Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இன்னும் பாதி கூட நிரம்பாத செம்பரம்பாக்கம்... பயப்பட வேண்டாம் இந்த வருடம்! #DataStory

வ்வொரு வருடமும் வட கிழக்கு பருவ மழை ஏதாவது வரலாறு படைப்பதையே வழக்கமாக கொண்டுள்ளது. கடந்த ஆண்டு பேயென பெய்து தமிழகத்தையே குறிப்பாக சென்னையை நீச்சல் அடிக்க வைத்தது. இந்த ஆண்டு இது வரையில் தடம் தெரியாமல் அமைதியாக இருக்கிறது. தமிழகத்தின் 48% மழைத் தேவையையும், சென்னையின் 60% மழைத் தேவையையும் வட கிழக்கு பருவ மழை பூர்த்தி செய்கிறது. சராசரியாக அக்டோபர் முதல் டிசம்பர் வரை தமிழகத்துக்கு 442 மி.மீ மழை கிடைக்கும். இதற்கு கீழ் பெய்தால், இயல்பான அளவை விட குறைவு என்றே கருதப்படுகிறது.

 

தமிழகத்தின் மிகக் குறைந்த வட கிழக்கு பருவ மழை ஆண்டுகள்
ஆண்டு மழை ஆளவு (மி.மீ)
2016 100.6
1876 120.5
1952 136.8
1938 143.3
1892 153.5

 

இந்த ஆண்டு வட கிழக்கு பருவ மழை அக்டோபர் 30-ம் தேதிக்கு மேல் தான் தொடங்கியது. இதுவே 15 நாட்கள் தாமதம். அன்று தொடங்கி இன்று வரை வெறும் 93.6 மி.மீ மழை தான் பெய்துள்ளது. மேலும் இது கடந்த 150 ஆண்டுகளில், அக்டோபர் நவம்பர் மாதங்களில் பெய்த மிகக் குறைந்த அளவு மழையாக வரலாற்றில் பதிவாகியுள்ளது.

அதேபோல சென்னையின் வரலாற்றில் 50.5மி.மீ மழையை மட்டுமே பெற்று டாப் 10 மிக மோசமான மழை பெய்த நவம்பராக பதிவாகியுள்ளது. 1904-ம் ஆண்டும் வெறும் 5.1 மி.மீ மழை மட்டுமே பதிவானதே சென்னையில் மிக மோசமான நவம்பர் பருவ மழைப் பதிவு.

சென்னையின் மோசமான மழை கொண்ட நவம்பர் மாதங்கள்
ஆண்டு மழை அளவு (மி.மீ)
1904 5.1
1938 6.4
1832 10.4
1823 22.9
1892 28.4
1952 33
1899 33
1855 37.3
2012 47
1934 47.2
2016 50.5



கடந்த ஆண்டு வட கிழக்கு பருவ மழையோடு இந்த ஆண்டு பருவ மழையை ஒப்பிட்டு பார்க்கலாம். 2015-ம் ஆண்டு பருவ மழை சராசரி அளவான 440 மி.மீ விட 53% அதிகமாக பெய்துள்ளது. அதாவது மொத்தம் 673.3 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இந்த ஆண்டு இதுவரை 93.6 மி.மீ மழை மட்டுமே பெய்துள்ளது. இது கிட்டத்தட்ட 80% மழை குறைபாடு. இயல்பான பருவ மழையாக இது அமைய இன்னும் 347 மி.மீ மழை தேவையாக உள்ளது.

 

1950 முதல் 2016 வரை தமிழ்கம் மற்றும் புதுவையில் பெய்த வட கிழக்கு பருவ மழையின் தன்மை

 

 

ஏரிகளின் நீர் இருப்பு (மில்லியன் கன அடிகளில்)
ஏரிகள் 2015 நவம்பர் 30 அளவு 2016 நவம்பர் 30 அளவு
செம்பரம்பாக்கம் 3126 247

பூண்டி

2681 163
சோழவரம் 593 73
செங்குன்றம் 2792 277

 

பருவமழை குறைபாட்டால் அடுத்த பெரும் தலைவலி குடிநீர் தேவை. சென்னை குடிநீருக்கு ஆதாரமாக விளங்கும் முக்கிய நீர் தேக்கங்களில் மிகக் குறைந்த அளவே நீர் இருப்பு உள்ளது.கடந்த ஆண்டு ததும்பி வழிந்த செம்பரம்பாக்க ஏரியில் இந்த ஆண்டு நீர் பற்றாக்குறையே நிலவுகிறது. முழு கொள்ளளவில் பாதி கூட நிரம்பவில்லை. கடந்த ஆண்டு இதே நாளில் செம்பரம்பாக்கத்தில் 3126 மில்லியன் கன அடி நீர இருந்ததாக சென்னை மெட்ரோ குடிநீர் வாரிய டேட்டா கூறுகிறது. ஆனால் இன்று 247 மில்லியன் கன அடி நீர் மட்டுமே உள்ளது. கடந்த ஆண்டு வீணாகப் போன நீரின் அருமை இப்போது புரிந்திருக்கும். இது நமக்குப் புரிந்தால் போதாது. அரசாங்கத்துக்கு புரிய வேண்டும். இந்த ஆண்டு வெள்ளத்தில் இருந்து தப்ப முன்னெச்சரிக்கையாக கடந்த இரண்டு மாதங்களாக அரசு உஷார் நிலையில் இருப்பதாக கூறியது. நல்ல விஷயம் தான். ஆனால் பொய்த்துப் போன மழையால், நீர் ஆதரங்களின் இருப்பு குறைந்துள்ளது. அடுத்து வரும் 3 மாதங்கள் தமிழகத்தின் நீர் தேவையை சீர் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்ததா என்பது தான் இப்போது முன் நிற்கும் கேள்வி.

 

 

 

 

 

நவம்பர் மழை நம்மை ஏமாற்றினாலும், டிசம்பர் நமக்கு கைக் கொடுக்கும் விதமாக இன்று நள்ளிரவு முதல் மழை தீவிரமடையும் என்று வானிலை முன் அறிவிக்கைகள் கூறுகின்றன. வங்கக் கடலில் நடா புயல் உருவாகியுள்ளது. நாளை தொடங்கி தொடர்ந்து 4 முதல் 5 நாட்களுக்கு நல்ல மழை இருக்கும். ஆனா, இது வெள்ளம் வரும் அளவுக்கு பெரிய மழையாக இருக்காது. தயவு செய்து வாட்ஸ்அப்பில் வரும், புரளியை சீரியஸாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அதை ஷேர் செய்வதையும் தவிருங்கள். ஒருவேளை மழை அடித்து நொருக்கினாலும், அனைத்து நீரையும் உள்வாங்கிக் கொள்ளும் அளவுக்கு நமது ஏரிகளும் நீர் ஆதாரங்களும் காலியாக உள்ளன. அதனால், இந்த வாரம் கிடைக்கவிருக்கும் மழையக் கண்டு நாம் அஞ்ச வேண்டாம். இது நாம் வரவேற்க வேண்டிய மழை.

 

- ரெ.சு.வெங்கடேஷ்

டேட்டா உதவி: இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாடு வெதர்மேன்

 

    

எடிட்டர் சாய்ஸ்

MUST READ