Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘அமைச்சரை நீக்குங்கள்... ஆட்சியை கலையுங்கள்!’ - ஜெயலலிதா! - மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 29

ஜெயலலிதா டைரி குறிப்புகள் தொடரின் முந்தைய பகுதிகளைப் படிக்க கீழுள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்

பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 | பகுதி 5 | பகுதி 6 | பகுதி 7 | பகுதி 8 | பகுதி 9| பகுதி 10 | பகுதி 11 | பகுதி 12 | பகுதி 13 | பகுதி 14 |பகுதி 15 | பகுதி 16 | பகுதி 17 | பகுதி 18 | பகுதி 19 | பகுதி 20 | பகுதி 21 | பகுதி 22 | பகுதி 23 | பகுதி 24 | பகுதி 25 | பகுதி 26 | பகுதி 27 | பகுதி 28

ஜெயலலிதா

 

 

நாவலாசிரியர் ஸ்காட் இவ்வாறாகச் சொல்வார், “ஒரு தோல்வியை யாரும் இறுதி தோல்வியாக நினைத்துக் குழப்பிக்கொள்ளக் கூடாது” என்று. புத்தகப் புழுவான ஜெயலலிதா, ஸ்காட்டின் நாவல்களைப் படித்தாரா அல்லது அதில் இந்த வார்த்தைகளைக் கடந்துவந்தாரா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால், இந்த வார்த்தைகளை மனதில் நிறுத்தினார். “தோற்று இருக்கிறோம்... அதுவும் அவமானம் தரும் படுதோல்வி. ஆனால், நிச்சயமாக மீண்டும் எழுவோம்” என்று நம்பினார். அந்த நம்பிக்கையில் காய்களை நகர்த்தினார். சூழலும் அவருக்குச் சாதகமாக அமைந்தது. ராஜீவ் படுகொலையைப் பற்றி விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட எம்.சி.ஜெயின் கமிஷனின் அறிக்கை 1997-ம் ஆண்டு, நவம்பர் மாதம் கசிந்தது. அதில், தி.மு.க அரசின் அஜாக்கிரதையால்தான் ராஜீவ் படுகொலைக்குக் காரணம் என்பது போன்ற வாசகங்கள் இடம்பெற்று இருப்பதாக செய்திகள் பரவின. இது, தி.மு.க-வை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அ.தி.மு.க-வை, குதூகலம் கொள்ளச் செய்தது. அந்தச் சமயத்தில் ஐக்கிய முன்னணியின் ஆட்சி மத்தியில் இருந்தது. ஐ.கே.குஜரால் பிரதமராக இருந்தார். மந்திரி சபையில் தி.மு.க-வும் இருந்தது. காங்கிரஸ், வெளியிலிருந்து ஐக்கிய முன்னணிக்கு ஆதரவளித்து வந்தது. ஜெயின் கமிஷன் அறிக்கை கசிந்ததுமே... காங்கிரஸ் கட்சி, ‘மத்திய அமைச்சரவையிலிருந்து தி.மு.க-வை நீக்கவேண்டும்’ என்றது. மெலிதாக எழுந்த குரல்... ஓரிரு நாட்களில் உஷ்ணமாகியது. ‘தி.மு.க-வை நீக்காவிட்டால், ஐக்கிய முன்னணி அரசுக்கு நாங்கள் அளித்துவரும் ஆதரவை வாபஸ் பெறுவோம்’ என்ற அளவுக்குச் சென்றது. ஜெயலலிதா உற்சாகமானார்... தமிழகத்திலிருந்து அவரும் இதற்காக உரக்கக் குரல் கொடுக்கத் தொடங்கினார். ஆனால், கருணாநிதி அமைச்சரவையிலிருந்து வெளியே வரவில்லை. “நாமாக வெளியே வந்தால், ஜெயின் கமிஷன் அறிக்கையை ஒப்புக்கொண்டதுபோல் ஆகிவிடும். வேண்டுமானால், அவர்களே நம்மை வெளியே அனுப்பட்டும்” என்று அமைதி காத்தார். ஆனால், காங்கிரஸ் விடுவதாக இல்லை. அழுத்தம் மேல் அழுத்தம் கொடுத்தது. குஜரால், நான்கு நாட்கள் காத்திருந்து பார்த்தார்... நிலைமை சீராகும் என்று நினைத்தார். ஆனால், எதுவும் நிகழ்வதுபோலத் தெரியவில்லை. அவர், தன் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்கு இந்தியாவே தயார் ஆனது.

‘கூட்டணி கணக்கு!’

“தமிழகத்தில் நாம் ஆட்சியில் இல்லை... ஆட்சி, இல்லாமல் போனாலும் பரவாயில்லை... சொல்லிக்கொள்ளும் எண்ணிக்கையில் எம்.எல்.ஏ-க்களும் இல்லை. தன்னை வீழ்த்துவதற்காக தி.மு.க அனைத்து அஸ்திரங்களையும் ஏவுவதற்குத் தயாராக இருக்கிறது. மத்தியில் ஒரு வலுவான ஆட்சி... அந்த ஆட்சியில் மந்திரி பதவி. இது இருந்தால்தான் தன்னைக் தற்காத்துக்கொள்ள முடியும்” என்று நினைத்த ஜெயலலிதா, கூட்டணிக்காகத் தேர்ந்தெடுத்தது பா.ஜ.க-வை.    

“திராவிட அரசியலாவது... சித்தாந்தமாவது? எம்.ஜி.ஆர் தோற்றுவித்த கட்சியைக் காக்க வேண்டாமா...” - யாராவது கேள்வி எழுப்பினால்... இந்தப் பதிலை சொல்வதற்குத் தயாராகத்தான் இருந்தார். ஆனால், இந்தக் கேள்வியைக் கேட்கும் தைரியம் கட்சியில் யாருக்கும் இல்லை. பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்து சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். மக்களைச் சந்தித்தார். “பாருங்கள்... என் மீது பொய் வழக்குப் போட்டு, என்னை அலைக்கழிக்கிறார்கள். என்னை 28 நாட்கள் கொடுஞ்சிறையில் வைத்தார்கள்...” என்று சிறை அனுபவத்தைச் சொல்லி வாக்குக் கேட்டார். மக்கள் 10,000 புடவைகள், 250 ஜோடி செருப்புகள் என அனைத்தையும் மறந்தார்கள். மக்களுக்கு மீண்டும் ஜெயலலிதா மீது இரக்கம் ஏற்பட்டது. 

பிப்ரவரி மாதத்திலும் சூடு பறக்க பிரசாரம் நடந்துக்கொண்டிருந்தது. தேசிய அளவில் பி.ஜே.பி-யும், விஸ்வரூபம் எடுத்து நின்றது. 1998-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 14-ம் நாள்... லால் கிஷான் அத்வானி, கோவைக்கு பிரசாரத்துக்குத் தாமதமாக வந்தார். ஆம்... நல்ல வேளையாக தாமதமாக வந்தார். அத்வானி பேசுவதாக இருந்த இடத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில், அவர் வருவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு ஒரு குண்டு வெடித்தது. மக்கள் சுதாரிப்பதற்குள் அடுத்தடுத்து காந்திபுரம், பெரியகடைத் தெரு, ரயில்வே ஸ்டேஷன் என குண்டுகள் வெடித்தன. ஏறத்தாழ 50 பேர் இறந்தனர். குண்டுவெடிப்பு சம்பவம் தி.மு.க-வை ஆட்டம் காணச் செய்தது. ஏற்கெனவே நிகழ்ந்த குண்டுவெடிப்புதான், இப்போதைய தேர்தலுக்குக் காரணம். மீண்டும் குண்டுவெடிப்பா என தி.மு.க., இதை எதிர்கொள்ள முடியாமல் தவிக்க... ஜெயலலிதா கோவைக்கு வந்தார்... தி.மு.க-வை சரமாரியாக விமர்சித்தார். தன் ஆட்சியில், ‘அமைதிப் பூங்காவாக’ இருந்த தமிழகத்தை... கருணாநிதி ‘தீயவர்களின் புகலிடமாக’ மாற்றிவிட்டார் என்று பிரசாரம் செய்தார். இது, நன்றாக வேலை செய்தது. அந்தத் தேர்தலில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி 30 இடங்களைக் கைப்பற்றியது.

‘மூச்சடைக்கும் அழுத்தம்!’

ஜெயலலிதா கைப்பற்றியது 18 இடங்கள். பா.ஜ.க-வுக்கு, மத்தியில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மையில்லை. பா.ஜ.க., அ.தி.மு.க-வை நம்பி ஆட்சி அமைத்தது. அ.தி.மு.க கேட்ட அமைச்சர் பதவிகளைக் கொடுத்தது. இது, ஜெயலலிதாவுக்கு புது தெம்பைக் கொடுத்தது. பா.ஜ.க ஆட்சி அமைக்கும் வரை பொறுமை காத்த ஜெயலலிதா... சில தினங்களில் பிரதமர் வாஜ்பாய்க்கு நிர்பந்தம் கொடுக்கத் தொடங்கினார்.  அவர் கொடுத்த முதல் அழுத்தம் கருணாநிதி ஆட்சியை கலைக்க வேண்டுமென்பது. பா.ஜ.க., வாயடைத்துப் போனது. என்ன செய்வதென்று தெரியாமல், பா.ஜ.க தலைமை திணறிக்கொண்டிருக்க... ஜெயலலிதா எதைப் பற்றியும் யோசிக்காமல், வரிசையாக கோரிக்கைகளை அடுக்கிக்கொண்டே போனார். ராமகிருஷ்ண ஹெக்டேவை... பூட்டா சிங்கை... ராம் ஜெத்மலானியை... ஜார்ஜ் ஃபெர்னாண்டஸை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்; நான் சொல்லும் ஆட்சிப் பணியாளர்களைத்தான் தமிழகத்தில் நியமிக்க வேண்டும்; கடற்படை தலைமை அதிகாரியை மாற்றக் கூடாது என மூச்சடைக்கும் அளவுக்கு அழுத்தம் கொடுத்துக்கொண்டே போக... பா.ஜ.க-வுக்கு மூச்சு முட்டியது. ஜெயலலிதா, ‘‘லக்‌ஷ்மண ரேகையைத் தாண்டுகிறார்’’ என்றனர் சங் பரிவாரங்கள். 
ஜெயலலிதா, அது குறித்தெல்லாம் கவலைப்படவில்லை. பா.ஜ.க இறங்கிவந்து பூட்டா சிங்கை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியது... அவர் கேட்ட ஆட்சிப் பணியாளர்களைத் தமிழகத்துக்கு அனுப்பிவைத்தது. பா.ஜ.க., கீழே இறங்கி வரவர... ஜெயலலிதா உச்சாணிக் கொம்புக்கே சென்றார். ஃபெர்னாண்டஸை நீக்க வேண்டும்... கருணாநிதி ஆட்சியை கலைக்க வேண்டும் என்று மீண்டும் அழுத்தம் கொடுக்கத் தொடங்கினார். ஆனால், வாஜ்பாய் உறுதியாக மறுத்துவிட்டார். 

பா.ஜ.க-வை அச்சுறுத்த வேண்டும் என்பதற்காகவே.... சுப்பிரமணிய சுவாமி ஒருங்கிணைத்த ‘தேநீர் விருந்து’க்குச் சென்றார். அதில், முக்கியமான காங்கிரஸ் தலைவர்கள் எல்லோரும் கலந்துகொண்டனர். குறிப்பாக சோனியாவும். அதன்பின்பும் பா.ஜ.க இறங்கி வர மறுத்தது.

1999-ம் ஆண்டு... ஜெயலலிதா, வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க கட்சிக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் வாங்கினார். நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டுவரப்பட்டது. அதில், ஒற்றை வாக்கு வித்தியாசத்தில் பா.ஜ.க தோல்வி அடைந்தது. இதைப் பயன்படுத்தி காங்கிரஸ், ஆட்சியைக் கைப்பற்றத் துடித்தது. ஆனால், அதற்கும் போதுமான இடங்கள் இல்லை. 

மீண்டும் ஒரு பாராளுமன்றத் தேர்தலுக்குத் தமிழகம் தயாரானது!

(தொடரும்)

- மு. நியாஸ் அகமது

இந்த தொடரின் அடுத்த பகுதியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
 

ஜெயலலிதா டைரி குறிப்புகள் தொடரின் முந்தைய பகுதிகளைப் படிக்க கீழுள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்

பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 | பகுதி 5 | பகுதி 6 | பகுதி 7 | பகுதி 8 | பகுதி 9| பகுதி 10 | பகுதி 11 | பகுதி 12 | பகுதி 13 | பகுதி 14 |பகுதி 15 | பகுதி 16 | பகுதி 17 | பகுதி 18 | பகுதி 19 | பகுதி 20 | பகுதி 21 | பகுதி 22 | பகுதி 23 | பகுதி 24 | பகுதி 25 | பகுதி 26 | பகுதி 27 | பகுதி 28

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close