Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘துணை முதல்வரை நியமியுங்கள்!’ - ஜெயலலிதா கோரிக்கை : மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 23

இந்தத் தொடரின் முந்தைய பகுதிகளைப் படிக்க கீழுள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்

பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 | பகுதி 5 | பகுதி 6 | பகுதி 7 | பகுதி 8 | பகுதி 9| பகுதி 10 | பகுதி 11 | பகுதி 12 | பகுதி 13 | பகுதி 14 |பகுதி 15 | பகுதி 16 | பகுதி 17 | பகுதி 18 | பகுதி 19 | பகுதி 20 | பகுதி 21 | பகுதி 22

 

 

 

ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்பட்டதும், ஒரு கோஷம் கேட்டதுதானே... “முதல்வர் பூரண நலம் பெற்றுத் திரும்பும்வரை இடைக்கால முதல்வரையோ அல்லது துணை முதல்வரையோ நியமியுங்கள்” என்று. இந்தக் கோஷத்துக்காக நாஞ்சில் சம்பத் முதல் பொன்னையன் வரை கோபப்பட்டார்கள். பொன்னையன் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில், “எல்லா முடிவுகளும் ஜெயலலிதாவிடம் விவாதித்தே எடுக்கப்படுகின்றன. துணை முதல்வர் எதுவும் தேவையில்லை” என்றார். ஜெயலலிதா விவாதிக்கும் நிலையில் இருப்பது லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பியெலுக்கே தெரியாத ரகசியம். சரி... விஷயத்துக்கு வருவோம். இந்தத் துணை முதல்வர் கோரிக்கை எதுவும் அ.தி.மு.க-வுக்குப் புதிதல்ல... எம்.ஜி.ஆர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கும் ராமாபுரம் தோட்டத்துக்குமாக அலைந்துகொண்டிருந்தபோது, இதே கோரிக்கையை ஜெயலலிதாவும் வைத்திருக்கிறார்.

‘துணை முதல்வரை நியமியுங்கள்!’

ஆம். அது 1986-ம் ஆண்டு. எம்.ஜி.ஆர் உடல்நலம் சரியில்லாமல் அப்போலோ, அமெரிக்கா என்று அலைந்துகொண்டிருந்தார். அரசியல் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், அந்தச் சமயத்தில்தான் அ.தி.மு.க-வில் ஜெயலலிதா கட்டம்கட்டி வைக்கப்பட்டிருந்தார். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவை சந்திப்பதைத் தவிர்த்துவந்த காலம் அது. இதுபோன்ற சூழலில், ஜெயலலிதா அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்திக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதுகிறார். அதில், “எம்.ஜி.ஆர் உடல்நலமில்லாமல் இருக்கிறார். எனக்கு 42 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இருக்கிறது. தமிழகத்தின் நலன் கருதி என்னைத் துணை முதல்வராக நியமிக்க அழுத்தம் தாருங்கள்...” என்ற பொருளில் அந்தக் கடிதம் இருந்திருக்கிறது.

ராஜிவ் காந்தியோ, அதை தன் நம்பிக்கைக்குரிய ஒருவரிடம் கொடுத்து... எம்.ஜி.ஆரிடமே ஒப்படைத்துவிடும்படி சொல்லிவிடுகிறார். அந்தக் கடிதத்தைப் பார்த்ததும் எம்.ஜி.ஆர் அதிர்ந்தே போய்விட்டார். தன் ஆட்சிக்கும், தனக்கும் எதிராகச் செயல்பட ஜெயலலிதாவுக்கு இந்த அளவுக்குத் துணிவு வந்துவிட்டதா என்று நினைத்த அவர்... சில தினங்களில், அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளிதழான ‘அண்ணா’வில், “ஜெயலலிதாவுக்கும் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இனி அவருடன் கட்சிக்காரர்கள் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது” என்ற செய்தியை வெளியிடுகிறார்.

நாளிதழைப் பார்த்த ஜெயலலிதா, தான் அனுப்பிய பூமராங் தன்னையே மோசமாகத் தாக்கிவிட்டதை உணர்கிறார். அடுத்து என்ன செய்யலாம்...? எம்.ஜி.ஆரை எப்படிச் சமாதானப்படுத்துவது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது... ராமாவர தோட்டத்து வீட்டுச் சுவரில் ஆணி அடிக்கப்படுகிறது. ஆம், இந்தத் துரோகச் செயல் நினைவிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக அந்தக் கடிதத்தை ஃப்ரேம் செய்து தன் வீட்டில் மாட்டுகிறார் எம்.ஜி.ஆர்.

இந்தச் சம்பவம் குறித்து இன்னொரு விதமாகவும் சொல்கிறார்கள், ‘‘அந்தக் கடிதத்தையே அவர் காங்கிரஸ் தூண்டுதலின் பேரில்தான் எழுதினார்’’ என்று. அதாவது, ‘‘ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும்போது கொல்லைப்புறம் வழியாக, தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றத் துடிக்கிறது’’ என்கிறார் அல்லவா ஸ்டாலின். அதுபோல அப்போது காங்கிரஸ், எம்.ஜி.ஆரின் உடல்நலக் கோளாறைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள விரும்பியது என்கிறார்கள். அதாவது, ஜெயலலிதாவைத் தூண்டிவிட்டு, அவரை துணை முதல்வராக்கி, பின் கூட்டணி ஆட்சியைக் கொண்டு வரவிரும்பியது. ராஜிவ் காந்தியும் இதற்காக அழுத்தம் தந்தார்  என்கிறார்கள். இதுகுறித்து 1988-ம் ஆண்டு அட்டர்சந்த் எழுதி வெளிவந்த, ‘M.G.Ramachandran : My Blood Brother’ என்ற புத்தகமும் விரிவாகப் பேசுகிறது.

ஜெயலலிதா அந்தக் கடிதத்தை, காங்கிரஸ் அழுத்தம் தந்து எழுதினாரா... இல்லை, சுயமாகவே எழுதினாரா என்று தெரியவில்லை. எது எப்படியோ..? ‘துணை முதல்வரை நியமியுங்கள்’ என்ற கோஷம் தமிழக அரசியலுக்கு புதிதல்ல... அதுவும் குறிப்பாக அ.தி.மு.க-வுக்கு!

‘களேபரமான சட்டமன்றம்!’

ஜெயலலிதா ராஜினாமா கடிதம் தொடர்பாக, ஜெ-வுக்கும், தி.மு.க-வுக்கும் ஏற்பட்ட உரசல்களைப் பார்த்தோம்தானே... அது, அடுத்தகட்டத்தை எட்டியது. 1989-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி, நிதித்துறையைத் தன்னிடம் வைத்திருந்த முதல்வர் கருணாநிதி பட்ஜெட் உரையைப் படிப்பதற்காக எழுந்தார். அவர் பேசத் தொடங்குவதற்கு முன்பே... ஒரு காங்கிரஸ் உறுப்பினர் எழுந்து, ‘‘ஜெயலலிதா விஷயத்தில், தமிழக காவல் துறை ஜனநாயகமற்ற முறையில் செயல்படுகிறது. இது, சட்டமன்ற உறுப்பினரின் சிறப்புரிமையை மீறுவதாகும். உள்துறையைக் கையில் வைத்திருக்கும் கருணாநிதிதான் இதற்குக் காரணம். இதுகுறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும்’’ என்கிறார். ஜெயலலிதாவும் உடனே எழுந்து, ‘‘என் தொலைபேசி உரையாடல்களும் ஒட்டுக் கேட்கப்படுகின்றன. முதல்வர், தன் அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்துகிறார். அரசு, தனி மனித சுதந்திரத்தில் தலையிடுகிறது. இதுகுறித்து விவாதிக்க வேண்டும்’’ என்று சட்டமன்றத்தில் கோஷமிடத் தொடங்கினார்.

 

சபாநாயகர், “இன்று பட்ஜெட் விவாதம் இருக்கிறது. இதுகுறித்து இன்று விவாதிக்க வேண்டிய தேவையில்லை” என்கிறார். சட்டமன்றத்தில் உஷ்ணம் பாய்கிறது. அ.தி.மு.க உறுப்பினர்கள், சட்டமன்றத்தின் மையத்துக்கு வந்து கோஷம் போடத் தொடங்குகிறார்கள். ஜெயலலிதா, “கிரிமினல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர், பட்ஜெட் உரையைத் தாக்கல் செய்யக் கூடாது” என்கிறார். தி.மு.க உறுப்பினர்கள் ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மோசமாகக் கத்தத் தொடங்குகிறார்கள். ஓர் அ.தி.மு.க உறுப்பினர் கருணாநிதி மீது மோத, அவரின் மூக்குக் கண்ணாடி கீழே விழுகிறது. உடனடியாக தி.மு.க உறுப்பினர்கள் கருணாநிதியைச் சூழ்ந்து காக்கிறார்கள்.  இருபக்கமிருந்தும் மைக்குகளை, சேர்களைத் தூக்கி எறிவது என சண்டை தொடங்குகிறது. ஓர் அ.தி.மு.க உறுப்பினர் கருணாநிதி கையில் வைத்திருந்த பட்ஜெட் உரையைக் கைப்பற்றிக் கிழிக்கிறார். தி.மு.க உறுப்பினர் புத்தகங்களை ஜெயலலிதா மீது எறிகிறார். சட்டமன்றம், ‘சண்டை’மன்றம் ஆனது. சபாநாயகர், அவையைத் தள்ளிவைக்கிறார்.

சட்டமன்றத்துக்கு வெளியே ஜெயலலிதா கண்ணீரும் கம்பலையுமாக வெளியே வருகிறார். ‘‘தி.மு.க உறுப்பினர்கள் என் புடவையை இழுத்தார்கள். இந்தச் சட்டமன்றத்தில் பெண்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. சட்டமன்றம் எப்போது பெண்களுக்குப் பாதுகாப்பானதாக மாறுகிறதோ... அப்போதுதான் சட்டமன்றத்துக்குள் வருவேன்” என்கிறார் கண்ணீருடன்.

அடுத்தநாள் எல்லா நாளிதழ்களிலும், இதுதான் தலைப்புச் செய்தியாகிறது. ஜெயலிதாவை தன் அண்ணியாகப் பார்த்த எம்.ஜி.ஆர் ரசிகன், வெகுண்டெழுகிறான். பெண்கள், இதை தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகப் பார்க்கிறார்கள். தமிழகமெங்கும் ஜெயலலிதாவுக்கு ஆதரவு பெருகத் தொடங்குகிறது.

முதலில் கட்சியைக் கைப்பற்றிய ஜெயலலிதா, அடுத்து ஆட்சி அதிகாரங்களைக் கைப்பற்றுவதற்கான காய்களை நகர்த்தத் தொடங்கிறார். முன்பே கருணாநிதி, ‘ஜெயலலிதாவை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது’ என்று கணித்திருந்தார். இப்போது அவருக்கு, தன் கணிப்பு எவ்வளவு சரி என்று புரியத் தொடங்குகிறது.

(தொடரும்)

 - மு. நியாஸ் அகமது

இந்தத் தொடரின் முந்தைய பகுதிகளைப் படிக்க கீழுள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்

இந்த தொடரின் அடுத்த பகுதியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 | பகுதி 5 | பகுதி 6 | பகுதி 7 | பகுதி 8 | பகுதி 9| பகுதி 10 | பகுதி 11 | பகுதி 12 | பகுதி 13 | பகுதி 14 |பகுதி 15 | பகுதி 16 | பகுதி 17 | பகுதி 18 | பகுதி 19 | பகுதி 20 | பகுதி 21 | பகுதி 22

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ