Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பணம் எடுக்க முடியாததால் வங்கிகள் மீது தாக்குதல்!!

னநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு, மக்களின் துயரைத் துடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் தங்களது வாக்குகளை அளித்து, அரசை தேர்ந்தெடுக்கிறார்கள்.பெரிய தொழிலதிபர்களையும், வங்கியில் மோசடி செய்யும் கோடீசுவரர்களையும் வெளிநாடுகளுக்கு தெளிவாகத் தப்பிக்க விடும் அரசு, அன்றாடம் சம்பாதித்து பிழைப்பு நடத்தும், சாமான்ய மக்களின் உழைப்பைச் சுரண்டும் வகையில், வங்கிகளின் முன்பும், ஏ.டி.எம் மையங்களின் முன்பும் அவர்களை அதிகாலையிலேயே காத்திருக்க வைத்துள்ளது.'என் சேமிப்பில் இருந்து, நான் சேர்த்து வைத்த பணத்தை, அரசு எடுத்துக் கொள்ள அனுமதித்துள்ள அளவான 24 ஆயிரம் ரூபாயைக் கூட எடுக்க முடியாத நிலை உள்ளது' என்று குமுறுகிறார்கள் பொதுமக்கள். அதிலும் தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் நிச்சயித்தவர்களின் நிலைமையோ இன்னும் பரிதாபம்.

திருமண மண்டபங்களில் வாழை, தோரணம் கட்டுபவருக்கும், திருமணத்திற்கான சமையலுக்கு வரும் உதவியாளர்களுக்கும், டெபிட் கார்டையும், காசோலையையும் உபயோகித்து பணத்தைக் கொடுக்க முடியுமா?. 'வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார்' என்ற பழமொழியை, இப்போது, 'ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்குப் பின் திருமணத்தை பண்ணிப்பார்' என்று மாற்றிக் கொள்ளலாம்.சரி, விஷயத்திற்கு வருவோம்! மணிப்பூரில் தங்களது வங்கிக் கணக்கில் இருந்து, 24 ஆயிரம் ரூபாய் எடுக்க வங்கி அதிகாரிகள் அனுமதிக்காததால், ஆத்திரம் அடைந்த வாடிக்கையாளர்கள், வங்கி அலுவலகத்தை சூறையாடிய சம்பவம் நடந்தேறியுள்ளது. பணம் எடுக்க அனுமதி மறுத்ததற்கான காரணமாக, போதிய பணம் வங்கியில் இல்லை என்று அதிகாரிகள் சொன்னது வேதனையான வேடிக்கை.



வங்கி சூறையாடப்பட்டதைத் தொடர்ந்து, நடைபெற்ற மோதலில், பாதுகாப்புக்கு நின்றிருந்த காவலர் ஒருவர் காயம் அடைந்தார். மற்றொரு வங்கியில், ஒரு கும்பல் வங்கியின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதாக, நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக யாரையும் காவல்துறையினர் கைது செய்யவில்லை.

மணிப்பூர் பல்கலைக்கழக பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில், வாடிக்கையாளர்கள் இருவர் தங்களது வங்கிக் கணக்கில் இருந்து, வாரத்திற்கு அரசு அனுமதித்துள்ள அதிகபட்ச தொகையான தலா 24 ஆயிரம் ரூபாய் 'வித்ட்ரா' செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால், வங்கி அதிகாரிகள், அந்தப் பணத்தை அளிக்க மறுத்ததுடன், வங்கியில் பணம் இருப்பு இல்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்து, வங்கியை சூறையாடத் தொடங்கியதால் பரபரப்பு நிலவியது.

அந்த வங்கியின் மேலாளர் பிரசாத் ஜெயின் இந்த சம்பவம் குறித்து கூறுகையில்,"இவ்வளவு பெரிய தொகையை எடுக்க இயலாது என்று அதிகாரிகள் தெரிவித்ததால், அவர்கள் இருவரும் கடும் கோயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் மோசமாக நடந்து கொண்டனர்" என்றார். அதிகாலையில் இருந்து வங்கிக் கிளையின் முன் வரிசையில் நின்று கவுண்டர் வந்ததும், 2 ஆயிரம் ரூபாய் மட்டுமே சேமிப்புக் கணக்கில் இருந்து எடுக்க முடியும் என்று கூறியதால், தாங்கள் கோபம் அடைந்ததாக பிரேன் என்பவர் தெரிவித்தார். 2 ஆயிரம் ரூபாய் அற்பத் தொகையை எடுக்க பல நாட்கள் வீணாக அலைய வேண்டியுள்ளது என்று முதியவர் ஒருவர் வருத்தத்துடன் கூறினார்.

"வாடிக்கையாளர்கள் அனைவரும் 4 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்துக் கொள்ளுங்கள். வங்கியில் பணம் காலியானதும் மூடி விடுவோம்" என்று அதிகாரி ஒருவர், வரிசையில் காத்திருந்த மக்களிடம் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்ட வாடிக்கையாளர்கள், ஆத்திரத்துடன் வங்கி உடைமைகளை சூறையாடத் தொடங்கினர். அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார், உடனடியாக வந்து நிலைமையைக் கட்டுப்படுத்தினர். இதில் காவலர் ஒருவர் காயம் அடைந்தார்.

இதேபோல், இம்பால் மேற்கு மாவட்டத்தில் லிமாகாங் என்ற இடத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில், வங்கி ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே பணம் எடுப்பதில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கோபம் அடைந்த வாடிக்கையாளர்கள், வங்கியின் ஜன்னல் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு அளித்தபோதிலும், வாடிக்கையாளர்களை எதிர்கொள்வது மிகவும் கடினமானதாக உள்ளது என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாங்கள் வங்கியில் வைத்துள்ள பணத்தை எடுக்க முடியாத கோபத்தில் வாடிக்கையாளர்கள் பொறுமை இழக்கும் சம்பவங்கள் இப்போது நடக்கத் தொடங்கியுள்ளன. பிரதமர் மோடி, ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததைத் தொடர்ந்து, நாடு முழுவதும் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்-கள் முன்னிலையில் காத்திருப்பு தொடரும் நிலையில், மணிப்பூரில் வங்கி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, சூறையாடல் நடைபெற்றிருப்பது நாட்டில் முதல் முறையாகும்.

ரூபாய் நோட்டு


மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, வங்கிகளுக்கு போதிய பணம் இல்லாததால், வங்கி ஊழியர்கள் வாடிக்கையாளர்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்கின்றனர். தங்களது கணக்கில் உள்ள பணத்தை, அரசு அறிவித்துள்ள தொகையைக்கூட எடுக்க முடியாமல் போவதால், மக்கள் மிகுந்த கோபம் அடைந்துள்ளனர். மிகப்பெரும் நிறுவனங்களும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் அவற்றில் பணியாற்றும் அதிக சம்பளம் பெறும் ஊழியர்களும் இந்த அறிவிப்பால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை, அன்றாடம் சம்பாதித்து பிழைப்பு நடத்தும், கூலித் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் போன்ற பல்வேறு மாநிலங்களில் தங்கியிருந்து பணியாற்றும் தினக்கூலி தொழிலாளர்களே மிக அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். நடுத்தர மற்றும் உயர் நடுத்தர மக்களின் துன்பம் சொல்லொணாத் துரயத்திற்கு உரியதாக உள்ளது. மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் மக்கள் விழிபிதுங்கி நிற்கிறார்கள் என்றே கூறலாம்.

இந்த நிலையில், அதிகபட்சம் பொதுமக்கள் வாரத்திற்கு 24 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளலாம் என வெளியிட்ட அறிவிப்பை தளர்த்தி, ஒரு தெளிவற்ற அறிக்கையை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. சிறு முதலீட்டாளர்கள் நலனைக் கருத்தில் கொண்டு, 24 ஆயிரம் ரூபாய் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்படுவதாகத் தெரிவித்துள்ள ஆர்.பி.ஐ, அதிகபட்சம் எவ்வளவு பணம் எடுக்கலாம் என்பதைத் தெளிவுபடுத்தவில்லை.

இதுவரை, பிரதமர் குறிப்பிட்டபடி புதிய 500 ரூபாய் நோட்டுகள் மக்களுக்கு போதிய அளவில் கிடைக்கவில்லை. ஒருசில வங்கிகளில் மட்டுமே, புதிய 500 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படுகின்றன. இந்தநிலை எப்போது சீராகும் என்பதற்கு, மத்திய அரசிடமோ, வங்கிகளிடமோ, ஏன், ரிசர்வ் வங்கியிடமே கூட சரியான பதில் இல்லை.

இந்த மாத சம்பளத்தை, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு, அவரவர் வங்கிக் கணக்கில், ஆன்லைனில் கிரெடிட் செய்து விடுவார்கள். அதெல்லாம் சரி, எந்த வங்கியில் போய், ஊழியர்கள் தங்களது மாத ஊதியத்தை எடுக்க முடியும்? கோடிக்கணக்கான மக்களின், இந்த மாதச் செலவுகளுக்கான வாழ்வாதாரம் என்னவாகப் போகிறது? என்ற கேள்விகளுக்கு எல்லாம் வரும் நாட்களில்தான் விடை கிடைக்கும்.

மோடி, பிள்ளையார் பிடிக்கப்போய் அது குரங்காய் மாறி விட்டதா? என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுகிறது.

புகைப்படம் நன்றி ANI

- சி. வெங்கட சேது

எடிட்டர் சாய்ஸ்

MUST READ