Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

500 ரூபாய் முதல் 1.10 லட்சம் கோடி வரை...’ - இது எல்லோருக்குமான அரசா...?

ரூபாய்

மலா அம்மா. வயது 70-க்கு மேல் இருக்கும். பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்றெல்லாம் தெரியவில்லை. இந்த வயதிலும் அந்த அம்மா, தள்ளுவண்டியில் இட்லி கடை நடத்தி, அதிலிருந்து வரும் சொற்ப வருமானத்தில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார். வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்றால்... மூன்றுவேளை உணவும், அவரின் மருத்துவத் தேவையையும் பூர்த்தி செய்துகொண்டிருக்கிறார். மோடி யார்... கறுப்புப் பணம், கள்ளப் பணம் என்றால் என்ன என்பதெல்லாம் அவருக்கு இதுவரை தெரியாமல்தான் இருந்தது. நவம்பர் 8-ல் வெளியான 500, 1000 ரூபாய் அறிவிப்புக்குப் பின்தான் மோடி அவருக்கு அறிமுகமாகிறார். மற்றவர்களுக்கு எப்படி என்று தெரியாது; ஆனால், கமலா அம்மாவுக்கு மோடி நல்லவிதமாக அறிமுகமாகவில்லை. ஆம், அந்த அறிவிப்புக்குப் பின் அவர் நடத்திய அந்தத் தள்ளுவண்டி கடையில் கூட்டம் குறைந்திருக்கிறது. கடையின் வாடிக்கையாளர்களில் பலரும் சென்னையில் அறை எடுத்துத் தங்கி இருக்கும் இளைஞர்கள். அவர்கள் இந்த அறிவிப்புக்குப் பின், டெபிட், கிரெடிட் கார்டுகளை ஏற்றுக்கொள்ளும் கடைகளை நோக்கிச் சென்றுவிட்டார்கள். பாவம், கமலா அம்மா. டெபிட் கார்டு குறித்தெல்லாம் அவர் அறிந்திருக்கவில்லை. இயல்பு நிலை எப்போது திரும்பும் என்று காத்துக்கொண்டிருக்கிறார். 

குமார். சேலத்தில் சிறு பட்டறை வைத்திருப்பவர். கடந்த வியாழக்கிழமை கோவைக்கு சில பொருட்கள் வாங்கச் சென்றிருக்கிறார். பொருட்கள் வாங்கிவிட்டு, அருகே இருக்கும் கடைக்கு உணவருந்தச் சென்றிருக்கிறார். அவரிடம் இருந்தது ஒரே ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டு. எந்தக் கடையும் அதனைப் பெற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. பெற்றுக்கொள்ள முன்வந்த சில ஹோட்டல்களும் மிச்ச சில்லறைத் தரமாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள். கட்டுரையை அடர்த்தி ஆக்குவதற்காக எழுதவில்லை. உண்மையில், அன்று அவர் பிச்சை எடுத்துத்தான் சாப்பிட்டார். 

இவ்வாறாக சாமான்ய மனிதர்கள், எப்போது இயல்பு நிலை திரும்பும்... எப்போது வங்கி, ஏ.டி.எம் மையங்களில், நாம் காத்திருப்பது ஓயும் என்று தேசத்தின் நலனுக்காக அல்லல்பட்டுக் கொண்டிருக்க... ஜனார்த்தன ரெட்டி 36 ஏக்கர் பரப்பளவில் விஜயநகரப் பேரரசின் அரண்மனை போன்ற பிரமாண்ட செட் அமைத்து 650 கோடி ரூபாய் செலவில் தன் மகள் திருமணத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்.

 

ஒரு பக்கம், இந்தத் திருமணக் கூத்து என்றால்... இன்னொரு பக்கம், தேசிய வங்கிகள் தன் விருப்பத்துக்கு ஏற்றாற்போல், பெரு நிறுவனங்களின் கடன்களைப் போக்கெழுதிக் கொண்டிருக்கின்றன (Write off). அதாவது, தன் வங்கி பேலன்ஸ் ஷீட்டிலிருந்து... அவர்கள் பெயரை நீக்கிக்கொண்டிருக்கிறது. இதற்கு வக்கனையாக விளக்கம் வேறு தருகிறார்கள்... “நாங்கள் கடனைத் தள்ளுபடி எல்லாம் செய்யவில்லை. எங்கள் பேலன்ஸ் ஷீட்டிலிருந்துதான் நீக்கி இருக்கிறோம். நிச்சயம் அவர்களிடமிருந்து வாராக்கடனைத் திரும்பிப் பெறும் முயற்சி தொடரும்.”  புத்தகத்தில் பெயர் இருக்கும்போதே, ஒருவரிடமிருந்து பணத்தை வசூலிக்க திராணி இல்லையாம். பெயரை நீக்கிய பிறகு பணத்தை மீட்கப் போகிறார்களாம்...? சிறுபிள்ளைக்கூட நிச்சயம் நகைக்கும். 

இவை, ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க... வாராக்கடன் விஷயத்தில் ஆர்.பி.ஐ சொல்லியதைப் படித்து, யாரை நொந்துகொள்வது என்று தெரியவில்லை. ஆம், “பொதுத்துறை வங்கிகளில், 500 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வைத்திருக்கும், 87 பேர் பட்டியலை உச்ச நீதிமன்றத்தில் சீல் வைக்கப்பட்ட கவரில் கொடுத்தது ஆர்.பி.ஐ. இவர்கள் அனைவரும் சராசரியாக 500 கோடி ரூபாய்க்கு மேல் வங்கிகளில் கடன் வைத்திருப்பவர்கள். “கடனாளிகள் யாரென்று மக்களுக்குத் தெரிந்துகொள்ள மக்களுக்கு உரிமை இருக்கிறது... இவர்களின் பெயர் பட்டியலை வெளியிட வேண்டும்” என்கிறது உச்ச நீதிமன்றம். இதற்கு ஆர்.பி.ஐ நிர்வாகம், “சில விஷயங்களை ரகசியமாக வைக்க சட்டத்தில் இடமிருக்கிறது” என்கிறது. கோபமான நீதிபதிகள், “என்ன ரகசியம்...? பொதுத்துறை வங்கிகளிடமிருந்து கடன் வாங்கி இருக்கிறார்கள். அது எப்படி ரகசியம் ஆகும்? அவர்கள் பெயர் பட்டியலை பொதுமக்கள் பார்வைக்கு வைப்பது எப்படி ஆர்.பி.ஐ-யைப் பாதிக்கும்” என்று சாடுகிறார்கள். 

ஒரு வங்கி உயரதிகாரியிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, அவர், “பெருமுதலாளிகளிடமிருந்து வாராகடனை முறையாக வசூலிக்காததால், வங்கிகளின் கையிருப்பு குறைந்து மிக மோசமான நிலையில் இருக்கிறது. அதனால் தான் ரகுராம்ராஜன் வாராகடனை வசூலிப்பதில் கடுமையான நடவடிக்கை தேவை என்றார். வங்கிகளின் கையிருப்பை அதிகப்படுத்துவதற்காக தான் இந்த நடவடிக்கை” என்றார். 

 

கடந்த மூன்று ஆண்டுகளில், 29 பொது துறை வங்கிகள் 1.19 லட்சம் கோடி ரூபாயை  போக்கெழுதி உள்ளது. வங்கிகளிடம் பணம் மாற்றுவதை ஒரு நாளைக்கு 4500 ரூபாயிலிருந்து, 2000 ரூபாயாக குறைக்கும் அரசு... கைகளில் மை வைத்து சுயமரியாதையை எள்ளி நகையாடும் அரசு... இவர்களிடம் பணம் வசூலிக்க என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது...?

உங்களுக்கு என்ன பிரச்னை? முதலில், சாமான்ய மனிதர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்றீர்கள்; பின், ஜனார்த்தன ரெட்டி தன் பிள்ளைக்கு ஆடம்பரத் திருமணம் செய்கிறார் என்றீர்கள்; பின், வங்கி பெருநிறுவனங்களின் கடன் கணக்கைப் போக்கெழுதுகிறார்கள் என்றீர்கள்; இறுதியில், உச்ச நீதிமன்றத்தைத் துணைக்கு இழுக்கிறீர்கள்.  எதனை நிறுவ வருகிறீர்கள்... உங்கள் நோக்கம் என்ன..?

இல்லை, எதனையும் நிறுவ வரவில்லை. கமலா அம்மா, குமார், ஜனார்த்தன ரெட்டி; பின், அந்த வங்கியில் 500 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வைத்திருக்கும் 87 பேர், 1.19 லட்சம் கோடியை திரும்ப செலுத்தாத தொழிலதிபர்கள்... இவர்கள் யாரும், வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இல்லை. எல்லோரும் ஒரே தேசத்தில்தான் வாழ்கிறார்கள் என்கிறேன்.

எனது கேள்வி மிக எளிமையாது...? ஒரு பக்கம், ஒருவர் 650 கோடி ரூபாய்க்கு சொகுசாக திருமணம் நடத்துகிறார்... 500 கோடி ரூபாய்ரூபாய் கடன் வாங்குகிறார். இன்னொரு பக்கம், ஒரு பெருங்கூட்டம் 500 ரூபாய்க்கு சில்லறை மாற்ற இரண்டு மணிநேரம் கால்கடுக்க வரிசையில் நிற்கிறது... இது, எப்படிச் சரியாக இருக்கும்?  இந்த கேள்விக்கு அரசு கண்டுக்கொள்ளாமல் செல்வது, தேசத்தின் நலனுக்கு நல்லது இல்லை என்கிறேன். 

கறுப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும்... இணைப் பொருளாதாரத்தைப் இல்லாமல் செய்ய வேண்டும். தேசத்தின் நலனுக்கு அதுதான் நல்லது. அதைவிட முக்கியம், இந்த அரசு அனைவரிடமும் ஒரே மாதிரியாக பாகுபாடில்லாமல் நடந்துகொள்கிறது என்ற எண்ணத்தையும் உண்டாக்குவது. இரண்டாவதைச் செய்யாமல், முதலாவதை மட்டும் செய்வது, நிச்சயம் எந்த பலனையும் தராது...!

சீதாராம் யெச்சூரி பாராளுமன்றத்தில், “அரசு, முதலைகளைப் பிடிப்பதற்காகக் குளத்தில் தண்ணீரை வடிக்கிறது.  முதலைகள் எல்லாம் ஊர்ந்து வெளியேறி நிலத்தில் சுகபோகமாக வாழ்கின்றன. அவை நிலத்திலும், நீரிலும் வாழும் தன்மை கொண்டவை. பாவம், நீரில் வாழும் சிறிய மீன்கள்தான் சிக்கிக்கொண்டன” என்றார்.

இந்த எண்ணம் அனைவரிடமும் படர்வதற்கு முன், வங்கிகளை ஏமாற்றும் பெருமுதலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கறுப்புப் பணம் ஒழிப்பது எவ்வளவு முக்கியமானதோ... அந்த அளவுக்கு இதுவும் முக்கியமானது. அப்போதுதான் சாமான்யன், இந்த அரசை எல்லோருக்குமான அரசு என்று நம்புவான். 

- மு. நியாஸ் அகமது 
 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close