Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் வி.என். ஜானகி...பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

வி.என். ஜானகி

றைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் துணைவியார் வி.என். ஜானகி அம்மாளின் 94-வது பிறந்த நாள் இன்று....

தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையைப் பெற்ற வி.என். ஜானகி அம்மாளின் சொந்த ஊர், கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள வைக்கம். அங்கு 1923-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி பிறந்தார். இவருடன் பிறந்தவர் மணி என்ற நாராயணன். வைக்கம் நாராயணி ஜானகி என்பதன் சுருக்கம்தான் வி.என். ஜானகி.

கர்நாடக இசையுலகில் புகழ்பெற்ற பாடலாசிரியரான பாபநாசம் சிவனின் தம்பி ராஜகோபால் ஐயரின் மகள் வி.என். ஜானகி.  பாடலாசிரியரான ராஜகோபால் எதிர்பாராதவிதமாக குடும்பச் சொத்துக்களை இழந்து, மிகவும் வறுமைக்கு ஆளானார். சரியான வாய்ப்பு கிடைக்காமல் அல்லாடிக் கொண்டிருந்தவருக்கு 'மெட்ராஸ் மெயில்' என்ற திரைப்படத்தில் பாடல்கள் எழுத வாய்ப்புக் கிடைத்தது. வாய்ப்புகளை தக்கவைத்துக் கொள்வதற்காக. உறவினர்கள் அறிவுரைப்படி 1936-ம் ஆண்டு குடும்பத்தினருடன் கேரளாவில் இருந்து சென்னைக்கு வந்து குடியேறினார். 

கலைக் குடும்பம் என்பதால் இயல்பாகவே பாடல், நடனம் இவற்றில் ஈர்ப்பு கொண்டிருந்த மகள் ஜானகிக்கு, சென்னை வாழ்க்கை திசைமாற்றத்தை அளித்தது. ஆம். படிப்புடன் தனக்குப் பிடித்தமான பாடல், நடனம் இவற்றில் அவர் தீவிர கவனம் செலுத்தினார். முறையாக அவற்றை கற்றுத் தேர்ச்சியும் பெற்றார். 

வி.என்.ஜானகி - எம்.ஜி.ஆர்குடும்ப நண்பரான பிரபல இயக்குநர் கே.சுப்ரமணியம் நடத்தி வந்த 'நடன கலா சேவா' என்னும் நாட்டியக் குழுவில் இணைந்து நடித்தார். இந்தியா முழுவதும் பல நகரங்களில் இந்தக் குழு நாட்டிய நாடகங்களை நடத்தியது. நடன கலா சேவா குழுவின் நாடகங்களில் மிகுந்த வரவேற்பு பெற்ற நாடகம் 'வள்ளி திருமணம்'. இதில் முருகன் வேடத்தில் ஜானகி நடித்தார். இயக்குநர் சுப்ரமணியத்தின் துணைவியார் எஸ்.டி சுப்புலட்சுமி. வள்ளியாக நடித்தார். ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பு ஜானகிக்கு கிடைத்தது.

நாடகத் துறையில் கிடைத்த பிரபல்யத்தால். ஜானகியை சினிமா வாய்ப்புகள் தேடி வந்தன. கே. சுப்ரமணியத்தின் 'மோஷன் பிக்சர்ஸ் புரொடியூசர்ஸ் கம்பைன்ஸ்', 'இன்பசாகரன்' என்ற கதையை திரைப்படமாக தயாரித்தது. படத்தை இயக்கிய கே.சுப்பிரமணியம் வி.என்.ஜானகியை இதில் அறிமுகப்படுத்தினார். ஜானகிக்கு அப்போது வயது 13. துரதிர்ஷ்டவசமாக இந்தப் படத்தின் தயாரிப்பின்போது, ஸ்டுடியோ முற்றிலுமாகத் தீப்பற்றி எரிந்து  படத்தின் மொத்த நெகடிவ்களும் எரிந்து சாம்பலாயின. அதைத் தொடர்ந்து 'கிருஷ்ணன் தூது' என்ற திரைப்படத்தில் நடன மாது கதாபாத்திரத்தில் நடித்தார் ஜானகி. தொடர்ந்து மன்மத விஜயம், கச்ச தேவயானி, மும்மணிகள், சாவித்திரி, அனந்த சயனம், கங்காவதார், தேவ கன்யா, ராஜா பர்த்ருஹரி, மான சாம்ரட்சனம் , பங்கஜவல்லி என படவாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்தன. ஆனால் மேற்சொன்ன திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களோ அல்லது நடன நடிகையாகவோதான் ஜானகி நடித்தார்.  'சகடயோகம்' என்ற திரைப்படத்தில்தான் முதன்முதலில் கதையின் நாயகியாக முக்கியப் பாத்திரத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து சித்ர பகாவலி, தியாகி படங்கள் அவரது நடிப்பில் வெளிவந்தன.
நடிக்கத் தொடங்கி 10 ஆண்டுகளுக்குப் பின், அவரது 18-வது படத்தில்தான் பிரதான கதாநாயகி வேடம் ஜானகிக்கு கிடைத்தது. 

'ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி' என்ற திரைப்படம் ஜானகிக்கு பெயரும் புகழும் தேடிக் கொடுத்தது. மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் 1947-ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம், இன்றும் திரைப்பட ரசிகர்களால் பேசப்படும் திரைப்படமாகத் திகழ்கிறது. படத்தின் கதாநாயகன் பி.எஸ். கோவிந்தன், கதாநாயகி ஜானகி. 

நாட்டின் இளவரசியாக வரும் சிந்தாமணி தனது மூன்று கேள்விகளுக்கு விடை சொல்பவரைத் தான் மணக்க வேண்டும் என தன் ராஜகுருவின் அறிவுரைப்படி முடிவெடுத்திருப்பார். அதன்படி ஒரு போட்டி வைப்பார். போட்டியில் கலந்து கொள்பவர்களிடம் 3 கேள்விகளைக் கேட்பார். கேள்விகளுக்குப் பதில் அளிக்கத் தவறுபவர்களின் தலை வெட்டி வீழ்த்தப்படும். இப்படி சிந்தாமணியால் 999 பேர் வெட்டி வீழ்த்தப்பட்டிருப்பர். இவர்களில் தனது ஐந்து அண்ணன்களை சிந்தாமணியிடம் இழந்த நாயகன் கோவிந்தன் (புலிக்குட்டி கோவிந்தன் என அந்நாளில் அழைக்கப்பட்டவர்) சிந்தாமணியை தோற்கடிப்பதற்காக, அந்த கேள்விக்கு விடைதேடி மூன்று ஊர்களுக்குச் செல்கிறான். பதிலை அறிந்து வந்து சிந்தாமணியை திருத்தி, அவரது அத்தை மகனுக்கு மணமுடித்து வைத்து, அண்ணன்களை காளியின் அருளால் மீட்கிறான். இளவரசி கதாபாத்திரத்தில் நடித்த வி.என்.ஜானகி நடிப்பில் அசத்தியிருப்பார். 

ஜானகி - எம்.ஜி.ஆர்

மிகவும் நீளமான படம் என்றாலும் இயக்குநர் டி.ஆர்.சுந்தரம் அலுப்பில்லாமல் இயக்கியிருப்பார் இந்த படத்தை. வெள்ளித்திரைக்கு அதிஅற்புதமான நடிகை கிடைத்தார் என சினிமா பத்திரிகைகள் புகழாரம் சூட்டின. படத்தில் கிடைத்த புகழால் அடுத்தடுத்து படவாய்ப்புகள் குவிந்தன. அந்தக் காலத்தில் திரையுலக சூப்பர் ஸ்டாரான தியாகராஜ பாகவதருடன் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது. 

1948-ல் வெளிவந்த 'ராஜ முக்தி' திரைப்படம் வி.என் ஜானகிக்கு பெரும்புகழ் தேடிக்கொடுத்ததோடு, அவரது வாழ்க்கையில் ஒரு புதிய வசந்தத்தை ஏற்படுத்தியது. அந்தப்படத்தில் துணை நடிகராக நடித்த எம்.ஜி.ஆருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. சாதாரணமான நட்பு, அதே ஆண்டில் வெளியான  மோகினி படத்தில் இன்னும் நெருக்கமானது. பிரபல கதாநாயகியான ஜானகி புகழ்பெறாத சாதாரண துணை நடிகர் என்ற நிலையில் இருந்த எம்.ஜி.ஆரை விரும்ப ஆரம்பித்தார். துணை நடிகரான எம்.ஜி.ஆருக்கு, அந்தக் காதலை ஏற்பதில் சங்கடங்கள் இருந்தன.இடையில் 'லைலா மஜ்னு', 'வேலைக்காரி' ஆகிய படங்கள் வெளியாகின. இதற்கிடையில், திரைத்துறையில் எம்.ஜி.ஆர் கதாநாயக நடிகராக உயர்ந்திருந்தார். 1950-ல் 'மருதநாட்டு இளவரசி' திரைப்படத்தில் ஜானகிக்கு. எம்.ஜி.ஆருடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு வந்தது. இருவருக்குள்ளும் இருந்த சங்கடங்கள் நீங்கி நெருங்கிய நண்பர்களாகினர். இருவரும் சேர்ந்து நடித்த கடைசிப்படம் 'நாம்'. அதன் பின்னர், திரைப்படத்தில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட  ஜானகி, எம்.ஜி.ஆரின் வாழ்க்கைத் துணையானார். எம்.ஜி.ஆர்- ஜானகி திருமணத்துக்கு சாட்சி கையெழுத்திட்டவர் படத் தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவர். 1962-ல் மனைவி சதானந்தவதியின் மரணத்துக்குப் பின், ராமாவரம் தோட்டத்துக்கு ஜானகியுடன் குடிபுகுந்தார் எம்ஜி.ஆர். 

எம்.ஜி.ஆரின் திரை மற்றும் அரசியல் வாழ்வில் ஜானகிக்கு பெரும்பங்கு உண்டு. ஜானகியை ஜானு என நெஞ்சுருகி அழைப்பார் எம்.ஜி.ஆர். சமையலில் தேர்ந்தவரான ஜானகியின் கைப்பக்குவத்துக்கு எம்.ஜி.ஆர் தீவிர ரசிகர். ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்தவரானாலும் கணவரின் உணவு விருப்பத்துக்காக பின்னாளில் தானும் மாறினார். அசைவப் பிரியரான எம்.ஜி.ஆருக்கு பிடித்தமான அசைவ உணவுகளை ஜானகியே சமைப்பார். சென்னையில் படப்பிடிப்பு இருந்தால் நிச்சயம் ஓட்டல் சாப்பாட்டை தவிர்த்து விட்டு பகல் 1 மணிக்கு எங்கிருந்தாலும் ராமாவரம் இல்லத்துக்கு வந்து விடுவார் எம்.ஜி.ஆர். அத்தனை கைப்பக்குவம் ஜானகிக்கு. 

ராமாவரம் வீட்டில் ஜானகி

ராமாவரம் தோட்டத்துக்கு வந்தபின் குழந்தையில்லாத குறையை நிவர்த்தி செய்ய வி.என்.ஜானகியின் தம்பி நாராயணனின் பிள்ளைகளை தத்தெடுத்துக் கொண்டனர் எம்.ஜி.ஆர் -ஜானகி தம்பதி. கணவரின் உதவும் குணத்துக்கு ஜானகி எப்போதும் குறுக்கே நின்றதில்லை. ராமாவரம் தோட்டத்தில் தவறு செய்யும் ஊழியர்கள் மீது எம்.ஜி.ஆர் மிகுந்த கோபம் கொள்வார். அப்போதெல்லாம் அவரை சமாதானப்படுத்துவது ஜானகியின் முக்கியப் பணி. எம்.ஜி.ஆர் தன் தனிப்பட்ட வாழ்க்கையில் சிக்கல்களிலிருந்து ஒதுங்கி திரைத்துறையில் புகழ்பெற ஜானகி முக்கியக் காரணம். பிரபலமான கதாநாயகியாக இருந்தாலும் திரைத் துறையில் இருந்து ஒதுங்கிய பின் ஒரு குடும்பப் பெண்மணியாக எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கைக்கு பெரும் பக்கபலமாக இருந்தவர் அவர். அண்ணா, கருணாநிதி முதற்கொண்டு அத்தனை தலைவர்களும் அவரின் கையால் சோறுண்டவர்கள். கருணாநிதி அவரை அக்கா என்று அன்பொழுக அழைப்பார். புகழ்பெற்ற நடிகரின் மனைவி, பின்னாளில் முதல்வர் மனைவி என்றாலும் வீட்டில் ஒரு எளிய  இல்லப் பெண்மணிபோல் இருப்பார். எம்.ஜி.ஆரின் கைகள் 'கொடுத்து சிவந்தவை' என்பார்கள்.  உண்மையில் ஜானகியையும் அப்படியே குறிப்பிடலாம். பொது இடங்களில் தன் கைகளில் கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தாலும், தனது வீட்டில் உதவி கேட்டு வருவோர்  மற்றும் திருமணப் பரிசுகள் போன்றவற்றை மனைவி ஜானகியின் கைகளால்தான் கொடுக்கச் செய்வார் எம்.ஜி.ஆர். ராமாவரம் தோட்டத்தில் எப்போதும் சமையல் அடுப்பு எரிந்த வண்ணம் இருக்கும். ஏழை-எளியவர் ஆனாலும் சொகுசு காரில் வந்திறங்கும் தொழிலதிபர்களானாலும் உண்ணாமல் அனுப்ப மாட்டார்கள் எம்.ஜி.ஆர்- ஜானகி தம்பதி. முதல்வரானபின் எம்.ஜி.ஆர் அரசியலிலும், அரசு நிர்வாகத்திலும் மனைவி ஜானகிக்கு முக்கியத்துவம் அளித்ததில்லை. ஜானகியும் அதை விரும்பியதில்லை. படப்பிடிப்புக்காக வெளிநாடு பயணங்களின்போது, மனைவி ஜானகியையும் உடன் அழைத்துச் செல்வார் எம்.ஜி.ஆர். சில நாட்களுக்குக் கூட மனைவியைப் பிரிந்து அவரால் இருக்க முடியாது. அந்தளவுக்கு ஒருவருக்கொருவர் அன்பு கொண்டவர்கள். 

தனது திருமண நாளன்று எங்கும் செல்லாமல் மனைவி ஜானகி மற்றும் தானும் வீட்டில் உள்ள அத்தனை நகைகளையும் அணிந்து கொண்டு எங்கும் செல்லாமல் வீட்டில் இருப்பார் எம்.ஜி.ஆர். அன்றைய தினம் தங்களின் ஆரம்ப கால சினிமா நாட்களை அசைபோடுவார்கள் இருவரும். அன்றைய தினம் உறவினர்கள் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள். வெளியாட்களுக்கு அன்று அனுமதி கிடையாது. 1984-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் எதிர்பாராதவிதமாக நோய்வாய்பட்டபோது, சத்தியவானை சாவித்திரி மீட்டது போன்ற ஒரு முயற்சியை ஜானகி மேற்கொண்டார். முதலில் அப்போலோவிலும் பிறகு அமெரிக்காவின் புருக்ளின் மருத்துவமனையிலும் எம்.ஜி.ஆர் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, ஒரு தாயைப் போல் எம்.ஜி.ஆரை ஜானகி கவனித்துக் கொண்டவிதம் மருத்துவர்களையே ஆச்சர்யப்பட வைத்தது. எம்.ஜி.ஆர் உடல்நிலை சீராகி திரும்பி வந்ததற்கு ஜானகி அம்மையார் ஒரு முக்கியக் காரணம். 

ஜானகிக்கு 1986-ல் இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அந்நாளில் எம்.ஜி.ஆர் துடிதுடித்துப் போனார். அன்று முழுவதும் அவர் பூனைக்குட்டி போல, ராமாவரம் தோட்டத்தை சுற்றிச் சுற்றி வந்தார். உணவுகூட உண்ணவில்லை. “ஜானுவுக்கு ஒண்ணும் ஆகாதுல்ல” என பார்ப்பவர்களிடம் எல்லாம் பரிதவிப்போடு விசாரித்தார் எம்.ஜி.ஆர். அத்தனை அன்பு தனது துணைவியார் மீது. 

1987 டிசம்பர் 24-ல், தமிழர்களை நிலைகுலைய வைத்த எம்.ஜி.ஆரின் மரணம் கட்சியையும் ஒரு கலக்கத்துக்கு உள்ளாக்கியது. கவர்னர் குரானாவின் அழைப்பை ஏற்று, முதல்வராக பதவி ஏற்றார் ஜானகி அம்மையார். ஆனால் அற்பாயுசில் முடிந்தது அந்த ஆட்சி. தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் என்ற வரலாற்றுப் பெருமை பெற்றார் ஜானகி அம்மையார். 

அ.தி.மு.க, ஜெயலலிதாவின் ஆதரவாளர்களால் கபளீகரம் செய்யப்படுவதைத் தடுக்க, ஜெயலலிதாவுக்கு எதிரான எதிர்ப்பு அணிக்கு தவிர்க்க முடியாமல் ஜானகி தலைமையேற்க நேர்ந்தது. அரசியல் களத்தை அதகளப்படுத்திய அக்காலகட்டத்தில், ஜானகி அம்மையாருக்கு தூக்கம் இருந்திருக்காது ஒருநாளும். அத்தனை போராட்டங்களை அந்நாளில் சந்தித்தார் அவர். எம்.ஜி.ஆரின் தீவிர அரசியல் களத்தில் ஆரம்ப நாட்களில் வெறும் பார்வையாளராக மட்டுமே இருந்த அவருக்கு, இப்போது களத்தில் முதல் ஆளாக நிற்கும் கட்டாயம் ஏற்பட்டது. ஆனாலும் ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்ட தலைவர்களின் வழிகாட்டுதலில் ஓரளவு நிலைமையை சமாளித்தார் அவர். ஆனாலும் அவருக்கு அது முற்றிலும் புதிய அனுபவம். என்றாலும் நாகரிகமாகவே எதிரணியை அணுகினார் ஜானகி என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த 2 வருட பரபரப்பு, ஜானகியை பல யோசனைகளுக்குத் தள்ளியது. தன் கணவரின் உழைப்பினாலும், போராட்டங்களாலும் உருவான கட்சி சிதைந்து, தகர்ந்து போவதில் ஜானகிக்கு விருப்பமில்லை. இந்த எண்ணங்கள் மனதில் உருக்கொண்டிருந்த நேரத்தில், 1989-ல் சட்டமன்றத் தேர்தல் வந்தது. எம்.ஜி.ஆர் தோற்றுவித்த கட்சி, அ.தி.மு.க (ஜா), அ.தி.மு.க (ஜெ) என இரண்டு அணிகளாக தேர்தல் களத்தில் நின்றன.

சேவல் சின்னத்தில் போட்டியிட்ட அ.தி.மு.க ஜெ அணி 27 இடங்களில் வென்றது. ஜானகி அணியில் பி.ஹெச். பாண்டியன் மட்டுமே வெற்றிபெற்றார். வேறு ஒருவரும் வெற்றி பெறவில்லை. தனது கணவர் எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்டு, தொடர் வெற்றிகளைக் குவித்த அ.தி.மு.க என்ற ஒருகட்சி காணாமல் போவதை விரும்பாத ஜானகி அம்மையார், கவுரவமாக அரசியலில் இருந்து விலக முடிவெடுத்தார். தனது அணியையும், கட்சி அலுவலகத்தையும் முறைப்படி ஒப்படைத்து விட்டு, அரசியலில் இருந்து ஒதுங்கினார். அரசியல் களத்தில் ஒரு தெளிவு பிறந்தது. ஒன்றுபட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக ஜெயலலிதா ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்தடுத்து அரசியல் களத்தில் அதிமுக பெற்ற வெற்றிகள் எழுத வேண்டிய அவசியமில்லாதவை. அந்தவகையில், பரபரப்புக்காக கத்தி வீசிக்கொண்டு கணவரின் கட்சியை காணாமல் போகச் செய்யாமல் கவுரவமாக அவர் எடுத்த முடிவுதான் பின்னாளில் அதிமுக என்ற கட்சி மறுபிறப்பெடுத்து  வெற்றிகளை இன்றளவும் குவிக்கக் காரணமானது எனலாம்.

எம்.ஜி.ஆர் உருவாக்கிய காதுகேளதாதோர் பள்ளியின் நிர்வாகத்தினை கவனித்தபடி, தனது இறுதிக் காலத்தைக் கழித்த ஜானகி அம்மையார், கடந்த 1996 மே மாதம் 19-ம் தேதி 73-வது வயதில் மறைந்தார். 

- எஸ்.கிருபாகரன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close