Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது... மாற்று என்ன? மத்திய அரசின் விளக்கம்!

ந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகளுக்கும், ஆயுதம் மற்றும் போதைப் பொருள் கடத்தலுக்கும் பெரிதும் கள்ளநோட்டுகள்தான் உதவுகின்றன. அதோடு கருப்புப் பணப்புழக்கமும் இந்தியாவின் பொருளாதாரத்துக்கு நிகராக ஊடுருவி இருக்கிறது. இந்த இரண்டு விஷயங்களுக்காக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுப் புழக்கத்தைக் கட்டுப்படுத்த இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான திட்டம் கடந்த சில மாதங்களாகத் தயாரிக்கப்பட்டு ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி நவம்பர் 8-ம் தேதி இரவு அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, நிதித்துறை அமைச்சகத்தின் பொருளாதாரப் பிரிவு இந்த திடீர் அறிவிப்பு ஏன்? எதற்காக? இதை எப்படி சமாளிப்பது என்பது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ’இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் நல்ல நோட்டுகளில் 10 சதவிகிதம்  500 மற்றும் 1000 ரூபாய்  கள்ள நோட்டுகளே. சாதாரண மக்களுக்கு அவை நல்ல நோட்டுகளைப் போலவே தெரியும். அந்த அளவுக்கு திறமையாக அச்சடிக்கப்பட்டு இருக்கின்றன. கள்ளநோட்டுகளின் வழியேதான் தீவிரவாதமும், போதைப் பொருள் மாஃபியாவும் வளர்ந்து வருகின்றன. ஊழல் ஒழிப்புத் துறை மூலம், கடந்த சில வருடங்களாக கருப்புப் பண முதலைகளிடம் இருந்து மீட்கப்பட்ட தொகையும் 500, 1000 ரூபாய் நோட்டுகளாகவே இருந்து இருக்கிறது. 2011 மற்றும் 2016-க்கு இடைப்பட்ட காலங்களில் வங்கிகளில் புழக்கத்தில் இருந்துவந்த தொகை 40% அதிகரித்து உள்ளது. அதில் 500 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் 76%, 1000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் 109% இந்த இடைப்பட்ட காலத்தில் அதிகரித்து இருக்கிறது. இதன் தொடர்ச்சியாகத்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது’. 

‘புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் வருகிற 10-ம் தேதியில் இருந்து வங்கிகளில் கிடைக்கும். 2000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் தொடர்ச்சியாக ரிசர்வ் வங்கியின் மூலம் கண்காணிக்கப்படும். புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நோட்டுகளின் வடிவமைப்பு, நிறம், அளவு எல்லாம் ஏற்கெனவே புழக்கத்தில் இருக்கும் நோட்டுகளின் அமைப்பில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்படி திட்டமிடப்பட்டு உள்ளது’.

‘உலக வங்கியின் ஜூலை 2010-ன் கணக்குப்படி, இந்தியாவின் நிழல் பொருளாதாரம் 1999-ம் ஆண்டின் மொத்த ஜி.டி.பி.,யில் 20.7% இருந்து 2007-ம் ஆண்டு 23.2% அதிகரித்து உள்ளது. இந்திய பொருளாதாரத்துக்கு நிகராக வளரும் இந்த நிழல் பொருளாதாரத்தின் வளர்ச்சி, இந்தியாவின் வளர்ச்சியைப் பாதிக்கும், பணவீக்கத்தை ஏற்படுத்தும். இதனால், சமூகத்தில் இருக்கும் மற்றவர்களை விட, ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் . அதோடு சேர்த்து இந்திய மக்களின் நலனுக்காகச் செலவிடப்படும் தொகையிலும் தொய்வு ஏற்படும்’.

நிழல் பொருளாதாரம் என்றால் என்ன ?
ஒரு நாட்டின் அதிகாரப்பூர்வ பொருளாதாரத்தோடு இணைந்த அறிவிக்கப்படாத சட்டவிரோத பொருளாதார நடவடிக்கைதான் நிழல் பொருளாதாரம். இது தகுந்த நடவடிக்கைகளால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்.

‘கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அரசு கறுப்புப்பணத்துக்கு எதிராகப் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக சிறப்புப் புலனாய்வுப்பிரிவு, கணக்கில் வராத வெளிநாட்டு சொத்துகள் குறித்த சட்ட வரைவு, சுவிட்சர்லாந்து வங்கிகளிடம் இருந்து கருப்பு பணத்தை பதுக்கி இருப்பவர்களின் பட்டியலைப் பெறுதல், டிஜிட்டல் முறையிலான பண வர்த்தகத்தை ஊக்கப்படுத்துதல் போன்றவை குறிப்பிடத்தக்கவை’.

அந்த நடவடிக்கைகளில் ஒன்றுதான் தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் இந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுதல். இதை அமல்படுத்தும்போது மக்கள் எந்தவித துன்பத்துக்கும் ஆளாகாதவாறு சில வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன:

1. டிசம்பர் 30-ம் தேதிக்கு முன்னரே, தற்போது கையில் இருக்கும் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிக்கணக்குகளில் நேரில் சென்று செலுத்தலாம் அல்லது வங்கிகளிலோ, தபால் அலுவலகங்களிலோ கொடுத்து மாற்றிக்கொள்ளலாம். 

2. 4000 ரூபாய் வரையிலான கையிருப்புத் தொகையை வங்கிகளில் நேரடியாகச் சென்று மாற்றிக்கொள்ளலாம். இந்த வரம்பு 15 நாட்களுக்கு மட்டுமே. அதற்குப்பிறகு இந்த வரம்பு மாற்றி அமைக்கப்படும்.

3. நேரடிப் பணவர்த்தனை இல்லாத செக், டி.டி.,கிரெடிட் கார்டு/ டெபிட் கார்டு, ஆன்லைன் மூலம் பணம் செலுத்துதல் போன்றவற்றை எப்போதும் போல செயல்படுத்தமுடியும்.

4. ஏ.டி.எம் மூலம் நவம்பர் 18-ம் தேதி வரை அதிகபட்சத் தொகையாக 2000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும். நவம்பர் 19-ம் தேதிக்குப் பிறகு, 4000 ரூபாய் வரை எடுக்கலாம்.

5. அடுத்த இரண்டு நாட்களுக்கு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் அரசு மருத்துவமனைகள், ரயில், பஸ் மற்றும் விமான டிக்கெட் நிலையங்கள், பெட்ரோல் பங்குகளில் செலுத்த முடியும்.

6.  கையிருப்புத் தொகை எவ்வளவாக இருந்தாலும் வங்கிக் கணக்குகளில் செலுத்த முடியும். அதற்கு KYC எனப்படும் know your customer படிவத்தை நீங்கள் பூர்த்தி செய்து இருக்க வேண்டும். இல்லையென்றால் ஐம்பது ஆயிரம் (50,000) ரூபாய் வரை மட்டுமே உங்களால் செலுத்த முடியும்.

7. வங்கிகளில் நீங்கள் பணம் செலுத்தும்போது அதற்கு உண்டான வழிமுறைகளோடு தகுந்த அடையாள அட்டையையும் சமர்ப்பிக்க வேண்டும்.

8. நவம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் ஏ.டி.எம்.,களில் இருந்து பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை எடுத்துவிட்டு, புதிய ரூபாய் நோட்டுகள் வைப்பதற்காக இரண்டு நாட்கள் ஏ.டி.எம்.,கள் மூடப்படும்.

- மா.அ.மோகன் பிரபாகரன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ