Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

"ஜெயலலிதாவும், மூன்று ஆயிரம் ரூபாய் நோட்டுகளும்...!" மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 20

இந்தத் தொடரின் முந்தைய பகுதிகளைப் படிக்க கீழுள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்

பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 | பகுதி 5 | பகுதி 6 | பகுதி 7 | பகுதி 8 | பகுதி 9| பகுதி 10 | பகுதி 11 | பகுதி 12 | பகுதி 13 | பகுதி 14 |பகுதி 15 | பகுதி 16 | பகுதி 17 | பகுதி 18 | பகுதி 19

 

 

 

விதை விருட்சமாக நீரின் தீண்டல் தேவைப்படுகிறது. ஆகாயத்திலிருந்து விழும் நீர், மண்ணை ஊடுருவி, விதையை முத்தமிட்டால்தான் விதை உயிர்த்தெழும். இந்த பிரபஞ்சத்திலிருந்து மனிதன் தனித்தவன் இல்லை என்னும் போது, இந்த விதி அவனுக்கும் பொருந்தும்தானே...? இங்கே எல்லோருக்குள்ளும் திறமை கொட்டிக் கிடக்கிறது, அந்த திறமையைக் கண்டறிந்து அவனுக்கு வாய்ப்பளிக்க... அவனை கைதூக்கி விட, யாரோ ஒருவர் ஊக்கியாக இருக்க வேண்டி இருக்கிறது. ஜெயலலிதாவுக்கு அப்படியானவராக இருந்தவர் தான் ஸ்ரீதர். ஜெயலலிதாவை ஸ்ரீதர் தான் அறிமுகப்படுத்தினார் என்று சொல்லவில்லை... ஆனால், அவர்தான் ஜெவுக்கு  ‘ஜெ... ஜெ...’ என பெரும் வெற்றியைப் பரிசாக தந்தார்.

 ‘அன்று சிந்திய ரத்தம்’ என எம்.ஜி.ஆரை கதாநாயகனாக வைத்து ஸ்ரீதர் ஒரு படம் துவங்கி இருந்தார். ஆனால், பல்வேறு காரணங்களால் அந்தப் படம் முதல் ஷெட்யூலோடு நின்று விட்டது. அந்தப் படம் ஏன் நின்றது? என்ற எந்த காரணமும் எம்.ஜி.ஆரின் ரசிகர்களுக்குத் தெரியாது. அவர்கள் ஸ்ரீதரினால் தான் படம் நின்றது என்று நினைத்து விட்டனர். அவர் மீது கடுமையான கோபத்தில் இருந்தனர். இத்தகைய சூழலில் தான், ‘வெண்ணிறை ஆடை’ படம் வெளியாகிறது. கடும் கோபத்தில் இருந்த ரசிகர்கள், அந்தப் படம் வெளியான தியேட்டர்களை எல்லாம் தாக்கத் துவங்கினர்... பதாகைகளை எல்லாம் கிழிக்கத் துவங்கினர்.  பின்னர் இந்த விஷயத்தில் எம்.ஜி.ஆர் நேரடியாக தலையிட்டார். ரசிகர்களுக்கு ‘அன்று சிந்திய ரத்தம்’  திரைப்படம் குறித்த பிரச்னையை விளக்கி, அமைதிப்படுத்தினார். ஜெ-வுக்கு உண்மையில் தமிழ் சினிமாவில் அதிரடியான அறிமுகம் தான்...!

ஸ்ரீதர் - ஜெ கருத்து வேறுபாடு:

ஸ்ரீதர் துவக்கத்தில் ஜெயலலிதா மீது அதிக ப்ரியம் கொண்டவராகத் தான் இருந்தார். அதற்குக் காரணம் ஜெயாவின் நடிப்புத் திறன். இதுகுறித்து ஸ்ரீதரே பின் ஒரு பேட்டியில் பகிர்ந்தார். அவர் வார்த்தைகளிலிருந்தே, “காதல், இன்பம், துன்பம், சிரிப்பு, அழுகை இப்படி பல வகையான பாவங்கள் உள்ள கேரக்டராய் இருந்தாலும், ஒரே தடவை சொல்லிக் கொடுத்தால் போதும். நாம் நினைத்தை விடவும் நன்றாக நடித்து விடுவார். நல்ல திறமையுள்ள, எல்லா வகையான பாத்திரங்களையும் ஏற்று நடிக்கும் ஆற்றல் உடையவர் என்பதை பல படங்களில் அவர் நிரூபித்து வருகிறார்” என்று ஜெ பற்றி பகிர்ந்திருக்கிறார்.

ஆனால், எல்லாவற்றையும் சுழற்றி அடிக்கும் காலம்... இந்த அன்பையும்... ப்ரியத்தையும் சிதைத்துப் போட்டது. ஆம், இவர்கள் இருவரும் பின்னாளில், மிக மோசமாக பொது வெளியில் சண்டை போட்டுக் கொண்டார்கள்.

1996-ம் ஆண்டுதான் அந்த சம்பவம் நடந்தது. ஸ்ரீதர் உடல்நலக்குறைவினால் அவதிப்பட்டு வந்தார். அவரை திரைக் கலைஞர்கள் எல்லோரும் சந்தித்து நலம் விசாரித்து வந்தனர். ஆனால், ஜெயலலிதா செல்லவில்லை. இந்த வருத்தங்களை பொதுவெளியில் பகிர்ந்து விட்டார்...
“தெரிஞ்சவங்களுக்கு உடல்நிலை சரியில்லைன்னா, நேர்ல போய் விசாரிப்பது எல்லோருக்கும் தெரிஞ்ச நாகரிகம். இதை ஜெயலலிதாகிட்ட எதிர்பார்த்தேன்... ஏமாற்றி விட்டார்... கான்வென்ட் படிப்பு அவங்களுக்கு இவ்வளவுதான் சொல்லிக் கொடுத்திருக்கு போல.... அவங்க நடிச்ச அந்த கன்னட படத்தோடு அப்படியே விட்டிருந்தா... அவங்க தமிழக முதல்வர் ஆகி இருப்பாங்களா..?” என்று பகிர்ந்து விட்டார் ஸ்ரீதர்.

ஜெயலிதாவுக்கு கோபம் காட்டாற்று வெள்ளமாக வந்தது.... அந்தக் கோபத்தை வார்த்தைகளாக மாற்றி ஒரு கடிதம் எழுதினார். அதில், “திரு. ஸ்ரீதர்தான் என்னை தமிழ்த் திரை உலகுக்கு அறிமுகப்படுத்தினார். மறுக்கவில்லை மறக்கவும் இல்லை... ஆனால், அதனால்தான் நான் பேரும் புகழும் பெற்றேன் என்று அவர் கூறுவதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது.  திரு. ஸ்ரீதர் அறிமுகப்படுத்திய புதுமுக நடிகைகளில் எத்தனை பேர் முதலமைச்சராகி இருக்கிறார்கள்... எத்தனை பேர் அரசியலில் பிரவேசித்து இருக்கிறார்கள்...?” என்று காட்டமாகவே அந்தக் கடிதத்தை எழுதி இருந்தார்.  இப்படியாக இருவருக்குள்ளும் பெரும் விரிசல் வந்தது.

 

“இப்போது ஏன் இந்த வரலாறு.” என்கிறீர்களா... ? ஜெயலலிதாவை நீங்கள் முழுவதுமாக புரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புவீர்களாயின், ஜெ. ஏன் அரசியலில் தடாலடியாக முடிவுகளை எடுக்கிறார் என்று கேட்பீர்களாயின்... நீங்கள் இந்த நிகழ்வுகளை தெரிந்து கொள்ளத்தான் வேண்டும்.  ஆம், இதுதான்  ‘ஜெ...!’. தன்னை தமிழில் அறிமுகப்படுத்தினார் என்பதற்காக ஸ்ரீதரிடம், அவர் கோபத்தை வெளிக்காட்டாமல் இருக்கவில்லை. தான் என்ன நினைத்தாரோ அதைப் பேசினார். அதன் விளைவுகள் குறித்து கவலை அவர் கொள்ளவில்லை... இந்தப் பழக்கம்தான் அவர் அரசியல் வாழ்க்கையிலும் தொடர்ந்தது.

இது சரியா? தவறா? என்று தர்க்கம் செய்ய இதை பகிரவில்லை... ஜெயலலிதா எப்போதுமே இப்படியாகத் தான் இருக்கிறார், பிம்பங்கள் எதுவும் இல்லாமல் அவரை அவர் சுயத்துடன் புரிந்துகொள்ள தான் இந்த நிகழ்வு.

ஹூம்... சொல்ல மறந்து விட்டேன்... ஜெயலலிதா 'வெண்ணிற ஆடை' படத்துக்காக சம்பளமாக பெற்றது மூன்று ஆயிரம் ரூபாய் நோட்டுகள்.... ஆம், தமிழ் சினிமாவில் அவர் பயணம் இந்த மூன்றாயிரத்திலிருந்து தான் துவங்கியது. இதிலிருந்து துவங்கியவர்தான் பின்னர், எம்.ஜி. ஆர் துவங்கிய சத்துணவுத் திட்டத்துக்கு சர்வ சாதாரணமாக நாற்பதாயிரம் ரூபாய் நன்கொடையாக கொடுக்கும் அளவுக்கு வளர்ந்தார். பின்னாளில், அவரே முதல்வராகப் பொறுபேற்ற பின்னர் வெறும் ஒரு ரூபாயை சம்பளமாக பெற்றார்.

 ‘சேவல் - புறா மோதல்’

சென்ற அத்தியாயத்தில் எங்கு விட்டோம்... ம்ம்ம்ம்..... தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்ட இடத்தில் தானே...?  குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டு வரப்பட்டால், ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பது சட்டவிதி. அதன்படி 1989-ல், அ.தி.மு.க இரண்டாக உடைந்து தேர்தலைச் சந்தித்தது. ஜானகி தலைமையில் ஒரு அணியும்... ஜெயலலிதா தலைமையில் ஒரு அணியும்...  தேர்தல் சின்னமாக ஜானகி அணிக்கு இரட்டைப் புறாவும், ஜெ. அணிக்கு சேவலும் ஒதுக்கப்பட்டிருந்தன. ஜானகி அணியில் பெரும் தலைகள் எல்லாம் இருந்தனர். ஜெயலலிதா அணியில் அப்படி யாரும் இல்லை. ஜெயலலிதாவுக்கு இது வாழ்வா... சாவா யுத்தம்...? அவர் அணி வெற்றி பெற்றே ஆக வேண்டும். அப்போதுதான் தன் இருப்பு இங்கு நீடித்திருக்கும். இல்லை என்றால் மீண்டும் துவங்கிய புள்ளியிலேயே நிற்க வேண்டும்... இதை நன்கு உணர்ந்த ஜெயலலிதா தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் செய்தார்...  சென்ற இடங்களில் எல்லாம் திரண்ட கூட்டம் அவருக்கு உற்சாகத்தைத் தந்தது. எம்.ஜி.ஆர் ரசிகனும்... தொண்டனும் தன் பக்கம் தான் இருக்கிறான் என்பதை உணர்ந்தார். இது அவர் நம்பிக்கைக்கு உரமேற்றியது.

ஜானகி அணிக்கு இது அச்சத்தை விதைத்தது. அவர்கள் பிரசார மேடையில் மோசமான வார்த்தைகளால் ஜெயலலிதாவை விமர்சிக்கத் துவங்கினர். ஜெயலலிதாவும் ஜானகியை விமர்சித்தார். அது எல்லைமீறிச் சென்றது... ஒரு கட்டத்தில் ஜெயலலிதா, “எம்.ஜி,ஆரை, ஜானகிதான் மோரில் விஷம் கலந்து கொடுத்து கொன்றார்” என்றார். இது பல அதிர்வுகளை கிளப்பியது. உடனடியாக அப்போது ஆளுநராக இருந்த பி.சி. அலெக்ஸாண்டர் தலையிட்டார்.... “நான் மருத்துவர்களிடம் விசாரித்தேன்... விஷத்தால் எம்.ஜி.ஆர் மரணிக்கவில்லை" என்று தெரிவித்து, ஜெ - ஜா அணியினரின் வார்த்தை யுத்தத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

சேவலுக்கும் - இரட்டைப் புறாவுக்கும் நடந்த யுத்தத்தில்.... சேவல் வென்றது...!

(தொடரும்)

- மு. நியாஸ் அகமது

 

இந்தத் தொடரின் முந்தைய பகுதிகளைப் படிக்க கீழுள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்

பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 | பகுதி 5 | பகுதி 6 | பகுதி 7 | பகுதி 8 | பகுதி 9| பகுதி 10 | பகுதி 11 | பகுதி 12 | பகுதி 13 | பகுதி 14 |பகுதி 15 | பகுதி 16 | பகுதி 17 | பகுதி 18 | பகுதி 19

இந்த தொடரின் அடுத்த பகுதியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close