Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

 'செல்லாத ரூபாய் நடவடிக்கையால் சிதைந்த சிறுவணிகர்கள் வாழ்க்கை'  

                 சிறுவணிகர்கள்

'கீரை வாங்கலையோ கீரை...கத்திரிக்காய் முருங்கைக்காய் வெண்டைக்காய் வாழைப்பூ வாழைத்தண்டு' இப்படி தமிழ்நாட்டு பாரம்பரிய காய்கறிகளை விற்கும் சிறு வணிகர்களின் குரலை, நகரவாசிகள் இனி கேட்கமுடியாது. தள்ளுவண்டி சிறுவணிகர்கள் நகரவாசிகளின்,ஒரு நாளை தங்களின் மண்வாசனை கலந்த குரலோடு தொடங்கி வைப்பவர்கள்.அவர்களை வீடுதேடி வந்து ஆரோக்கியத்தை அளித்துச் செல்லும் மருத்துவர்கள் என்பார்கள் சமூக ஆய்வாளர்கள்.

அவர்களின் வியாபாரத்தைத்தான்  மிக தந்திரமாக முடக்கிவிட்டது மத்திய அரசு.கடந்த 8ம் தேதி பிரதமர் மோடி இனி  ரூ.500,ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்திருந்தார்.அடுத்த நாள் தொடங்கி  இரண்டு வாரத்திற்கு மேலான நிலையில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எல்லோரின் நிலையும் தலை கீழாகியுள்ளது.குறிப்பாக சிறுவணிகர்கள் வாழ்க்கை சிதைந்துவிட்டது.எல்லோரையும் கார்டுகள் மூலம் காய்கறிகள் பழங்கள் பூக்கள் வாங்க 'மெகா' கடைகளை நோக்கிச் செல்லுமாறு மறைமுகமாகச் சொல்லிவிட்டது மத்தியில் ஆளும் அரசு.
 
வங்கிகளில் சாமானிய, ஏழை,நடுத்தர மக்கள் நெடு வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர்.தங்களிடமுள்ள 500,1000 ரூபாய் தாள்களை ரூ.2000 புதிய ரூபாய் நோட்டாக மாற்றிக்கொண்டு அதற்கு சில்லறை வாங்க அலைகிறார்கள். இதுதான் இன்றைய இந்தியா.தங்களின் அன்றாட தேவைகளைச் சுருக்கிக்கொள்ளும் நிலையில் இருக்கிறார்கள் பெரும்பாலானோர். மறுபக்கம் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு வைத்துக்கொண்டு கார்களில் வலம் வரும் ஏ.சி.வாசிகள் 'வீக் என்ட்' கொண்டாட்டம் இல்லாமல் திண்டாடுவதும்,அக்கவுண்ட் தொகை சுத்தமாகக் கரைந்து விட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தோடும் நாட்களைக் கடத்துகிறார்கள். 

சென்னையின் சாலையோரங்களில்,பிளாட்பாரங்களில் என்று மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் பழங்கள், காய்கறிகள், டீ கடைகள்,தள்ளுவண்டி உணவுக்கடைகள் என்று பல்வேறு வியாபாரங்கள் அமோகமாக நடக்கும்.ஆனால் கடந்த 9ம் தேதி முதல் இது போன்ற வியாபாரங்கள் வெகுவாகக் குறைந்துவிட்டன.இதனால் இந்த வகை வணிகத்தை நம்பியிருக்கும் 1.5 லட்சம் பேரின் குடும்பங்கள் அடுத்தமாதம் செலவுக்கும், தினந்தோறும் தேவைப்படும் ரூபாய்க்கும் என்ன செய்வதென்று  குழம்பிப் போயுள்ளனர். சென்னையில் அரசால் அனுமதிக்கப்பட்ட சிறு வியாபாரிகள் 25 ஆயிரம் பேர் இருக்கின்றனர்.அவர்கள் அனைவருமே தினந்தோறும் கிடைக்கும் சில ஆயிரங்களை வைத்துக்கொண்டு முதலீடு செய்து அதில் கிடைக்கும் சொற்ப வருவாயில் குடும்பம் நடத்துபவர்கள். குழந்தைகளின் படிப்புச் செலவு,மளிகை செலவு,மருத்துவ செலவு, போக்குவரத்து, வீட்டு வாடகை என்று மாதந்தோறும் தேவைப்படும் அத்தியாவசிய செலவுகளுக்கு வழி தெரியாமல் மனதில் வலியோடு திகைத்து நிற்கிறார்கள்.

இது தொடர்பாக சென்னை பட்டாளம் மார்க்கெட் பகுதியில் காய்கறி வியாபாரம் செய்துவரும் ஆனந்தன் என்பவரிடம் கேட்டோம். அவர் கூறுகையில்,"நான் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக காய்கறி சில்லறை வியாபாரம் செய்து வருகிறேன்.தினமும் அதிகாலையிலேயே கோயம்பேடு மார்க்கெட் சென்று 5000 அல்லது 6000 ரூபாய்க்கு,மொத்த வியாபாரிகளிடம் இருந்து காய்கறிகள் வாங்கிவந்து எங்கள் பகுதியில் சில்லைறையில் விற்பனை செய்வேன்.அதில் கிடைக்கும் வருமானத்துல தான் பொழப்பு ஓடுது.ஆனால் பணப்பரிமாற்றம் சிக்கல் வந்தபிறகு ஒரு நாள் வாங்கிவரும் காய்கறிகள் இரண்டு அல்லது மூன்று நாளுக்கு விற்க வேண்டிய நிலையில் இருக்கோம்.வாங்க வருபவர்கள் குறைந்துவிட்டார்கள்.காரணம் சில்லறை தட்டுப்பாடுதான்.

               

எல்லோருக்கும் 100,50,20 ரூபாய் என்று எங்களாலும் சில்லறை கொடுக்கமுடியவில்லை.எல்லோருமே 2000 ரூபாய் நோட்டு கொண்டுவராங்க.அதுக்கு சில்லறை மாற்ற பேங்க் போனால் கூட்டமாக இருக்கு.நாள் பூரா அங்கேயே காத்துக்கிடக்க வேண்டியிருக்கு.இன்று கூட என் மனைவி பேங்க் போனாங்க சில்லறை மாற்ற.ரெண்டு மணிநேரம் வரிசையில் நின்னும் பேங்க்ல பணம் இல்லைனு சொல்லிட்டாங்க.இப்போ என்ன செய்றதுன்னு தெரியல.2000 ரூபாய் விடாமல் 500,1000 ரூபாய்கள் அரசு வெளியிட்டு இருந்தால் இந்த அளவுக்கு சிக்கல் வந்து இருக்காது.இந்த ரூபாய் தட்டுப்பாட்டால் கோயம்பேட்டுல காய்கறிகளும் கொள்முதல் பண்ணமுடியலை.எங்கள் பகுதியில் 100 பேர் இப்படி சில்லறை காய்கறி வியாபாரம் செய்கிறோம்.எல்லோருமே இப்போது சிக்கலில் இருக்கிறோம்.வியாபாரம் 70% அளவுக்குக் குறைந்துபோச்சு.இது எங்க அன்றாட வாழ்க்கை கலைத்துப் போட்டுவிட்டது.வரும் மாதம் மளிகை மற்றும் குடும்ப செலவுக்கு என்ன செய்றதுன்னு தவிக்கிறோம்."என்கிறார் கவலையாக. 
    
பட்டாளம் பகுதியில் பழங்கள் விற்பனை செய்யும் பரிமளா கூறுகையில்,"கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து எல்லாவிதமான பழங்களையும் மொத்தமாக வாங்கி வருவோம்.ஒரு நாள் ஒன்றுக்கு ஏறக்குறைய 20 ஆயிரம் ரூபாய்க்கு பழங்கள் வாங்குவோம்.இப்போது 500,1000 ரூபாய் செல்லாத நிலை இருப்பதால், 5000 ரூபாய் அல்லது 6000 ரூபாய்க்கு மட்டுமே பழங்கள் வாங்குகிறோம்.அந்த அளவுக்கு எங்கள் வியாபாரம் குறைந்துபோச்சு."என்றார் விரக்தியாக.

சென்னை முழுக்க பாதியாகக் குறைந்த சில்லறை வணிகம்!

வாடிக்கையாளர்களைத் தேடி வந்து பொருட்களை விற்கும் வியாபாரிகள்தான் சாலையோர தள்ளுவண்டி மூலம் விற்பனை செய்பவர்கள்.பெட்டிக்கடைகள்,டீ கடைகள் என்று எல்லா சாலைகளிலும் சொற்ப வருமானத்திற்கு வியாபாரம் செய்யும் வியாபாரிகள் சென்னையில் இப்போது முடங்கிப்போயுள்ளனர். கருப்புப்பணம் வைத்திருக்கும் பெரு முதலாளிகள் கூட தங்களின் வருமானத்திற்கு வேறு வழியைக் கண்டுபிடித்துவிடுவார்கள்.ஆனால் சிறுவியாபாரிகள் என்ன செய்வார்கள் என்று உருக்கமான கேள்வி எழுப்புகிறார் சென்னை சிறுகடை வியாபாரிகள் சங்கத் தலைவர் பா.கருணாநிதி.

அவர் தொடர்ந்து நம்மிடம் கூறுகையில்,"வாடிக்கையாளர்கள் 2000 ரூபாயோடுதான் சிறுவணிகர்களிடம் வருகிறார்கள்.அவர்கள் அதற்கு சில்லறை தர முடியாமல் தவிக்கிறார்கள்.அதே 500 ரூபாயாக இருந்தால் சில்லறை கொடுப்பது அவர்களுக்கு எளிது.மத்திய அரசின் இந்த நடவடிக்கை பெரிய பாதிப்பைத்தான் ஏற்படுத்தியுள்ளது.இதனால் பல பகுதிகளில் கடைகளே போடவில்லை.நடைபாதைகளில்,சாலைகளில் போடக்கூடிய காய்கறி கடைகள்,பழக்கடைகள்,பூ கடைகள்,செருப்புக்கடைகள்,துணிக்கடைகள் எல்லாம் அன்றன்றைய பணத்தில் இயங்குபவை.முதலீடு சில ஆயிரங்களில் செய்து சிறிய லாபங்கள் பார்க்கும் தொழில்கள். இதில் கிடைக்கும் தொகை அடுத்த நாளுக்கு முதலீடு செய்ய உதவும். ஆனால் இப்போது கடன் வாங்கியும் கூட  பொருள் வாங்க முடியாத நிலை உள்ளது.தண்டலும் நிறுத்தப்பட்டுள்ளது.எந்தவொரு பிற வேலைக்கும் அவர்களால் செல்லமுடியவில்லை.

முன் ஏற்பாடுகள் இல்லாமல்,மாற்று வழிகளும் யோசிக்காமல் மத்திய அரசு செய்ததை மன்னிக்கவே முடியாது. மொத்தத்தில் 50% வியாபாரம் முடங்கியுள்ளது. சிறுவியாபாரிகள் யாருமே உற்சாகமாக இல்லை. மூர்மார்கெட்,கொத்தவால் சாவடி,பாரிஸ் கார்னர் என்று முக்கிய இடங்களில் கடைகள் இன்றி வெறிச்சோடியுள்ளது.காசி மேடு மீன் மார்க்கெட் பாதித்துள்ளது. கோயம்பேடு  மார்க்கெட்டில் அதிக அளவில் சிறுவியாபாரிகள் பொருட்கள் வாங்க செல்வதில்லை.எனவே இதிலிருந்து மீள தேவையான நடவடிக்கையை அரசு விரைந்து எடுக்கவேண்டும்" என்றார்.

சென்னை தியாகராயர் நகரில் உள்ள சாலையோர கடைகள்,சிறிய கடைகளிலும் வாடிக்கையாளர்கள் கூட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது.தமிழகத்தின் பிரபல துணிக்கடைகள்,நகைக்கடைகள்,அலங்காரப் பொருட்களின் கடைகள் என்று நூற்றுக்கணக்கில் அமைந்துள்ள பகுதி தி.நகர்.இங்குதான் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சாலையோரக் கடைகள் நடத்தப்படுகின்றன. வளையல்,காதணிகள்,நெத்திச்சுட்டிகள் உள்ளிட்ட வகைவகையான பெண்கள் விரும்பி அணியும் அணிகலன்கள் விற்கப்படுகின்றன.எப்போதும் இந்தக் கடைகள் முன்பாகப் பெண்கள் கூட்டம் அலைமோதும்.ஆனால் இப்போது வெறிச்சோடுகின்றன.

கம்மல்,அலங்கார வளையல்கள் விற்கும் மணிமேகலை நம்மிடம் பேசுகையில்,"30 வருஷமாக இந்தப்பகுதியில் கடை வைத்துள்ளோம்.எங்கள் குடும்பமே இந்தக்கடையை நம்பித்தான் இருக்கிறது.ஆனால் 13 நாளா இருக்கிற நிலைமை மாதிரி நாங்க பார்த்தது இல்லை.முன்பெல்லாம் ஒரு நாளைக்கு 2000 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை லாபம் வரும் வகையில வியாபாரம் நடக்கும்.ஆனால் இப்போது 200 ரூபாய் லாபம் கிடைப்பதே பெரிய விஷயமாக இருக்கு.இங்க வருபவர்கள் எல்லாருமே 2000 ரூபாய் நோட்டு கொண்டுவராங்க.அவங்களுக்கு சில்லறை கொடுக்கவே திண்டாட வேண்டியிருக்கு. அதனாலேயே காலை பத்துமணிக்குத் திறக்கவேண்டிய கடையை 12 மணிக்குத் திறக்கிறோம். நைட் 10 மணிக்கு வழக்கமாக மூடுவோம்.ஆனால் இப்போ ஏழரை மணிக்கெல்லாம் மூடிவிடுகிறோம்.இந்த அளவுக்கு வெறிச்சோடிய வியாபாரம் இப்பதான் நடக்குது." என்றார் வேதனையோடு.

              

அதே போல தி.நகரில் பழங்கள், நெல்லிக்கனி என்று இயற்கை தின்பண்டக்கடைகளும்  வாடிக்கை யாளர்களைக் கவர்ந்திழுக்கும். இந்தக் கடைகளின் விற்பனை நிலவரம் குறித்தும் விசாரித்தோம்.கண்ணீர் விடாத குறையாய் தங்களின் நிலையைக் கொட்டித் தீர்த்தனர் சிறுகடை வியாபாரிகள்.

பனகல் பார்க் அருகில் நெல்லி,இலந்தை,மாங்காய் என்று இயற்கை தின்பண்டங்கள் விற்கும் கோவிந்தம்மாள் பேசுகையில்,"13 நாளா வியாபாரம் இல்ல. போட்ட பணம் எடுக்கமுடியல.இப்படியே இன்னும் பத்துநாள் போச்சுன்னா வீட்டுச் செலவுக்கு பெரும்பாடு படவேண்டியிருக்கும்.இதுக்கு முன்னாடியே கார்ப்பரேஷன்காரங்க எங்களை துரத்தப் பாக்குறாங்க.இந்த நேரத்துல பணமும் பிரச்னையாச்சு.என்னதான் பண்றது நாங்க?" என்கிறார் கவலையோடு. 
                            
சிறுவணிகர்களின் பெரிய துன்பம் எப்போது விலகும்?

- சி.தேவராஜன் | படங்கள் தி.குமரகுருபரன்         
                                                 
  
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close