Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

500 கோடி ரூபாய் திருமணமும்... 500 ரூபாய் திருமணமும்.... இந்தியாவில்தான் இரண்டும் சாத்தியம்!

திருமணங்கள் என்பது நமது சமூகத்தில் ஒரு கொண்டாட்டமான நிகழ்வு. உறவினர்களை அழைத்து, விருந்து போட்டு கொண்டாடுவது என்பது தான் நம் நாட்டின் வழக்கம். ஒவ்வொருவரும் தங்கள் சக்திக்கு ஏற்ப திருமண நிகழ்வை கொண்டாட்டமாக்கிக் கொள்கின்றனர். ஆனால் கடந்த 8ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு, பல திருமணங்களை மாற்றி அமைத்தது.

ஏற்கனவே திருமண தேதிகளை முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளை செய்தவர்கள் எல்லாம், ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பால், வங்கியில் இருக்கு பணத்தை எடுக்க முடியாமல், தங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுகளை ஒட்டுமொத்தமாக மாற்ற முடியாமல் பரிதவித்தனர். பலர் உறவினர்களிடம் நண்பர்களிடம் பணத்தை பெற்று திருமணத்தை நடத்தினர். பலர் இப்படி திருமணம் நடத்துவதா எனச்சொல்லி திருமணத்தை ஒத்திவைத்தனர்.

இந்த சூழலில் தங்களது திருமணத்தை 500 ரூபாய் செலவில் மிக சிக்கனமாக நடத்தி முடித்துள்ளனர் குஜராத் மாநில சூரத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம். 500, 1000 ரூபாய் செல்லாது என அறிவிப்பதற்கு முன்னரே தேதி குறிக்கப்பட்டிருந்தது. திருமண நாள் நெருங்கும் போது இப்படி ஒரு அறிவிப்பு. தங்களிடம் உள்ள பணத்தை மாற்றவோ, வங்கியில் உள்ள பணத்தை எடுக்கவோ முடியவில்லை.

திருமணத்தை ஒத்தி வைத்து விடலாமா என யோசித்த போது, மணமகளிடம் இருந்து இந்த் ஐடியா வந்திருக்கிறது. எதற்கு திருமணத்தை ஒத்திவைக்க வேண்டும். விருந்துக்கு பதில் டீயும், தண்ணீரும் கொடுப்போம். வீட்டிலேயே எளிமையாக நடத்துவோம்' என்றிருக்கிறார். மணமகனும் இதற்கு ஒப்புதல் தெரிவிக்க அப்படியே திருமணம் நடந்திருக்கிறது. மண்டபம் இல்லை. மணவறை இல்லை. அலங்காரங்கள் எதுவுமில்லை. விருந்து கிடையாது. வந்தவர்களுக்கு டீயும், தண்ணீரும் மட்டும் தான். இதற்கு செலவான தொகை எவ்வளவு தெரியுமா வெறும் 500 ரூபாய்.  மிக சிக்கனமாக 500 ரூபாய் செலவில் இந்த திருமணத்தை நடத்தி முடித்திருக்கிறார்கள்.

"ஏற்கனவே திருமண தேதியை முடிவு பண்ணிவிட்டோம்.  பிரதமர் மோடி திடீர்னு 500,1000ரூபாய் செல்லாதுனு அரசு அறிவிச்சிடுச்சு.  என்ன பன்றதுனே தெரியல. ஆரம்பத்துல ரொம்ப வருத்தப்பட்டோம். பிரம்மாண்டத்தை தவிர்த்து எளிமையா நடத்தினா என்னானு தோணுச்சு. அப்படியே திருமணத்துக்கு வந்தவங்களுக்கு வெறும் டீ மட்டும்  கொடுத்து  சிம்பிளா கல்யாணத்தை முடிச்சிட்டோம்," என பெருமையாக சொன்னார் மணப்பெண்.  வாழ்க வளமுடன்.

இந்த நேரத்தில் இன்னுமொரு திருமணத்தை நினைவுப்படுத்திக்கொள்ள வேண்டும். அதுவும் 500, 1000 ரூபாய் செல்லாது என அறிவிக்கப்பட்ட பின்னர் நடந்த திருமணம் தான். அந்த திருமணம் காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆனால் அது 500 ரூபாய் செலவில் நடக்கவில்லை. 500 கோடி ரூபாய் செலவில் நடந்தது. ஆம் பெங்களூருவில் நடந்த ரெட்டி குடும்பத்திருமணம் காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இது இந்தியாவின் இன்னுமொரு முகம்.  ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் சாமானியர்கள் கடுமையான நெருக்கடியில் இருந்த போது, பலர் தங்கள் குடும்ப இல்ல திருமணங்களை நடத்த முடியாமல் பரிதவித்துக்கொண்டிருந்த போது, 500 கோடி ரூபாய் செலவில் திருமணத்தை நடத்தினர். ஒரு 2 ஆயிரம் ரூபாய் நோட்டை பெற கால்கடுக்க மக்கள் வங்கியில் காத்திருந்த நேரம், அவர்களுக்கு மட்டும் எங்கிருந்து பணம் வந்தது என்பது தெரியவில்லை. ஆனால் பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்தி முடித்திருந்தனர்.

இந்தியாவில் மட்டுமே இது சாத்தியம்.

புகைப்படம் : ANI

-எம்.புண்ணியமூர்த்தி

எடிட்டர் சாய்ஸ்