காமல் காற்றிலேயே மிதக்கின்றன. கூடுதலாக பதர்பூர் அனல்மின் நிலையத்தின் மாசுக்களும் டெல்லியை அசுத்தமாக்குகிறது. இதனால் நேற்றுவரை டெல்லியின் ஏர் குவாலிட்டி இன்டெக்ஸ் 500-க்கும் குறைவாக இறங்கவே இல்லை. 

டெல்லியில் காற்று மாசுபடுவதற்கு முக்கியக் காரணமாக குறிப்பிடப்படுவது வாகனங்களைத்தான். அதனை ஒழுங்குபடுத்த செயல்படுத்தப்படும் odd-even ஃபார்முலாவும் எதிர்பார்த்த அளவிற்கு பலனளிக்கவில்லை. மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி, கடந்த வாரம் PM 2.5-ன் அளவு 14 மடங்கு அதிகமாக பதிவாகியுள்ளது. உலக சுகாதார மையம் நிர்ணயித்துள்ள அளவை விடவும் 40 மடங்கு அதிகமாக இருக்கிறது. சாதாரண அளவுகளே, உடலுக்கு கடும் பாதிப்பு ஏற்படுத்தும் நிலையில், இத்தனை மடங்கு அதிகமாக இருப்பது டெல்லி மக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இருமல், மூச்சுக்குழல் பிரச்னைகள், சுவாசிப்பதில் சிரமம் என அடுத்தடுத்து அவதியுறுகின்றனர். சுவாசக் கோளாறுகளினால் அதிகமான மக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். காற்று மாசுபாட்டால் இரண்டு ரஞ்சி டிராபி போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. புதன்கிழமை வரை சுமார் 17,000 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. 

என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?

நாம் உயிர்வாழ முக்கியமான காரணிகளில் ஒன்று காற்று. அதிலேயே இத்தனை நச்சுக்கள் என்பது நிச்சயம் உடலுக்கும், உயிருக்கும் நன்மை பயக்கக் கூடியதாக அமையாது. வருடத்திற்கு 10,000 பேர் முதல் 30,000 பேர் வரை காற்று மாசுபாட்டினால் இறக்கின்றனர் என்கிறது அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம். உலகம் முழுக்க வருடத்திற்கு 5 வயதுக்கு உட்பட்ட 6,00,000 குழந்தைகள் காற்று மாசுபாட்டால் இறக்கின்றனர் என்கிறது யுனிசெஃப். சுவாசப் பிரச்னைகள், நீண்டகால நுரையீரல் பாதிப்புகள், மன ரீதியான பிரச்னைகள் என இவற்றால் எதிர்கொள்ள வேண்டியவை அதிகம் இருக்கின்றன. குழந்தைகளும், முதியோர்களும் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.

என்ன செய்கிறது அரசு?

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்திருக்கும்  அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் சில உடனடி நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நாளை வரை டெல்லி பகுதியில் இருக்கும் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை வரை அனைத்து கட்டுமானப் பணிகள் மற்றும் இடிப்புப் பணிகள் ஆகியவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகள் மற்றும் அவசரகால நிலையை தவிர, டீசல் ஜெனரேட்டர்கள் பயன்படுத்த 10 நாட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யும் காலனிகளுக்கு மின்சார வசதி வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது. பதர்பூர் அனல்மின் நிலையத்தை தற்காலிகமாக மூடவும், சாலைகளில் தண்ணீர் தெளித்து மாசின் அளவைக் குறைக்கவும் முடிவு செய்துள்ளது. மேலும் மக்களை முடிந்தவரை வீடுகளுக்கு உள்ளேயே இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது மாநில அரசு. தேவைப்பட்டால் மீண்டும் குறுகிய காலத்திற்கு வாகனங்களுக்கு odd-even திட்டத்தை அமல்படுத்தவும் இருக்கிறது. பொதுமக்கள் ஒருபுறம் ஏர் மாஸ்க், ஏர் பியூரிஃபயர்கள் என தூயகாற்றிற்கு தங்களால் முடிந்தவற்றை செய்து வருகின்றனர்.

இன்று டெல்லி..நாளை சென்னை?

டெல்லிக்கு இதுபோன்ற பிரச்னைகள் முதல்முறையல்ல.கடந்த ஆண்டும் இதேபோல மோசமான  நிலையை சந்தித்தது. ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் டெல்லியின் மாசுக்கள் அப்படியே தங்கிவிடுவதுதான் முதல் சிக்கல். அத்துடன் தீபாவளி அன்று வெடிக்கும் பட்டாசுகள் கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது. சென்னைக்கும் கிட்டத்தட்ட இதே நிலைதான். தீபாவளி அன்று வெடித்த பட்டாசுகள் மற்றும் வாகனங்கள் ஆகியவை நகரின் காற்றை அசுத்தப்படுத்தின. ஆனால் அன்றைய இரவே சென்னைக்கு கைகொடுத்தது பருவமழை. இந்த வருடம் தீபாவளி அன்று, சென்னையின் மாசு அளவினைக் கீழே உள்ள பட்டியலில் காணலாம். இந்த அளவிற்கு மாசு ஏற்பட்டிருந்தாலும், அது தங்காத வகையில் நமக்கு கைகொடுத்திருக்கிறது மழை.

2016 தீபாவளி சென்னை

வ.எண் இடங்கள் 24/10/2016 (தீபாவளிக்கு முன்பு) 29/10/2016 (தீபாவளி அன்று)
RSPM (µg/m3) RSPM (µg/m3)
1 திருவல்லிக்கேணி 75 177
2 பெசன்ட் நகர் 90 102
3 நுங்கம்பாக்கம் 104 178
4 சௌகார்பேட்டை 101 178
5 தியாகராயநகர் 126 113

 

"தீபாவளி அன்று இரவு 2.30 மணிக்கே இங்கு பருவமழை துவங்கிவிட்டது. இதனால் தீபாவளி அன்று ஏற்பட்ட மாசுக்கள் அனைத்தும் தேங்காமல், குறைந்துவிட்டது. மழை மட்டுமல்ல. காற்று வீசினால் கூட இந்த மாசுக்கள் தங்காமல் சென்றுவிடும். எனவே டெல்லியின் நிலைமையும், சென்னையின் நிலைமையும் வேறு வேறு ஆகிவிட்டது. ஒருவேளை மழையோ, காற்றோ இல்லாமல் போயிருந்தால், இங்கும் காற்றில் மாசின் அளவு குறையாமல் இருந்திருக்கலாம்" என்கிறார் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன்.

டெல்லியைப் போலவே சென்னையிலும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. தினந்தோறும் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. நீண்டகால தீர்வை நோக்கி முன்னேறாமல் அந்தந்த நேரங்களில் மாசின் அளவைக் குறைக்க மட்டுமே டெல்லி அரசு முயற்சி செய்கிறது. நாம் இயற்கையை மாசுபடுத்தும் வேகத்திற்கு, சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னைகள் வருங்காலங்களில் இன்னும் விஸ்வரூபம் எடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். எனவே டெல்லியை பாடமாகக் கொண்டு, முதலிலேயே இதற்கு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், சென்னையும் செயற்கை சுவாசம் எடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை!

 

 

- ஞா.சுதாகர்.
 

 

எடிட்டர் சாய்ஸ்