Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ராம்தேவ் உளவியல் சிகிச்சை எடுக்க வேண்டும்!' - சமூக ஆர்வலர்கள் சாடல்

ராம்தேவ்

பிரதமர்  நரேந்திர மோடி, கடந்த 8-ம் தேதி வெளியிட்ட பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு நாடுமுழுவதும் பல்வேறு அசாதாரண விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பால், சாமான்ய மக்களுக்குத்தான் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. அன்றாடத் தேவைக்கான அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாமல் தவித்தனர். அறிவிப்பு வெளியாகி ஓரிரு நாட்களில் நிலைமை சரியாகிவிடும் என்று எண்ணிய மக்கள், இன்று வரை அதாவது 10 நாட்களைக் கடந்தும் அத்தியாவசியப் தேவைகளுக்கு பணம் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். கடந்த ஒரு வாரத்துக்கு மேல் ஆகியும் இன்னும் நிலைமை சீரடையவில்லை. விளைவுகளைத் திட்டமிடாமல் பிரதமர் மோடி அறிவித்து விட்டார் என்றும், இதனால்  சாமான்ய மக்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல்கட்சிகளின் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாபா ராம்தேவ் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.

வங்கிகளுக்கு வருபவர்கள் எதிர்க்கட்சிகளால் அனுப்பட்டவர்கள் !

யோகா குரு பாபா ராம்தேவ் "ஏ.டி.எம் மற்றும் வங்கிகளுக்கு வந்து ரூபாய் நோட்டுகளை பெற்றுச் செல்லும் மக்கள் அனைவரும் எதிர்க்கட்சிகளால் அனுப்பப்பட்டவர்கள்" என்று கூறியுள்ளார்.  மேலும், "500 மற்றும் 1,000 ரூபாய்செல்லாது என்ற மத்திய அரசு அறிவித்திருப்பதன் நோக்கம், நாட்டில் உள்ள கறுப்புப் பணத்தை ஒழிக்கவே என பிரதமர் கூறியுள்ளார். இந்த நல்ல திட்டத்தை தோல்வி அடையச் செய்வதற்கு எதிர்க்கட்சிகள், சில மறைமுக வேலைகளை செய்து வருகின்றன.  அதன் ஒரு பகுதிதான் ஏ.டி.எம்-களின் முன்னால் நிற்கும் கூட்டம். அந்தக் கூட்டத்தை எதிர்க்கட்சிகள்  திட்டமிட்டு அனுப்பியுள்ளன. வங்கிகளுக்கும் ஆட்களை அவர்கள் அனுப்பியுள்ளனர். இந்த நடவடிக்கை கறுப்புப்பணத்தை பதுக்கியவர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளது. கறுப்புப் பணத்தை ஒழிக்கவும் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தவும் பிரதமர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். எனவே பொதுமக்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. நல்ல விஷயத்துக்காக  பொறுமை காப்பதில் தவறில்லை" என்று ராம்தேவ் கூறியுள்ளார்.
 
  வெளிநாடுகளில் சொத்துகளை எப்படி வாங்கினார் ?


காங்கிரஸ் மூத்தத் தலைவர் திக்விஜய் சிங் கூறுகையில், ராம்தேவின் கருத்து அதிர்ச்சி ஏற்படுத்துவதாக உள்ளது என்றும்,  இதற்கு அவர் விளக்கம் கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். "எதிர்க்கட்சிகள் ஆட்களை அனுப்புவதாக, ராம்தேவ் எந்த ஆதாரங்களை வைத்துக் கொண்டு கூறுகிறார்.
வெளிநாடுகளில் அவர் வாங்கிக் குவித்துள்ள சொத்துக்கு என்ன பதில் சொல்லப்போகிறார். வெளிநாடுகளில் சொத்துகள் வாங்கும் அளவுக்கு அவரிடம் பணம் எங்கிருந்து வந்தது?"என  திக் விஜய்சிங் கேள்வி எழுப்பியுள்ளார். ராம்தேவின் கருத்துக்கு பல்வேறு தலைவர்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

துதி பாடுகிறார் ராம்தேவ்!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு. திருநாவுகரசர்  கூறுகையில், "பொதுமக்களின் யதார்த்த வாழ்கையை ராம்தேவ் உணரவில்லை. உழைத்து சம்பாதித்தவர்கள்  பணத்தை எடுக்கமுடியாமல் பசியோடும் பட்டினியோடும் வீதியில் அலைந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி அலைந்து கொண்டிருக்கிற மக்களின் பிரச்னைகளைப் பற்றி யோசிக்காமல் கொஞ்சம்கூட  தொடர்பில்லாத விஷயங்களை ராம்தேவ் மற்றும் பிஜேபியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பேசி வருகிறார்கள். பொதுமக்களின் கைகளில் மை வைப்பது, பணம் எடுப்பது தொடர்பாக நாளுக்கொரு அறிவிப்பையும், பொழுதுக்கொரு முடிவையும்  வெளியிட்டு மக்களை மேலும் மேலும் சிரமத்துக்கு ஆளாக்கி வருகின்றனர். பணத்துக்காக, வரிசையில் காத்துக் கிடக்கின்ற மக்களை இதுமேலும் அவமானப்படுத்தும் செயல். மத்திய அரசு செய்யும் தவறுகளை மறைத்துப் பேசுவதற்கும் துதிபாடவும் ஒரு கூட்டம் உள்ளது. அந்த கூட்டத்தில் ஒரு ஆள்தான் பாபா ராம்தேவ்" என்றார் . 

ஏ.டி.எம் மையங்களுக்கு எதிர்க்கட்சிகள் தான் ஆட்களை அனுப்பி இருப்பார்கள் என்று கூறிய பாபா ராம்தேவ், அன்றைய தினமே மாலையில் மாற்றுக் கருத்தை வெளியிட்டுள்ளார். "பி.ஜே.பி-யில் உள்ளவர்கள் பெரும்பாலோனோர் திருமணமாகாதவர்கள் என்பதால் மற்றவர்களின் பிரச்னை அவர்களுக்கு புரிய வாய்ப்பில்லை. 15 நாட்களில் திருமணம் வைத்துள்ளவர்கள் என்ன செய்வார்கள் என்ற யோசனையில்லாமல் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டு விட்டது" என தெரிவித்துள்ளார்.

ராம்தேவ் உளவியல் சிகிச்சை எடுக்க வேண்டும் !

இதுகுறித்து மனித உரிமை ஆர்வலர் மார்க்சிடம்  பேசினோம். "ராம்தேவின் கருத்து விவாதிக்கத் தகுதியற்றது என்று தான் சொல்ல வேண்டும். பொதுமக்கள் நடுரோட்டில் அலைந்து கொண்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் அனுப்பிதான் ஏ.டி.எம்-களிலும், வங்கிகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது என்று சொல்வது இரக்கமற்றவர்கள் சொல்லும் கருத்து. அதுமட்டுமின்றி ராம்தேவ், மாற்றி, மாற்றிப் பேசி வருகிறார். இது, உளவியல் ரீதியாக அவர் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை காட்டுகிறது " என்றார் .

ராம்தேவின் இந்த கருத்தால் மீண்டும் அவருடைய சொத்து மதிப்பு குறித்து அரசியல் கட்சிகள் பேசத்  தொடங்கிவிட்டன. கறுப்புப் பணத்துக்கு எதிராக குரல் கொடுத்தவர் ராம்தேவ். மற்றவர்களின் கணக்கை கேட்பதற்கு முன் அவருடைய சொத்து மதிப்பை அவர் வெளியிடும்படி பலரும் கோரிக்கை விடுத்த பின்னரும், சொத்துமதிப்பை அவர் வெளியிடவில்லை. அழுத்தம் அதிகமானதைத் தொடர்ந்து, 2011 -ல் பல்வேறு குளறுபடிகளுடன் அவர் தனது சொத்து மதிப்பு குறித்த தகவல்களை வெளியிட்டிருந்தார்.

விசாரணையில் ராம்தேவுக்குச் சொந்தமாக பலகோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் இருப்பதும், வெளிநாட்டு வங்கிகளில் ஏராளமான பணம் முதலீடு செய்யப்பட்டு இருப்பதும் கண்டறியப்பட்டது. ஆப்ரிக்கா மற்றும் லண்டன் போன்ற நாடுகளில் பல கோடி ரூபாய் கறுப்புப் பணத்தை ராம்தேவ் பதுக்கி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதுமட்டுமின்றி, ராம்தேவ் அறக்கட்டளை மூலம் ஏராளமான நிறுவனங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.கான்பூரில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மூலிகை தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இப்படி பலவழிகளிலும் பணத்தை சம்பாதித்து அயல்நாடுகளில்  பதுக்கி வைத்திருப்பவர்கள்தான் கறுப்புப் பணத்தை ஒழிக்கிறோம் என்று கூப்பாடு போடுகிறார்கள்.

அடுத்தவேளை உணவுக்காக வரிசையில் காத்திருக்கும் மக்களை விமர்சிப்பதை விட்டுவிட்டு, பதுக்கி வைத்துள்ள கறுப்புப் பணத்துக்கு பாபா ராம்தேவ், எப்படி கணக்கு காட்டப் போகிறார்? என்பதே வங்கிகளில் வரிசையில் காத்திருக்கும் சாமான்ய மக்களின் கேள்வியாக உள்ளது!

- கே.புவனேஸ்வரி



Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close