Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரூ.9,000 கோடி இழப்பு? தவிப்பில் தமிழகக் கூட்டுறவு சங்கங்கள்!

          

டந்த 9-ம் தேதி முதல் நாளொன்றுக்கு சுமார் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், அதிலிருந்து மீள என்ன செய்வது என்று தெரியாமல் கூட்டுறவு சங்கங்கள் தவித்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடி கடந்த 8-ம் தேதி இரவு நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையில்,ரூ.500, 1000 செல்லாது  என்றும் அவற்றுக்குப் பதிலாக 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் பெற்றுக்கொள்ளலாம் என்றும், கறுப்புப் பண பதுக்கலுக்குப் பதிலாக மத்திய அரசு எடுக்கும் இந்த புதிய நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அதிரடியாக அறிவித்தார்.

இதனையடுத்து, அடுத்த நாள் காலை முதல் இந்தியா முழுக்க சாதாரண ஏழை எளிய, நடுத்தர மக்கள் பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அனைத்துவிதமான வங்கிகளையும் முற்றுகையிட்டனர். அடுத்து வந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் வங்கிகள் திறந்திருக்க, நீண்ட வரிசையில் நின்று கால்கடுக்க மக்கள் பழைய ரூபாய்களை மாற்றி வருகின்றனர். ஒருவாரம் கடந்துவிட்ட நிலையிலும், நாள் முழுக்க வங்கிகள் முன்பாகவும், இரவில் ஏ.டி.எம்.கள் முன்பாகவும் மக்கள் அலைமோதுகின்றனர்.

பிரதமர் மோடி கொடுத்த 'மருந்தை' உட்கொண்ட மக்கள் அனைத்துவிதமான சிக்கல்களையும் எதிர் கொண்டு வருகின்றனர். அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் தொடங்கி, மருத்துவமனை, கல்வி நிலையங்கள், போக்குவரத்து என்று எல்லாவித தேவைகள் பயன்பாடுகளிலும் நேர விரயத்தையும், மன உளைச்சலையும் மக்கள்  அனுபவித்துக் கொண்டுள்ளனர்.

முன்பெல்லாம் யாராவது இரண்டுபேர் சந்தித்துக்கொண்டால், 'நல்லா இருக்கீங்களா?' என்று விசாரித்துக்கொள்வார்கள். ஆனால் இப்போது யார் சந்தித்துக் கொண்டாலும் 'பழைய நோட்டை மாத்தியாச்சா?' என்றுதான் பேசிக்கொள்கிறார்கள். அந்த அளவுக்கு ரூபாய் நோட்டு பிரச்னை இந்தியாவில் பூதாகரமாகியுள்ளது. போதாக்குறைக்கு வங்கியில் ரூபாய் மாற்றுபவர்களுக்கு கைவிரலில் மை வைக்கப்படும் என்ற அறிவிப்பு வேறு நடுத்தர, ஏழை எளிய மக்கள் மத்தியில்  கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை வங்கிகள் மற்றும் ஏ.டி.எம் களில் பெரும் பணக்காரர்கள் யாரும் வரிசையில் நிற்கவில்லை, தங்களுக்கு பணம் மாற்றுவது சிக்கலாக இருக்கிறது என்று புலம்பவில்லை. பணத்தை மாற்ற சாதாரண, நடுத்தர மக்கள்தான் வருகிறார்கள். விதியை நொந்துகொள்கிறார்கள்.

இந்தியா- பாகிஸ்தான் எல்லைப் பிரச்னை, நாள்தோறும் மக்களை நசுக்கும் விலைவாசி உயர்வுப் பிரச்னை, கல்விக் கட்டணப் பிரச்னை, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, தங்கம் விலை உயர்வு, குடிநீர் சிக்கல், வெள்ள அபாயம், மீனவர் பிரச்னை என்று நாள்தோறும் செய்திகளில் வெளிப்பட்ட சிக்கல்கள் அனைத்தையும் மறைத்துவிட்டது 'ரூபாய் நோட்டு' மாற்றும் உத்தரவு.                

இந்த நிலையில், தமிழகம் முழுவதுமுள்ள 4,800 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்ட அனைத்துவிதமான  கூட்டுறவு சங்கங்களும் பணப் பரிவர்த்தனை இல்லாமல் ஒருவார காலமாக முடங்கியுள்ளது. இதனால் அவற்றில் பணம் மாற்றவும், பணம் எடுக்கவும், கடன் வாங்கவும், வட்டித் தொகை செலுத்தவும் செல்லும் விவசாயிகள், தொழிலாளிகள் என்று லட்சக்கணக்கான மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும் பயிர்க்கடன், உர மானியம் ஆகியவை ஒருவாரமாக பாதிக்கப்பட்டுள்ளது. நெசவாளர்கள், தையல் தொழிலாளர்கள், பால் உற்பத்தியாளர்கள் என்று பல தரப்பட்டவர்கள் செல்லாத 500,1000 ரூபாயை மாற்ற முடியாமல் தவித்து வருகிறார்கள்.

           

தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்து 480 கூட்டுறவுச் சங்கங்களும் அதன் கீழ் செயல்படும் வங்கிகளும் உள்ளன. இவற்றில் கடந்த 9-ம் தேதி காலை முதல் எந்த வகையான பணப் பரிவர்த்தனையும் நடைபெறவில்லை.நாடு முழுவதும் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு பணம் அனுப்பும் ரிசர்வ் வங்கி, கூட்டுறவு சங்கங்களுக்குப் பணம் வழங்கவில்லை.

இதனால் கிராமப்புறத்தில் உள்ள விவசாயிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனர்.தங்களிடம் உள்ள சில ஆயிரம் ரூபாய்களை மாற்ற வழியின்றி தவித்து வருகின்றனர். மேலும்,தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பயிர்க்கடன் வழங்கப்படவில்லை. உர விற்பனையும் நடக்கவில்லை.நகைக்கடன் கொடுக்கவில்லை.

அதேபோல கூட்டுறவு சங்கங்களில் முதலீடு செய்தவர்களுக்கு திரும்பவும் பணம் வழங்க இயலவில்லை. தானிய ஈட்டுக்கடன் திரும்பப் பெற இயவில்லை. இதனால் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் முடங்கிப் போயுள்ளன. இதேபோல்,தமிழகம் முழுவதுமுள்ள  நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள், பணியாளர் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், கூட்டுறவு மருந்தகங்கள், வீட்டு வசதி சங்கங்கள், சேவை மையங்கள் என அனைத்தும் பணமின்றி தவிக்கின்றன. கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள், பால் கூட்டுறவுச் சங்கங்கள் ஆகியவற்றால் பணப்பயன் அடையும் லட்சக்கணக்கான அன்றாட கூலித் தொழிலாளர்களுக்கு  பணம் வழங்க இயலவில்லை என்கிறார்கள் சங்க நிர்வாகிகள்.இதனையடுத்து இந்தக் கூட்டுறவு சங்கங்களுக்கு புதிய ரூபாய் நோட்டுகளை வழங்கிட உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.

கூட்டுறவு சங்கங்கள் முடங்கியது தமிழக அரசு அறிவிப்பு!

கடந்த ஒருவாரமாக கூட்டுறவு சங்கங்கள் முடங்கியுள்ளதாகச் செய்திகள் வெளிவந்த நிலையில்,இந்த விஷயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்த தமிழக அரசு இப்போது 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சங்கங்கள் முடங்கியுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளது. முதன்முறையாக தமிழக அரசு பண பரிவர்த்தனை குறித்து  வெளியிட்ட ஒப்புதல் செய்திக்குறிப்பு இதுவே.

இன்று (16.11.2016) கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் சென்னையில் துறை உயரதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்ட ஆய்வுக்கூட்டம் நடந்தது. அதில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,

"ஏழை எளிய விவசாயிகள் தங்களது வேளாண்மைத் தொழிலை மேற்கொள்ளும் பொருட்டு கடந்த 2011-ம் ஆண்டு முதல் 7.11.2016 வரை 54,33,248 விவசாயிகளுக்கு ரூ.25,289.65 கோடி அளவுக்கு வட்டியில்லாப் பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாண்டு ரூ.6000 கோடிக்கு பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 7.11.2016 வரை 3,38,612 விவசாயிகளுக்கு ரூ.2,075.41 கோடி மட்டுமே பயிர்க்கடனாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 2015-16-ம் ஆண்டில் இதே காலகட்டத்தில் 6,38,643 விவசாயிகளுக்கு ரூ.3512.80 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த புதிய அறிவிக்கையால் பயிர்க்கடன் வழங்குவதில் ஆண்டுக் குறியீட்டினை முழுமையாக எட்ட இயலாத நிலை எழுந்துள்ளதோடு, தமிழகத்தில் உணவு உற்பத்தியும் வெகுவாக பாதிக்கப்படும்.

பெருவாரியான கிராமப்புற மக்கள் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களிலேயே சேமிப்புக் கணக்குகளின் மூலம் பணத்தை செலுத்தி வருகின்றனர். தற்போது எழுந்துள்ள இச்சூழலில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சேமிப்பு கணக்குகளில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்து வருவதுபோல கூட்டுறவுக் கடன் சங்கங்களின் உறுப்பினர்கள் செலுத்த முடியவில்லை.

கடந்த 31.3.2011 அன்றுவரை கூட்டுறவு அமைப்புகளில் ரூ.26,247 கோடியாக இருந்த வைப்புத்தொகை, தற்போது 2 மடங்கு அளவுக்கு அதாவது ரூ.54,914 கோடியாக உயர்ந்துள்ள நிலையில், தற்போது தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களின் வணிக வளர்ச்சி பாதிக்கப்படுவதோடு, புதிய வைப்பீடுகள் ஏதும் பெற இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் கிராமப்புற ஏழை, எளிய விவசாய பெருங்குடி மக்களும் மிகுந்த சிரமங்களுக்குள்ளாகி வருகின்றனர்.

தற்போது மாநிலத்தில் செயல்படும் 4474 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், விவசாயிகளுக்கு தரமான உரம் மற்றும் விதைகளை வழங்க இயலவில்லை. பயிர்க்கடன் வழங்கும்போது தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் உறுப்பினர்களிடமிருந்து வசூலிக்க வேண்டிய பயிர்க்காப்பீட்டு பிரிமியம், கிராம அளவில் உள்ள 4344 பொதுச்சேவை மையங்கள் மூலம் வழங்கப்படும் சாதிச் சான்றிதழ், பிறப்பு, இறப்பு சான்றிதழ், வருவாய்  சான்றிதழ், பேருந்து மற்றும் ரயில் பயணச் சீட்டு போன்ற அத்தியாவசியப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, அனைத்து வகையிலும் கூட்டுறவுச் சங்கங்கள் செயல் இழந்து மிகுந்த வருவாய் இழப்புக்குள்ளாகி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களின் செயல்பாடுகள் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே கடந்த 14.11.2016 அன்று இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிக்கையின் படி, மத்திய கூட்டுறவு வங்கிகள் எவ்வித பண பரிவர்த்தனைகளோ அல்லது சேமிப்புக் கணக்கில் பணம் செலுத்தவோ இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் உள்ள 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளும், அவற்றின் 813 கிளைகளும், அவற்றின் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய ரிசர்வ் வங்கியின் இவ்வறிவிப்புகளால், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகள் தமிழக மக்களுக்கு சேவைகளை அளிக்க இயலாமல் முடங்கிப்போயுள்ளன." என்று வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

              

இந்த நிலையில், தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஆ.கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம். அவர் கூறுகையில், "உடனடியாக ரூ.2000 நோட்டுகள் கொடுக்கவில்லையென்றாலும் பரவாயில்லை.உடனடியாக புதிய 500,100,20,10,50 ரூபாய் நோட்டுகள் கூட்டுறவு சங்கங்களுக்குக் கொடுத்தாலே நாங்கள் டர்ன் ஓவர் பண்ணுவோம். உடனடியாக மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மூலமாகத் தேவையான பணத்தை உடனே வழங்க வேண்டும்.தமிழக அரசு இந்த நிலையை இன்னமும் மத்திய அரசுக்குத் தெளிவாகத் தெரிவிக்காமல், ஆய்வுக் கூட்டம் மட்டும் நடத்தியுள்ளார். அவர்களாகவே முன்வந்து கூட்டுறவு சங்கங்களில் பழைய ரூபாய் வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறுவார்கள் என தமிழக அரசு எதிர்பார்க்கிறது போல.அப்படி நடந்தால் அதில்,கறுப்புப் பணம் வெள்ளையாக மாற்றப்படும் ஆபத்து இருக்கிறது. எனவே முறைகேடுகள் நடக்க இடம்கொடுக்காமல் மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்"என்று தெரிவித்தார்.

மேலும், கூட்டுறவு சங்கங்கள் மூலமாக தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு டர்ன் ஓவர் நடக்கிறது. இப்போது கடந்த 9 நாளாக இந்த வர்த்தகம் முடங்கிப்போயுள்ளது. கைத்தறி, பால் உற்பத்தி, வேளாண் கூட்டுறவு, ஆவின் விற்பனை என்று எல்லா சங்கங்களிலும் தேக்கம் ஏற்பட்டுள்ளது.மேலும், நெய்வேலி கூட்டுறவு சங்கம், ஐ.ஓ.சி., லூகாஸ், டன்லப், சர்க்கரை ஆலைகள், அரசுத்துறை நிறுவன கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு கடன் சங்கங்கள், பண்டக சாலைகள், தலைமைச் செயலக ஊழியர்கள் கூட்டுறவு சங்கம், எழிலகத்தில் உள்ள கூட்டுறவு  என்று எல்லா சங்கத்திலும் பணமுடக்கம் வியாபித்துள்ளது எனவும் அவர் கூறினார்.

 - சி.தேவராஜன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ