Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

500/1000 ரூபாய் செல்லாது: மோடியின் அறிவிப்பு... ஏன்... எதற்கு... எப்படி?

1917-ல் பொருளாதார மூலதனத்தை, மூலதனமாக வைத்து நிகழ்ந்த நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு தொடக்கவிழா, நவம்பர் 7-ம் தேதி தொடங்கியது. இடதுசாரி  இயக்கங்கள் பரவலாகக் இந்தியாவில் அதைக் கொண்டாடிக் கொண்டிருந்தன. அதற்கு மறுநாள், நவம்பர் 8-ம் தேதி, இந்திய மூலதனத்தை தலைகீழாகப்புரட்டிப் போடும் அறிவிப்பு ஒன்றை பிரதமர் மோடி வெளியிட்டார். தொலைக்காட்சிகளின் நேரலையில் தோன்றிய பிரதமர் மோடி, இன்று இரவு முதல் (நவம்பர் 8-ம் தேதி இரவு முதல்) தற்போது புழக்கத்தில் உள்ள 500/1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார்.   இந்தியாவின் மாநில எல்லைகள், மொழி பாகுபாடுகள், கலாச்சார வேற்றுமைகள், பிராந்திய அரசியல் என அத்தனை பிரச்னைகளையும் மோடியின் அறிவிப்பு தவிடுபொடியாகி, பணம்... பணம்... பணம்... என்பதே ஒட்டுமொத்த இந்தியர்களின் ஒரே பிரச்னையானது. 

பரவலான வெகுஜன பாதிப்புகள் 

டிசம்பர் 31-ம் தேதிவரை 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் கொடுத்து புதிய நோட்டுக்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று என்று பிரதமர் மோடி அந்த அறிவிப்பில் சொல்லி இருந்தார். அதனால், அதன் வெகுஜன பாதிப்புகள் அப்போது பெரிதாக வெளிப்படவில்லை. அதனால், மோடியின் அறிவிப்புக்கு பாராட்டுக்கள் கொஞ்சம் தூக்கலாகவே  இருந்தன. ஆனால், முன் ஏற்பாடுகள் எதையும் முறையாகச் செய்யாமல், வெளியிட்ட அறிவிப்பால், எதார்த்த சிக்கல்கள் மேலும் மேலும் சிக்கலை பெரிதாக்கிக்கொண்டே போகிறது. புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை வங்கியில் வாங்குவது பெரும் போராட்டமாக இருக்கிறது. வாங்கியபிறகு அதை மாற்றிச் செலவு செய்து, சில்லறை வாங்குவது அதைவிடப் பெரிய போராட்டமாக இருக்கிறது. அதனால், பணப் புழக்கம் பெரும் தேக்கத்தில் இருக்கிறது. புதிதாக அச்சடிக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டுக்கள் நாடு முழுவதும் இன்னும் பரலவலாகக் கொண்டுபோய்ச் சேர்க்கப்படவில்லை. அது, தமிழகத்தின் எல்லைக் கோட்டைக்கூட இன்னும் தொட்டதாகத் தெரியவில்லை. இந்த நிலையில் ஒருமுறை பணம் எடுத்தவர்களின் கையில் மை வைக்கப்படும், ஒருமுறை 2 ஆயிரம் ரூபாய் மட்டும்தான் எடுக்க முடியும் என்று புதிது புதிதாக அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டுக் கொண்டே இருக்கிறது. இவை, ஏற்கனவே அதிர்ச்சியில் இருந்த மக்களை ஆத்திரத்தின் எல்லைக்குள் தள்ளிவிட்டுள்ளது. 

47 மரணங்களும் கருப்புப் பணக்காரர்களும் 

500/1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47-ஆக உயர்ந்துள்ளது. இன்னும் சில நாள்களில் இந்த எண்ணிக்கை இன்னும்கூட உயரலாம். ஆனால்,  அதிர்ச்சியில் இறந்தவர்கள் யாரும் நிச்சயமாக கருப்புப் பணம் பதுக்கி வைத்திருந்தவர்கள் அல்ல. கருப்புப் பணத்தின் வெளிப்படை அடையாளமாக உலாவரும் சினிமா நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், கார்ப்பரேட்டுகள், டிரேடிங் மாபியாக்கள் யாரும் உயிரைவிடவில்லை என்பது உறுதி. பணம் செல்லாது என்ற அறிவிப்பால், மாண்டுபோனவர்கள் எல்லாம் ஏழை எளியவர்கள் என்பதை மோடியும் அவரது சகாக்களும் நிச்சயமாக மறுக்கமாட்டார்கள். 

புதிய அக்கவுண்டுகள், திடீர் பரிவர்த்தனைகள், நூதனத்  தரகர்கள்...

மரணம், அதிர்ச்சி, அலைக்கழிப்பு, மன உளைச்சல் நாடு முழுவதும் வியாபித்திருக்கும் நேரத்தில், உண்மையில் கருப்புப் பணத்தை மாற்ற புதுப்புது வழிகள் ஒருபக்கம் உருவாக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. கருப்புப் பணத்தை வைத்திருப்பவர்கள், தரகர்களை நியமித்து கமிஷன் அடிப்படையில் செல்லும் நோட்டுக்களை குவித்துக் கொண்டிருக்கின்றனர். போலி கணக்குகள், போலி அடையாள அட்டை, போலி வாக்காளர் அட்டை, உறவினர்களின் வங்கிக் கணக்குகள், வங்கி அதிகாரிகளின் கைங்கர்யம் ஒன்றுசேர்ந்து, புதிய சிண்டிகேட் ஒன்றை அமைத்து உள்ளது. ஜன்தான் திட்டத்தில் உருவாக்கப்பட்ட 23 கோடி அக்கவுண்டுகள், திடீரென்று உயிர் பெற்று உலவிக் கொண்டிருக்கின்றன. பல ஆண்டுகளாக பெயருக்கு இருந்த அக்கவுண்டுகளில், 49 ஆயிரத்து 500 ரூபாயாக கணக்கில் ஏற்றப்படுகிறது. ஒருவர் கொடுத்த அடையாள அட்டையில், கடந்த நான்கு நாட்களுக்குள் பலமுறை 4000 ரூபாய் மாற்றப்பட்டுள்ளது. இன்னும் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. 

வரிசை அரசியல்

பிரதமர் மோடியின் அறிவிப்பு, அதன் பின்னணி, அதன் சாதக-பாதகங்களை உருப்படியாக விளக்கிச் சொல்ல, எதிர்கட்சிகளுக்கு நேரமில்லை; இன்னும் சொல்லப்போனால், மாற்று நடவடிக்கைகள் என்ன என்பதை இதுவரை எந்த அரசியல் கட்சியும் ஆணித்தரமாக முன்வைக்கவில்லை. மாறாக வங்கிகளின் வாசலில், வரிசையில்  நின்று மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் மக்களோடு போய் நின்று, ‘வரிசை அரசியல்’ நடத்திக் கொண்டிருக்கின்றனர். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் ராகுல்காந்தி வரிசையில் நின்று தன் அரசியல் சாதுர்யத்தை வெளிப்படுத்தினார். இடைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு மதுரைக்குப் போன மு.க.ஸ்டாலின், வரிசையில் நிற்கும் மக்களிடம் குறைகள் கேட்டார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வரிசையில் நின்று பணத்தை மாற்றி தன் எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இது அபத்தம் என்றால், இதற்குப் பதிலடியாக, பி.ஜே.பி மோடியின் தாயாரை வங்கியின் வரிசையில் நிறுத்தி, எதிர் அரசியல் செய்தது உச்சக்கட்ட அபத்தம். நாட்டின் மொத்தப் பணத்தில், 86 சதவிகிதம் 500,1000 ரூபாய்களாக இருக்கும்போது, அவை செல்லாது என்று அறிவிப்பதற்கு முன், அதை ஈடுகட்டும் வகையில் தயார் நிலையில் புதிய ரூபாய் நோட்டுக்கள், ஏ.டி.எம்-களின் செயல்பாடுகளில் எந்த மாற்றமும் செய்யாதது ஆளும்கட்சியின் அலட்சிய அரசியல். அதன் பின்புலம் சாதக-பாதகங்களை மக்களிடம் தெளிவுபடுத்தி உருப்படியான நடவடிக்கைகளுக்கு அரசாங்கத்தை இட்டுச் செல்லாமல், வரிசை அரசியல் நடத்தியது எதிர்கட்சிகளின் பொறுப்பற்ற அரசியல். 

மோடி ஏன் இதைச் செய்தார்?

பிரதமர் நரேந்திரமோடியின் இந்த அதிரடி அறிவிப்பின் உண்மையான நோக்கம் என்ன? பொருளாதார வல்லுநர்கள் சில காரணங்களை அடுக்குகின்றனர். அவை என்ன?

வங்கி மூலதனத்தை வலுப்படுத்துவது.

வணிக மூலதனத்தை வங்கிகளுக்குள் கொண்டுவருவது.

கள்ளநோட்டுக்களை ஓழிப்பது.

புதிய உடமைவர்க்கத்தை கட்டுப்படுத்துவது.

பிராந்திய கட்சிகளை தட்டி வைப்பது.

உ.பி, பஞ்சாப், குஜராத் தேர்தல்களில் வெற்றி பெறுவது. 


வங்கி மூலதனத்தை வலுப்படுத்துவது

இந்திய வங்கிகள் தங்களது கையில் போதிய இருப்பு இல்லாமல், திவாலான நிலையில்தான் கடந்த சில ஆண்டுகளாக இயங்கிக்கொண்டிருந்தன. சர்வதேச வங்கிச் சட்டங்களின்படி அவை குறைந்தபட்சம் ஒன்றரை லட்சம் கோடிகளை இருப்பில் வைத்திருக்க வேண்டும். ஆனால், இந்திய  வங்கிகளிடம் அவ்வளவு கையிருப்பில் இல்லை. காரணம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுத்த கடன்கள், வசூலிக்க முடியாமல் வாராக்கடன்களாகவே இருந்தன. அம்பானி, அதானி, பனியா, ரெட்டி, மல்லையா, டாட்டா முதலாளிகளுக்கு கொடுத்த கடன்கள்தான் இவை. இவற்றால், சர்வதேச வங்கிச் சட்டத்தின்படி, வங்கிகளுக்கான அங்கீகாரத்தை இழக்கும் நிலையில் இந்திய வங்கிகள் ஊசலாடிக் கொண்டிருந்தன. இதைச் சமாளிக்க வங்கிகளின் மூலதனத்தை உயர்த்த வேண்டும். அதற்கு பணம் வங்கிகளுக்குள் வந்தே ஆக வேண்டும். ஒரே வழி, 500/1000 ரூபாய்கள் செல்லாது என்ற அறிவிப்பு. அதன்மூலம், கையில் இருக்கும் ரூபாய் நோட்டுக்களை வங்கிக்குள் செலுத்தி மாற்ற வைப்பது. இப்போது பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணத்தில் பெரும்பகுதி நிச்சயம் வங்கிகளுக்கு வந்துதான் ஆக வேண்டும். அதன்மூலம் வங்கி மூலதனம் உயரும். வாராக்கடன்களை வசூலித்தே ஆக வேண்டிய கட்டாயமும் வங்கிகளுக்கு இல்லாமல் போகும். 

42 ஆயிரம் கோடி கள்ள நோட்டுக்கள்

வங்கிகளில்தான் ரூபாய் நோட்டுக்களை மாற்ற வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும்போது, புழக்கத்தில் இருக்கும் கள்ள நோட்டுக்கள் குப்பைக்கு போவதைத்தவிர வேறு வழியே இல்லை. நல்ல நோட்டுக்களை மாற்றுவதே களேபரமான காரியமாக இருக்கும்போது, கள்ள நோட்டுக்களை வைத்திருப்பவர்கள் எப்படி மாற்றுவது? நிச்சயம் அதற்குத் துணியமாட்டார்கள். அவற்றை குப்பைக்கு அனுப்ப வேண்டியதைத் தவிர வேறு வழியே இல்லை. கையிலேயே வைத்திருந்தாலும், டிசம்பர் 31-ம் தேதிக்குப்பிறகு இயல்பாகவே அதன் மதிப்பை இழந்துவிடும். இந்தியாவில் உள்ள கள்ள நோட்டுக்களின் புழக்கம் 0.7 சதவிகிதம் முதல் 2.5 சதவிகிதம் வரை என்கிறது ரிசர்வ் வங்கி. அவர்களிடமும் இதற்கு துல்லியமான கணக்கு இல்லை. அந்தக் கணக்குப்படி பார்த்தால், இந்தியாவில் புழங்கும் கள்ளநோட்டுகளின் அதிகபட்ச மதிப்பு மட்டும் 42 ஆயிரம் கோடி. இந்த 42 ஆயிரம் கோடி கள்ளநோட்டுக்கள் இனி புழங்க முடியாது. 

தொழில் மூலதனம் vs வணிக மூலதனம் 

முதலாளிகளின் உலகத்தில், தொழில் முதலாளிகளுக்கும் வணிக முதலாளிகளுக்கும் எப்போதும் ஒரு பனிப்போர் நடந்துகொண்டே இருக்கும். அதன் பாதிப்புகள், முதலீடுகள், கடன் வாங்குதல், திரும்பிச் செலுத்துதல், சந்தையை தீர்மானித்தல் என்று ஒவ்வொரு படிநிலையிலும் பதிந்திருக்கும். டாடா, அம்பானி, அதானி, டி.வி.எஸ் குழுமங்களின் மூலதனங்களை தொழில் மூலதனங்களுக்கு உதாரணமாகச் சொல்லலாம். வணிக மூலதனங்களுக்கு விருதுநகர், ஈரோடு, சௌகார்பேட்டை போன்ற இடங்களில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் மூலதனங்களைச் சொல்லலாம். வணிக முதலீட்டாளர்களுக்கு  மிகப்பெரிய தொழிற்சாலைகள் தேவை இல்லை. உற்பத்தி சாதனங்கள் தேவையில்லை. ஒரு டேபிள், இரண்டு சேர், இரண்டு தொலைபேசி இணைப்புகள் போதுமானது. அவற்றை மட்டும் வைத்து, “அந்தச் சரக்கை இந்த குடோனுக்கு கொண்டுபோய்விடு... இந்தச் சரக்கை அந்த குடோனுக்குக் கொண்டுபோய்விடு” என்று வாங்கி மாற்றுவது அல்லது வாங்கி இருப்பில் வைத்து விற்பது என்பதை மட்டுமே செய்வார்கள். இவர்களின் வணிக மூலதனம் அவற்றின் லாப நட்டக்கணக்குகள் வங்கி கணக்குகளுக்குள் பெரும்பாலும் வராது. அதனால் கருப்புப்பணம் உருவாகும் இடங்களாகவும், வங்கி மூலதனத்தை பலவீனப்படுத்தும் வர்த்தகமாகவும் இந்த முதலீடுகள் உள்ளன. இவர்களில் பாதிப்பேரையாவது, வங்கிக் கணக்குகளுக்குள் வரவைத்துவிட்டால், வருமானவரியை வசூலிக்கலாம். வங்கி மூலதனத்தை உயர்த்தலாம். அதன்மூலம் தொழில் மூலதனம் வைத்திருப்பவர்களுக்கு கடன் கொடுக்கலாம். வங்கி மூலதனம் என்பது எப்போதும் தொழில் மூலதனத்திற்கு முட்டுக்கொடுக்கவே உருவாக்கப்பட்டதே. 

பணவீக்கம் குறையும்... பணவாட்டம் அதிகரிக்கும்...

மோடியின் அறிவிப்பு ஏறத்தாழ, போர்க்காலங்களில் வெளியாகும் எமர்ஜென்சி அறிவிப்பைப் போலத்தான். இந்த அறிவிப்பின் மூலம், மக்களின் நுகர்வு பெருமளவில் குறைந்துள்ளளது. அதன்மூலம் பணப்புழக்கம் கட்டுப்படுத்தப்பட்டு, அது தற்காலிகமாக வங்கிகளின் பக்கம் திரும்பி உள்ளது. இதன்மூலம் பணவீக்கம் என்பது குறைந்து, பணவாட்டம் அதிகரிக்கும் போக்கு உருவாகும். அப்படிப்பட்ட சூழலில், வங்கிகள் சேமிப்புக் கணக்கிற்கு கொடுக்கும் வட்டி குறையும். அதுபோல, வங்கிகளில் குவிந்த பணத்தை, வங்கிகளே வைத்திருக்க முடியாது. அதை அவர்கள் வைத்திருந்தால், முதலீடு செய்தவர்களுக்கு வட்டி கொடுக்க முடியாது. வங்கியில் இருக்கும் பணத்தை இன்னொருவருக்கு கடனாக கொடுத்தால்தான், அவர் வங்கிக்கு கட்டும் வட்டியில், முதலீடு செய்தவர்களுக்கு வங்கி கட்டி கட்ட முடியும். அதனால், தொழில் முதலாளிகள், வங்கிகளிடம் இருந்து  புளோட்டிங் வட்டிக்கு மீண்டும் கடன்களை வாங்கிக் கொள்வார்கள். 

பிராந்தியக் கட்சிகளை கட்டுப்படுத்துவது

பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பை இடதுசாரிகள் எதிர்ப்பதற்கு சொல்லும் காரணங்கள் வேறு. ஆனால், மம்தாவும், சிவசேனாவும், திருமாவளவனும் எதிர்ப்பதற்கு சொல்லும் காரணங்கள் வேறு. ஏனென்றால், இன்றைய பிராந்தியக் கட்சிகளின் முதுகெலும்பாக இருப்பவர்கள், புதிய பணக்காரர்களாக உருவாகி இருக்கும் மாஃபியா முதலாளிகளும் வணிக முதலாளிகளும்தான். தமிழகத்தில் அமைச்சர்கள் ஒவ்வொருவரும் இதற்கு உதாரணம். அவர்களைத் தவிர்த்து வைகுண்டராஜன், பி.ஆர்.பி, படிக்காசு, ஆறுமுகச்சாமி, கர்நாடகாவில் ரெட்டி சகோதரர்கள், ஆந்திராவின் சுரங்க அதிபர்கள் எல்லாம். இப்போது மோடி வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, இவர்களைப்போன்ற புதிய பணக்கார மாஃபியா முதலாளிகள் மற்றும் வணிக முதலாளிகளின் நடவடிக்கைகளை பெருமளவில் கட்டுப்படுத்தும். பி.ஜே.பி-யில் உள்ள இதுபோன்ற முதலாளிகளை அரசாங்கம் கரையேற்றிவிடும். ஆனால், மாற்றுக் கட்சிகளில் உள்ளவர்களை, வங்கிக் கணக்குகளுக்குள் கொண்டுபோய்த் தள்ளும். அவர்களின் பணப் பரிவர்த்தனை நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்படும். அப்படிச்செய்யும் போது, இவர்களை ஆதாரமாக வைத்துச் செயல்படும் பிராந்தியக் கட்சிகளுக்கு கடும் நெருக்கடி உருவாகும். அதன் மூலம் அந்தக் கட்சிகளை தட்டிவைப்பதே பி.ஜே.பி.-யின் நோக்கம். இது, ஆர்.எஸ்.எஸ்  மற்றும் பி.ஜே.பியின் நீண்டகால நோக்கம். 

 

தற்காலிகமாக இந்த யுக்தி உத்தரபிரதேசம்,பஞ்சாப் மற்றும் அடுத்தவருடம் குஜராத்தில் நடைபெறப்போகும் தேர்தல்களில் பி.ஜே.பி-க்கு மிகப்பெரிய சாதகத்தை உருவாக்கும். தற்போதைய இந்தக் கட்டுப்பாடுகளால், நடைபெற உள்ள தேர்தலில் முலாயம் சிங் யாதவ்,மாயவதி போன்றவர்களால் பெரிய அளவில் பணத்தைச் செலவு செய்ய முடியாது. அதே நேரத்தில் அந்த மாநிலங்களில் பி.ஜே.பியால் பணத்தை வாரி இறைக்க முடியும். அது பி.ஜே.பி-க்கு வெற்றியைப் பெற்றுத்தரும் என்றும் கருதுகிறது. பிரதமர் மோடியின் அறிவிப்புக்குப் பின்னால் இருக்கும் காரணங்களில் இவை முக்கியமான காரணங்கள். இதைப்போல இன்னும் ஏராளமாய் காரணங்கள் இருக்கலாம். அதனால், ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் வரிசையில் நிற்கின்றனர் என்ற கூச்சல்கள் எல்லாம் நிச்சயம் மோடி அன் கோ-வின் காதுகளை எட்டப்போவதில்லை. அரசாங்கத்திடம் அந்தக் கூச்சல்கள் கரிசனத்தை உருவாக்கப் போவதும் இல்லை. அதனால், காரியங்கள் மாற்றி நடக்க வாய்ப்பே இல்லை. ஏனென்றால், இங்கு ஏழை-எளிய மக்கள் ஒரு பாத்திரமாக பார்க்கப்படவே இல்லை. 

ஜோ.ஸ்டாலின்
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ