Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சாமானியர்கள் பற்றியும் கொஞ்சம் யோசித்திருக்கலாம் ! #500 #1000

ரு அரசின் செயல்பாடுகளை மதிப்பிட வேண்டும் என்றால், அரசியல், சமூகம், அரசு நிர்வாகம், பொருளாதாரம் என நான்கு விதமாக நீங்கள் மதிப்பிடலாம். அப்படி பார்த்தால் மோடி தலைமையிலான மத்திய அரசு, பொருளாதாரம் தவிர மற்ற மூன்றிலும் கடுமையான விமர்சனங்களை எதிர் கொண்டது. தலித் விவகாரம், மாட்டுக்கறி விவகாரம், ரோகித் வெமூலா பிரச்னை,  சமஸ்கிருத திணிப்பு, காஷ்மீர், பாகிஸ்தான் பிரச்னைகள், இந்துத்துவா, ஆர்.எஸ்.எஸ். பின்னணி என பல விவகாரங்களில் கடுமையான விமர்சனங்களை மோடி அரசு சந்தித்தது. ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் பி.ஜே.பி. அரசு மீது கடுமையான விமர்சனங்களையே முன் வைத்து வந்தன.

ஆனால் பொருளாதார பார்வையில், மோடி அரசு கடுமையான விமர்சனங்கள் எதையும் சந்திக்கவில்லை என்றே சொல்லலாம். இந்த நேரத்தில் 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்ததன் மூலம் மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையை எடுத்தது மோடி அரசு. கடந்த 8ம் தேதி நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, இதற்கு முன்னர் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 2005க்கு முன்னர் அச்சிடப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டபோது, அது இதுபோன்ற பெரும் பரபரப்பை ஏற்படுத்தவில்லை. காரணம் அப்போது ரிசர்வ் வங்கியால் பத்திரிகை செய்தியாக அது வெளியிடப்பட்டது. ஆனால் தற்போது மோடியே தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தன் மூலம் இதன் முக்கியத்துவம் அதிகரித்திருப்பதை மறுக்க முடியாது. செல்லாது என்ற அறிவிப்போடு, கறுப்பு பணத்தை ஒழிக்கும் இந்த முயற்சிக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டுமென கோரினார். மக்கள் தங்களுக்கு ஏற்படும் சிரமத்தை பொறுத்துக்கொள்ள வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்தார். நாட்டின் நலனை காக்கும் முயற்சியாகவே பெரும்பான்மையானோரால் பார்க்கப்பட்டது.

நினைத்தது ஒன்று... நடந்தது ஒன்று !

500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்ட அரசு உத்தரவுக்கு எதிராக பேசினால் அவர்கள் நாட்டின் நலனுக்கு எதிரானவராக கருதப்பட்டார்கள். 'நான் ஏன் பணமில்லாமல் அலைய வேண்டும். நான் ஏன் வங்கி முன் காத்திருக்க வேண்டும்' என கேள்வி எழுப்பியவர்கள் கூட தேசத்தின் மீது அக்கறை இல்லாதவர்களாக பார்க்கப்பட்டனர். சாமானிய மக்கள் கூட இவ்வாறே நினைத்திருந்தார்கள். 'இதனால் கறுப்பு பணம் முற்றிலும் ஒழியும். பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் அளவில்லா நெருக்கடிக்கு உள்ளாவர்கள். பணக்காரர்கள் தங்கள் ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கி வாசலில் காத்து கிடப்பார்கள்' என எல்லாம் சொல்லப்பட்டது. எதிர்பார்க்கப்பட்டது. மக்களும் இதை முழுமையான நம்பினார்கள்.

ஆனால் நடந்தது தலைகீழாக. தங்களிடம் கட்டு கட்டாக இருக்கும் பணத்தை மாற்றிக்கொள்ள வரிசையில் நிற்பார்கள் என கருதப்பட்ட யாரும் வரிசையில் நிற்கவில்லை. மாறாக ஒரு சில நோட்டுகளை வைத்து வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்த சாமானியர்கள் தான், செலவுக்கு பணமில்லாமல் வங்கி வாசலில் காத்துக்கிடந்தார்கள். வங்கியில் உள்ள பணத்தை எடுக்க முடியாமல், எங்கேயாவது ஏ.டி.எம். மையம் திறந்திருக்குமா? அந்த ஏ.டி.எம்.மில் 100 ரூபாய் நோட்டுகள் இருக்காதா? என சுற்றித்திரிந்தனர்.

2 ஆயிரம் ரூபாய் நோட்டை வைத்து என்ன செய்ய...?

ஒரு நாள் வங்கி இருக்காது. 2 நாள் ஏ.டி.எம். இருக்காது. அதன் பின்னர் ஒரு நாளைக்கு 2 ஆயிரம் ஏ.டி.எம்.மில் எடுக்கலாம் என்றெல்லாம் அரசு சொன்னபோது இதனால் நமக்கு என்ன சிக்கல் வந்து விடப்போகிறது. இரண்டு நாள் தானே சமாளிப்போம் என்றே நினைத்தார்கள் மக்கள். நாட்டின் நலனுக்கு இதைக்கூடவா செய்ய மாட்டோம் என்றே சாமானியர்கள் நினைத்திருந்தார்கள். ஆனால் சாமானியர்களை குறிவைத்து தாக்கியது அரசு.

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. அதற்கு பதில் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் என சொல்லப்பட்டது. ஆனால் இன்று வரை 500 ரூபாய் நோட்டுகள் கிடைக்கப்பெறவில்லை. எங்கு பார்த்தாலும் 500, 1000 ரூபாய்களாக இருக்க, 100 ரூபாய் எங்கே கிடைக்கும் என அலைந்து திரிந்தனர். வங்கியில் இருக்கும் 500, 1000 ரூபாய்களை சேர்த்துக்கொடுத்தால் அதற்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கொடுக்கப்பட்டது. 2 ஆயிரம் ரூபாய் சில்லறை கொடுக்கும் அளவு யாரிடமும் 100 ரூபாய் இல்லை. புது நோட்டை பெற்ற திருப்தியை தவிர மக்கள் எதையும் பெற்று விடவில்லை.

100 ரூபாய்க்கு தட்டுப்பாடு எதனால் தெரியுமா?

ஏன் 100 ரூபாய் நோட்டுகள் கிடைக்கவில்லை என கேட்கிறீர்களா? நம்மிடம் இருக்கும் பணங்களில் பெரும் பகுதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் தான். சரியாக சொன்னால் நம்மிடம் இருக்கும் தொகையில் 86 சதவீதம் 500, 1000 ரூபாய் நோட்டுகள். மீதமுள்ள 14 சதவீதம் தான் 100 ரூபாயும், அதற்கு கீழ் உள்ள தொகையும். அப்படி என்றால் 86 சதவீத தொகையை வெறும் 14 சதவீத தொகையைக்கொண்டு எப்படி சமாளிக்க முடியும்?. ஏழைகள் அதிகம் வாழும் இந்தியாவில் குறைந்த மதிப்புடையை ரூபாய் நோட்டுகள் குறைவு என்பதே மிகப்பெரிய முரண். சாதாரணமாக மாதம் 5 ஆயிரம் சம்பளம் வாங்கும் தொழிலாளி, தனது ஊதியத்தை 500, 1000 ரூபாய்களில் தான் பெறுகிறார். தினமும் 100 ரூபாய்க்கு கீழ் செலவு செய்யக்கூடியவருக்கு எதற்கு 500, 1000 ரூபாய் நோட்டுகள்?. ஆனால் இதையெல்லாம் மீறித்தான் அவரிடம் இந்த நோட்டுகள் கொண்டு சேர்க்கப்பட்டன.  சாதாரண தொழிலாளிகளிடம் அதிகளவில் பெரு மதிப்பு கொண்ட தொகையை கொண்டு சேர்த்த அரசு, இப்போது கறுப்பு பண முதலாளிகளை ஒழிக்கிறேன் எனச்சொல்லி, சாமானிய மக்களை படுத்தி எடுக்கிறது.

கறுப்பு பணத்தை ஒழிப்பதை சாமானிய மக்கள் யாரும் எதிர்க்கப்போவதில்லை. ஆனால் ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்பதையும், அதற்கு மாற்று ஏற்பாடு இல்லை என்பதையும் அரசு அறியவில்லையா?. இதற்கான முன்னேற்பாடுகள் எதையும் செய்யாமல், மக்களை பெரிதும் பாதிக்கக்கூடிய அறிவிப்பை அரசு ஏன் எடுக்க வேண்டும்?. புதிய 500 ரூபாய் நோட்டுகள் வந்திருந்தால் பெருமளவு பிரச்னை தவிர்க்கப்பட்டிருக்கும். மறுநாளே வரும் என அறிவிக்கப்பட்ட 500 ரூபாயை புழக்கத்தில் விடாமல், அவசியப்படாத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை விட்டது ஏன்? வங்கிக் கணக்கில் இருந்து தங்கள் பணத்தை எடுக்க ஏ.டி.எம். மையங்கள் தான் பிரதான வழி. அப்படியிருக்க ஏ.டி.எம். மையங்கள் தங்கு தடையின்றி இயங்குவதற்கான முழு ஏற்பாட்டை செய்திருக்க வேண்டாமா? இதில் ஒன்றை கூட அரசு செய்யவில்லை என்பது தான் பரிதாபம்.

வங்கிக்கே செல்லாதவர்கள் என்ன செய்வார்கள்?

கோவையில் உள்ள ஒரு தொழிலதிபரின் உதவியாளர் ஒருவரிடம் பேசினோம். சாதாரணமாக பேசிக்கொண்டிருந்த போது, உங்கள் நிறுவன உரிமையாளருக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டிருக்குமே என கேட்டோம். "அப்படியெல்லாம் இல்லை. அவரிடம் 60 லட்ச ரூபாய் பணம் இருந்தது. 2.50 லட்சம் வரை எந்த கணக்கும் இல்லாமல் பணத்தை மாற்றிக்கொள்ளலாம். அவருக்கு நெருக்கமான ஊழியர்கள் மூலமே இந்த பிரச்னையை சமாளித்துக்கொள்ள முடியும். இதில் சிக்கல் ஏதுமில்லை," என்றார் அவர்.

மிகப்பெரிய பனியன் ஏற்றுமதி ஆலை ஒன்றில், தொழிலாளர்களுக்கு வழக்கமாக ஊதியம் வங்கி கணக்கில் செலுத்தப்படும். ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றும் அந்த நிறுவனத்தில் இந்த மாத ஊதியம் அனைத்தும் 500, 1000 ரூபாய்களாக கொடுக்கப்பட்டன. அடுத்த மாத ஊதியமும் இப்படித்தான் என்கிறார்கள். டிசம்பர் மாத ஊதியத்தை கூட முன்னரே கொடுத்து தங்களிடம் உள்ள அத்தனை 500, 1000 ரூபாய் நோட்டுகளை அவர்கள் மாற்றிக்கொள்ள முடியும் என திருப்பூரைச் சேர்ந்த நண்பர் ஒருவர் நம்மிடம் சொன்னார். உண்மையில் நீங்கள் பணக்காரர்களை, பெரு முதலாளிகளை, அரசியல்வாதிகளை வங்கிகள்  முன் பார்க்காததற்கு இதுவும் ஒரு காரணம்.

நகரத்தில் இருப்பவர்கள் கூட ஓரளவு சமாளித்துக்கொண்டார்கள் கிராமத்தில் உள்ளவர்களின் நிலை தான் பரிதாபம். கிராமங்களில் வங்கிகள், ஏ.டி.எம்.கள் எண்ணிக்கை மிக குறைவு. இருக்கும் சில ஏ.டி.எம்.களிலும் பணம் நிரப்பப்படுவதே இல்லை. இந்தியாவில் வங்கி கணக்கை கையாள்பவர்களின் எண்ணிக்கை என்பது 40 சதவீதத்துக்கும் குறைவு என்கிறது புள்ளி விவரம். சராசரியாக 9,500 பேருக்கு ஒரு வங்கி என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. இதில் மிகப்பெரும்பாலான வங்கிகள் மாநகரங்களில் தான் இருக்கின்றன. மாவட்ட ஊரக பகுதிகளில் வங்கிகளின் எண்ணிக்கை மிக குறைவு. பின் தங்கிய மாவட்டங்களின் நிலை இன்னும் பரிதாபத்துக்குரியன. இந்த மாவட்டங்களில் உள்ள மக்களின் நிலையை யோசித்தால் அச்சமே மேலோங்குகிறது.

ஒரு மணி நேரத்தில் காலியாகும் ஏ.டி.எம். !

இரண்டு நாட்களுக்கு பின்னர் ஏ.டி.எம். மையங்கள் திறக்கப்படும். ஒரு நாளைக்கு குறிப்பிட்ட தொகையை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம் என அறிவித்தார்கள். ஆனால் இன்று முதல் அது அமல்படுத்தப்படவில்லை. ஒரு ஏ.டி.எம். மையத்தில் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே பணம் கிடைக்கிறது. அதற்குள் பணம் தீர்ந்து விடுகிறது. மீண்டும் பணம் தேவை என்றால் மறுநாள் தான் நிரப்பப்படும்.

ஏன் இந்த பிரச்னை என்கிறீர்களா? நமது ஏ.டி.எம். இயந்திரங்களில் நீங்கள் 100 ரூபாயை நிரப்பினால் 2.20 லட்சம் வரை தான் நிரப்ப முடியும். பெரும்பாலும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் தான் அச்சிடப்படுகிறது என்பதால், ஏ.டி.எம். இயந்திரங்களிலும் இவைதான் அதிகளவில் இருக்கும். அதற்கேற்பவே ஏ.டி.எம். இயந்திரங்கள் அமைப்பு இருக்கிறது. தற்போது உள்ள ஏ.டி.எம். இயந்திரங்களில், இப்போதைக்கு புதிய 2000, 500 ரூபாய் நோட்டுகளை வைக்க முடியாது. அதற்கு மென்பொருள் தொழில்நுட்பத்தில் சில மாற்றங்களை செய்ய வேண்டுமாம். அதை கூட முன்னேற்பாடாக செய்து வைக்கவில்லை என்பது தான் கொடுமை. நீங்கள் சாதாரணமாக பணம் எடுக்க இன்னும் 3 வாரங்கள் ஆகும் என மிக சாதாரணமாக சொல்லி இருக்கிறது மத்திய அரசு.

பாவம் முதியவர்கள் !

ஓய்வூதியமாக பெறப்பட்ட தொகை, கொஞ்ச நஞ்ச சேமிப்பு தொகை என இருக்கும் பணத்தை மாற்ற வங்கி முன் நீண்ட நெடுநேரம் காத்திருக்கும் முதியவர்கள் நிலை தான் பரிதாபம். இந்தியாவின் சில பகுதிகளில் வங்கி முன் காத்திருந்த முதியவர்கள் இறந்த சம்பவங்களும் நடந்தன.

இந்த நடவடிக்கையால் கள்ள நோட்டுகள் ஒழியும் என்கிறார்கள். இருக்கலாம். ஆனால் கள்ள நோட்டு புழக்கத்தில் இருக்கிறது என்றால் எப்படி வெளிவரப்போகிறது?. கட்டு கட்டாக வருமா?. புழக்கத்தில் வந்த கள்ள நோட்டுகள் சாமானிய மக்களிடம் அங்கொன்று இங்கொன்றாக இருக்கும். அதை கள்ள நோட்டு என அறியாதவர்கள் வங்கியில் பணத்தை மாற்ற வந்தால் கள்ள நோட்டு கொண்டு வந்த அவர் தான் சிக்குவார். இப்படி எல்லா பாதிப்புகளும் சாமானிய மக்களையே பாதிக்கும். மொத்தமுள்ள 16 லட்சம் கோடி பணத்தில் கள்ள நோட்டு என கருதப்படுவது வெறும் 400 கோடி ரூபாய். அப்படியென்றால் அதிகம் பாதிக்கப்படுவது யார்?

இப்போது சில்லறைக்காக அலைபவர்கள், அவர்கள் கையில் உள்ள பணத்தை மாற்றிக்கொள்ள... அவர்கள் வங்கியில் உள்ள பணத்தை எடுக்க... வங்கி முன் கால் கடுக்க காத்திருக்கிறார்கள். ஏ.டி.எம். மையங்களாக அலைகிறார்கள். சொல்ல முடியாத மன உளைச்சலுக்கும், அவதிக்கும் ஆளாகின்றனர். இப்படி அலையும் சாமானியர்களில் பெரும்பாலானோர் மோடிக்கு வாக்களித்தவர்கள்.

நல்ல திட்டம் தான்... மறுப்பதற்கில்லை.... ஆனால், நீங்கள் கொஞ்சம் இந்த சாமானிய மக்களையும் மனதில் வைத்து, அதற்கேற்றவாரு கூர்மையான நடவடிக்கை எடுத்து திட்டத்தை நடைமுறைப்படுத்தி இருக்கலாம்.

- ச.ஜெ.ரவி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ