Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழகத்தில் வெல்லும் அ.தி.மு.க. புதுவையில் ஏன் தோற்றது தெரியுமா? இடைத்தேர்தல் அரசியல் !

டைத்தேர்தல் நடக்கும் தொகுதிகள் தவிர வேறு எங்கும் அதன் அதிர்வுகளையோ, எதிர்பார்ப்புகளையோ விதைக்காமல் நடந்து முடிந்திருக்கிறது 4 தொகுதிகளுக்கான தேர்தல். தேர்தல் முடிவுகள் வெளியான இந்த கணத்தில் கூட யாரிடமும் பெரிய ஆர்வம் தென்பட்டிருக்கவில்லை. 'இடைத்தேர்தல் என்றாலே அங்கு ஆளுங்கட்சி தானே வெல்லும். இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது' என்ற பேச்சும் ஒலிக்கத் தவறவில்லை. உண்மையில் இடைத்தேர்தல் ஏன் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகத்தான் இருக்கிறது தெரியுமா?

1980க்கு 85 சதவீதம் ஆளுங்கட்சிக்கே வெற்றி

தமிழகத்தில் 1980க்கு பின்னால் மொத்தம் 51 இடைத்தேர்தல், 2 ஒத்தி வைக்கப்பட்ட தேர்தல்கள் (தற்போது நடந்து முடிந்த தேர்தல்களையும் சேர்த்து) நடந்து முடிந்துள்ளது. இதில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றது என்பது வெறும் 8 தொகுதிகளில் தான். மீதமுள்ள 43 தொகுதி இடைத்தேர்தல், 2 ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் என 45 தொகுதிகளுக்கான தேர்தலில் ஆளுங்கட்சியே வென்றுள்ளது. அதுவும் 1990களுக்கு பின்னால் எதிர்கட்சிகள் வெற்றி என்பது பெருமளவு குறைந்து, இடைத்தேர்தல்களில் எதிர்கட்சி வெல்வது என்பது அரிதினும் அரிதாக நடக்கத்துவங்கியது.

1999-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி காலத்தில், நத்தம் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் விஸ்வநாதன் வெற்றி பெற்றார். இந்த வெற்றி பெரிய வெற்றியாக பார்க்கப்பட்டது. அதற்கு 5 ஆண்டுகளுக்கு பின்னர் 2004-ம் ஆண்டு. தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நடந்து கொண்டிருந்தபோது, மங்களூர் தொகுதியில் தி.மு.க. வென்றது. இதற்கு பின்னர் நடந்த அத்தனை இடைத்தேர்தல்களிலும் ஆளுங்கட்சியே வென்றுவருகிறது. கடந்த 12 ஆண்டுகளாக இடைத்தேர்தல் என்றால் ஆளுங்கட்சிக்கே வெற்றி என்பதே நிலைமை.

அதிக வாக்குப்பதிவு நடந்தால் ஆளுங்கட்சிக்கு சாதகம், பெண்கள் அதிகளவில் வாக்களித்தால் அது அ.தி.மு.க.வுக்கு சாதகம் என தேர்தலின் அத்தனை கணக்குகளையும் இடைத்தேர்தல் முடிவுகள் தவிடு பொடியாக்கி விடுகிறது. அப்படியென்றால் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியே தொடர்ச்சியாக வெற்றி பெற என்ன காரணம் என கேட்கிறீர்களா?

வெற்றிக்கு வழி வகுக்கும் அதிகார பலம்

முதல் காரணம் அதிகார பலம். ஆளுங்கட்சி, எதிர்கட்சி என இரு கட்சிகளும் தீவிரமாக போட்டியிட்டாலும், தேர்தலை நடத்தும் அதிகாரிகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அதிகாரிகள் என்பதும், காவல்துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதும் ஆளுங்கட்சிக்கு மிகப்பெரிய பலம். தேர்தல் விதிகளை சில இடங்களிலோ, தேவைப்பட்டால் பல இடங்களிலோ இவர்கள் மிக எளிதாய் மீற முடியும். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க விரும்பினால் அதையும் தங்கு தடையின்றி செய்ய இந்த அதிகாரம் பயன்படும். பயன்படுத்தப்படுகிறது.

ஆளுங்கட்சியின் அமைச்சர்கள் அனைவரும் இடைத்தேர்த்ல் நடக்கும் தொகுதியில் முழு கவனம் செலுத்தி பணியாற்றும்போது, அந்தந்த துறை அதிகாரிகளின் அதிகாரம் முழுக்க தேர்தலுக்கு பயன்படுத்த முடியும். தேர்தல் விதிகளை மிக எளிதாய் மீற... இந்த அதிகாரம் பயன்படும். தேர்தல் வெற்றிக்கு ஆளுங்கட்சியிடம் மட்டுமே இருக்கும் இந்த அதிகார பலம் மிக முக்கிய காரணம்.

பணம் இதையும் செய்யும்

இரண்டாவது பண பலம். ஆளுங்கட்சி என்றால் பணப்புழக்கம் அதிகளவில் இருப்பது என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். தனது கட்சி வேட்பாளரை வெற்றி பெற வைக்க அனைத்து அமைச்சர்களும் களமிறங்கி பணியாற்றுவார்கள் என்பதால், அவர்கள் பெருந்தொகையை தேர்தலில் இறக்கி விட்டு தேர்தல் பணியாற்றுகிறார்கள். ஒரு அமைச்சருக்கு சில ஆயிரம் வாக்காளர்கள் வீதம் பிரித்து கொடுக்கப்படுவதால் பணம் கொடுப்பது என்பது மிக எளிதாக இருக்கிறது. அதிக தொகை கொடுக்கவும் இது வழி வகை செய்கிறது. இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தோற்றால் அது மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுவதால், எவ்வளவு பணத்தை செலவழித்தேனும் வெற்றியை பெற வேண்டும் என நினைத்து பணத்தை கொட்டி குவிக்கிறார்கள்.

திருமங்கலம் இடைத்தேர்தலுக்கு பின்னர், இந்த இடைத்தேர்தல் ஃபார்முலா தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 500, 1000 என இருந்த பணம் இப்போது, 5000 ரூபாய் வரை நீண்டிருக்கிறது.  மக்களை பணத்தை காட்டி இழுத்து அவர்களை தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்துவிடுகிறார்கள் ஆளுங்கட்சியினர்.  எதிர்கட்சிகளும் பணத்தை வாக்காளர்களுக்கு கொடுக்கிறார்கள் என்றாலும், தங்களிடம் உள்ள அதிகார பலத்தைக் கொண்டு அதை கொஞ்சம் அடக்கி வைக்கவும், தங்களிடம் உள்ள பண பலத்தைக் கொண்டு பெருமளவில் தொகையை வாக்காளர்களுக்கு கொடுக்கவும் ஆளுங்கட்சியினராலே முடிகிறது.

மக்களின் மனநிலை

மூன்றாவது ஆளுங்கட்சிக்கு வாக்களித்தால் தான் தொகுதிக்கு ஏதாவது திட்டங்கள் நடக்கும் என மக்கள் நினைப்பதும், அதை நோக்கிய பிரசாரங்களும் ஆளுங்கட்சியின் வெற்றிக்கு ஒரு காரணம்.  'எதுக்கு வம்பு. ஆளுங்கட்சிக்கே ஓட்டை போட்டுடுவோம். அவங்க ஆட்சி செய்யறப்போ, இவங்க வந்து என்ன செய்யப்போறாங்க' என்ற எண்ணம் பொதுவாகவே மக்களிடம் இருக்கிறது. இதை நோக்கியே ஆளுங்கட்சியின் பிரசாரமும் அமைக்கப்படுகிறது. இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் அதைச்செய்வோம், இதைச்செய்வோம் என வாக்குறுதிகளை அள்ளி வீசும் அரசியல் கட்சிகள், 'நாங்கள் வந்தால் தான் இது நடக்கும்' என பிரசாரத்தில் மென்மையான மிரட்டலையும் கையாளத் தவறுவதில்லை. எனவே ஆளுங்கட்சிக்கே வாக்களித்து விடுவோம் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் மக்கள்.

கடந்த பொதுத்தேர்தலின்போது தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்திருந்தால், தி.மு.க. வென்றிருக்கும் என சொல்லப்பட்டது. இப்போது அந்த இரு தொகுதிகளிலும் தி.மு.க. தோல்வியை தழுவுகிறது. ஆளுங்கட்சியான அ.தி.மு.க. வெற்றி பெறுகிறது. இதற்கு அதிகார, பண பலத்தை கடந்து மக்களின் மனநிலையும் முக்கிய காரணம்.

கோட்டையானாலும் தோல்வியை தழுவும் எதிர்கட்சிகள்

தஞ்சாவூர் தி.மு.க. தலைவர் கருணாநிதி போட்டியிட்டு வென்ற தொகுதி. எம்.ஜி.ஆர் காலத்திலேயே இங்கு தி.மு.க. தோற்றதில்லை என சொல்லும் அளவுக்கு தி.மு.க.வின் கோட்டையாக இருந்தது தஞ்சாவூர். அரவக்குறிச்சியும் அப்படித்தான். கடந்த 2011 சட்டமன்ற தேர்தலின்போது தி.மு.க. மிக மோசமான தோல்வியை சந்தித்த நேரத்திலும் அரவக்குறிச்சியில் தி.மு.க. வென்றது. இந்த முறையும் வெல்லும் என உறுதியிட்டு கூறப்பட்ட நிலையில், தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இப்போது இங்கும் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. வெற்றி பெறுகிறது.

இங்கு வெற்றி... அங்கு தோல்வி... ஏன் தெரியுமா?

தமிழகத்தில் யாருடைய ஆதரவும் இல்லாமல் 3 தொகுதிகளில் வெற்றி வாகை சூடும் அ.தி.மு.க., புதுவை நெல்லித்தோப்பு தொகுதியில், பாரதிய ஜனதா, என்.ஆர். காங்கிரஸ் ஆதரவோடு போட்டியிட்டும் வெற்றி பெற முடியவில்லை. இதற்கும் அங்கும் தமிழக அமைச்சர்கள் களமாற்றினார்கள். பணம் வாரி இறைக்கப்பட்டது. ஆனாலும் அ.தி.மு.க. மிக மோசமான தோல்வியை தழுவியுள்ளது. அங்கு வெற்றி பெற்றது புதுவை மாநில ஆளுங்கட்சியான காங்கிரஸ். புதுவை முதல்வர் நாராயணசாமி அ.தி.மு.க.வை விட மிகப்பெரும்பான்மை வாக்குகளை பெற்று வென்றுள்ளார். தமிழகத்தில் வென்ற அ.தி.மு.க. புதுவையில் மிக மோசமான தோல்வியை தழுவுகிறது.

ஏனென்றால் இடைத்தேர்தலில் வெற்றி பெற முதல் காரணமான அதிகார பலம் அ.தி.மு.க.வுக்கு இல்லை. இது தான் இடைத்தேர்தல் அரசியல். அதிகார பலம், பண பலம் மற்றும் ஆளுங்கட்சி வெல்வது தானே நல்லது என்ற மக்கள் நிலை இந்த மூன்றும் தான் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெற முக்கிய காரணம்.

இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கே வெற்றி என்ற 12 ஆண்டு வரலாறு, 13 வது ஆண்டாக தொடர்கிறது.

- ச.ஜெ.ரவி,

எடிட்டர் சாய்ஸ்

MUST READ