Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘500, 1000 செல்லாது’ அறிவிப்பால் பாதிப்பில்லை! களைகட்டும் ‘இடைத்தேர்தல்’

234 தொகுதிகளைக் கொண்ட தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை நடத்த ஆகும் செலவு என தேர்தல் ஆணையத்தால் உத்தேசிக்கப்படும் செலவுத்தொகை 200 கோடி ரூபாய். 4,120 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட இந்தியா முழுவதும் ஒரு நாடாளுமன்ற தேர்தலை நடத்த ஆகும் செலவு என்பது 3500 கோடி ரூபாய். எப்படி கணக்கிட்டாலும் ஒரு தொகுதியில் தேர்தலை நடத்த செலவுத்தொகை ஒரு கோடி ரூபாயைத் தாண்டுவதில்லை.

இந்த தேர்தல் செலவு கணக்கை கேட்கும்போது, நம்மில் பலருக்கு என்னது 200 கோடி ரூபாயா? 3,500 கோடி ரூபாயா என அதிர்ச்சி வரக்கூடும். ஆனால் ஒரு தேர்தலில் அரசியல் கட்சிகள் செலவிடும் தொகையை கணக்கிட்டுப் பார்த்தால் இவை மிக மிக சொற்பம். இதை கண்முன் நடத்திக் காட்டி வருகிறது தமிழகத்தில் நடந்து வரும் ஒத்தி வைக்கப்பட்ட தேர்தலும், இடைத்தேர்தலும்.

ஒரு தேர்தலின்போது தேர்தல் ஆணையத்தால் செலவிடப்படும் தொகையை விட குறைந்த பட்சம் 10 மடங்கு கூடுதலாக அரசியல் கட்சிகளால் செலவிடப்படுகிறது என ஊடக நிறுவனம் ஒன்று தனது ஆய்வில் தெரிவித்திருந்தது. தமிழக சட்டமன்றத் தேர்தலை நடத்த 200 கோடி செலவிடப்படுகிறது என்றால், அதை விட 10 மடங்கு அதாவது 2000 கோடி அளவுக்கு தேர்தலில் பணப்புழக்கம் இருக்கும் என சொல்லப்படுகிறது. அதாவது ஒரு தொகுதிக்கு ஆகும் செலவு 10 கோடிக்கும் குறையாது.

ஆனால் இந்த கணக்கெல்லாம் பொதுத்தேர்தலுக்குத் தான். இடையில் சில தொகுதிகளுக்கு மட்டும் தேர்தலுக்கு இது பொருந்தாது. ஏனென்றால் அதை விட பல மடங்கு கூடுதலாக செலவிடப்படுகிறது. ஒன்று அல்லது இரண்டு தொகுதியை அனைத்து கட்சியும் ஒரே நேரத்தில் கவனிப்பதால் செலவுத்தொகை என்பது மிக அதிகமாகவே இருக்கும். அதற்கு மிகச்சரியான உதாரணமாக இருக்கிறது நாளை வாக்குப்பதிவு நடக்கும் தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் தேர்தல்.

'செல்லாது' அறிவிப்பை செல்லாமல் ஆக்கிய தேர்தல்

தேர்தலில் இவ்வாறு செலவழிக்கும் பணத்தில் பெரும்பான்மையான தொகை கணக்கில் வராத கறுப்புப் பணமாகத்தான் இருக்கும். நாடு முழுவதும் கறுப்பு பணத்தை ஒழிக்க 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்தலில் பணப்புழக்கம் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 'செல்லாது' என்ற அறிவிப்புக்கு பின்னரும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் அதிகளவில் புழக்கத்தில் இருக்கிறது தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றத்தில். இதற்கு ஒற்றைக் காரணம் இடைத்தேர்தல்.

தமிழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட மற்றும் இடைத்தேர்தல் நடக்கும் இந்த மூன்று தொகுதிகளில் தான், செல்லாது என அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகள் பெருமளவில் மக்களிடம் புழங்குகிறது. செல்லாது என்ற அறிவிப்பையடுத்து அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் என தங்களிடம் இருந்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை தேர்தல் செலவுக்கு என ஒதுக்க, தேர்தல் நடக்கும் தொகுதிகளில் பண மழை பெய்கிறது.

ஒரு ஓட்டின் விலை என்ன தெரியுமா?

இந்திய வரலாற்றிலேயே ஓட்டுக்கு பணம் கொடுத்ததற்காக முதன்முறையாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டவை தமிழகத்தில் உள்ள அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் இடைத்தேர்தல்களில் தான். 234 தொகுதிகளுக்கு ஒரே நேரத்தில் நடக்கும் பொதுத்தேர்தலின் போதே அதிகமாக பணம் வழங்கப்பட்ட இந்த தொகுதியில், இப்போதையை நிலை சொல்லித்தெரிய தேவையில்லை.

அரவக்குறிச்சிக்கு ஓட்டுக்கு 1000 ரூபாய் தரலாம் என முடிவெடுத்திருந்த அ.தி.மு.க., 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது அறிவிப்பையடுத்து ஓட்டுக்கு 3 ஆயிரம் வரை தரத்துவங்கி இருக்கிறது. இவை அத்தனையும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள். அரவக்குறிச்சி தொகுதி, நாகம்பள்ளியைச் சேர்ந்த இந்திராணி என்ற பெண், அ.தி.மு.க. தரப்பில் தனக்கு கொடுத்த 3 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் உங்களிடம் வாக்கு கேட்டு அச்சிடப்பட்ட நோட்டீஸ்களுடன் பணம் திணிக்கப்படுகிறது. இவை அத்தனையும் செல்லாது என அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகள் தான். அரவக்குறிச்சி, தஞ்சாவூரில் ஒரே மாதிரியான பண வினியோகம் தான் நடக்கிறது.

ஒரு தொகுதியின் செலவு ரூ. 50 கோடியை தாண்டும் !

இது தொடர்பாக தஞ்சை தொகுதியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவரிடம் பேசினோம். "ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த உடன் ஓட்டுக்கு பணம் வினியோகிப்பதில் பெருமளவு பாதிப்பு ஏற்படும் என்றே பலரும் கருதினர். ஆனால் நிலைமை வேறு. 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் பதுக்கி வைக்கப்பட்ட பணம் பெருமளவில் தேர்தல் செலவுகளுக்கு இறக்கி விடப்பட்டது. '4,500 ரூபாய் வரை வங்கியில் எளிதில் மாற்றிக்கொள்ளலாம். இல்லாவிட்டால் உங்கள் வங்கியில் நீங்கள் டெபாசிட் செய்து கொள்ளலாம். இதில் எந்த சிக்கலும் வராது' எனச்சொல்லியே பண வினியோகம் நடக்கிறது. அ.தி.மு.க. தரப்பில் 1000 ரூபாயும், சில இடங்களில் ரூ.2 ஆயிரமும் கொடுக்கவே திட்டமிடப்பட்டது. இப்போது குறைந்த பட்சமாக ரூ.1500 வினியோகிக்கப்படுகிறது. சில பகுதிகளில் 3 ஆயிரம், 4 ஆயிரம் வரை கூட கொடுக்கப்படுகிறது. தி.மு.க. தரப்பில் 500 ரூபாயும், சில பகுதிகளில் 1000 ரூபாய் வரையிலும் கூட பணம் கொடுக்கப்படுகிறது.

இந்த ரூபாய் நோட்டுகளை பெறுவதில் மக்களிடமும் எந்த தயக்கமோ, சிக்கலோ இல்லை. எளிதில் மாற்றிக்கொள்ளலாம் என்பதால் பொதுமக்களும் எந்த தயக்கமும் இல்லாமல் பணத்தை வாங்கிக்கொள்கிறார்கள். எதிர்பார்க்கப்பட்ட அளவை விட பல மடங்கு கூடுதலாக பண வினியோகம் நடக்கிறது. கணக்கில் வராமல் இருந்த பணம் தேர்தல் செலவுக்கணகணக்கில் சேர்க்கப்படுகிறது. தஞ்சாவூரில்  2.68 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஒன்றரை லட்சம் பேருக்காவது பணம் கொடுப்பார்கள். தலா 1,500 ரூபாய் கொடுக்கிறார்கள் என கணக்கிட்டால் கூட, 22.50 கோடி  ரூபாய் வாக்காளர்களுக்கு மட்டுமே கொடுக்க வேண்டியிருக்கும். ஆனால் இங்கு ஓட்டுக்கு 2 ஆயிரம், 3 ஆயிரம் என கொடுக்கப்படுகிறது. இது போக தேர்தல் செலவுகள் தனி. எப்படியும் குறைந்த பட்சமாக கணக்கிட்டால் கூட செலவுக்கணக்கு  50 கோடியை தாண்டி விடும் செலவாகும்," என்றார்.

500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு எதிர்ப்பு இல்லை !

திருப்பரங்குன்றத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக அ.தி.மு.க., தி.மு.க.வினர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. தி.மு.க. வேட்பாளர் மீதே வழக்கு பதியப்பட்டுள்ளது.  தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு அடுத்தபடியாக திருப்பரங்குன்றத்திலும் அதிகளவில் பணம் கொடுக்கப்படுகிறது. மிக வெளிப்படையாக பணம் கொடுக்கப்பட்ட போதும், இது தொடர்பாக புகார்கள் எழுந்த போதும் அதிரடியான நடவடிக்கைகள் எதையும் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளவில்லை.

500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்த உடன், பழைய ரூபாய் நோட்டுகள் எங்கும் பெறப்படவில்லை. மருத்துவமனை, பெட்ரோல் பங்க், மெடிக்கல் ஷாப் போன்ற இடங்களில் பெற வேண்டும் என அரசு கட்டாயபடுத்திய போது கூட யாரும் பெறவில்லை. இருக்கும் பணத்தை எப்படி மாற்றுவது என்பதில் தான் மக்களே கவனம் செலுத்தி வந்தார்கள். ஆனால் இந்த தொகுதிகளில் நிலைமை தலைகீழ். ஒரு வீட்டுக்கு 4 வாக்காளர்கள் என்றால் 8 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை 1000, 500 ரூபாய் நோட்டுகளாகத்தான் வழங்கப்பட்டது. இது எந்த சர்ச்சையையும் ஏற்படுத்த வில்லை. டிசம்பர் இறுதி வரை மாற்றிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. எனவே அதைப்பற்றி மக்கள் எந்த கவலையும் கொள்ளவில்லை.

சில இடங்களில் மட்டும் 100 ரூபாய் நோட்டுகள்...

பொதுத்தேர்தலின் போது பணப்புழக்கம் அதிகளவில் உள்ளதாக சொல்லப்படும் தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதியில் தான் இந்த முறையும் பணப்புழக்கம் அதிகம். தஞ்சாவூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ரெங்கசாமிக்கு வேலைபார்க்கும் 9 அமைச்சர்களில் மிக முக்கியமானவர்கள் வேலுமணி, காமராஜ், விஜயபாஸ்கர். இவர்கள் பெருமளவு தொகுதியில் பணத்தை இறக்கி விட்டுள்ளார்கள் என அ.தி.மு.க.வினரே சொல்கிறார்கள்.

500, 1000 கொடுக்கலாம் என திட்டமிடப்பட்டிருந்த நிலையில், நோட்டு செல்லாது என்ற அறிவிப்பினால் ஓட்டுக்கு 2 ஆயிரம், 3 ஆயிரம் என கொடுக்கப்படுகிறது. அத்தனையும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள். தஞ்சாவூரில் சில பகுதிகளில் மட்டும் இந்த 500, 1000 ரூபாயை வைத்து என்ன செய்வது என மக்கள் கேள்வி எழுப்ப, 2 ஆயிரம் கொடுக்க வேண்டிய இடத்தில் ஒரு ஆயிரம், ஒரு ஐந்நூறு, ஐந்து 100 ரூபாயாக மாற்றிக்கொடுத்துள்ளனர் அ.தி.மு.க.வினர். மற்றபடி ஓட்டுக்கு கொடுத்த 500, 1000 ரூபாய்க்கு மக்கள் எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை.

இது தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் பேசினோம். "தேர்தல் நடக்கும் தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் தொகுதியில் 9.14 கோடி, திருப்பரங்குன்றத்தில் 4.09 கோடி, அரவக்குறிச்சியில் 45 லட்சம் என மூன்று தொகுதிகளில் இதுவரை 13.69 கோடி ரூபாயை பறிமுதல் செய்துள்ளோம். தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு சிறப்பு பார்வையாளர்கள் நியமிக்கப்படுள்ளனர். தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது," என்றனர்.

ஓட்டுக்கு பணம் வாங்கியவர்கள், அந்த பணத்தை மாற்றிக்கொள்ள வங்கி வரிசையில் காத்திருந்து மாற்றுகின்றனர். அடுத்து வாக்களிக்க வரிசையில் காத்திருக்க போகிறார்கள். இரு கைகளின் விரல்களிலும் மை வைக்கப்படுகிறது.

கருப்பு மை உங்கள் விரலில் மட்டும் வைக்கப்படுகிறது என்றா நினைக்கிறீர்கள்?

 - ச.ஜெ.ரவி.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ