Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாவீரன் பிரபாகரனின் நினைவுகளை பகிர்ந்த தலைவர்கள்

பிரபாகரன்

'இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி' என்று தனது டைரியில் எழுதி வைத்துக் கொண்டவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்."எனது தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் மாறினால் எனது பாதுகாவலரே என்னை சுட்டுக் கொல்லலாம்" என்று  பிரகடனப்படுத்திக் கொண்டவர் பிரபாகரன் .

"வாழ்க்கையும் தத்துவமும் வேறுவேறு அல்ல, இரண்டும் ஒன்றுதான்" என்று கூறியதுடன் தத்துவங்களை வாழ்கையாக வாழ்ந்தவர். அத்தகைய மாவீரன் பிரபாகரன் பிறந்த நாளை (நவம்பர் 26) உலக நாடுகளில் உள்ள தமிழர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதேவேளையில், நவம்பர் 27-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழ் ஈழ மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து தன்னுடைய இன்னுயிரை நீத்த வீரர்களின் நினைவாக, மாவீரர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஈழ மக்களுக்காக போராடிய மாவீரன் பிரபாகரனை இந்நாளில் நினைவு கொள்வோம்.. அவரை நேரில் சந்தித்த சில அரசியல் தலைவர்கள் தங்களது நினைவலைகளை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

ஆனந்த விகடன் கட்டுரையை சுட்டிக்காட்டிய பிரபாகரன்!

நான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகிறேன். ."1986 மற்றும் 1987-ம் ஆண்டுகளில், அப்போது நான் சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். அடையாறில் பிரபாகரன் உண்ணாவிரதம் இருந்தார். அப்போது, சட்டக்கல்லூரி மாணவர்கள் 20 பேர் உண்ணாவிரதத்தைக் கைவிடக்கோரி, அவரை சந்திக்கச் சென்றோம். அப்போதுதான் முதன்முறையாக பிரபாகரனை நான் சந்தித்தேன். எங்களைச் சந்தித்ததும் பேசத் தொடங்கினார். அப்போது தொலைபேசி வந்தது, பேசி முடித்துவிட்டு வந்தவர்,  எம்.ஜி.ஆர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆயுதங்களை ஒப்படைக்கச் சொல்லியதாகவும், எனவே உண்ணாவிரதத்தை முடிக்கிறேன். மிக்க மகிழ்ச்சி என்று தெரிவித்தார். நாங்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தேபோது அங்குவந்த கி. வீரமணி தான், பிரபாகரனின் உண்ணாவிரதத்தை பழச்சாறு கொடுத்து முடித்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து, 2002-ல் ஈழத்தில் நடைபெற உள்ள மாநாட்டுக்கு பிரபாகரன் என்னை அழைத்ததாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழைத்திருந்தனர். இங்கிருந்து 5 பேர் இலங்கைக்குச் சென்றோம். அப்போது நான் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறேன். எழுத்தாளர்கள் மற்றும் இலக்கியவாதிகளுடன் இந்தப் பயணம் அமைந்தது. மாநாட்டை முடித்துக் கொண்டு திரும்பும்போது, வன்னியில் அனைத்துலக தலைமைச் செயலக வளாகத்தில் பிரபாகரன் சீருடையில் வரவேற்றார். என்னைப் பார்த்ததும் மார்போடு கட்டியணைத்து  வரவேற்றார். பிறகு விருந்திற்குச் சென்றோம். விருந்து தொடங்கும்போது, அவருக்கு அருகாமையில் அமரும்படி கூறினார். உணவு பரிமாறுகிறபோது மாமிச உணவுகளை நான் சாப்பிடுவதில்லை என்றேன். அதற்கு இதென்ன, "சைவ சிறுத்தையாக" உள்ளது என கிண்டலடித்தார்.

சாப்பிட்டு முடித்தபின்னர் பேசிக் கொண்டிருந்தபோது, "எங்கள் அமைப்பில் சிறுத்தைகள்படை ஒன்று உள்ளது. உங்களுடைய கட்சியின் பெயரும் அதனைக் குறிக்கிறது என்று நெகிழ்ந்தார். அதனைத் தொடர்ந்து ஆனந்த விகடனில் எனது அம்மாவின் பேட்டியுடன் வந்த கட்டுரை தன்னை மிகவும் உலுக்கி விட்டது திருமா. நீங்கள் திருமணம் செய்து கொள்ளாததைப் பற்றி அதில் குறிப்பிட்டிருந்தார்கள். அந்தபேட்டி என்னை மிகவும் உலுக்கியது. கண்கள் கலங்கி விட்டேன். பெற்றவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கக் கூடாது திருமா. நீங்கள் தமிழகம் திரும்பியதும் திருமணம் செய்து கொள்ளுங்கள்" என்றார்.

பிறகு கிளம்பும்போது, என் கையைப் பிடித்து நிறுத்தினார். அப்போது ஒரு இடத்தைக் குறிப்பிட்டு, காலையில் 6 மணிக்கு வந்து விடுவேன். நீங்களும் அங்கு வந்து விடுங்கள் என்றார். இது யாருக்கும் தெரியாதவாறு காதோடு வந்து சொன்னார். அடுத்த நாள் அந்த இடத்துக்குச் செல்கிறேன். கடற்கரையில் நாற்காலியில் அமர்ந்திருந்தார். பார்க்க மிக உற்சாகமாக காணப்பட்டார். போய்ச் சந்தித்தேன். "ஏன் லேட்டாக வந்தீர்கள்? சீக்கிரம் வந்திருந்தால் கடலுக்குள் அழைத்துச் சென்றிருப்பேனே, தாமதமாக வந்து விட்டீர்களே!" என்றார். ஒரு மணி நேரத்துக்கும் மேல் பேசியிருப்பார். அதில் மிக முக்கியமாக சர்வதேச அரசியலை மிகத் துல்லியமாகப் பேசினார். அவர் பேசிய தகவல்களைக் கேட்டபோது வியப்பாக இருந்தது. பிறகு தமிழகத்தில் நடைபெற்ற சாதிய மோதல்களை பற்றிப் பேசினார்.

 

முதல்நாள் அவரைச் சந்தித்தபோது தாய்மண் பத்திரிகை கொடுத்திருந்தேன். அதை முழுவதுமாக கண்விழித்துப் படித்து முடித்திருந்தார். அதில் இருந்துதான் திருச்சி லால்குடி அருகே ஒரு தலித் மீது நடத்தப்பட்ட மோசமான தாக்குதலை பற்றி கேட்டார். 'இதையெல்லாம் எப்படி தமிழகத்து தலைவர்கள் அனுமதிக்கிறார்கள் தமிழகத்தில் உறுதியோடு போராடுங்கள் திருமா' என்று கூறினார்.  மேலும் சில ரகசிய விஷயங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டார். எப்படி விடுதலைப் புலிகள் யாரையும் சார்ந்து இல்லாமல் இருக்கிறோமோ அவ்வாறு நீங்களும் உங்களுடைய கட்சியை தற்சார்பு பொருளாதார இயக்கமாக கொண்டு செல்லுங்கள் என்றார். நீண்டகால பயணத்துக்கு இதுதான் கைகொடுக்கும் என்று சில யோசனைகளைக் கூறினார்.

நான் ஒருகேள்வியை அவரிடம் வைத்தேன். நார்வேயின் எரிக் சோல்ஹைம் எதற்கு பேச்சுவார்த்தையில் ஆர்வம் காட்டுகிறார்? என்றேன் அதற்கு, அவர் சொன்ன பதில், "அமெரிக்காவின் அன்புமுகம் நார்வே. கோரமுகம் இஸ்ரேல்" என்றார். அனைத்து நாடுகளின் அரசியலையும் அதன் அசைவுகளையும் மிகத் துல்லியமாக உணர்ந்திருந்தார். ஏகாதிபத்திய தலையீடு தமது போராட்டத்தில் உள்ளது என்பதை அவர் அப்போதே உணர்ந்திருந்தார். அவரிடம் பதற்றமே இருந்ததில்லை. தன்னை மிக இலகுவாக வைத்துக் கொள்ளக்கூடிய வலிமைமிக்க தலைவன்" என்று பிரபாகரனின் நினைவுகளில் கரைந்து கொண்டிருந்தார் திருமா...

 

சாகத் துணிகிறவனே மிகச்சிறந்த தலைவன்!

பிரபாகரன்

நான் 'நாம் தமிழர்' கட்சியின் தலைவர் சீமான் பேசுகிறேன். "சிறுவயதில் இருந்தே நான் அவரை நேசிக்கத் தொடங்கி விட்டேன். 2008 பிப்ரவரி மாதம்தான் அவரை முதன்முதலாகச் சந்தித்தேன். எல்லா ஆற்றலும் பெற்ற முழு மனிதராக அவரைப் பார்த்தேன், கோபம், அன்பு, கருணை என எல்லா குணங்களையும் அவரிடம்  பார்க்க முடிந்தது. அவர், அனைவருடைய மனதிலும் இடம்பிடிக்க உண்மையும், நேர்மையும் காரணம். நிறைய நேரம் என்னிடம் பேசினார். இன விடுதலைப் போராட்டத்தை எப்படி அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவது என்பது குறித்துப் பேசினார். இலங்கையில் போர் தாக்குதல் நெருக்கடியில் இருந்த தருணம்அது. இந்தப் போராட்டத்தை அடுத்த தலைமுறைக்கு எப்படிக் கடத்துவது என்பது குறித்தே அவருடைய பேச்சாக இருந்தது. எவன் ஒருவன் சாகத்துணிகிறானோ, அவனே மிகச் சிறந்த தலைவன் என்றார். அவனே நமது அமைப்புக்கு தலைவன் என்றார். சாவைக் கண்டு அஞ்சுகிற மானுடர்கள் பல்வேறு துன்பங்களைத் தூக்கி சுமப்பார்கள் என்றார். குறைவாகப் பேசுவார் அது செறிவாக இருக்கும். போர் சூழலிலும் புத்தகங்களை வாசித்துக் கொண்டே இருந்தார். ஒருமுறை பயிற்சி முடித்த வீரர்களுக்கு பரிசு கொடுக்க முன் வருகிறார். அப்போது அனைவரும் எதிர்பார்ப்போடு காத்திருக்க புத்தகங்களை பரிசாகக் கொடுக்கிறார். அந்த புத்தகங்களை எடுக்கச் சொல்லி, தலைப்பைச் சொன்னால் போதும் இந்த பக்கத்தில் இந்த தகவல்கள் உள்ளது என்று கூறுவார்.வெறும் ஒப்புக்காக தலைவனாக அவர் இல்லை. என்ன தத்துவத்தை மற்றவர்களுக்கு போதித்தாரோ அதே தத்துவமாக வாழ்ந்தார்" என்று பிரபாகரனின் நினைவலைகளில் மூழ்கினார் சீமான்...

"நாங்கள் ஒருவேளை தோற்றுப்போனால் அதற்கு இரண்டே இரண்டு காரணங்கள் மட்டுமே இருக்க முடியும். ஒன்று துரோகம், மற்றொன்று இயற்கை" என்றார் அந்த மாபெரும் தலைவன்.. தோற்றது பிரபாகரன் அல்ல... இழைக்கப்பட்ட துரோகம் என்பதை இந்த நாடறியும். அந்த மாவீரனின் நினைவலைகளில் நாமும் கரைவோம்...

- கே.புவனேஸ்வரி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ