Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘காத்திருந்த சோனியா காந்தி... தாமதமாக வந்த ஜெயலலிதா...’ - ஜெயலலிதா! - மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 30

ஜெயலலிதா டைரி குறிப்புகள் தொடரின் முந்தைய பகுதிகளைப் படிக்க கீழுள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்

பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 | பகுதி 5 | பகுதி 6 | பகுதி 7 | பகுதி 8 | பகுதி 9| பகுதி 10 | பகுதி 11 | பகுதி 12 | பகுதி 13 | பகுதி 14 |பகுதி 15 | பகுதி 16 | பகுதி 17 | பகுதி 18 | பகுதி 19 | பகுதி 20 | பகுதி 21 | பகுதி 22 | பகுதி 23 | பகுதி 24 | பகுதி 25 | பகுதி 26 | பகுதி 27 | பகுதி 28 | பகுதி 29

 

 

ரசியல், என்பது பிரச்னைகளைத் தேடுவது; எல்லா இடங்களிலும் அவற்றைக் கண்டறிவது; அதை, தவறாக அறுதியிட்டு அதற்கு மிகத்தவறான தீர்வை வழங்குவது’’ என்றார் அமெரிக்க நகைச்சுவை நடிகர் ஜூலியஸ் ஹென்றி. ஹூம்... உலகம் முழுவதும் அரசியலும், அரசியல்வாதிகளும் இவ்வாறுதான்போல... ஒரு மொன்னையான காரணத்துக்காக 13 மாதங்களில் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கலைந்தது. அடுத்த தேர்தல்... அடுத்த கூட்டணி... ஏறத்தாழ 13 மாதங்கள் மத்தியில் ஆளுமை செய்த அ.தி.மு.க-வின் நிலைதான் இப்போது திண்டாட்டமானது. ஆம்... பா.ஜ.க அரசு கவிழ்வதற்கு அ.தி.மு.க-வும் ஒரு காரணம். அதனால், அதனுடன் கூட்டணி வைக்க முடியாது. பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தபோது காங்கிரஸையும், அதன் தலைவர் சோனியா காந்தியையும் மிகக் கேவலமாக விமர்சித்திருக்கிறோம்... என்ன செய்யலாம் என்று ஒரு பக்கம் ஜெயலலிதா யோசித்துக்கொண்டிருக்க... கருணாநிதி காய்களை நகர்த்தத் தொடங்கினார். 

1999-ம் ஆண்டு, தி.மு.க-வின் பொன்விழா ஆண்டு. 1949. ராயபுரம் ராபின்சன் பூங்காவில், தி.மு.க-வின் முதல் கூட்டத்தில் அண்ணா இவ்வாறாகப் பேசினார், “அன்புக்குரிய பெரியாரே... நாங்கள் உங்களிடமிருந்துதான் பாடம் கற்றோம். உங்கள் பாதையிலேயே நடப்போம்” என்றார். அந்த மேடையில் கருணாநிதியும் இருந்தார். கருணாநிதிக்கும்... அன்பழகனுக்கும் இதுவெல்லாம் நினைவில் இருந்ததா என்று தெரியவில்லை. ஆனால், அதை நினைவுகூற விரும்பவில்லை என்பது மட்டும் மிகத் தெளிவாகத் தெரிந்தது. தி.மு.க-வின் பொன்விழா ஆண்டில், யாருடன் அந்தக் கட்சி இத்தனை தசாப்தங்களாக கொள்கை போர் நடத்தியதோ... அவர்களுடனே கூட்டணி வைத்தது. ஆம், தி.மு.க - பா.ஜ.க கூட்டணி ஏற்பட்டது. இந்த நகர்வு ஜெயலலிதாவே எதிர்பாராத ஒன்று. தன் அரசியல் இருப்பை இல்லாமல் செய்ய, கருணாநிதி இந்த எல்லைவரை செல்வார் என்று ஜெயலலிதா நினைக்கவில்லை. காங்கிரஸுடன் கூட்டணி வைக்க கரங்களை நீட்டினார். இருவருக்கும் வேறுவழியில்லை. கூட்டணி சேர்ந்தார்கள்.

‘கூடு திரும்பிய சசிகலா!’

‘‘இனி சசிகலாவுடனும்... அவர் குடும்பத்துடனும் எந்த உறவும் இல்லை’’ என்று ஜெயலலிதா சொல்லி இருந்தார் அல்லவா...? அந்த வார்த்தைகள் எல்லாம் தண்ணீரில் எழுதிய கதை ஆனது. ஆம்... 1999 தேர்தலில் சசிகலாவின் உறவினரான டி.டி.வி.தினகரனுக்கு பெரியகுளம் தொகுதியை ஒதுக்கினார். இது, அ.தி.மு.க மூத்த நிர்வாகிகளையே புருவம் உயர்த்தச் செய்தது. அதுமட்டுமல்ல, இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டு ஜாமீனில் வெளியேவந்த சசிகலாவும் போயஸ் கார்டனுக்குத் திரும்பிவிட்டார் என்று பேச்சுகள் உலாவத் தொடங்கின. சில காலம் வெளியே வராமல் இருந்த சசிகலா... ஜெயலலிதாவின் தேர்தல் பிரசார கூட்டங்களின்போது, உடன்வரத் தொடங்கினார். மீண்டும் தொண்டர்களிடையே முணுமுணுப்பு ஏற்பட்டு அடங்கியது. மூத்த நிர்வாகிகளும், தொண்டர்களும் ஒருகட்டத்தில் புரிந்துகொண்டார்கள்... அரசியல்போல அதிக உழைப்பை உறிஞ்சும் ஒரு துறையில், தனியாக ஒரு பெண்ணால் இயங்குவது கடினம். நிச்சயம் துணை நிற்க ஒரு நட்பு தேவை என்பதை.  

ஜெயலலிதாவே பின்னாளில் ஒரு பேட்டியில் இதுகுறித்து விரிவாகப் பேசியிருக்கிறார். “என் மீதான விசுவாசத்தின் காரணமாகவே, மற்றவர்களால் மிகத்தவறாகச் சித்தரிக்கப்பட்ட, புரிந்துகொள்ளப்பட்ட ஒரு பெண் சசிகலா. எனக்காக அவர் மிகச் சிரமப்பட்டிருக்கிறார். சிறைத்தண்டனையை அனுபவித்திருக்கிறார். என்னுடனான நட்பு மட்டும் இல்லையென்றால், அவரை யாருமே இந்த அளவு தொந்தரவு செய்திருக்க மாட்டார்கள். பரபரப்பான அரசியல் வாழ்க்கையை மேற்கொள்ளும் ஒருவரால், அவருடைய குடும்பத்தையும் கவனித்துக்கொள்வது என்பது மிகவும் கடினமான காரியம். பெரும்பாலான ஆண்களுக்கு இது புரிவதில்லை. ஏனென்றால், அவர்களுக்கு வீட்டில் மனைவியோ அல்லது வேறு யாரோ இருப்பார்கள். இதனால்தான், ஆண்கள் எங்களுடைய நட்பை மிகவும் கொச்சைப்படுத்துகிறார்கள்.”

சரி, மீண்டும் விஷயத்துக்கு வருவோம்... ஜெயலலிதா சென்ற இடங்களில் எல்லாம் கூட்டம் திரண்டது. உண்மையில், இது ஜெயலலிதாவுக்கு பெரும் ஆறுதலைத் தந்தது. அதே நேரம், மமதையையும். அது, ஒருகட்டத்தில் மிகமோசமாக வெளிப்பட்டது. 

‘காத்திருந்த சோனியா!’

ஆம். விழுப்புரத்தில் சோனியாவும் - ஜெயலலிதாவும் இணைந்து தேர்தல் பொதுக் கூட்டத்தில் பேசுவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டெல்லியிலிருந்து சோனியா வந்துவிட்டார். ஜெயலலிதாவுக்காகக் காத்திருந்தார்... ஏறத்தாழ இரண்டு மணிநேரங்களுக்கு மேல். ஒரு கட்டத்தில் சோனியா, தன் உரையை முடித்துக்கொண்டு கிளம்பிவிட்டார். ‘‘கடுமையான வாகன நெரிசலால்தான் கூட்டத்துக்கு வரத் தாமதமாகிவிட்டது’’ என்றார் ஜெயலலிதா. ஆனால், இதை நம்ப அ.தி.மு.க-காரர்களே தயாராக இல்லை. இது, காங்கிரஸ்காரர்களை மிகவும் கோபப்படுத்தியது. ஏற்கெனவே, தனிப்பட்ட முறையில் மோசமாக சோனியாவை, ஜெயலலிதா விமர்சித்தது... காக்கவைத்தது என எல்லாம் சேர்ந்து, அந்தத் தேர்தல் பிரசாரம் முழுவதும் மிக இறுக்கமாகத்தான் சென்றது. 

அப்போது கருணாநிதி, “காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தாலும், ஜெயலலிதா கொடுக்கும் அழுத்தங்கள் தாங்காமல்... நிச்சயம், சோனியா காந்தி இத்தாலிக்கே சென்றுவிடுவார்” என்றார். அது மாதிரியெல்லாம் ஏற்படாத வண்ணம் தேர்தல் முடிவுகள் வந்தன. ஆம், மத்தியில் காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடைந்தது. அ.தி.மு.க-வுக்கு பெரிய சேதம் இல்லாமல் தமிழகத்தில் 10 தொகுதிகளைக் கைப்பற்றியது. தி.மு.க - பா.ஜ.க கூட்டணி 26 தொகுதிகளைக் கைப்பற்றி இருந்தது. 

மத்தியில், பா.ஜ.க ஆட்சி. அந்த அமைச்சரவையில் தி.மு.க-வுக்கு இடம். சென்ற ஆட்சியின்போது, யாரை அமைச்சரவையில் இருந்து நீக்கவேண்டும் என்று ஜெயலலிதா அழுத்தம் தந்தாரோ... அந்த ராம்ஜெத்மலானிக்கும் அமைச்சரவையில் இடம். அதுவும் சட்ட அமைச்சர்.  இப்போது ஜெயலலிதாவுக்கு யாரை நொந்துகொள்வது என்று தெரியவில்லை. அதன்பிறகு, நடந்த சில சம்பவங்களும் ஜெயலலிதாவுக்கு சாதகமானதாக இல்லை. 

(தொடரும்)

- மு. நியாஸ் அகமது

ஜெயலலிதா டைரி குறிப்புகள் தொடரின் முந்தைய பகுதிகளைப் படிக்க கீழுள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்

பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 | பகுதி 5 | பகுதி 6 | பகுதி 7 | பகுதி 8 | பகுதி 9| பகுதி 10 | பகுதி 11 | பகுதி 12 | பகுதி 13 | பகுதி 14 |பகுதி 15 | பகுதி 16 | பகுதி 17 | பகுதி 18 | பகுதி 19 | பகுதி 20 | பகுதி 21 | பகுதி 22 | பகுதி 23 | பகுதி 24 | பகுதி 25 | பகுதி 26 | பகுதி 27 | பகுதி 28 | பகுதி 29

இந்த தொடரின் அடுத்த பகுதியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
 

ஜெயலலிதா

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close