Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘ஜல்லிக்கட்டுக்குத் தடை... பின்னணியில் தீய சக்திகளின் இயக்கம்!’ : பொன். ராதாகிருஷ்ணன்

ஜல்லிக்கட்டு

வரும் பொங்கல் பண்டிகைக்குள் எப்படியும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்துவிடும் என்ற  நம்பிக்கையில்  இருந்த  தமிழர்களுக்கு  ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை  நீக்க  முடியாது என்ற  உச்ச நீதிமன்ற அறிவிப்பு இடியாய் இறங்கியுள்ளது . தமிழக அரசு  தொடர்ந்த சீராய்வு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை நீடிக்கும் என்று உத்தரவிட்டது. என்றாலும் பொங்கல் பண்டிகைக்குள் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி வாங்கி விடலாம்  என்ற  நம்பிக்கையில் பலரும் உள்ளனர்.

தமிழர் திருநாளான பொங்கல் தினத்தையொட்டி நடத்தப்படும்  ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு  2014-ல்  உச்ச நீதிமன்றம் தடைவிதித்தது. உச்ச நீதிமன்றத்தின்  இந்த  உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி, தமிழக அரசு சீராய்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது. இந்த மனு மீதான  விசாரணை  நடைபெற்று  வந்தது. அதே நேரத்தில் மத்திய அரசின்  சார்பில் இது தொடர்பான வழக்கு ஒன்றும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் தமிழக  அரசு  தொடர்ந்துள்ள  மறுசீராய்வு மனு, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரோஹிண்டன், எப். நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது  தமிழக அரசு சார்பில்  வாதிட்ட  வழக்கறிஞர் சேகர் ஆப்தே 'தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு, காளைகளை துன்புறுத்தும் நிகழ்ச்சி அல்ல. எனவே மத்திய அரசின்  1960-ம் ஆண்டைய விலங்குகள் நல சட்டத்துக்கு எதிரானதும்  அல்ல" என்று  வாதிட்டடார்.

மதத்துக்கும் நிகழ்ச்சிக்கும்  தொடர்பில்லை !

அதே நேரத்தில் மாநில அரசு  என்ற அடிப்படையில் காளைகளை பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கும் உள்ளது.  ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு என்பது வழிபாடு  தொடர்புடையதாக  உள்ளதால், இந்திய அரசியலைமைப்பு சட்டப்பிரிவு 25-ஐ அடிப்படையாகக் கொண்டு  உள்ளது. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின்போது காளைகளை துன்புறுத்தக் கூடாது  என்பதால், தமிழக அரசும் 2009-ம் ஆண்டு  தனிச்  சட்டம்  ஒன்றைக் கொண்டு வந்தது. அதற்கான வரையறைகளையும் அதில் வகுத்துள்ளது. அங்கொன்றும் , இங்கொன்றுமாக நடக்கும் காளைகள் துன்புறுத்தப்படும்  சம்பவங்களையொட்டி, ஒட்டுமொத்தமாக தடைவிதிப்பது ஏற்புடையது அல்ல. எனவே ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட  தடையை நீக்கி உத்தரவிட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

இந்திய பிராணிகள் நலச்சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தனது வாதத்தை எடுத்து வைத்தார். அதில் ஜல்லிக்கட்டு என்பது மிருகவதைச்சட்டம் மற்றும் தமிழக அரசின்  2009-ம் ஆண்டு தனிச்சட்டம் ஆகியவற்றுக்கு எதிரானது என்று தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் , "மிருகவதை தடைச் சட்டம் மற்றும் தமிழக  அரசின் 2009-ம் ஆண்டு தனிச்சட்டம் ஆகியவற்றுக்கு எதிராக ஜல்லிக்கட்டு போட்டிகள் உள்ளது. மேலும் இந்த விவகாரத்தில், இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 25-ஐ ஏன்  நுழைக்கிறீர்கள்?  பொழுதுபோக்குக்காக  நடத்தப்படும் நிகழ்ச்சியில் எதற்கு மதத்தைக் கொண்டு வருகிறீர்கள்" என கேள்வி எழுப்பினர். மேலும், "நிகழ்ச்சிக்கும், மதத்துக்கும்  தொடர்பில்லை. எனவே, ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க முடியாது" என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதோடு தமிழக அரசின்  சீராய்வு மனுவையும் தள்ளுபடி செய்தனர். மேலும் மத்திய  அரசு சார்பில் ஜல்லிக்கட்டு தொடர்பான  வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்படும் என்றும் நீதிபதிகள்   கூறினர்.

அரசின் கண்துடைப்பு நாடகமே  தடை  தொடர காரணம் !

உச்ச நீதிமன்றத்தின் தடை உத்தரவு  குறித்து  ஜல்லிக்கட்டு பாதுகாப்புச் சங்கத்தைச் சேர்ந்த  அம்பலத்தரசுவிடம் பேசினோம்.

"வீடியோ கேமில் ஜல்லிக்கட்டை விளையாடுங்கள்  என்று  கூறியிருப்பது  மிகுந்த வேதனை அளிக்கிறது.  தமிழகத்தில் விவசாயிகள் தங்களது காளைகளை குழந்தைகள் போல்  வளர்த்து வருகிறார்கள் . பொழுதுபோக்குக்காக  நடத்தப்படும்  இந்த  பாரம்பரிய  விளையாட்டுக்கு  தடை விதித்திருப்பது, தமிழர்களின்  பழக்க, வழக்கங்களுக்கு விதிக்கப்பட்ட தடை என்றுதான் சொல்ல வேண்டும். இந்தத் தடையால் காளைகள் இனமே அழிந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதிலும் அரசியல் உள்ளது. நாட்டு மாடுகளை அழிக்கவே இதுபோன்ற பொய்யான கதைகளைக் கட்டிவிட்டு செயல்பட்டுள்ளனர். அதன் எதிரொலியாக, இன்று காளை மாடுகளை வளர்ப்போர் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. பெரும்பாலானோர் காளைகளை வளர்ப்பதையே நிறுத்தி விட்டனர். இந்த நிலையில் காட்சிப்படுத்தும் பட்டியலில் இருந்து காளைகளை  நீக்கிய பிறகும் அதனை  ஏற்றுக் கொள்ளாமல்  நீதிபதிகள், இவ்வாறு  தடையை நீக்க  மறுத்திருப்பதை ஏற்க முடியாது.

இதுபோன்ற தடைகள் காரணமாக, தமிழகத்தின் பாரம்பரிய  கலாசாரம் முற்றிலும் மறைந்துபோகும். மேலும் இந்த விவகாரத்தில் மத்திய- மாநில அரசுகளின்  நடவடிக்கை  என்பது வெறும் கண்துடைப்பு நாடகமாகத்தான் உள்ளது. இதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கவேண்டும் என்று சொன்னால் 1960-ம் ஆண்டு மிருகவதைத் தடைச்சட்டத்தில்  திருத்தம் கொண்டு வர வேண்டும். மேலும்  ஜல்லிக்கட்டை நடத்துவதற்கென்று, புதிய  சட்டத்தை கொண்டு வரவேண்டும்.  அப்படி  சட்டம் கொண்டு வந்தால் மட்டுமே எதிர்காலத்தில் யாரும் இதுபோன்ற வழக்குகளைத் தொடர முடியாது.  எனவே மத்திய  - மாநில அரசின்  கையில்  உள்ள இதுபோன்ற விவகாரத்தை சரிப்படுத்தாமல் நீதியை நாம் எதிர்பார்க்க முடியாது. விரைவில்  இதுகுறித்து மத்திய அமைச்சர்களை சந்தித்துப்  பேச உள்ளோம். அரசியல் கட்சிகள், இந்த விவகாரத்தை வெறும் வாக்கு வங்கிக்காக   மட்டும் குரல் கொடுக்காமல் தமிழர்களின் மரபுகள் அழிந்து விடாமல் பாதுகாக்கும் வகையில் ஆக்கபூர்வமான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்பதே எங்கள்  கோரிக்கை" என்று குறிப்பிட்டார்.

  ஜல்லிக்கட்டு சட்டத்தை   தாக்கல் செய்ய வேண்டும் !

தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மாநிலத்  தலைவர் ராஜசேகர்  கூறுகையில், "மிருகவதை  தடைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று அரசுக்கு தொடர்ந்து  கோரிக்கை வைத்து வருகிறோம்.


இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், மஹாராஷ்டிரா  உள்ளிட்ட  ஒன்பது  மாநிலங்களில்  விதவிதமாக இந்தப் போட்டியை நடத்துகிறார்கள். மாட்டுவண்டிப் பந்தயம், எருதுபிடி நிகழ்ச்சி, ஜல்லிக்கட்டு  என பல்வேறு பெயர்களில் இதுபோன்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தமிழகத்தைத் தவிர, மற்ற மாநிலங்களில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. ஆனால் தமிழகத்தில்தான் ஜல்லிக்கட்டுக்கு அதிக கட்டுப்பாடு விதிக்கப்பட்டு, நடத்த முடியாமல்  இருக்கிறோம். இது  தமிழர்களின்  பாரம்பரியம் என்று  பார்க்கப்படுவதாலேயே இதைத் தடுக்கிறார்கள். வரும் பொங்கலுக்குள்  ஜல்லிக்கட்டை நடத்தவேண்டும் என்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல்  கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும்.

ஏற்கெனேவே 'ஜல்லிக்கட்டு  வரைவு மசோதா' நிலைக்குழுவின் ஒப்புதல் பெற்று  தயாராக  உள்ளது. அதனை நாடாளுமன்றத்தில்  தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டியது மட்டுமே உள்ளது. தமிழகத்தில் உள்ள  கட்சிகள் அதற்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இதுதொடர்பாக ஜல்லிக்கட்டு பேரவை சார்பில்  மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை சந்தித்து பொங்கலுக்குள்  ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு ஏதுவாக நடவடிக்கை  எடுக்குமாறு  கூறியுள்ளோம்.  அதே நேரத்தில் தமிழக  தலைமைச் செயலாளரைச் சந்தித்து, இப்பிரச்னையில், மத்திய அரசுடன் பேச வேண்டும் என்று கூறியுள்ளோம். எங்கள்  தரப்பில் இருந்தும்  அழுத்தம் கொடுப்பதோடு மத்திய -மாநில அரசுகளை  ஈர்க்கும் வகையில் போராட்டம் நடத்த உள்ளோம் ' என்று கூறினார்

மத்திய அமைச்சர்  பொன். ராதாகிருஷ்ணன். "உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை  எதுவும் சொல்ல முடியாது. ஆனால், இதன் பின்னணியில் மிகப்பெரிய  சக்திகள்  இருந்து  இயங்குகிறார்கள் என்பது  மட்டும் எல்லாருக்கும் புரிகிறது. ஜல்லிக்கட்டு என்பது  தமிழர்களின் கலாசார விழா. அதனை  அழிந்துபோகச் செய்வதற்கு சிலர் முயற்சி செய்கிறார்கள். நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தீர்ப்பு கூறியிருப்பது தமிழக அரசு போட்ட வழக்கிற்குத் தான் . மத்திய அரசு போட்ட வழக்கு அப்படியே உள்ளது. அதன் முடிவையும் நாம் பார்க்க வேண்டும். அதுமட்டுமில்லாமல், ஜல்லிக்கட்டு  நடத்துவதற்கு ஏதுவாக சில முயற்சிகளை  செய்துவருகிறேன். ஜல்லிக்கட்டை மீண்டும் கொண்டு வருவோம் என்ற நம்பிக்கை உள்ளது"  என்று தெரிவித்தார்.

கேள்வி: ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக பிரதமரிடம் பேசியுள்ளீர்களா ?

பொன். ராதாகிருஷ்ணன்: இதுகுறித்து மத்திய  அமைச்சர்களிடம் பேசியுள்ளோம். தமிழர்களுடைய பண்பாட்டையும், கலாசாரத்தையும் காக்கக்கூடிய  மிகப்பெரிய  முயற்சியை எடுத்து வருகிறேன்.  இந்த முயற்சி முழுமையாக வெற்றியடையும் என்ற  நம்பிக்கை எனக்கு உள்ளது .எனது முயற்சியின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை  உள்ளது. ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவதற்கான வாய்ப்புகளும் நமக்கு உள்ளது.

கே: தீய சக்திகள் இயக்குவதாக  கூறினீர்களே  யார் அந்த தீய சக்தி ?

பொன்னார்:  அந்த தீய சக்திகளை இப்போது  வெளியிட முடியாது. ஆனால்  மக்களுக்கு  தெரிய வாய்ப்புள்ளது. இதே மாடுகளை அடிமாடாகக் கொண்டு போகவும், அவற்றை கொண்டு செல்வதற்கும் ஒத்துழைப்பார்கள். மாடுகளின் ஒவ்வொரு பாகத்தையும்  விற்றுப் பிழைக்க ஆர்வமாக இருப்பார்களே  தவிர, மாடுகளை வாழ வைக்க விரும்ப மாட்டார்கள். இந்திய மண்ணில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பொருளும் அதனுடைய  சுய தன்மையை இழக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள், இதை தடுக்கப் பார்க்கிறார்கள். எனவே  பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு என்ன  செய்ய வேண்டுமோ  அதை செய்வேன்" என்றார்.

உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பான  வழக்கு 10 ஆண்டுகளுக்கும் மேல் நடந்து வருகிறது. மிருகங்களை வதை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாதுதான். அதேநேரத்தில் ஆயிரக்கணக்கான மக்களின், நம்பிக்கையும், கலாசாரமும் இப்போட்டியில் அடங்கியுள்ளது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றமே முன்வந்து  மக்களுக்கும், பிராணிகள்  ஆர்வலர்களுக்கும்  தெளிவான, நியாயமான ஒரு பார்வையை  ஏற்படுத்தினால் மட்டுமே சாமான்ய மக்களின்  உணர்வுகளுக்கு நீதித்துறை மதிப்பளிக்கிறது என்பதாக எடுத்துக்கொள்ள முடியும் என்பதே நமது கருத்து. ..

- கே. புவனேஸ்வரி.

எடிட்டர் சாய்ஸ்