Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அன்று ஒரு லட்சம், இன்று ஆயிரம்..! ஒரு தலைவரின் குமுறல்

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு மக்களின் இயல்பு வாழ்க்கையே புரட்டிப் போட்டு விட்டது. குறிப்பாக வணிகர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநிலத் தலைவர் வெள்ளையனிடம் பேசினோம்.

Tweet this!

"எங்கள் அமைப்பின் கீழ் 4,500 சங்கங்கள் உள்ளன. சங்கங்களில் உறுப்பினர்கள் இல்லாமல், நடைமேடை வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள் என தமிழகம் முழுவதும் மொத்தம் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட வணிகர்கள் இருக்கின்றனர். கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி, கடந்த 8-ம் தேதி நள்ளிரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். இதையடுத்து கடந்த 9-ம் தேதி முதல் வணிகர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. உதாரணத்துக்கு தினமும் ஒரு லட்சம் ரூபாய் வரை வியாபாரம் நடந்த கடையில் ஆயிரம் ரூபாய்க்கு கூட வியாபாரம் இல்லை. அந்தளவுக்கு வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

 

சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட், பூக்கடை, பழக்கடைகளில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் 130 கோடி மக்கள் வாங்கும் சக்தியில் உள்ளனர். இதைக் குறிவைத்து வெளிநாடுகள் செய்யும் சதிக்கு இந்தியாவும் சம்மதம் தெரிவித்து வருகிறது. நரேந்திரமோடி பதவி ஏற்றதும் கிராமங்களுக்கு இணையதளவசதி ஏற்படுத்தப்படும் என்று அறிவித்தார். இதிலும் உள்நோக்கம் உள்ளது. தற்போது, ஆன்லைன் வர்த்தகம் கொடிகட்டி பறப்பதால் சில்லறை வணிகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வர்த்தகம் தற்போது நகரப்பகுதிகளில் அதிகம் உள்ளது. கிராமங்களிலும் ஆன்லைன் வர்த்தகத்தை கொண்டு வரவே இணையதள வசதி என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்.

கறுப்புப் பணத்தை ஒழிப்பதாக தெரிவித்த மத்திய அரசின் திட்டத்துக்குப் பின்னால் ஆன்லைன் வர்த்தகம் ஒளிந்திருக்கிறது. ஏனெனில் எல்லோரும் கார்டு மூலம் வணிகம் செய்வதே இந்த திட்டத்தின் நோக்கம். 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவுத்தவுடன் மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தினோம். அதில் 1000 ரூபாய் நோட்டுகள் கிலோவுக்கு 22 ரூபாயும், 500 ரூபாய் நோட்டுகள் கிலோவுக்கு 20 ரூபாய்க்கு வாங்கப்படும் என்று அறிவித்தோம். இந்த பழைய பேப்பர் கடையின் உரிமையாளர் மோடி என்றும், அதன் பங்குதாரர் அருண்ஜெட்லி என்றும் அறிவித்து பேனர் வைத்திருந்தோம். எல்லா விஷயத்திலும் மோடியின் செயல்பாடு புத்திசாலித்தனமாக இருக்கிறது. அவரது ஒவ்வொரு செயலுக்குப் பின்னால் இன்னொரு நோக்கம் மறைந்திருக்கிறது. சில்லறை வணிகத்தை கைப்பற்ற வெளிநாடுகள் விரிக்கும் வலையில் இந்தியா வீழ்ந்து கிடக்கிறது.

பொன்னையன் நிதியமைச்சராக இருந்தபோது விதிக்கப்பட்ட வாட் வரிக்கு எதிராக வணிகர்கள் போராட்டம் நடத்தினர். வணிகர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அப்போது வணிகர்கள் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மு.க.ஸ்டாலின், தி.மு.க ஆட்சியில் இருந்தால் வாட் வரியால் வணிகர்கள் வாடியிருப்பார்களா என்றார். ஆனால் அதன்பிறகு வந்த தி.மு.க ஆட்சியில் வாட் வரி விதிக்கப்பட்டது. இவ்வாறு வணிகர்களுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன. கறுப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்றால் இந்தியர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை பிரதமர் மோடி மீட்டப்பிறகு உள்நாட்டில் இந்த திட்டத்தை செயல்படுத்தி இருக்க வேண்டும். அதைச் செய்யாமல் கறுப்புப் பணத்தை வைத்திருப்பவர்களுக்கு உதவும் வகையில் அவரது நடவடிக்கைகள் உள்ளன. வணிகர்களுக்கு எதிராக செயல்படுவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்" என்றார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில இணைச் செயலாளர் டி.பொன்சேகர் கூறுகையில், "வாட்வரி, ஜி.எஸ்.டி என வரிகளை விதிக்கும் மத்திய அரசு, வணிகர்கள் நலனில் அக்கறை செலுத்துவதில்லை. காலஅவகாசம் கொடுக்காமல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததால் வணிகர்களும், மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கடந்த 9-ம் தேதி கையில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தாலும் அதை வைத்து எந்த பொருளையும் வாங்க முடியவில்லை. பெரும்பாலான ஏ.டி.எம் மையங்கள் பணம் இல்லாமல் காட்சிப் பொருளாகவே காணப்படுகின்றன. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து 17 நாட்கள் கடந்த நிலையிலும் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. இதற்கெல்லாம் மத்திய அரசு திட்டமிடாமல் செயல்பட்டதே காரணம். புதிய 2000, 500 ரூபாய் நோட்டுகளை ஏ.டி.எம்.களில் முன்கூட்டியே வைக்க ஏன் ஆர்.பி.ஐ.க்கு தெரியவில்லை. இப்போதுகூட சில தனியார் வங்கிகளின் ஏடிஎம் மையங்களில் மட்டுமே புதிய நோட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அரசு வங்கிகளின் ஏடிஎம் மையங்களில் புதிய ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தால் மக்களின் பணத்தேவையை பூர்த்தி செய்ய முடிந்திருக்கும். ஆனால் அதையும் அவர்கள் செய்யவில்லை. எனவே, மக்கள் நலனில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை என்பது இந்த சம்பவத்தின் மூலம் தெளிவாகத் தெரிந்துள்ளது" என்றார்.


- எஸ்.மகேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ