Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இடைத்தேர்தல் வெற்றி ஆளுங்கட்சிக்குத்தானா... 12 ஆண்டு நிலை மாறுமா..?


2004ம் ஆண்டு. தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான அரசு ஆட்சியமைத்திருந்தது. அப்போது மங்களூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்த திருமாவளவன் தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, அங்கு இடைத்தேர்தல் நடந்தது.

அப்போது, அ.தி.மு.க. ஆட்சி காலமான 2001 முதல் 2004ம் ஆண்டு வரை 5 இடைத்தேர்தல்கள் நடந்திருந்தது. அத்தனையிலும் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. வென்றிருந்தது. ஆறாவதாக நடந்த மங்களூர் தொகுதியில் தி.மு.க. வென்றது. தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெறாமல் எதிர்கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றாது இது தான் கடைசி. இதற்கு முன்னர் 1999ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி காலத்தில், நத்தம் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் விஸ்வநாதன் வெற்றி பெற்றார். ஆனால் 2004க்கு பிறகு இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியை தவிர, எதிர்கட்சிகள் வென்ற வரலாறு கிடையாது. அனைத்திலும் ஆளுங்கட்சியே வென்றது.

மாற்றி அமைக்கப்படுமா 12 ஆண்டு கால வரலாறு?

அதன் பின்னர் 2006 முதல் 2011 வரையிலான தி.மு.க. ஆட்சி காலத்தில் நடந்த 11 இடைத்தேர்தல்களிலும் தி.மு.க.வே வென்றது. இதேபோல் 2011-16 வரை நடந்த 7 இடைத்தேர்தல்களிலும் அப்போதைய ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வே வென்றது. கடைசியாக இடைத்தேர்தலில் எதிர்கட்சி வேட்பாளர் வெற்றி பெற்று 13 ஆண்டுகள் ஆகிறது.

இப்போது தமிழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிக்கான தேர்தலும், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலும் நேற்று நடந்து முடிந்திருக்கிறது. இந்த வாக்குகள் எண்ணப்பட்டு ஓரிரு நாளில் முடிவு அறிவிகக்ப்பட உள்ளன. இந்த தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கப்போகின்றன. கடந்த 12 ஆண்டு கால வரலாற்றை மாற்றி அமைக்குமா? இல்லை இடைத்தேர்தல் வெற்றி ஆளுங்கட்சிக்கு தான் என்ற நிலை தொடருமா?

பொதுவாக இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு என்பது உயரும். இடைத்தேர்தல் என்றால் குறைந்த பட்சமாக 70 சதவீத வாக்குப்பதிவு என்பது இயல்பாகி விட்டது. அரவக்குறிச்சியில் 80 சதவீதத்தை கடந்தும், தஞ்சாவூர், திருப்பரங்குன்றத்தில் 70 சதவீதம் என்ற அடிப்படையிலும் வாக்குகள் பதிவாகியுள்ளன. பொதுவாக வாக்கு சதவீதம் அதிகரித்தால் அது ஆளுங்கட்சிக்கு எதிரான சூழலை ஏற்படுத்தும் என்ற கணிப்பு இடைத்தேர்தலில் பொய்த்தே வருகின்றன.

ஆளுங்கட்சியே வெல்வது ஏன்?

வாக்கு சதவீதம் அதிகரிப்புக்கு மிக முக்கிய காரணங்கள் இரண்டு. முதலாவது அதிகபடியான கவனம் இடைத்தேர்தல் நடக்கும் தொகுதியில் குவிக்கப்படுவது. ஓரிரு தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கும் போது, கட்சியின் ஒட்டுமொத்த நிர்வாகிகளும் அங்கு களமிறங்கி தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்துவார்கள். 100 மக்களுக்கு ஒரு நிர்வாகி என்ற வகையில், தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள். அந்த 100 பேரை வாக்களிக்க வைப்பதே அவர்களுக்கான வேலை என்பது வாக்கு சதவீதம் அதிகரிக்க முக்கிய காரணம்.

 

அடுத்து பணம். வாக்காளர்களை கவர, பணம் கொட்டி கொடுக்கப்படுகிறது. வெற்றியை தொடர ஆளுங்கட்சியும், நாங்களும் களத்தில் இருக்கிறோம் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் எதிர்கட்சியும் இருப்பதால் இரு கட்சிகளும் பணத்தை கொட்டிக்கொடுக்கிறார்கள். இந்த இரண்டும் தான் வாக்குப்பதிவு அதிகரிக்க மிக முக்கிய காரணம். மற்றபடி வாக்குப்பதிவு அதிகரிப்பது என்பது மக்களால் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவல்ல.

50 இடைத்தேர்தலில் எதிர்கட்சிகள் வெற்றி இவ்வளவு தான்.. !

இடைத்தேர்தலில் தொடர்ச்சியாக ஆளுங்கட்சி வெல்வதற்கும் இவைகள் தான் காரணம். தேர்தல் பணிக்கு எதிர்கட்சியில் ஆட்கள் இருந்தாலும், அதிகாரம் என்பது ஆளுங்கட்சியிடம் தான் இருக்கும். எதிர் கட்சியில், கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் பணியில் இருக்கும் போது, ஆளுங்கட்சியில் அமைச்சர்கள் களமிறங்கி இருப்பார்கள். எதிர்கட்சிகளை விட பணத்தையும் ஆளுங்கட்சியால் செலவழிக்க முடியும். இவைகள் தான் அதிகப்படியான வாக்குப்பதிவுக்கும், ஆளுங்கட்சி வெற்றி பெறவும் மிக முக்கியமான காரணங்கள்.

இடைத்தேர்தல் என்றால் ஆளுங்கட்சி தான் ஜெயிக்கும் என்பது தான் நிலை. குறிப்பாக கடந்த 1980ம் ஆண்டுக்கு பின்னர் இதுவரை 50 இடைத்தேர்தல்கள் நடந்துள்ளன. இதில் எதிர்கட்சிகள் வென்றது என்பது வெறும் 8 தொகுதிகளில் தான். அதுவும் 2004க்கு பின்னர் எந்த தொகுதியிலும் எதிர்கட்சி வெற்றி பெறவில்லை.  12 ஆண்டுகளாக வரலாறு இப்படித்தான் எழுதப்பட்டு வருகிறது.

பொதுவாக இடைத்தேர்தல் என்றால் ஆளுங்கட்சி தன் அதிகார, பண பலத்தை பெருமளவில் பயன்படுத்துகிறது. எதிர்கட்சிகளும் அதை பயன்படுத்துகிறது என்றாலும் ஆளுங்கட்சி அளவுக்கு பணத்தை பயன்படுத்த முடிவதில்லை. அதிகார பலம் என்பது எதிர்கட்சிகளுக்கு இருப்பதில்லை. இந்த அதிகார, பண பலம் மூலம், தனது வாக்கு சதவீதத்தை ஆளுங்கட்சி உயர்த்திக்கொள்கிறது. பொதுத்தேர்தலில் எடுக்கும் வாக்குகளை விட, ஆளுங்கட்சியாக இடைத்தேர்தலை சந்திக்கும் போது அந்த கட்சி குறைந்த பட்சமாக 15 சதவீத வாக்குகளை கூடுதலாக பெறுகிறார்கள். தற்போது நடந்து முடிந்துள்ள 3 தொகுதி தேர்தல் அப்படியான தேர்தலின் ஒன்று தானா?

இந்த இடைத்தேர்தலும் அப்படித்தானா?

தற்போது தேர்தல் நடந்துள்ள தொகுதிகளில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகள் தி.மு.க. ஆதரவு தொகுதி என அறியப்படும் தொகுதிகளாகும். திருப்பரங்குன்றம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவான தொகுதியாக பார்க்கப்படுகிறது. தஞ்சாவூர் தி.மு.க. தலைவர் கருணாநிதி, எம்.ஜி.ஆர் காலத்தில் போட்டியிட்டு வென்ற தொகுதி. தி.மு.க.வின் கோட்டை என அழைக்கப்படும் தொகுதி. இதேபோல் அரவக்குறிச்சி தொகுதியும் தி.மு.க.வின் கோட்டை என சொல்லப்படும் தொகுதி தான். 2011 சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க. மிக மோசமான தோல்வியை சந்தித்த நேரத்திலும் அரவக்குறிச்சியில் தி.மு.க. வென்றது. அதே வேட்பாளரான கே.சி.பழனிச்சாமி போட்டியிடுகிறார் என்பதால் தி.மு.க.வுக்கு கூடுதல் வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்படுகிறது.

பொதுத்தேர்தல் நடந்திருந்தால் இந்த இரு தொகுதிகளிலும் தி.மு.க. வென்றிருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது. இப்போது இடைத்தேர்தல் நடக்கிறது. இதன் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கப்போகிறது?. "தஞ்சை, அரவக்குறிச்சி உண்மையில் தி.மு.க. ஆதரவு தொகுதிகள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியில் பண பலம், அதிகார பலத்துடன் போட்டியிட்டு வெல்வது என்பது சிக்கல் தான். வழக்கம் போல இந்த தேர்தல் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அமையவே வாய்ப்பு அதிகம். ஆனால் 2004ம் ஆண்டு இதே அ.தி.மு.க. ஆட்சியில் இடைத்தேர்தலில் தி.மு.க. வென்றிருக்கிறது. 2004க்கும் இப்பொதைக்குமான இடைவெளி வெறும் 12 ஆண்டுகள் தான் எனவே மாற்றம் ஏற்படாது எனவும் சொல்வதற்கில்லை.

புதுவையை பொறுத்தவரை நெல்லித்தோப்பு இடைத்தேர்தலிலும் ஆளுங்கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக சொல்கிறார்கள். கடந்த தேர்தலில் நெல்லித்தோப்பு தொகுதியில் வென்றவர் காங்கிரஸ்  ஜான்குமார். 65 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று வென்றார். இப்போது ஆளுங்கட்சியாக, முதல்வர் போட்டியிடும் தொகுதியாக நெல்லித்தோப்பு உள்ளது. பொதுவாக முதல்வரை தங்கள் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுப்பதை தான் மக்கள் விரும்புவார்கள். இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்  ஜான்குமார் ஏற்கனவே 65 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று வென்றுள்ள நிலையில், இந்த முறை இன்னும் வாக்குகள் கூடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் என்ன முடிவெடுத்திருக்கிறார்களோ?

- ச.ஜெ.ரவி,

படங்கள் : கே.குணசீலன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close